– அன்பன்
இந்தியா முதலிடம் எதில்?
கடந்த 5 ஆண்டுகளில் அதிக அளவில் ஆயுதங்கள் வாங்கியதில் ஆசியா முதலிடமாம். அதிலும் இந்தியா முதலிடமாம். 2007-2011இல் ஆசியாவின் மொத்த ஆயுத இறக்குமதியில் இந்தியா 10 சதவிகிதம் அளவுக்கு வாங்கி முதலிடத்தில் உள்ளது. தென்கொரியா, சீனா, பாகிஸ்தான், சிங்கப்பூர் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனவாம். இது ஸ்டாக்ஹோம் பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிறுவன தகவல். ஏழைகள் அதிகம் உள்ள நாடு, அமைதியை விரும்பும் நாடு, அகிம்சை போதிக்கும் நாடு இப்போது ஆயுதம் அதிகம் வாங்கும் நாடாகவும் ஆகியிருக்கிறது.
ரூ.205 கோடி – 70%
ஒரே நாளில் இரண்டு செய்தி வந்திருக்கிறது. செய்தி ஒன்று: இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அவர் பொறுப்பேற்ற 2007 முதல் இதுவரை 12 முறை 22 நாடுகளில் 79 நாள்கள் பயணம் செய்துள்ளார். இதற்கு ஆன செலவு ரூ. 205 கோடி. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் பெற்ற தகவல் இது.
செய்தி இரண்டு: சத்துணவு, சுகாதாரம், குடிநீர், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் அடிப்படையில் கணக்கெடுத்தால் இந்திய மக்கள் தொகையில் ஏழைகளின் எண்ணிக்கை 70 சதவிகிதம் இருக்கும். இது சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் சக்சேனா கூறியது.
இரு செய்திகளையும் அசைபோட்டு நீங்களே இந்தியாவைப் பற்றி மதிப்பிட்டுக் கொள்ளுங்கள். நாங்க என்னத்த சொல்றது…
பிரிக்ஸ் வங்கி
பிரேசில் (B), ரஷ்யா (R), இந்தியா (I), சீனா (C), தென்னாப்பிரிகா (S) ஆகிய வளரும் நாடுகளின் அமைப்பான BRICS (பிரிக்ஸ்)ன் 4ஆவது மாநாடு டெல்லியில் மார்ச் 29இல் நடந்தது. இந்நாடுகளின் பிரதமர்கள் கலந்துகொண்டனர். இதன் சார்பில் பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி நிறுவ முடிவு செய்துள்ளன. உலக வங்கிபோல இயங்கும் இவ்வங்கியில் உறுப்பு நாடுகள் தங்கள் நாட்டு பணத்திலேயே கடன் பெறலாமாம். அமெரிக்க டாலருக்கு டாடா காட்ட இந்த ஏற்பாடு என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
உயிர் சோதனை
திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஈ என்ற படம் வந்தது. பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் தங்கள் மருந்துகளுக்கான சோதனைக்களமாக இந்தியாவைப் பயன்படுத்துவதே அப்படத்தின் கதை. இக்கதையில் வருவது முற்றிலும் உண்மைதான் என்று கூறும் அளவுக்கு புள்ளி விவரங்களுடன் உச்சநீதி மன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சிறுவர்கள், ஆதிவாசிகள், தாழ்த்தப்பட்டோர் என 3,300 பேருக்கு சட்டவிரோதமாக மருந்து பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாம். அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மூலம் இச்சோதனை நடத்தப்பட்டு அவர்களுக்கு ரூ. 5.5 கோடி பணம் வழங்கப்பட்டுள்ளதாம். இதில் கடந்த 3 ஆண்டுகளில் 1500 பேர் உயிரிழந்துள்ளனர். மார்ச் 26இல் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை ஏற்று மத்திய அரசு பதிலளிக்க அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளதாம். பன்னாட்டு முதலாளிகளின் மருந்துகளுக்கு உயிர்சோதனைக் களமும் இந்தியாதான். ஆன்மீக வியாபாரிகளின் மத போதனைகளின் மனித சோதனைக் களமும் இந்தியாதான்.
பங்குச் சந்தைக்கு பங்கம்
பங்கு வர்த்தகம் என்பது பெரும் சூதாட்டம்தான் என்பதைக் கடந்த ஆண்டும் நிரூபித்துவிட்டது. மார்ச் 31இல் முடிந்த 2011-_12ஆம் ஆண்டில் சென்செக்ஸ் 2,000 புள்ளிகள் குறைந்து, பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு ரூ. 6.4 இலட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நடுத்தர வர்க்கத்தினர்தான் அதிக அளவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வந்துனர். ஆசைகள் அதிகம் அலைமோதும் மனநிலைக்காரர்கள் இவர்கள்தானே… பேராசையால் பங்கு மூலதனத்தில் பணம் போட்டார்கள்… போட்டது போட்டதுதான் எடுக்க முடியவில்லை.
புண்படுத்தும் சட்டம்
2011இல் மட்டும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 400 சிறுமிகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் கட்டாயத் திருமணம் செய்துவைத்துள்ளனர் என்று இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்தின் குழந்தைத் திருமண தடுப்புப்பிரிவு கூறியுள்ளது. பெரும்பாலான பெற்றோர் விடுமுறைக்குத் தமது சொந்த நாடுகளுக்குச் செல்லும்போது அங்கு இத்தகைய குழந்தைத் திருமணங்களைச் செய்துவைத்து விடுகிறார்களாம். இதனைத் தடுக்க பெற்றோர்களுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கும் புதிய சட்டத்தைக் கொண்டுவர இங்கிலாந்து அரச பரிசீலித்து வருகிறதாம். கடல் கடந்து போனாலும் பழமை மதவாதப் பிடியில் சிக்கியோரைத் தண்டிக்க சட்டங்கள் தேவைதான். ஆனால், இது எங்கள் மதஉணர்வைப் புண்படுத்தும் சட்டம் என்று இந்துத்துவவாதிகள் சொன்னாலும் வியப்பில்லை.
கல்வி நிலை…?
இந்தியாவில் 50 விழுக்காடு குழந்தைகள் 5ஆம் வகுப்பு வந்தபிறகும் 2ஆம் வகுப்பு பாடங்களைக்கூட வாசிக்க இயலாத நிலையில் உள்ளனர். பட்டதாரிகளின் நிலையும் இதே போலத்தான் உள்ளது என்று கூறியுள்ள தேசிய கல்வி வாரிய மேனாள் இயக்குநர் ஜே.எல்.ராஜ்புத். இதற்குக் காரணம் ஆசிரியர்களை சரியாகத் தயார் செய்யாததுதான் என்கிறார்.
தனிமையில் இனிமை
இந்தியாவில் 20 முதல் 49 வயது வரையிலான 11.6 விழுக்காடு பெண்கள், அதாவது 2.42 கோடி பேர் ஆண் துணையில்லாமல் தனியே வாழ்கிறார்கள். இவர்களில் 45 முதல் 49 வயதிலானவர்கள் 29 இலட்சம் பேர்.
இவர்கள் திருமணமாகாதவர்கள், குடும்பத்தைப் பிரிந்திருப்பவர்கள், விவாகரத்து பெற்றவர்கள். இந்த வகையினரில் ஆண்களைவிட பெண்களே 3 மடங்கு அதிகம் உள்ளனர் என்கிறது 2001 மக்கள்தொகை அடிப்படையில் உருவாக்கப்பட்ட 2011ன் கணிப்பு.
தாமே வருவாய் ஈட்டி மகிழ்ச்சியாக வாழ்வதாக இவர்களில் பெரும்பாலோர் கூறுகின்றனர்.
வீடு?
சென்னையில் 53 விழுக்காடு மக்கள் வாடகை வீடுகளில் வசிக்கிறார்கள் என்கிறது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் கணக்கெடுப்பு.
மனித உரிமை?
2010-2011ஆம் ஆண்டுகளில் 1,574 பேர் காவல் நிலையங் களில் மரண மடைந்திருக்கிறார்கள் என தேசிய மனித உரிமை ஆணையத் தகவல் கூறுகிறது.