எத்தனை இடர்வரினும், இழப்பு வரினும் அவற்றை எதிர்கொள்ள பெண்ணால் முடியும் என்பதற்கு லோகேஸ்வரி ஓர் எடுத்துக்காட்டு.
ஆணே சுமக்க முடியாத குடும்ப பாரத்தைச் சுமக்கும் அவரே கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.
“நாங்கள் எங்கள் தந்தை சேரன் இறந்த பிறகு, அவர் செய்துகொண்டிருந்த பால் வியாபாரத் தொழிலை தொடர் ஓட்டமாக கையில் எடுத்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறோம். நாங்க பொறந்து, வளர்ந்தது எல்லாம் எருக்கலக்கோட்டைங்கிற கிராமம். அஞ்சு பொம்பளப்புள்ளைங்க, நான்தான் மூத்தவ. அப்பாவுக்கு பால் வியாபாரம்தான் தொழில், எம்_80 வண்டியில பெரிய கேன்ல பாலை நிரப்பி கட்டிக்கிட்டு, அஞ்சு மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து அப்பா பால் ஊத்த கிளம்பிடுவாரு. எனக்கு விவரம் தெரிஞ்சதுக்கு அப்புறம், என்னையும் கேனோட கேனா உட்காரவச்சி கூட்டிக்கிட்டுப் போவாரு நான் ப்ளஸ்டூ வரை படித்-திருக்கிறேன்.
எனக்கு அப்பா எம்_80 ஓட்ட கத்துக் கொடுத்தப்போ, ‘நானும் லைனுக்குப் போறேன்’னு சொன்னேன். அப்பா இன்னொரு எம்_80 வாங்க, அந்தப் புது வண்டியில நானும், பழைய வண்டியில அப்பாவும் லைனுக்குப் போவோம். ரெண்டு பேருமா வியாபாரத்தைப் பார்த்ததால, இன்னும் நிறைய கஸ்டமர்கள் கிடைச்சாங்க. நானே தனியா லைன் பார்க்குற அளவுக்கு எனக்குத் தொழிலைக் கத்துக் கொடுத்தாரு.
திடீர்னு அப்பாவுக்கு உடம்புக்கு முடியாம படுத்துட்டாரு. குடும்பக் கஷ்டம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் ரெகுலர் கஸ்டமர்களை தவிக்க விடக்கூடாதுன்னு அப்பாவோட வேலையையும் நானே பார்த்தேன். எனக்கு உதவியா என் ரெண்டாவது தங்கச்சி கவுதமியும், மூணாவது தங்கச்சி போதும்ராணியும் எம்_80 ஓட்டக் கத்துக்கிட்டு, லைனுக்கு வர ஆரம்பிச்சாங்க. 2018-இல் எனக்கும், அடுத்து ரெண்டாவது தங்கிச்சிக்கும் கல்யாணம் பண்ணி வெச்சாங்க.
2020-இல் கொரோனாவால பாதிக்கப்பட்டு அப்பா, அத்தை, பாட்டின்னு மூணு பேரும் இறந்து போயிட்டாங்க. குடும்பத்தைக் காப்பாத்தணும், மூணு தங்கச்சிங்க வாழ்க்கைக்கு வழி செய்யணுங்கிற இக்கட்டான சூழ்நிலையிலதான், அப்பாவோட பால் வண்டியை நான் மறுபடியும் எடுக்க முடிவெடுத்தேன். ‘நீதான், குடும்பத்துக்கு மூத்த பொண்ணு, தைரியமா பண்ணு’ன்னு எங்க வீட்டுக்காரர் வீட்டுல எனக்கு நம்பிக்கை கொடுத்தாங்க. ஆனா உறவுக்காரங்க, ‘பொம்பளப்புள்ளையால எல்லாம் பால்வண்டி ஓட்ட முடியாது, வேற யார்கிட்டயாவது லைனை கொடுங்க’னு சொன்னாங்க. எதையும் காதுல வாங்காம லைனுக்குப்போக ஆரம்பிச்சிட்டேன்.
ஆரம்பத்துல ராத்திரி 2:00 மணிக்கெல்லாம் எழுந்திருக்கிறது அலுப்பா இருந்துச்சு. அப்புறம் பழகிடுச்சு. பால் எடுக்க அதிகாலை 5:00 மணிக்குக் கிளம்புனா, 9:00 மணிக்கெல்லாம் லைனை முடிச்சிடுவேன். மறுபடியும் மதியம் 3:00 மணிக்குக் கிளம்புனா, வீட்டுக்கு வர ராத்திரி 7:00 மணி ஆகிடும்.
காலேஜ் வரை படிச்ச என் மூணாவது தங்கச்சி போதும்ராணி, நான் கர்ப்பமானப்போ ஒத்தையாளா லைன் பாத்துச்சு. எனக்குக் குழந்தை பொறந்து கொஞ்ச நாள்ல, புள்ளைய அம்மாகிட்ட கொடுத்துட்டு நான் பழையபடி லைனுக்கு வந்துட்டேன். நாலு மாசத்துக்கு முன் போதும்ராணிக்கு கல்யாணம் பண்ணினோம். இப்போ, கல்லூரிப் படிப்பை முடிச்ச நாலாவது தங்கச்சி ராஜேஸ்வரி என்கூட லைனுக்கு வந்துக்கிட்டு இருக்கு. அஞ்சாவது தங்கச்சி கலைவாணி ஸ்கூல் படிச்சிக்கிட்டு இருக்கு. இவங்க ரெண்டு பேரையும் கரையேத்துற வரைக்கும், எங்க வண்டி ஓடும், நாங்களும் ஓடுவோம்’’ என்று தன்னம்பிக்கையோடு தலை நிமிர்ந்து கூறினார் லோகேஸ்வரி!