கோவி.லெனின் திராவிட இயக்க எழுத்தாளர்
மாண்புமிகு ஆக வேண்டிய காலம் வரும் போகும். ஆனாலும், மானமிகுவாகத்தான் காலம் முழுவதும் இருக்க வேண்டும். மாண்புமிகு ஆவதும்கூட நம் சமுதாயத்தை மானமிகுந்ததாக ஆக்குவதற்குத்தான் என்பதைத் திராவிட இயக்கத்தினருக்குப் பாடம் நடத்திக் கொண்டே இருக்கும் ஆசிரியருக்கு அகவை 90.
ஓர் உயிர், அந்த உயிருக்கு நிகரான ஓர்இயக்கம். அதன் ஒரே கொடி இவைதான் ஆசிரியரின் 80 ஆண்டுகாலப் பொதுவாழ்வின் அடையாளங்கள். பத்து வயதில் பகுத்தறிவு-சுயமரியாதை- சமூகநீதிக் கொள்கையை ஏற்றவர்.தந்தை பெரியாரின் நெறியையும் வழியையும் பின்பற்றியவர். பெரியாருக்குப் பிறகும் இயக்கத்தைக் கட்டிக்காத்து, கொள்கை முழக்கம் உலகெல்லாம் பரவிடச் செய்தவர் அவர். சட்டப் படிப்பு முடித்த பிறகு வழக்கறிஞர் பணியா அல்லது இயக்கத்திற்கான தொண்ட-றமா என்ற நிலை வந்தபோது, தந்தை பெரியாரிடம் தொண்டறமே என்று உறுதியாகத் தெரிவித்து, அதனை இன்றளவும் நிறைவேற்றிக்
கொண்டிருக்கிறார். படித்து வாங்கிய பட்டத்தைவிடவும் பொது வாழ்வின் அனுபவப் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த தந்தை பெரியாரிடம் பயின்று வாங்கிய பட்டத்தால்தான் அவருக்கு அதிகப் பெருமை.
1957இல் திராவிடர் கழகம் நடத்திய சட்ட எரிப்புப் போராட்டம் என்பது கருப்புச்சட்டைக்காரர்களின் தீரமிக்க தியாக உணர்வுக்கு எடுத்துக்-காட்டு, தந்தைபெரியாரின் ஆணையேற்று, இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை எரிக்கும் போராட்டத்தில் பத்தாயிரத்திற்கும்
மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மூவாயிரத்திற்கும் மேற்-பட்டவர்கள் சிறை சென்றனர். பெண்களும், குழந்தைகளுமாக இயக்கத்தினர் குடும்பம் குடும்பமாகச் சிறையேகினர். பெரியாரையும் அவர்களின் தொண்டர்களையும் தண்டிப்-பதற்காகவே அன்றைய அரசு தனிச் சட்டம் நிறைவேற்றியது. தேசியச் சின்னங்கள் அவமதிப்புத் தடைச் சட்டத்தை நிறைவேற்றி, மூன்றாண்டுகள் வரை தண்டனை வழங்கப்பட்டது.
திராவிடர் கழகத்தினர் வழக்காடவில்லை. ஜாதியைப் பாதுகாக்கும் சட்டப் பிரிவுகளைத் தங்கள் தலைவரின் ஆணைப்படி எரித்தது சரிதான் என வாக்குமூலம் அளித்து, நீதிமன்றம் அளித்த தண்டனையை ஏற்று, சிறை சென்றனர். சிறைச்சாலையில் மூன்று உயிர்கள் பலியாயின. வெளியே வந்த பிறகும் சிறைக் கொடுமைகளின் தாக்கத்தால் பலர் உயிரிழந்தனர்.
பெரியாரும் சிறைப்பட்டிருந்த அந்தக் கொடுங்-காலத்தில் இயக்கப் பணிகளை உறுதியோடு மேற்கொண்டவர் அன்னை மணியம்மையார். அவருக்கு உறுதுணையாக இருந்து இயக்க வேலைகளையும் சட்டப் போராட்டங்களையும் மேற்கொண்டவர் ஆசிரியர் அய்யா அவர்கள். பெரியார் இயக்கத்தின் போர்வாளாகத் திகழும் ‘விடுதலை’ ஏட்டின் ஆசிரியர் பொறுப்பினை ஏற்று, 60 ஆண்டுகளாக உலகின் ஒரே பகுத்தறிவு நாளேட்டை நடத்துவதில் உலக சாதனை படைத்திருப்பவரும் அவர்தான். பெரியாரின் சுற்றுப்பயணங் களில் உதவியாக இருந்தார்.‘பெரியார் தனது சுற்றுப்பயணத்தை நிறுத்திக்கொண்டார்’ என்று கலைஞர் அவர்கள் பெரியார் மறைந்தபோது இரங்கல் அறிக்கையில் தெரிவித்தார். பெரியாரின் இயக்கத்தை அன்னை மணியம்மையார் தலைமையேற்றுத் தொடர்ந்தார்.
பெரியாரின் சுற்றுப்பயணத்தை ஆசிரியர் அய்யா தொடர்ந்து கொண்டிருக்கிறார். நெருக்கடி நிலைக் காலத்தில் மிசா சிறையையும், அங்கே சித்ரவதைகளையும் எதிர்கொண்ட போதும் உள்ளம் கலங்காது, கருப்புச் சட்டைக்காரன் தமிழ்நாட்டின் காவலுக்குக் கெட்டிக்காரன் என்பதை மெய்ப்பித்தவர். பெரியார் நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடிட முனைப்புடன் செயல்பட்டவர். அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.முக. அரசு சார்பில் மாவட்டங்கள் தோறும் விழாக்கள் எடுக்கப்பட்டதற்கும், பெரியார் பிறந்த ஈரோடு நகரைத் தலைமையிடமாகக் கொண்டு பெரியார் பெயரில் புதிய மாவட்டம் உருவாவதற்கும், பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் அரசாங்கத்தால் ஏற்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதற்கும் ஆசிரியரின் பங்களிப்பும் முக்கியமானது.
அதே நேரத்தில், எம்.ஜி.ஆர். ஆட்சியில் சமூக நீதிக் கொள்கைக்கு எதிராக, பிற்படுத்தப்-பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டபோது அதனை எதிர்த்துக் களம் கண்டவரும் ஆசிரியர்தான். நாடாளு-மன்றத் தேர்தல் களம் எம்.ஜி.ஆருக்கு அனுபவப் பாடத்தைத் தந்தது. திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் முன்னெடுத்த போராட்டத்தின் தாக்கத்தால், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 50%ஆக உயர்ந்தது. அன்னை மணியம்மையார் மறைவுக்குப் பிறகு, இயக்கத்தின் தலைமைப் பொறுப்பைத் தோளில் சுமந்த ஆசிரியர், சமூக நீதிப் போராட்டக் களத்தில் சளைக்காத
போராளியாகத் திகழ்ந்தார்.
மத்திய அரசின்வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கிடப் பரிந்துரைத்த மண்டல் கமிஷன் அறிக்கையைக் கிடப்பில் போட்ட நிலையில், அதனை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்திய அளவிலான சமூக நீதி அரசியல் இயக்கங்களை ஒன்று திரட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரும்பணியைச் செய்தவர் ஆசிரியர் அவர்கள். 10 ஆண்டு காலத் தொடர் முயற்சிகளுக்கும் போராட்டங்களுக்கும் பிறகு 1990இல் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்று நடைமுறைப்படுத்த முன்வந்ததற்கும் தூண்டுகோலாக-உறுதுணையாக இருந்ததில் ஆசிரியரின் பங்கு மகத்தானது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்தபோது, அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்தை
சமூக நீதிப் பக்கம் திருப்பி, அரசியல் சட்டத்தின் 31சி பிரிவின்படி, சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றச் செய்து, குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலைப் பெற்று, அதனை ஒன்பதாம் அட்டவணையில் இடம்பெறச் செய்து, இடஒதுக் கீட்டுக்குப்
பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்ததன் சூத்திரதாரி ஆசிரியர் அவர்களே. ஆட்சி அதிகாரப் பதவிப் பொறுப்பு எதுவும் இல்லாத அவரே உண்மையான சமூக நீதி காத்த வீரர்.
தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல், இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோர்-பட்டியல் இன மக்களுக்கான அரசியல்- சமுதாய இயக்கங்கள் ஒருங்கிணைந்து சமூக நீதியை நிலைநாட்டிட வேண்டும் என்று அவர் மேற்கொண்ட முயற்சிகள் பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் எதிரொலித்தன. வடஇந்தியர்கள் ‘பெரியார் மேளா’ எனும் திருவிழா நடத்துகிற அளவிற்கு சமூக நீதியின் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஆசிரியர்.தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டக் களத்தில் திராவிடர் கழகத்தை தன்னலமற்ற இயக்கமாக முன்னிறுத்தியவர் ஆசிரியரே. தமிழ்நாட்டில் பல அமைப்புகளுக்கு ஈழத் தமிழர் பிரச்சினை என்பது வருமான வாய்க்கால். ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்காக எவ்விதப் பலனையும் எதிர்பாராமல் சிறைவாசம் தொடங்கி பல தியாகங்களைச் செய்த இயக்கங்கள் பெரியாரின் திராவிடர் கழகமும், அண்ணா உருவாக்கி கலைஞர் வளர்த்த திராவிட முன்னேற்றக் கழகமும்தான்.
ஈழத் தமிழர் போராட்டக் களத்தில் கலைஞரின் இளவலாக, களத்தின் தளபதியாகச் செயல்பட்டவர் ஆசிரியர் அவர்கள். தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்தமுள்ளாக அவர் மறைவுக்குப் பிறகும் தொடர்ந்தது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கமுடியாத நிலை. அதனை நிறைவேற்றுவதில் முனைப்பாக இருந்து சட்டமியற்றிய முத்தமிழறிஞர் கலைஞருக்கு பெரியார் திடலில் கல்வெட்டு நிறுவி பாராட்டுத் தெரிவித்தார் ஆசிரியர். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோரும், பட்டியல் இனத்தவரும் கோயில் கருவறைக்குள் நுழைவதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கிய இன்றைய முதலமைச்சர் ‘சமூக நீதிக்கான சரித்திர நாயகர்’ மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை முற்றிலுமாக வெளியே எடுத்தெறிந்தார். அந்த மகத்தான பணியை அவர் நிறைவேற்றிய பிறகு சென்ற இடம், பெரியார் திடல்; கண்ட தலைவர், ஆசிரியர்அய்யா. பேரறிஞர் அண்ணாவின் சுயமரி
யாதைத் திருமணச் சட்டம் தொடங்கி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சமூக நீதி சாதனைத் திட்டங்களுக்கு ஆதரவாக இருந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக்கு நல் ஆலோசனைகளை வழங்கும் தாய்க் கழகத்தின் தத்துவத் தலைவராகத் திகழ்பவர் திராவிடர் கழகத் தலைவர்.
இந்திய ஒன்றியம் இன்று எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவாலான மதவெறி பா.ஜ.க. அரசின் ஒவ்வொரு அறிவிப்பையும் உன்னிப்பாகக் கவனித்து, அதன்மூலம் எதிர்காலப் பாதிப்புகள் எந்த அளவில் இருக்கும் என ஆழ அகலங்களை துல்லியமாகக் கணித்து, எச்சரிக்கை மணி அடித்து சமூக நீதி இயக்கங்கள் அனைத்தையும் விழிப்படையச் செய்பவரும் ஆசிரியர் அவர்கள்தான். ‘நீட்’ தேர்வுக்கு எதிரான மாநிலம் தழுவிய பரப்புரை, அதில் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்து பற்றிய விளக்கம், பெரியார் திடலில் சமூக நீதி அமைப்புகளை ஒருங்கிணைத்து கருத்தரங்குகள், இந்தி- சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்துப் போராட்டக் களம், அரசியல் சட்டத்தின் அடிப்படையைத் தகர்க்கும் வகையில் நிறைவேற்றப்படும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு எதிரான சட்டப் போராட்டம் என எல்லாவற்றிலும் தத்துவ வழிகாட்டியாக_சளைக்காத போராளியாக முன்னிற்கிறார் 90 வயது இளைஞர்.
ஆம்.. ஆசிரியர் மனதளவில் மட்டுமல்ல, உடலைப் பேணிக் காப்பதிலும் இளைஞராகவே இருக்கிறார். ஒரு பத்திரிகையாளனாக, மில்லினியம் எனப்படும் புத்தாயிரம் ஆண்டில் 70 வயதை நெருங்கிய ஆசிரியர் அவர்களிடம் அவர் எப்படி உடல்நலத்தைப் பாதுகாக்கிறார் எனக் கேட்டறிந்தேன். இருதயஅறுவை சிகிச்சை செய்து கொண்டபிறகும், வழக்கம்போல தன் பணிகளைக் கவனிப்பதற்கேற்ப அவர் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள், உணவுப் பழக்கம், மனதிடத்திற்கான வழிமுறைகள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டார். அவர் உடற்பயிற்சி செய்யும் படங்களுடன் அது ‘நக்கீரன்’ இதழில் வெளியானது. 22 ஆண்டுகள் கடந்த பிறகும் அதே அளவில் அவர் உடல்நலனைப் பராமரிப்பதும், இயக்கப் பணிகளையும் பத்திரிகைப் பணியையும் கவனிப்பதும், படிப்பதும் எழுதுவதும், பயணிப்
பதுமாக -_ இளைஞர்களையும் நடுத்தரவயதுக்காரர்களையும் விட சுறுசுறுப்பாக _ இயங்குவதைப் பார்க்கும்போது வியப்பு ஏற்படாமல் இல்லை.
அண்மையில் ஈரோடு சந்திப்பில் ரயிலில் இருந்து இறங்கிய ஆசிரியர் அய்யா நடக்கும் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் மற்ற
நிருவாகிகள் ஓட்டமும் நடையுமாக வருவதை காணொலியில் பார்த்தபோது, தலைமைப் பண்பு என்பதில் சிந்தனை வளத்தால் மட்டுமின்றி, செயல் வடிவத்திலும் ஆசிரியரே எடுத்துக்காட்டாகத் திகழ்வதை உணர முடிந்தது.
திராவிடர் கழகம் என்பது பகுத்தறிவு இயக்கம்- பரப்புரை இயக்கம்- சமூக நீதி இயக்கம்- சமுதாயச் சீர்திருத்த இயக்கம் என்பது
டன், கொள்கை வழிக் குடும்ப இயக்கமாகவும் திகழ்கிறது என்றால் அதற்குக் காரணம் ஆசிரியர் அய்யா எனும் குடும்பத் தலைவர் அவர்கள்தான்.
குருதி உறவைவிட கொள்கை உறவு வலிமையானது என்பதை பெரியார் திடலிலும் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் திராவிடர் கழக மேடைகளில் காண முடியும்.எத்தனையெத்தனை சுயமரியாதைத்திருமணங்கள், எத்தனையெத்தனை பெரியார் தொண்டர்-களுக்கான பாராட்டு விழாக்கள், ‘விடுதலை’ சந்தா வழங்கும் நிகழ்வுகள், தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா, திராவிடர் திருவிழா என எல்லாவற்றிலும் கருப்புடைக் குடும்பத்தின் கொள்கைப் பாச உணர்வு வெளிப்படுகிறது.
“நாங்கள் மூன்றாம் தலைமுறை, நாங்கள் நான்காம் தலைமுறை” எனப் பெருமையுடன் சொல்லும் பெரியார் பிஞ்சுகளைக் காணும்போது, ஆசிரியர் அவர்கள் திராவிடர் கழகம் எனும் பெருங்குடும்பத்தின் தனயனாக,தந்தையாக, தாத்தாவாகத் திகழ்வதை உணரமுடியும். பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம்
காணாமல் போய்விடும் என நினைத்தவர்களின் எண்ணங்களுக்குச் சாவுமணி அடித்து, பெரியாரை உலகமயமாக்கி வருபவர் ஆசிரியர் அய்யா வீரமணி.
பகுத்தறிவை விதைத்து, அறிவியல் மனப்பான்மையை வளர்த்து, காலத்திற்கேற்ற தொழில் நுட்பங்கள் அனைத்திலும் பெரியாரின் இலட்சியங்களை முன்னெடுத்துச் செல்லும் வேகத்தில் இளைஞராகவே அவர் திகழ்கிறார். கட்சியைக் கடந்து இளைய தலைமுறை பெரி
யாரை அறிந்துகொண்டதிலும், அந்தப் பெருங்கிழவனே எங்களின் உரிமைக் காவலர் என்று போற்றுவதிலும் ஆசிரியரின் அயராத பெரும்பணி வெளிப்படும்.
கண்ணுக்குத் தெரிகின்ற திராவிடர் கழக உறுப்பினர்களான பெரியார் தொண்டர்கள், கண்ணுக்குத் தெரியாத வகையில் பல்வேறு நிலைகளிலும் உள்ள பெரியார் கொள்கை ஆதரவாளர்கள் எனப் பகுத்தறிவு ஒளி பல இடங்களிலும் பரவிடச் செய்தவர் ஆசிரியர் அவர்கள்.90 வயது இளைஞர் இன்னும் பல்லாண்டுகள் நலமுடன் வாழ்ந்து பெரியாரை உலகமயமாக்கட்டும்; அவர் சிந்தனையில் உருவாகியுள்ள ‘பெரியார் உலகம்’ சிறுகனூரில் பெருகி வளர்ந்து நிறைவாகட்டும்.வாழ்க ஆசிரியர்! வளர்க அவரது தொண்டறம்!!