பெண்ணியம்: பகுத்தறிவு தந்த பாரமில்லா விடுதலை வாழ்வு!

2022 அக்டோபர் 16-30 2022 மற்றவர்கள்

மருத்துவர் கார்த்திகா


நாட்டிலுள்ள பல பெண்களைப் போல நானும் இப்படித்தான் இருந்தேன். ‘கடவுள் உண்டு’ என்று கூறினார்கள். கேட்டுக் கொண்டேன். “கடவுளைப் பார்க்க முடியாது. ஆனால், நம்ப வேண்டும்’’ என்றார்கள். நம்பினேன். ஆனாலும், குழப்பமாக இருக்கும். புரியாது. கேள்வி கேட்டால், ‘பெரியவர்கள் சொல்வதை மதிக்க வேண்டும்’ என்றார்கள். மதித்தேன். ‘மதித்தேன்’ என்று சொல்வதைவிட “பயத்தில்” மதித்தாக வேண்டி இருந்தது.

“நல்ல நாட்கள், நல்ல நேரம்’’ என்று கற்பித்தார்கள். அந்த நாட்களில் கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கினால் நல்லது என்றார்கள். அதையும் பின்பற்றினேன். நெற்றியில் பல வண்ணங்களில் பொட்டு வைத்து, பூ வைத்து அலங்கார உடை உடுத்தி இருக்க வேண்டும் என்றார்கள். அவ்வாறே வைத்து உடுத்திக் கொண்டேன். மாத விடாய் வரும் நாட்களில் நீ சுத்தமற்றவள், கோவிலுக்குச் செல்லக் கூடாது, வீட்டில் அந்த அறைக்குள் போகக் கூடாது, சில பொருட்களைத் தொடக் கூடாது என்றார்கள், சற்று வேதனையோடு என் உணர்வுகளைச் சமாதானப்படுத்திக் கொண்டு அப்படியே நடந்தேன்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், பகுத்தறிவை விட அடக்கம், ஒழுக்கம் என்ற கட்டாயத்தில் பயத்தில் தான் அந்தப் பருவ வாழ்க்கை ஓடியது. வளர்ந்து பிறகு எனக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். அப்படியே அனைத்துப் பழக்கங்களையும் நான் பின்பற்றிய கலாச்சார நம்பிக்கைகள் அனைத்தையும் அந்தப் பிஞ்சு மனதிற்குள் புகுத்தினேன். ஆனால், என் குழந்தைகள் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள்…
எது கடவுள்?
எங்கே கடவுள்?
கோயிலுக்குள் ஏன் சிலர் மட்டும் கடவுளிடம் நெருங்கி இருக்கிறார்கள்?
எனக்கு மட்டும் ஏன் கல்கண்டு குடுக்க மாட்டேன்கிறார்கள்?
கேட்டால் ஏன் முறைத்துப் பார்க்கிறார்கள்?
ஏன் கோயிலின் வாசலில் இவ்வளவு பேர் பிச்சை எடுக்கிறார்கள்?
ஏன் அந்தத் தேரை நான் தொடக்கூடாது?
ஏன் இன்று மட்டும் நான் மீன், முட்டை சாப்பிடக் கூடாது?
இதுபோன்ற பல கேள்விகள் வரத் தொடங்கின. என் குழந்தைகள் மட்டும் அல்ல; பல குழந்தைகள் கேட்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதைப் பெற்றோர் அணுகும் முறை தான் மாறுகிறது. இதே கேள்விகள் அன்று நான் குழந்தையாக இருந்தபோதே என் மனதில் எழுப்பிய கேள்விகள்தான்.

ஆனால், என் குழந்தைகள் கேட்ட கேள்விகளுக்கு சற்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினேன். அவர்கள் கோயிலுக்கு வருவதை விரும்பாதபோது அந்தப் பூஜைகளில் கலந்து கொள்ள சற்றும் ஈடுபாடு இல்லாத போது நான் அதைக் கட்டாயப்படுத்துவதை விட்டுவிட்டேன். நீ சாமி கும்பிடவில்லை என்றால் சாமி கண்ணைக் குத்தும் என்று நான் சிறு வயதில் கேட்டு வளர்ந்த வாக்கியங்களைத் தவிர்த்தேன்.
குழந்தைகளின் கேள்விக்குத் தகுந்த பதில் என்னிடம் இல்லை என்பது இருந்தாலும், அவர்களுக்கான சில விருப்பங்களை உரிமைகளைக் கேட்கும்போதுதான் எனக்கும் அது போன்ற சுயசிந்தனைகள் இருப்பது எனக்கே புரிய ஆரம்பித்தது. கேள்வி கேட்கும் சுதந்திரம் என்பது எவ்வளவு மகிழ்ச்சி தரக்கூடியது என்பதை உணர முடிந்தது.

நாள்கள் செல்லச் செல்ல, அதுவே பழக்கமாகியது. முன்பைவிட இன்னும் பலவற்றைப் பற்றித் தெளிவாக மனம் சிந்திப்பதை உணர்ந்தேன். மிக எளிதான கேள்விகள் என் குழந்தைகளுடன் என்னையும் இயல்பான சிந்தனைக்குள் தள்ளியது.
அதிகாலை எழுந்து புடவை கட்டி, குறிப்பிட்ட நாள்களில் கோயிலுக்குச் செல்வது, அங்கு அந்தக் கோயிலின் சட்டங்களை அப்படியே பின்பற்றுவது, அர்ச்சனை செய்வது, அங்குப் பணத்தைக் கொட்டி பல சடங்குகள் செய்வது, எல்லாப் பண்டிகைக்கும் அதற்கு ஏற்றவாறு சிறப்புப் பூஜைகள் செய்வது, அதற்கு ஏற்றவாறு உடை உடுத்துவது, பலகாரங்கள் செய்வது என்று பலகாலம் காலங் காலமாக ஊறியிருந்த பழக்கங்களைக் கைவிடத் தோன்றியது.

எடுத்துக்காட்டாக, நாங்கள் புது வீடு மாறிய போது, நான் எந்த ஹோமமும், பூஜையும் எந்த வழக்கங்களையும் செய்யவில்லை. வீட்டிற்குத் தேவையான பொருட்களோடு அப்படியே சென்று வாழத் தொடங்கினோம். அமாவாசை பவுர்ணமி வெள்ளிக்கிழமை சஷ்டி அன்று வீட்டில் அதிகாலையில் இப்படி எல்லாம் செய்ய வேண்டும், கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்ற நிபந்தனைகள் எதுவும் இல்லை. பதிலாக எனக்குப் பிடித்த running, cycling, trekking, workout போன்ற நடவடிக்கைகளுக்கு நேரம் நிறைய கிடைத்தது.
நான் இந்த மாற்றத்தால் பல புதுப்புது அனுபவங்களை எனக்குள்ளே ரசித்தேன். ஒரு பெரிய சுதந்திர உணர்வு, சுயமரியாதை மெல்ல மெல்ல எனக்குள்ளே எழுந்து கொண்டே வந்ததை ஆழமாக ரசித்தேன். எதற்காகவும் என்னை நான் கட்டாயப்படுத்த வேண்டிய தேவை எனக்கில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

யாரோ எழுதி வைத்த ஒவ்வாதவற்றை, என் மனதிற்குத் தெளிவு கிடைக்காத கலாச்சார விதைகளை அதனால் எனக்கு எந்த நன்மையும் இல்லாதவற்றை எதற்காகப் பின்பற்ற வேண்டும்? இவ்வளவு நாள்களும் அவற்றுக்கான பதிலைத் தேடியபோது எல்லோரும் செய்கிறார்களே நாமும் செய்யலாம் என்ற மந்தை மனப்பான்மையை _ என் அறியாமையை நன்கு உணர முடிந்தது.
மெதுவாக எதுவெல்லாம் என் புத்திக்குச் சரியென்று பட்டதோ அதன் வழியில் என் வாழ்க்கையை நகர்த்தினேன். இந்த நகர்வில் நான் புறக்கணித்தது சில திணிக்கபட்ட பழக்கங்களை மட்டுமே தவிர, மாறாக அவற்றை இன்றும் பின்பற்றும் மக்களை அல்ல. ஆனால், நான் பல இடங்களில் பல முறைகள் அதன் விளைவுகளை மறைமுகமாகச் சந்தித்துள்ளேன். குறிப்பாக என் குடும்பத்தில், என் நண்பர்கள் உறவினர்கள் வட்டாரத்தில் அதன் தாக்கங்களை நன்கு உணர்ந்தேன்.
இது மாற்றமா, பரிணாமமா அல்லது விழிப்பின் விளைவா? பகுத்தறிவு எனக்குள் என் குழந்தைகள் கேட்டதுபோல் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டேதான் இருக்கிறது.

ஒவ்வொரு கேள்விக்கும் இந்தச் சமுதாயம் என்னைத் தப்பாக நினைக்குமோ என்ற அச்சத்திலிருந்து நான் என் வாழ்க்கையை எப்படி வாழ்ந்தால் எனக்குள் ஒரு விடுதலையை அடைய முடியும் என்பதே எனக்கு மகிழ்ச்சி தந்தது. என் தனிப்பட்ட மாற்றங்களால் மற்றவர்களை எந்த விதத்திலும் காயப்படுத்தக் கூடாது, அதற்கு எனக்கு உரிமை கிடையாது என்பதை மட்டும் முடிந்தவரை நானே என் மனதிற்குச் சொல்லிக் கொள்வேன்.

இரு பக்கங்களையும் வாழ்ந்து அனுபவித்து உள்ளேன். இந்தச் சமுதாயம் கற்றுத் தந்த வரையறைகளையும், பின்பு எனக்காக அவற்றில் நான் பலவற்றைப் புறக்கணித்தது விட்டு, என் சொந்த புத்திக்கு உகந்ததைப் பின்பற்றி சமுதாயத்திற்கு அஞ்சாமல் பயணிப்பதும், கட்டாயத்தின் பிடியிலிருந்து விடுபட்டு ஒரு தனி மனித சுதந்திரம் பெற்றதும் எனக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கின்றது.
ஒரு பெண்ணாக இந்தச் சமுதாயத்தில் என் விருப்பப்படி வாழ துணிவைக் கொடுத்தவை இரண்டு. கல்வியும், வருவாய் ஈட்டலும் அவை.
மூன்றாவது மறுக்க முடியாத திருப்பு-முனையாக அமைந்த என் குழந்தைகள்.
விடுதலையைத் தேடி ஓர் இயல்பான சுவையான எனது வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது.