கவிதை: தொண்ணூறிலும் தொடரும் தொண்டு!

2022 கவிதைகள் டிசம்பர் 1-15 2022

பேராசிரியர் அ. செகதீசன், ஆரியூர்

விடுதலையைக் கண்டாலே கடமை உணர்வேறும்!
விடுதலையைக் கைப்பிடித்தால் இனமானம் தோன்றும்!
விடுதலையைப் படித்தாலோ வரும்பாது காப்பாய்
வீறுகொளக் கூடும்! தன் மானமிகும்! சாதி
விடுதலைக்கும் வீண்மதத்தின் விடுதலைக்கும், நாட்டு
விடுதலைக்கே முன்னாகும் சமுகவிடு தலைக்கே
விடுதலையைத் தோற்றுவித்த தந்தை பெரியாரின்
‘விடுதலை’யின் ஆசிரியர் ‘உண்மை’யுடன் வந்தார்.

தந்தைபெரி யார்இன்றேல் தமிழினமே ஏது?!
தன்மான இயக்கம் எனத் தாங்கியதன் மீது
விந்தைமிகு மாற்றமெலாம் விரைந்தெடுத்த போது
வீரமணி ஆசிரியர் விடுதலையின் பேறு!
சந்தையென இறைந்திருந்த தமிழரெலாம் விழித்தார்
தலைநிமிர்ந்தார்; மொழிஇனமாய் நிலையுணர்ந்து தழைத்தார்!
சொந்தமுள்ள பிறப்பினையும் சூத்திரராய்ச் சொன்ன
சுருக்குவலைத் தந்திரத்தை நறுக்கிவிடத் துணிந்தார்!

வழக்கறிஞர் எனும்பணியே வரலாறென் றாக
வழக்கிழந்த சமுதாய நீதியினைக் காக்க
இழக்கின்ற மொழித்தமிழை மீட்டெடுக்கச், சாதி
இழிவென்றே வரும்இருட்டை ஓட்டிவிட, மோதி
உழக்கின்ற மதப்பேயை விரட்டிவிட, நாட்டில்
‘உண்மை’யாய் ‘விடுதலை’யைக் கண்டுண்ண, நாளும்
வழக்காடி எங்கெங்கும் சுழன்றாடும் வாழ்வே
வரைவெழுத்தில் உரைப்பொழிவில் நிறைந்திருக்கும் அன்றோ!

பத்துவய தாவதற்குள் பகுத்தறிவு மேடை
படைநடத்து வதுபோன்ற மடைதிறந்த பேச்சு!
எத்துறையே என்றாலும் எழுச்சிமிகு வீச்சு!
எதிர்ப்பீடே கொடுக்காமல் எழுதாமல் இருந்தால்
கொத்தாகத் தமிழினமே குலைந்திருக்கும்; கூனிக்
குறுகிப்போய்க் குப்பையாய்க் குவிந்திருக்கும்! பெற்ற
முத்தமிழின் மூச்சும்போய் முடிந்திருக்கும்; வீரம்
மூடநம்பிக் கைகளிலே முடங்கிப்போ யிருக்கும்!

கருப்புச்சட் டையணிதல் கலங்கரைவி ளக்கம்!
கடலாழம் மதம்; சாதி கணக்கில்லா அலைகள்!
விருப்பமுள்ள கரையேற விடும்வாழ்க்கைக் கப்பல்
விரைந்தடிக்கும் விதிக்காற்றில் வேறுதிசை மாறும்!
இருப்பு நிலை காட்டிடஆம் பகுத்தறிவின் ஒளியே
இனம்மொழிநா டென்றுகரை ஏறுவதற்கே பாய்ச்சும்
பொறுப்புடனே உணர்த்துவது கருஞ்சட்டை ஆகும்
பூண்டிருக்கும் ஆசிரியர் புகழ்வாழ்க்கை நீளும்!

தொண்ணூறு அகவையிலும் தொடர்கின்ற தொண்டு
தொகைஅறுப தாண்டுகளாய் விடுதலையின் பங்கு
எண்ணாத இனமான எழுச்சியுரை; மாற்றார்
எறிகின்ற ஈட்டிகளுக் கெதிர்ப்பறிக்கை; தேங்க
ஒண்ணாத கழகத்தின் பணிவரிசை; பார்க்க
உயிர்ப்பான புகைப்படங்கள்; உணர்வேற்றும் வெற்றி
கண்ணான ஆவணமாய்க் காலத்தி னாகும்
கைவண்ணம் ஆசிரியர் கைவண்ணம் அன்றோ|

ஒன்றியத்தில் ஒன்றாக ஒன்றியிருந் திட்டால்
உயிர்த்தியாகம் தாய்த்தமிழைத் தந்துவிட லாமா?!
தின்றவரு ணாசிரமம் செழிக்கக்காப் போமோ?!
தீண்டாமை மனுதர்மம் தேவையென லாமா?
குன்றாகக் குலக்கல்வி கொண்டுவரு வோமா?!
கொத்தடிமை யாயிருக்கச் சத்தியம்செய் வோமா?!
இன்றிடராய்ச் சூழ்ந்துவர வென்றெடுக்க வேண்டின்
என்றென்றும் ஆசிரியர் வாழ்ந்திருக்க வேண்டும்!

கடவுள்கொள் கையுடையார் கருணைசெய் வாரோ?
கல்வியையும் மறுத்தவரா கைகொடுத்துக் காப்பார்?
வடமொழியை வரவழைப்பார் வாழவைப் பவரா?
வாயடைக்கப் பார்ப்பவரா வயிற்றில்பால் வார்ப்பார்?
தொடக்கூடா தென்றவரா தொழுதுருக விடுவார்?!
தொடர்காவிக் ‘கொடி’யவரா தோள்கொடுக்க வருவார்?
நடக்கக்கூ டாதவையே நாடாளு முன்னே
‘நம் நாடு’ ‘விடுதலை’யில் ‘உண்மை’ வாழ்ந்திடுக!

சாணேற முழம்சறுக்கல் தமிழ்நாட்டுக் காகும்!
தமிழ்வாழத் தமிழர்களே ஆளவந்தால் ‘பாவம்!’
வீணேஅண் ணாமலையே வீச்சரிவாள் தீட்டும்!
வீழ்ந்தஇலைச் சருகுகளோ மேயந்துவிடப் பாயும்!
காணாத கானலெல்லாம் கலைத்துவிடப் பேசும்!
கட்டாத கட்டடங்கள் கலவைகளைப் பூசும்!
மாண்பாகத் தமிழாட்சி மானமிகு வீர
மணிமுழக்கப் பிறந்தநாள் மாநிலத்தில் வெல்லும்!