ஆங்கிலம் வேண்டும்; இந்தி வேண்டாம்!
(தமிழர்களின் முன்னேற்றத்திற்கு ஆங்கிலம் அவசியம் என்ற விழிப்புணர்வை தொலைநோக்கோடு உணர்த்தியவர்
தந்தை பெரியார்)
ஆங்கிலம், ஆங்கிலப் பண்பு இல்லாவிட்டால் அரசியல் விடுதலை ஏது? மந்திரிகள் ஏது? இன்றைய விஞ்ஞான வளர்ச்சி, ஞானம், அற்புத அதிசயங்கள், அனுபவங்கள் ஏது? இதை இன்று மந்திரிகள் உணர்ந்து ஆங்கிலத்தைத் திரும்பவும் சேர்த்துக் கொண்டார்கள். சென்னைக்கு வந்து திரும்பிச்சென்ற பண்டித நேரு அவர்களும் ஆங்கிலத்தின் அவசியத்தையும், அதனால் பல நன்மைகளை எதிர்காலத்தில் அடைய இருப்பதால் அதை வெறுக்கும் மனப்பான்மை கூடாதென்பதையும் பம்பாய் மந்திரிகளுக்கே உபதேசம் செய்திருக்கிறார். வடநாட்டுக் காங்கிரசுக்காரர்களுக்கு இந்தப் புத்தி. ஆனால் நம் நாட்டுக் காங்கிரசுக்காரர்களுக்கோ எனின் – அதற்கு நேர்மாறான பழைமை விரும்பிகளாயிருக்கின்றனர். இது ஒழுங்காகுமா என்று கேட்கிறேன். நாம் நம் நாட்டைவிட்டு வடக்கே போனால் மலைப் பிரதேசம்தான் காணவேண்டும்; காட்டுமிராண்டித்தனம்தான் கற்கவேண்டும்.
ஆனதால், நாம் கற்றுக்கொள்ள ஏதாவது உண்டு என்றால், அது நமது மேற்கிலும், கிழக்கிலும்தான் உண்டு. ஆங்கில மோகத்தால் நான் அதை ஆதரிக்கவில்லை. அவ்விதமானால், ஆங்கிலத்தையே வேரறுக்கும் வீரர்களான பண்டிதர் போன்றோர் இன்றைய நிலையிலும் ஆங்கிலத்தின் மேன்மையை ஏன் எடுத்துக் கூற வேண்டும்? அதுமட்டுமல்ல, சென்னை அரசியலார்தான் ஆங்கிலத்திற்கு நான்கு பீரியட் (றிமீக்ஷீவீஷீபீ) என்று ஏன் ஒதுக்கவேண்டும்? இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலத்தை வெறுத்த அவிநாசியார் இன்று ஏன் அதை ஆலிங்கனம் செய்ய வேண்டும்? இது ஆங்கிலத்தின் மேன்மையை உணர்ந்ததாலல்லவா?
ஆங்கிலம் உலகமொழி என்பதை யாவரும் ஒப்புக்கொண்டாகி விட்டது. 1500 மைல் கடற்கரையுள்ள நாட்டினராகிய நாம் – உலக மொழியைக் கற்று ஏற்கவும், தகுதியும் அவசியமும் உடையவர்கள் அல்லவா? எனவே, நான் ஆங்கில மொழியின் அவசியத்தைப் பற்றி வற்புறுத்திக் கூறுவதைப் பழைமை விரும்பிகளான காங்கிரசார் தவறாகக் கருதுவதில் அதிசயமில்லை. அதனால் நான் தமிழ்மொழியை இகழ்வதாகவும் கருதக்கூடாது. ஆங்கிலத்தில் விஞ்ஞான அறிவு அறவே கலந்துவிட்டது; புதிய உலகுக்கான வழிவகைகள் அதில்தான் மலிந்து கிடக்கின்றன.
இதை எவரும் மறுக்கமுடியாது. ஆங்கில ஏகாதிபத்திய முறையை நாம் வெறுக்கும் மனப்பான்மை கொண்டிருந்தோமேயன்றி, ஆங்கிலமொழியை வெறுப்பதென்பதல்ல. வடநாட்டு இந்தி மொழியைக்கூட நாம் வெறுப்பது – -_ வடநாட்டவர்களின் ஆதிக்கம் மீதுள்ள வெறுப்பால் என்று எவரும் கருதக்கூடாது.
அம்மொழியிலிருந்து மக்களின் நல்வாழ்வுக்-காகத் தெரிந்துகொள்ளக்கூடிய ஒரு சிறு எடுத்துக்காட்டாகிலும், -தமிழில் இல்லாத எதையாகிலும் இந்தியில் காட்டமுடியுமா? கூறமுடியுமா? நான் ஏன் இதைக் கூறுகிறேன் என்றால், காங்கிரஸ் ஏடுகள் -‘இத்தனைக் காலம் ஆங்கில மொழிக்கு அடிமையாக இருந்துவந்த வீரர்கள், இன்று இந்தியை எதிர்க்கிறார்கள்_- வெட்கமற்றவர்கள்’ என்று எழுதி என்னைக் கேலி செய்தனர். அதற்காக இதைச் சொல்லுகிறேன். நாம் ஆங்கிலம் கற்காவிட்டால் உலக மக்களோடு கலந்துவாழ முடியுமா? ஏன்? அம்மொழியின் ஆற்றல் அவ்வளவு. ஆங்கிலம் கற்றதனால் – பல நிபுணர்கள், அறிஞர்கள் புத்துலகச் சிற்பிகள் தோன்றினார்கள்.
நாம் சரித்திர வாயிலாக இன்றும் நேரடி-யாகக் காண்கிறோம். ஆனால், இந்தி மொழி கற்றவர்களில் எவர் அறிஞராய்,- முற்போக்குடையோராய்த் திகழ்கின்றனர் என்று கேட்கிறேன். மதவெறி பிடித்த பழைமை விரும்பிகளாகத்தான் இருக்கிறார்களேயன்றி வேறில்லை. இன்னும் கூறவேண்டுமானால், அம்மொழி காந்தியாரைக் கொன்ற கோட்சேக்-களைத்தான் உற்பத்தி செய்திருக்கிறது. நான் ஒரு மொழியை வெறுப்பதோ, வரவேற்பதோ, அந்தந்த நாட்டுக்காரன் என்ற உணர்ச்சியாலல்ல. அம் மொழியைக் கற்றால் மக்கள் சமுதாயத்திற்கு என்ன பலன் ஏற்படும்; என்ன இலாபம் கிடைக்கும் என்பதையே முக்கியமாகக் கருதுபவன். நான் பகுத்தறிவுவாதி; நிபந்தனையற்ற முற்போக்குவாதி.
அந்த நிலையிலிருந்துதான் நான் ஆங்கிலத்-தைப் பற்றி என் உள்ளக்கிடக்கையை ஒளிவு மறைவின்றிக் கூறினேன்; நீங்கள் ஏற்க வேண்டு-மென்றல்ல; சிந்திக்க வேண்டும் என்பதற்காக நம் நாட்டைப் பொறுத்தவரை நம் தமிழ் மொழியையும், இனிப் புலவர் பெருமக்கள், ஆங்கிலப் புலவர்கள்போல், முற்போக்குப் படைத்த அறிவுக்கண் கொண்டு வளர்க்க-வேண்டும். மதம், சமுதாயம், நாடு என்பவைகள் பற்றிய பழைமையை மறக்கவேண்டும். பழைமையில் சிக்கிக் கிடக்கும் ஒருசில பண்டிதர்களுக்கும் இதை நினைவூட்டுகிறேன். பழைமைக்காக நாம் வாழவில்லை. பழைமையைத் தேடவோ இறுக்கிப் பிடிக்கவோ ஏற்பட்டதல்ல, நம் அறிவு.
– ‘விடுதலை’, 15.8.1948
மாகாணங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்
பட்டு, மாகாண சுயாட்சி முறையும் ஏற்படுவது நிச்சயமாயிருக்கும்போது, ‘இந்தியாவுக்குப் பொதுமொழி ஒன்று அவசியந்தான்’ என்பதே விவாதத்திற்குரிய விஷயம். தென்னிந்தியாவுக்கு வியாபாரத்திற்கும், வேறு வேலைகளுக்கும் வருகின்ற வடநாட்டார் எவ்வாறு தென்னிந்திய மொழிகளைக் கற்றுக் கொள்
கிறார்களோ அதேபோல், வட நாட்டுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டிய திராவிடர்களும், அங்கே வேலைக்குச் செல்லவேண்டியவர்களும் இந்தியைக் கற்றுக்கொண்டாலே போதும்.
இதைத் தவிர, உலகமொழியாகிய ஆங்கிலத்தை அறவே ஒழிப்பதென்பது முடியவே முடியாது. அப்படி ஒழித்தால், நாம் உலகிலேயே மிகப் பிற்போக்கான மனித சமுதாயமாகி விடுவோம் என்பது முக்காலும் உறுதி.
ஏனெனில், உலகில் சுமார் 26 கோடி மக்கள், அதாவது உலக மக்களில் எட்டில் ஒரு பங்குப் பேர் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கின்றனர்; உலகிலுள்ள பத்திரிகை-களில் சரிபாதிக்கு மேற்பட்டவை ஆங்கிலத்தில் வெளிவருகின்றன; உலகிலுள்ள ரேடியோ நிலையங்களில் 5இல் 3 பங்குக்குமேல் ஆங்கிலத்தில் செய்திகள் ஒலிபரப்பப்படுகின்றன. இதைத்தவிர, ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டிராத பல இலட்சக்கணக்கான மக்கள் அறிவு, ஆராய்ச்சி, இலக்கியம், விஞ்ஞானம் ஆகிய துறைகளில் விரைவில் முன்னேறுவதற்காக ஆங்கிலத்தைப் பயின்று வருகின்றனர்.
எனவே, ஆங்கிலத்தை அறவே புறக்-கணிக்க முடியாதென்பது நிச்சயம். உலக மொழியாகிய ஆங்கிலத்துடன் இந்தியப் பொதுமொழி என்று கூறப்படும் இந்தியையும் கற்றுக்கொண்டு, அவர்கள் தாய்மொழியையும் கற்கவேண்டுமென்றால், மொழிகளைத் தவிர்த்த, இதர கலை நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்து வாழ்க்கைக்குப் பயன்படுத்துவது முடியக்கூடிய காரியமா? யோசித்துப் பாருங்கள்
– தந்தை பெரியார், ‘விடுதலை’, 20.9.1946
இந்தியாவுக்கு ஒரு பொதுமொழி வேண்டு-மானாலும், அல்லது வியாபாரத்திற்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து, அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டுமேயல்லாமல், வேறு மொழியைப் பற்றி யோசிப்பது முட்டாள்தனமோ அல்லது சூழ்ச்சியோதான் ஆகும்.
ஆங்கிலம் உலக மொழி; உலக வர்த்தக விஞ்ஞான மொழி; இந்திய அரசாங்க மொழி; அதுமாத்திரமல்லமல் மூடப்பழக்க வழக்கமும், பார்ப்பனியமும் இல்லாமல் அவ்வளவும் அடிப்படையான கலைகளை வாசகமாகப் பெற்ற மொழியாகும்.
– (தந்தை பெரியார், ‘குடிஅரசு’, 20.1.1929)