உடல் – தானே நோய்களைத் தீர்த்துக்கொள்ளுமா?
நூல்: போலி அறிவியல் –
மாற்று மருத்துவம் – மூடநம்பிக்கை
(ஒரு விஞ்ஞான உரையாடல்)
ஆசிரியர்: டாக்டர் சட்வா MBBS DA DNB (Anaesthesiology)
வெளியீடு: நிகர்மொழி பதிப்பகம்
தொலைபேசி: 8428-455-455 / 8428-477-477
மின்னஞ்சல்:sales@periyarbooks.in
பக்கங்கள்: 120 | விலை: ரூ.120/-
மரபு மருத்துவர்கள் பலர் உடலுக்கு எல்லையற்ற ஆற்றல் இருப்பதாக நம்புகின்றனர். அது நோய்களைத் தானே தீர்த்துக் கொள்ளும் என்றும் நம்புகின்றனர். இது உண்மையாக இருந்தால் மருத்துவம் என்ற ஒன்று வரலாற்றில் தேவைபட்டே இருக்காது.
என்னுடைய உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரின் நான்கு வயது குழந்தைக்குக் காய்ச்சல். குழந்தை சுருண்டு படுத்துக் கிடந்தது. பார்க்கவே சற்று பலகீனமாக இருந்தது. என்ன ஆயிற்று என்று கேட்டதற்கு, இரண்டு நாட்களாகக் காய்ச்சல் என்றார். மருந்து ஏதும் கொடுத்தீர்களா? என்று கேட்டேன். அவர், இல்லை நாங்கள் காய்ச்சலுக்கு மருந்து எடுத்துக்கொள்வதில்லை. உடல் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும் என்றும், காய்ச்சல் உடலின் கழிவுகளை வெளியேற்றும் இயற்கை முயற்சி என்றும் கூறினார். அவரின் பதில் எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும், பரிதாபமாகவும் இருந்தது. காய்ச்சல் என்பது உடலின் நீர்ச்சத்தை ஆவியாக்கக் கூடியது. சில மணி நேர காய்ச்சல் உடலின் நீர்ச்சத்தில் கணிசமான அளவை வீணாக்கிவிட வல்லது. குழந்தை தொடர்ந்த காய்ச்சலினால் நீர்ச்சத்து இல்லாமல் வறண்டு கிடந்தது. (Dehydration).
மரபு மருத்துவர்கள் என்ற பெயரில் உலாவும் போக்கற்ற சிலர் இவ்வகை கருத்துகளைப் பரப்பிவிடுகின்றனர். பரப்பிவிடும் அவர்கள் பாதிப்பு என்று ஒன்று வரும்போது அதற்குப் பொறுப்பு ஏற்க போவதில்லை. அதனைத் தீர்க்கவும் போவதில்லை.
மேற்கண்ட உடல் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளுமா? என்ற கருத்தில் கீழ்கண்ட கேள்விகளைக் கேட்டு ஆராய வேண்டி உள்ளது.
1. மனித உடல் எல்லையற்ற நோய் தீர்க்கும் ஆற்றலைக் கொண்டதா?
2. நோய் வருவது உடலைப் பாதுகாக்கும் முயற்சியா?
3. இயற்கை என்பது மனிதனுக்கு சாதகமானதா?
மரபு மருத்துவர்கள் பலர் உடலுக்கு எல்லையற்ற ஆற்றல் இருப்பதாக நம்புகின்றனர். அது நோய்களைத் தானே தீர்த்துக் கொள்ளும் என்றும் நம்புகின்றனர். இது உண்மையாக இருந்தால் மருத்துவம் என்ற ஒன்று வரலாற்றில் தேவைப்பட்டே இருக்காது. இவர்கள் புகழும் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்றவையும் கூட தேவைப்பட்டு இருக்காது. உடல் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும் ஆற்றல் இல்லாததால்தான் மருத்துவ முறைகளே தோன்றியது.
அதே போல உடலுக்குள் எல்லா வகை சக்திகளும் இருக்கின்றன என்பது ஒருவகையில் ஒரு ஆன்மிகம் சார்ந்த மாயாஜாலக் கருத்து ஆகும். அதே போல மனிதன் என்பவன் உயர்வான ஒரு பிறப்பு என்பது போன்ற ஒரு கருத்தும் அதில் உள்ளது. ஆனால், உண்மையில் பிரபஞ்சத்தில் சூரியன் என்ற மிகச் சிறிய நட்சத்திரத்தின் குடும்பத்தைச் சார்ந்த பூமி எனும் சிறிய கோள் ஒன்றில் வசிக்கும் புறக்கணிக்கத்தக்க உயிரிகள்தான் மனிதர்கள். பிரபஞ்சத்தின் அளவு மற்றும் ஆற்றலுடன் ஒப்பிடும் போது மனிதன் ஒரு கருத்தே இல்லை.
உயிரிகள் தோற்றம் என்பது ஒரு விபத்தாக இங்கே நடந்தது ஆகும். அதன் பிறகு லட்சக்கணக்கான உயிரிகள் பரிணாமத்தில் தோன்றின. அந்த லட்சக்கணக்கான உயிரினங்களில் கணிசமான அளவு உயிரினங்கள் பிழைக்க முடியாமல் அழிந்து-போய்விட்டன (Extinct). தொடர்ந்து பிழைத்து இருக்கும் உயிரிகளில் மனிதனும் ஒருவன். மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையாடுதலில் கிடைத்த இறைச்சி மூலம் மிக அதிக புரதம், கொழுப்பு, விட்டமின் B3 மற்றும் B12 ஆகியவை மனித மூளை செழிப்புற்று வளர உதவியது”. அதைத் தொடர்ந்து மனித இனம் வளர்ச்சியுற்ற மூளையைப் பயன்படுத்தி தனது பகுத்தறியும் திறனால் உயிர் பிழைத்து வருகின்றது.
இவ்வாறான மனிதர்களின் உயிர் பிழைத்தல் நிரந்தரமானது என்று சொல்ல இயலாது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மருத்துவத்தின் வரலாறு” (The Cambridge Illustrated History of Medicine) எனும் நூலில் ஓர் ஆர்வ மூட்டக்கூடிய கருதுகோள் குறிப்பிடப்பட்டுள்ளது. அது ‘கிருமிகள் தாங்கள் வாழ்வதற்காக தான் மனிதர்களையே விட்டுவைத்துள்ளன’ என்பதாகும்.
பரிணாம வளர்ச்சியில் பாக்டீரியா, வைரஸ் முதலிய கிருமிகள் மிகவும் மோசமான தீவிரத் தன்மையுடன் (virulent) இருந்துள்ளன. அந்தக் கிருமிகள் உடலுக்குள் வந்துவிட்டால் ஓரிரு மணி நேரங்களில் மரணம் எனும் சூழல் அக்காலத்தில் இருந்துள்ளது. ஆனால், இவ்வாறு மிகவும் தீவிரத் தன்மையுடன் இருப்பது கிருமிகளுக்கே பாதிப்பாக முடிந்தது.
ஏனெனில், கிருமி தங்கியுள்ள (Host) மனிதன் உடனடியாக இறந்துவிட்டால் அவைகளுக்குப் பிழைக்க இடமில்லாமல் மனிதனோடு சேர்ந்து இறக்க வேண்டியதாகிவிடும். ஆகவே. பரிணாம வளர்ச்சியில் கிருமிகள் காலப்போக்கில் சற்று தீவிரம் குறைந்தவைகளாகத் தங்களைத் தானே தகவமைத்துக் கொண்டன. அல்லது தீவிரத் தன்மை குறைந்த கிருமிகள் மட்டுமே தப்பி பிழைத்தன என்றும் கூறலாம்.
இருப்பினும் தடுப்பூசிகள் கண்டறியப்படும் வரை பிளேக், அம்மை போன்ற கொடிய கிருமிகள் மனிதனுக்குச் சவாலாக இருந்தன.
ஆக, இவ்வாறு மனித இனம் தப்பி பிழைத்து உயிர் வாழ்வதே தன்னுடைய பகுத்தறிவின் மூலம் விளைந்த விஞ்ஞான அறிவினால் தான். இங்கே உடல் தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும் என்ற பேச்சுக்கு இடமேதுமில்லை. தானாகவே சரியாகிப் போகக்கூடிய சில நோய்கள் (self limitingர) உள்ளன என்பதும் உண்மைதான். ஆனால், ஒரு மனிதனுக்கு வந்துள்ள நோய் தானாகச் சரியாகக் கூடிய வியாதியா? அல்லது உரிய சிகிச்சை தேவைப்படுகின்ற ஒன்றா? என்பதை முடிவு செய்யவே ஒரு மருத்துவ அறிவியல் தேவைப்படுகிறது.
அடுத்ததாக நோய் வருவது மனிதனின் உடலிலுள்ள கழிவை நீக்கும் முயற்சி என்று மரபு மருத்துவர்கள் பலர் கூறி வருகின்றனர். இது நகைச்சுவையானதாகும். எடுத்துக்காட்டாக சிறுநீரகம் என்பதை எடுத்துக் கொள்வோம். அது ஒரு கழிவு வெளியேற்றும் உறுப்பு ஆகும்.
ஒருவருக்கு சிறுநீரகம் செயல்படவில்லை, நோய் வந்து விட்டது என்று கருதுவோம். இப்போது மரபு மருத்துவர்கள் இந்தச் சூழலை எப்படிச் சொல்வார்கள்? இந்தச் சிறுநீரக நோய் கழிவை வெளியேற்ற வந்துள்ளது என்று சொல்வார்களா? கழிவு ஒழுங்காக வெளியேறாமல்தானே நோயே வந்துள்ளது? ஆகையால், நோய் என்பது உடலின் கழிவை வெளியேற்றும் ஓர் உன்னத முயற்சி என்ற இந்தக் கருத்து முற்றிலும் தர்க்க விரோதமானதாகும்.
ஒருவருக்கு உடலில் ஏதோ ஓர் இடத்தில் கம்பி கிழித்து, காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்துக்கொள்வோம். காயம் உள்ள இடத்தில் வலி ஏற்படும். வலி எதனால் ஏற்படுகிறது எனில், அது உடல் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும் முயற்சியில் ஏற்படும் ஒன்று அல்ல. மாறாக வலி உங்களை மருத்துவமனை போக அழைக்கிறது.
காயத்திற்குத் தையல் போட்டு மருந்து இட பணிக்கின்றது. இதுவே வலியின் பணி ஆகும். மாறாக வலி என்பது உடல் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும் முயற்சி என்று சொல்ல இயலாது. அதே போலவே காய்ச்சலும் ஆகும். காய்ச்சல் உடலுக்குள் ஏதோ ஒரு கிருமி புகுந்துள்ளதை அறிவிக்கின்றது. அதனைப் பார்த்து நாம் சரிசெய்துகொள்ள வேண்டியது நமது கடமை ஆகும்.
அதே போல், இயற்கை என்பது மனிதனுக்குச் சாதகமாகவே எப்போதும் இருக்கும் என்று மக்கள் பலர் நம்புகின்றனர். இது எந்த வகையிலும் உண்மையல்ல. இயற்கை அதன் போக்கில் உள்ளது. பிழைத்துக்கொள்ள வேண்டியது மனிதனே. மனித இனம் இருக்கிறதா? இல்லையா? என்று இயற்கைக்கு எந்தக் கவலையும் இல்லை.
இயற்கை நன்று; செயற்கை மோசமா?
கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை நாசமாக்கும் புகையிலை, கஞ்சா, ஓபியம் போன்றவை இயற்கையில் கிடைப்பவையே ஆகும்!
இயற்கையில் கிடைக்கும் அனைத்தும் மனித உடலுக்கு உகந்தது என்றும் செயற்கையில் தயாரிக்கப்படுபவை அனைத்தும் மோசமானவை என்றும் தொடர்ந்து மக்கள் நம்ப வைக்கப்படுகின்றனர். ஆனால், நம்முடைய உலகில் இயற்கையில் வளரும் தாவர வகைகளில் லட்சக்கணக்கான தாவரங்கள் விஷத்தன்மை (Paisonous) வாய்ந்தவை ஆகும்.
உலகில் ஒவ்வோர் ஆண்டும் கோடிக்-கணக்கான மக்களைப் புற்றுநோய்க்கு ஆளாக்கிக் கொல்லும் புகையிலை ஓர் இயற்கையில் வளரும் தாவரமாகும். வாழ்க்கையை நாசமாக்கும் போதைப் பொருள்கள் இயற்கையில் கிடைப்பதாகும். உண்டவுடன் மரணத்தை விளைவிக்கும் அரளிவிதை, குண்டுமணி, ஆமணக்கு, எட்டிக்காய் மற்றும் பல விஷத் தாவரங்கள் இயற்கையில் எல்லா இடங்களிலும் விளைந்து கிடக்கின்றன. இந்தக் கொடிய வகைத் தாவரங்களைத் தவறுதலாக உண்டு பல விலங்கினங்களும், மனிதர்களும் ஆண்டுதோறும் உயிர் இழக்கின்றனர்.
அதேபோலவே செயற்கையில் தயாரிக்கப்-படும் பல்லாயிரக்கணக்கான மருந்துகள், கோடிக்கணக்கான மக்களை இன்றும் உலகம் முழுவதும் காப்பாற்றி வருகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத் தகுந்தது. இவை காய்ச்சலைப் போக்கவல்ல ‘பாராசிட்டாமால்’ முதல் கேன்சர் நோயைக் குணப்படுத்தும் ‘இமாப்டினாப்’ வரை நீள்கின்றன.
தாவர வகை உணவுகள் உடலுக்கு நல்லன என்றும், மாமிச உணவுகள் உடலுக்கு ஆபத்தானவை என்றும் மற்றுமொரு கருத்தும் நாட்டில் நிலவுகிறது. இதுவும் தவறானது ஆகும்.
இரண்டு மனிதர்கள் ஒரு காட்டுக்குள் சிக்கிக்கொண்டனர் என்று கருதுவோம். அங்கே உணவு ஏதும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஒரு மனிதர் மாமிச உணவுப் பிரியர். மற்றொருவர் தாவர உணவுப் பிரியர். மாமிச உணவுப் பிரியர் அங்கே காட்டுக்குள் கண்ணில் தென்படும் ஏதாவது ஒரு விலங்கினை அடித்து நெருப்பு மூட்டி சுட்டு உண்கிறார்.
அதேபோல தாவர உணவுப் பிரியர் ஏதாவது ஒரு தாவரத்தைக் கொண்டுவந்து சமைத்து உண்கிறார். இருவரில் யார் விஷத்தன்மை உடைய உணவை உண்டு இருக்கும் வாய்ப்பு அதிகம் என்றால் தாவர உணவை உண்டவர்தான் விஷத்தன்மை உடைய உணவை உண்டு இருக்கும் வாய்ப்பு அதிகமாகக் கொண்டவர். ஏனெனில், தாவர வகைகளில் பெரும்பாலானவை மனிதன் உண்ணத் தகுதியற்றவை ஆகும்.
எனவே, இயற்கை அனைத்தும் நன்று, செயற்கை மோசம் என்பதும், தாவர உணவுகள் நல்லது, இறைச்சி உணவு மோசமானது என்பதும் தவறான ஆதாரமற்ற நம்பிக்கைகள் ஆகும்.
நவீன விஞ்ஞான மருத்துவம் இயற்கையா? செயற்கையா?
அறிவியலின் பணி, இயற்கையோ அல்லது செயற்கையோ, அது மனித உடலக்கு உகந்ததா? இல்லையா? ஏதேனும் நோய்களைக் குணப்படுத்த அது உதவுமா? என்று ஆராய்ந்து, வகைப்படுத்தி, பிரித்தெடுத்து, மருந்துகளாக அதனை வழங்குவது ஒன்றே ஆகும்.
அலோபதி அல்லது நவீன விஞ்ஞான மருத்துவம் செயற்கையில் தயாரிக்கப்படும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்துகின்றது. என்று மக்கள் நம்புகின்றனர். ஆனால், அலோபதியில் கணிசமான மருந்துகள் இயற்கையில் கிடைக்கும் தாவரங்களில் இருந்து பிரித்து எடுக்கப்படுகின்றன. மலேரியாவைக் குணப்படுத்தும் மருந்துகள் முதன் முதலில் ‘சின்கோனா’ மரப்பட்டையிலிருந்துதான் தயாரிக்கப்பட்டன. இவ்வாறு தாவரங்களிலிருந்து பெறப்படும் அலோபதி மருந்துகள் கணக்கற்றவையாகும். அறிவியல் மருத்துவம், இந்த மருந்து இங்கிருந்து வந்தது, அங்கிருந்து வந்தது என்று பாகுபாடு பார்ப்பதில்லை.
அறிவியல் பகுத்தறிவின் உச்சம் ஆகும். விஞ்ஞான மருத்துவத்தின் ஒரே முன்முடிவு அது நிரூபிக்கப்பட்ட ஒன்றாக (Proven) இருக்க வேண்டும் என்பதே ஆகும். எடுத்துக்காட்டாக ஏதேனும் ஒரு பாரம்பரிய மருந்து வேலை செய்வதாக நிரூபிக்கப்படுமாயின் நிரூபிக்கப்பட்ட அடுத்த நாள் முதல் அது அறிவியல் உலகின் மருந்தாகிவிடும். நிரூபிக்கப்படாதவை மாற்று மருத்துவமாகத் தொடரும். அறிவியலுக்கு இயற்கை, செயற்கை எல்லாம் கிடையாது. இன்னும் சற்றுக்கூர்ந்து நோக்கித் தத்துவார்த்தமாகப் பார்ப்போ மாயின் பிரபஞ்சத்தில் இயற்கை, செயற்கை என்று தனித்தனியாக ஏதும் இல்லை.
ஏனெனில், எல்லாப் பொருட்களும் இங்கிருந்தே எடுத்து இங்கேயே தயாரிக்கப் படுபவைதான். எதுவும், வேறு பிரபஞ்சத் திலிருந்து கொண்டுவரப்பட்டவை அல்ல. ஆகவே, அறிவியலின் பணி இயற்கையோ அல்லது செயற்கையோ அது மனித உடலுக்கு உகந்ததா? இல்லையா? ஏதேனும் நோய்களைக் குணப்படுத்த அது உதவுமா? என்று ஆராய்ந்து, வகைப்படுத்தி, பிரித்தெடுத்து, மருந்துகளாக அதனை வழங்குவது ஒன்றே ஆகும்.