உலகப்பகுத்தறிவாளர்கள்

ஏப்ரல் 16-30

கோபராஜு ராமச்சந்திர ராவ் எனும் கோரா – 2

மாட்டுக்கறி ‍- பன்றிக்கறி விருந்து

– சு.அறிவுக்கரசு

மசூலிப்பட்டினம் கல்லூரியில் பணியாற்றிய போது அறிவியல் கண்காட்சி நடத்தினார். டார்வினின் பரிணாமக் கொள்கையை விளக்கிடும் படிமங்களை அமைத்தார். பார்த்த மாணவர்கள் தெளிவு பெற்றனர். அறிவியல் மனப்பான்மை பெற்றனர். திருஷ்டித் தேங்காயை உடைத்துத்  தின்னும் அளவுக்குத் தெளிவு பெற்றனர்.

 

கடவுள், ஆத்மா, மறுபிறப்பு, தலைவிதி, நரகம், சொர்க்கம் என்பவை எல்லாமே ஏமாற்றிடும் பொய்கள் எனப் பிரச்சாரத்தை ஓய்வு நேரங்களில் செய்துவந்தார். கிராமப் புறப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். ஃபிரெங்கிபுரம் எனும் ஊரில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசப்போனார். கிறித்துவர்கள் அதிகமாக வாழும் ஊர். ஆகவே, இவரது கருத்துகளைக் கேட்க இந்து, இசுலாமிய மதத்தவர் ஆர்வத்துடன் கூடியிருந்தனர். ஆனாலும் கிறித்துவர்கள், சாத்தானின் மகன் பேசுவதைக் கேட்டால், மக்கள் கெட்டுப் போவார்கள் எனப் பிரச்சாரம் செய்து கூட்டத்தில் கலகம் செய்யத் திட்டம் போட்டிருந்தனர்.

அதன்படி, கூட்டம் தொடங்கியவுடன் ஒருவன் எழுந்தான். அவன் கையில் செருப்பு ஒன்று இருந்தது. அவனது நோக்கத்தைப் புரிந்துகொண்ட கோரா, எறிவதாக இருந்தால், இரண்டு செருப்பையும் எறி! அப்போதுதான் எனக்குப் பயன்படும். ஒரு செருப்பை எறிந்தால், உனக்கும் பயன் இல்லை, எனக்கும் பயன் இல்லை என்றார். கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர். செருப்புக் கையுடன் நின்றவன், வெட்கிப் போனான்.
ஆனால், கொஞ்சம் படித்தவர்களின் நிலைதான் வேதனையானது. அவர்கள் இரட்டை வாழ்க்கை வாழ்கிறார்கள். அறிவு நாணயமே இல்லாதவர்கள், அவர்கள்! அறிவியல் ஆய்வகத்தில் அறிவியல் மனத்துடன் இருக்கும் அவர்கள் வீட்டுக்குப் போனதும் மூடநம்பிக்கையாளர்களாகி வாழ்கிறார்கள் என்று அவர் அடிக்கடி குறிப்பிடுவார். ஆந்திராவில் மசூலிப்பட்டினம், முதுனூர் போன்ற பல இடங்களில் அறிவியல் செயல் விளக்கங்கள் செய்து காண்பித்தார். நெருப்பு மிதித்துக்காட்டினார். நெருப்புத் துண்டங்களின் மேல் நடப்பதற்கும் பக்திக்கும் தொடர்பில்லை என எண்பித்தார். யாரும் நெருப்புத் துண்டங்களின் மீது நிற்பது கிடையாது; வேகவேகமாக நடந்து ஓடி விடுவதால் சூடு கால் பாதங்களைத் தாக்குவதில்லை. இரண்டாவதாக, நெருப்பின் நடுவில்தான் நடப்பார்கள்; ஓரத்தில் நடப்பதில்லை. நடந்தால் சுடும். நெருப்பில் நடப்பதற்குமுன் நீரில் நனைந்துவிடுவதால் பாதங்களிலும் குதிகாலிலும் இருக்கும் ஈரம் நெருப்பில் பட்டதும் ஆவியாகி தடுப்பரண் எனும் நிலை ஏற்படுகிறது என்பதையெல்லாம் விளக்கினார்.

மும்முடிவரம் பாலயோகி என்பவன், பூட்டிய அறையில் இருந்து கொண்டு அன்ன ஆகாரம் இல்லாமல் இருப்பதாகவும், வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வெளியே வருவதாகவும் கற்பிக்கப்பட்டவர். 1950இல் அவரது அறையைப் பார்வையிட அனுமதி கேட்டார் கோரா. அனுமதி தந்தால் தங்களது ஏமாற்று வேலை வெளியே தெரிந்துவிடும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. அதுபோலவேதான் புட்டபர்த்தி சாய்பாபாவைச் சோதிக்க அவர் முயன்றபோது அனுமதி தரவில்லை. மூட நம்பிக்கையை கோரா தகர்த்துவிடுவார் என்று அஞ்சினார்கள், பக்தி வணிகர்கள். 1972ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலத்தில் கடும் வறட்சி. மழையே பெய்யவில்லை. விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஒரு மடத்தனம் செய்ய முடிவு செய்தார். வருண பகவானுக்கு பூஜை செய்யும் சகஸ்ர கும்பாபிசேகம் செய்யும் பக்த கே()டிகளுக்கு அரசு உதவி செய்யும் என்று அறிவித்தார். கோரா அம்முயற்சியைக் கடுமையாக எதிர்த்தார். 20ஆம் நூற்றாண்டில் வருண பகவானை மகிழ்வித்தால் மழை வரும் என்று அரசின் அதிகாரி கூறுவது, அறிவற்ற மூடநம்பிக்கைச் செயல் எனக் கண்டித்தார். மெத்தப் படித்துத் தேறி அனுபவம் மிக்க அதிகாரி ஒருவர் இப்படிக் கூறுவது அறிவற்ற தனம் எனக் கூறினார். இப்படி யார்க்கும் அஞ்சாமல் தம் பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பி வந்தார்.

ஒருமுறை ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்தவரைப் பார்த்து ஒருவர் கேட்டார் _ ஆத்திகரும் நாத்திகரும் எங்கே சந்திக்க வாய்ப்பு இருக்கிறது? என்று கேட்டார். தந்தை பெரியாரைப் போலவே, பளிச் என்று பதில் வந்தது _ பிரசாரம் வழங்கும் இடத்தில் சந்திக்கலாம் என்றார், கோரா.

தந்தை பெரியார் தம் வாழ்வில் சந்தித்தவர்களைப் போலவே, பலதரப்பாரையும் அவர் சந்தித்தது உண்டு. தெளிவு பெறுவதற்காகக் கேள்வி கேட்டவர்களைச் சந்தித்திருக்கிறார். ஆர்வத்துடன் அய்யங்களைப்பற்றிக் கேட்டவர்களையும் சந்தித்திருக்கிறார். சில நேரங்களில் அவரை அவமானப் படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் எதையோ கேட்டு அவமானப் பட்டவர்களையும் சந்தித்திருக்கிறார். அப்படி வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டியவர் ஒருவர் கோராவைப் பார்த்து நாத்திகர்கள் ஏன் ஒருவரைப் பார்த்து வணக்கம் சொல்லவேண்டும்? அதற்குப் பதிலாக அவரது முகத்தில் அறையலாமே! என்றார். பளிச் என்று கோரா சொன்னார் _ செய்யலாம். அவர் பதில் வணக்கம் கூறுவதற்குப் பதில் அறைந்தால் வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டுமே! என்றார். வணக்கம் கூறுவது ஒருவர்க்கொருவர் கூறிக் கொள்வதுதானே! மாற்றாக, அறைந்தால் வலுவான அறை கிடைத்தால் வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் அல்லவா?

ஒருமுறை கூட்டத்தில் ஒருவர் கேட்டார். அறிவாளித்தனமாகக் கேட்பதாக நினைத்துக் கொண்டு கேட்டார். ஒரு சுவரின் மீது நீங்கள் பந்தை அடித்தால், அதே வேகத்தில் அது திரும்பி வருகிறது அல்லவா? அதேபோல, நீங்கள் செய்யும் எல்லா செயலுக்கும் எதிர்ச்செயல் விளையும். பவுதிகச் செயல் போலவே மனரீதியான செயல்களும் பின் விளைவுகளை உண்டாக்கும். ஆகவே, இந்த வாழ்க்கையில் நாம் படும் துன்பங்கள் முன் வாழ்க்கையில் நாம் செய்த வினைகளின் எதிர் வினைகள் தாம் என்றாராம்.

கோரா அமைதியாகச் சொன்னார் _ சுவரில் இருக்கும் ஆணியின்மேல், நீங்கள் அடித்த பந்து பட்டுவிட்டால், பந்து ஓட்டை ஆகிச் சப்பையாகக் கீழே விழுந்துவிடுமே என்றார். கேள்வி கேட்டவர் கோபமாகி, சுவரில் ஆணி இருக்கிறது என்று ஏன் ஊகிக்கிறீர்கள்? என்றார். நீங்கள் ஏன் சுவர் மட்டுமே இருக்கிறது என்று ஊகிக்கிறீர்கள்? என்று கோரா திருப்பிக் கேட்டதும் வாயடைத்துப் போனார்.

தந்தை பெரியாரைப் போலேவே கனிந்த நாத்திகரான கோரா, குறித்த நேரத்தில் எதையும் செய்தவர், செய்ய வேண்டும் எனப் பிறரிடம் எதிர்பார்த்தவர். தாம் எதைச் சொன்னாரோ அதையே தாமும் செய்து காட்டி வாழ்ந்தவர். தனி வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் ஒரே மாதிரி வாழ்ந்து காட்டியவர்.

தந்தை பெரியார் 1927இல் காந்தியாரின் இந்துமதப் பற்று, வருணதரும ஆதரவு நிலை, ஜாதிகளின் அவசியம், கடவுளின் நம்பிக்கை போன்றவற்றை முழுவதுமாக உணர்ந்து அவருடனும் அவரது கொள்கைகளுடனும் தமது தொடர்பைத் துண்டித்துக் கொண்டு பகுத்தறிவு, சமுதாயப்பணி ஆற்றியவர். மாறாக, கோரா காந்தியாருடன், அவரது கொள்கைகளுடன் மதிப்பும் தொடர்பும் வைத்துக் கொண்டே கடவுள் மறுப்பு, பகுத்தறிவு நாத்திகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுப் பணியாற்றியவர்.

கடவுளை மற என்றார் பெரியார். அடுத்த கணமே, மனிதனை நினை என்றார். மனிதனைப் பற்றி நினைக்க வேண்டுமானால் அவரது நிலையை உயர்த்துவதுபற்றி நினைக்க வேண்டுமானால், கடவுளை மறந்தாக வேண்டும். ஏனெனில், கடவுள், ஆத்மா, தலைவிதி, முன்பிறப்பு, மறுபிறப்பு, மோட்சம், நரகம் என்பவை எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திக் கற்பிக்கப்பட்டவை என்பதால் சொல்லப்பட்டது. அப்படிப்பட்ட அத்தனைக் கற்பனைகளின் சிந்தையே இல்லாமல் வாழும் நாத்திகம்தான் (றிளிஷிமிஜிமிக்ஷிணி கிஜிபிணிமிஷிவி) (உடன்பாடான நாத்திகம்) என கோராவால் விளக்கப்பட்டது.

ஜாதிகள் என்பவை பல்வேறு படிநிலைகளைக் கொண்டு அமைக்கப்பட்டு, மனித குலத்தைப் பாகுபடுத்துவதற்காகக் கற்பிக்கப்பட்டுள்ளன என்பதை தந்தை பெரியாரைப் போலவே பிசிறில்லாமல் கூறியவர் கோரா. ஜாதிமுறை சமூக விரோதமானது, மனிதத் தன்மை அற்றது என்றே பிரகடனப்படுத்தினார். யார் யார் எந்தெந்த ஜாதியில் பிறப்பது என்பதை அவரவர் கர்மவினை தீர்மானிக்கிறது எனச் சொல்லப்படுவதால், கர்மா எனும் கற்பனைத் தத்துவம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். அதனைச் செய்ய நாத்திகமே சிறந்த வழி என்றார் கோரா.

உணவுப் பழக்க வழக்கங்களில் மதம் தலையிடக் கூடாது என்ற கருத்தினைத் தந்தை பெரியாரைப் போலவே கோராவும் வற்புறுத்தி வந்தார். இதற்காக அனைவரும் பங்குபெறும் கூட்டு விருந்துகள் நடத்தப்பட வேண்டும் எனக் கூறிவந்தார். 1972இல் அப்படிப்பட்ட விருந்தில், மாட்டு இறைச்சியும் பன்றிக்கறியும் சமைத்துப் பரிமாறப்பட வேண்டும் என்றார் கோரா. தந்தை பெரியார் அதனை ஏற்றுக் கழகத்தவர்க்கு விருந்து நடத்துமாறு கோரிக்கை விடுத்தார். தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் மாட்டுக்கறி, பன்றிக்கறி விருந்து நடத்தப்பட்டது.

தந்தை பெரியாரைப் போலவே, எல்லாத் திருமணங்களும் பதிவு செய்யப்பட வேண்டும்  என்றவர் கோரா. தாலி கட்டக்கூடாது, அது பெண்டிர்க்கு அடிமைச் சின்னம் என்ற கருத்தை இருவருமே கூறினர்.

பெண்களுக்கான உரிமைகளை மறுப்பதில் உலகின் எல்லா மதங்களுமே ஒன்றுபோல் இருக்கின்றன என்பதால் மதங்களை எதிர்த்து மகளிர்க்கு எல்லா உரிமைகளும் அளிக்கப்பட வேண்டும் என இருவருமே உறுதியாகப் பரப்புரை செய்தனர். இவற்றிற்காகப் பாடுபட, படித்த இந்திய மகளிர் முன்வர வேண்டும் என விரும்பினர்.

தெலுங்கு மொழியில் நிறைய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவரது முதல் நூல் நாத்திகத்துவம் 1941இல் வெளிவந்தது. தனது சமூகச் சீர்திருத்தச் செயல்களுக்கான களமாக முதுனூர் எனும் சிறிய ஊரைத் தேர்ந்தெடுத்துச் செயல்பட்டார். அவ்வூரில் முதன்முதல் நாத்திக மய்யத்தை நிறுவினார். கனுமுரு எனும் ஊரில் நாத்திக மாநாட்டை நடத்தினார். பின்னர் விஜயவாடா நகருக்கு நாத்திக மய்யத்தை 1947இல் மாற்றினார். தெலுங்கு மொழி வார ஏடாக சங்கம் எனும் ஏட்டைத் தொடங்கி நடத்தினார். நாத்திகன் (ஜிபிணி கிஜிபிணிமிஷிஜி) எனப் பொருள்படும் ஆங்கில மாத இதழைத் தொடங்கினார். இன்றளவும் அவ்வேடு வெளிவந்து கொண்டிருக்கிறது. உலக நாத்திகர் மாநாட்டை விஜயவாடாவில் 1972இல் நடத்திப் பெருமை பெற்றார்.

1975 ஜூலைத் திங்கள் 26ஆம் நாள் விஜயவாடாவில், விவேகானந்தா சமிதியின் அமைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கிராமப்புற இந்தியாவில் சமூக மாற்றம் எனும் தலைப்பில் உணர்ச்சிகரமாக உரையாற்றினார். சுமார் 45 மணித்துளிகள் பேசிக் கொண்டிருக்கையில் திடீர் என்று கீழே விழுந்தார். இறந்தார். மூளையில் தாக்குதல் ஏற்பட்டு இறந்துவிட்டார்.

நாத்திகம் இந்திய மண்ணுக்கு அன்னியமானது அல்ல. பழங்காலத் தத்துவ அறிஞர்களில் ஓரிருவர் தவிர மற்றைய எல்லோருமே கடவுளைப் பறறிப் பேசியதில்லை. மனித வாழ்க்கைக்கு கடவுளோ, வேறு சக்தியோ தேவையில்லை என்றே போதித்தனர். மதங்கள், கடவுள்கள், கோயில்கள், மூடநம்பிக்கைகள் போன்றவற்றிற்குப் பெயர் பெற்ற நாடாக இந்தியா இருந்தாலும் உலகிலேயே நாத்திகத்துவம் தொடங்கப் பெற்றதும் இங்கேதான். லோகாயதவாதிகள் என்றழைக்கப்படும் சார்வாகர்கள் எனும் பகுத்தறிவுவாதிகளாகிய நாத்திகர்கள் இங்கேதான் உலகிலேயே விளங்கினார்கள். கீழைநாட்டு மாயாவாதம் கேலிக்குரியதாகக் கருதப்பட்டாலும், கீழை நாடுகளில்தான் அறிவியக்கமான நாத்திகமும் தோன்றி தழைத்து வளர்ந்தது என்பதே உண்மை. அத்தகைய நாத்திகத்தை இந்திய மண்ணில் அண்மைக்காலத்தில் பரப்பிய பெருமை 1879இல் பிறந்து 95 ஆண்டுகள் வாழ்ந்த தந்தை பெரியாருக்கு உண்டு. அதுபோலவே ஆந்திர மாநில கிழக்குப் பகுதியில் நாத்திகம் வளரப் பாடுபட்டவராக 1902இல் பிறந்து 73 ஆண்டுகள் வாழ்ந்த கோரா விளங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *