சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

2022 சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் செப்டம்பர் 16 -30 2022

பெரியார்
பிராமணர்களின் எதிரியா?

நூலின் பெயர்:
பெரியார் பிராமணர்களின் எதிரியா?
ஆசிரியர்: சோழ நாகராஜன்
வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்,
எண்: 9, பிளாட்
எண்: 1080ஏ, ரோஹிணி பிளாட்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு,
சென்னை – 600 078. பேச: 99404 46650
பக்கங்கள்: 118, விலை: ரூ.120/-

தோழர் சோழ. நாகராஜன் சிறந்த மார்க்சிய பார்வையுடன் தந்தை பெரியாரை அணுகும் சிறந்த எழுத்தாளர்.““பெரியாரை ஒரு இனவெறியர் போலவும், பார்ப்பன இனத்தின் மீது தீரா துவேசம் கொண்டவர் என்றும் பரப்பப்படும் இக்கால கட்டத்தில் தந்தை பெரியாரின் மனித நேய பண்புகளையும், சமத்துவ வேட்கையையும் அனைவருக்கும் விளக்கும் விதமாக இந்த நூலை எழுதியுள்ளார்.““இந்தியா முழுக்க பிராமணர்கள் இருக்கிறார்கள். அவர்களில் தமிழ்நாட்டு பிராமணர்களே கொடுத்துவைத்தவர்கள் என்கிறார் இந்நூலாசிரியர். ஏன் தெரியுமா? பெரியாரின் இயக்கத்தால் அவரின் பிராமணிய எதிர்ப்பால் இங்குள்ள பிராமணர்களும் பயனடைந்தார்கள். சனாதனத்தின் கோரத் தன்மைகளிலிருந்து விடுபட்டு பால்ய விவாக விபரீதம், விதவைக்கொடுமை, பெண் கல்வி மறுப்பு போன்ற சமூகக் கேடுகளைத் தங்களின் குடும்பங்களிலிருந்து தமிழ்நாட்டு பிராமணர்களும் களைந்தெறிந்தார்கள் என்கிறார். அது உண்மைதானே!“ “ஆனால், சங்கிகள் இந்த உண்மையை மறைத்து, பெரியார் மீது கடும் வெறுப்பை பிராமணர்கள் மத்தியிலும் விதைத்து வருகிறார்கள். சமூக ஊடகங்களில் அவர்கள் பெரியார் மீது சுமத்தும் இழிச்சொற்களும், பழிச்சொற்களும் சொல்லி மாளாதவை. இப்படிப்பட்ட காலத்தில் இந்த நூல் வருவது மிகவும் வரவேற்கத்தக்கது.
இந்நூலில் இருந்து சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு…

பெரியார், நான் மற்றும் தீபாவளி!
(சற்றே விரிவுகண்ட என் முகநூல் பதிவு)
அப்போது நான் துவக்கப்பள்ளி மாணவன். எங்கள் குடும்பம் கரூரிலிருந்தது.
வங்கிப் பணியிலிருந்த அப்பாவுக்கு ஒருநாள் கரூரிலிருந்து திருச்சிக்கு மாற்றல் உத்தரவு வந்தது. நாங்கள் திருச்சி உறையூரில் குடியேறியபோது எனக்கு அப்படியொரு பெரும்பேறு கிட்டும் என்று தெரியாது.
அப்போது தந்தை பெரியார் தனது அந்திமக் காலத்தில் இருந்தார்.
உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோயில் வீதியில் அடிக்கடி பெரியாரின் கூட்டம் நடக்கும். ஒருநாள் பெரியார் கூட்டம் நடப்பதைக் கேள்விப்பட்ட சனாதனக் குடும்பச் சூழலில் வளர்ந்த என் பாட்டி, “அவர் கடவுளையே நிந்தனை செய்பவர்… அவரைப் பார்ப்பதே பாவம்…’’ என்று திட்டிக் கொண்டிருந்தாள்.
அதைக் கேட்ட மாத்திரத்தில் எனக்கு பெரியார் மீது பெரிய ஆர்வம் தொற்றிக் கொண்டது. கடவுளைப் பழித்துவிட்டு ஒரு மனிதன் எப்படி உயிரோடு இருக்க இயலும் என்பதே என் உள்ளத்தைக் குடைந்த வினா.

எனவே, பெரியாரைப் பார்த்தே தீருவது என்று கிளம்பிவிட்டேன் கூட்டம் நடக்கும் இடம் நோக்கி.
அப்போது, நான் மேடை உயரம்கூட இருக்கமாட்டேன். மேடையில் நாற்காலி ஏதும் இருக்காது. விரிப்பு விரிக்கப்பட்டு அதிலொரு திண்டு இருக்கும். வயோதிகம் காரணமாக பெரியார் அதில் சாய்ந்துகொண்டு பேசுவார்.
இடையில் அவருக்குப் பக்கத்து டீக்கடையிலிருந்து ஒரு கண்ணாடி டம்ளரில் தேநீர் வரும். அதை ஒரு உறி உறிவார்.
பின்னர் தன்னருகில் இருக்கும் அவரது வளர்ப்புப் பிராணியான நாய்க்குக் கொஞ்சம் ஊற்றிவிட்டு மீண்டும் தொடர்ந்து குடிப்பார்.
‘அவரது பேச்சைக் கேட்டு நான் சிலிர்ப்பேன். அந்த வயதில் கொஞ்சம் புரியும்; கொஞ்சம் புரியாது. மூன்று பைசாவுக்கு, அய்ந்து பைசாவுக்கு சின்னச்சின்ன புத்தகங்கள் விற்பார்கள் இயக்கத் தோழர்கள். அவற்றை என் டவுசர் பையிலிருக்கும் காசுகளைத் தந்து வாங்குவேன்.
பெரியார் பேசி முடித்ததும் அவரைக் கைத்தாங்கலாக மேடையிலிருந்து இறக்குவார்கள். நான் அங்கே தொடர்ந்து பல கூட்டங்கள் கேட்டிருக்கிறேன்.
பெரியாரின் கூட்டத்துக்குப் போவது எனக்கு விருப்பமான வாடிக்கை ஆகிவிட்டது. எப்போதும் முன்வரிசையில் மேடையைப் பிடித்துத் தொங்குவதுபோல நின்றபடி முழு உரையையும் கேட்பேன்.

பெரிய கூட்டமெல்லாம் இருக்காது. அதைப் பற்றியெல்லாம். பெரியார் கவலைப் பட்டதாகவும் தெரியாது. ஆனாலும் அவர் அங்கே அடிக்கடி வருவார்.
ஒரு முறை அவர் பேசி முடித்துவிட்டுக் கீழே இறங்கும் போது நான் விறுவிறுவென்று ஓடிப்போய் அவரது கரங்களைப் பிடித்துக் கொண்டேன். என்னைத் தோழர்கள் யாரும் விரட்டவில்லை. மாறாக, அவர்கள் என்னைப் பார்த்துப் புன்னகை செய்தனர். அதுவே எனக்குப் பெருமையாக இருந்தது.
கடவுளைத் திட்டுகிற இவர், கடவுளின் எதிரியா? இல்லை, இல்லை… கடவுளையே கேள்வி கேட்கும் இவர்தான் கடவுளைவிடப் பெரிய ஆள். எனவே, இவர்தான் எனது மனம் கவர்ந்த ‘ஹீரோ’ என் உள்ளத்தில் இப்படி என்னென்னவோ எண்ணங்கள். கடவுள் அப்போதே எனக்குப் பரிதாபத்துக்குரியவராகப் பட்டார்.
பெரியாரின் சுருக்கங்களும், தொங்கிய தோலுமான விரல்கள் எனக்கு அப்போது பெருமதிப்பு மிக்கவையாகத் தோன்றின. அவரது கைகளில் நடுக்கம் தெரிந்தது. அப்போது, என்னுடைய சொந்தத் தாத்தாவின் கைகளைப் பற்றிக் கொண்டிருப்பதாகத்தான் நான் உணர்ந்தேன்.
பெரியார் என் கையையும் பிடித்துக் கொண்டார். என்னைப் பார்த்துச் சிரித்தார். எனக்கு நிலைகொள்ளவில்லை. அதற்குள் அவரது வாகனம் அருகில் வந்துவிட்டது. என் முதுகில் தட்டிக் கொடுத்தவர் வாகனமேறிப் போய்விட்டார்.

அவ்வளவுதான்… நான் பிரமை பிடித்தவனாகி நின்றேன்.
நேராக வீடு வந்ததும் நான் காசு கொடுத்து வாங்கிய அந்தச் சின்னஞ்சிறு புத்தகங்களை மறக்காமல் வாசிக்கத் தொடங்கினேன். அவற்றில், தீயினை மிதிக்கும் பக்தன் கொதிக்கும் எண்ணைச் சட்டியில் கைவிடுவானா? தீயினை மிதிக்கும் பக்தன் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியைக் கையில் பிடிப்பானா?
எனக்குச் சுரீரென்றிருந்தது.
காரணம், நானும் ஊர்த் திருவிழாக்களில் நிறைய தீமிதி காட்சிகளையெல்லாம் பார்த்தவன்தான். போதாக்குறைக்கு, புகழ்பெற்ற திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசலிலும் சந்தனக்கூடு விழாவில் கூட, இந்தத் தீமிதி நடக்கும். அந்த விழாவிலும் என் இஸ்லாமிய நண்பர்களுடன் பலமுறை பங்கேற்றிருக்கிறேன். இதுவெல்லாம் இறைவன் அருளால்தான் என்று எண்ணியிருந்த எனக்கு இந்தச் சிறுநூல்கள் பெருவெளிச்சத்தைக் தந்தன அப்போது.
நேராக எங்கள் பாட்டியை நோக்கி ஓடினேன்.

அவள்தானே பெரியாரைப் பார்ப்பதே பாவம் என்றவள்?
பாட்டீ… இங்கே பார்! இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நீ பதில் சொல்லு பார்ப்போம்…
என்னடா கேள்வி? அது என்ன பொஸ்தகம் டா? இது எங்கள் பாட்டி…
நான் அந்தச் சிறு நூலை வாசிப்பேன். வாசித்து முடித்து, சொல்லு பாட்டி…. கொதிக்கும் எண்ணைச் சட்டியில் கைவிடுவானா? – என்று அவள் காதருகில் போய்க் கத்துவேன்.
பாட்டி நெளிவாள். நான் ரசிப்பேன். என்னுள் ஏதோவொரு வெற்றிக் களிப்பு தோன்றும். மனமெங்கும் பெரியார் நிறைந்திருப்பார். நான் தொட்டுப் பார்த்த அவரது விரல்களின் ஸ்பரிசம்… அவர் உள்ளங்கையின் கதகதப்பான உஷ்ணம்…
அப்போது என் கைகளில் நிலைத்து நீடிப்பதை உணர்ந்து சிலிர்த்து நிற்பேன்.
சின்ன வயது முதல் அய்தீகம் சார்ந்த மரபார்ந்த போதனைகளாக நான் கற்றிருந்த கடவுள் குறித்த கோட்பாடுகளெல்லாம் விரிசல் காண்பதை உணரத் தொடங்கினேன். ஏற்கனவே என் தந்தையாரும் வங்கித் தொழிற்சங்கத்தோடு நெருக்கமாக இருந்ததால் அவருக்கு இடதுசாரி கருத்தியல் சார்ந்து பகுத்தறிவுச் சிந்தனை இருந்தது. அதனால் எங்கள் வீட்டில் சுதந்திரச் சூழலும் இருந்தது.

இந்த நிலையில் பெரியாரை நேரில் பார்த்த, அவரைத் தொட்டுணர்ந்த, அவரது பேச்சால் ஈர்ப்புப் பெற்ற என்னுள் மிகப்பெரிய புயலே கிளம்பியெழுந்தது. என்னைக் கிளர்த்தியது.
ஒருநாள் திடீரென பெரியாரின் மறைவுச் செய்தி. அதைக் கேட்டு என்னளவுக்கு அப்போது எத்தனை சிறுவர்கள் தாங்கொணாத துயரத்தில் தவித்திருப்பார்கள் என்று தெரியாது. ஆனால், நான் அத்துணை புழுவாய்த் துடித்துப் போனேன். மரணமடைந்த என் சொந்தத் தாத்தாவுக்குக்கூட நான் அவ்வளவு வருந்தியது இல்லை.
என்னுள் அந்தச் சின்ன வயதிலும் ஞானம் விதைத்தது தந்தை பெரியார் அல்லவா?
வங்கி அதிகாரிகளுக்கே வாய்த்த நிலையாமை மீண்டும் தலைதூக்கி, அப்பாவை திருச்சியிலிருந்து தஞ்சை மாவட்டம் அதிராம-பட்டினத்துக்கு மாற்றிப்போட்டது. மீண்டும் மூட்டை முடிச்சுகளுடன் ஊரைக் காலி செய்து கிளம்பியது நவீன நாடோடிகளாக என் நடுத்தரக் குடும்பம்.
எனக்கோ பெரியாரைத் தரிசித்த திருச்சியை விட்டு அகல மனமே இல்லை. அழுது, அடம்பிடித்து தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியின் வால்ஷ் விடுதியில் சேர்ந்து கொண்டேன். முதல்முறையாக என் குடும்பம் நானில்லாமல் இடம்பெயர்ந்து அசலூர் போனது.

பள்ளியிலும், விடுதியிலும் பெரியாரை மனதில் தாங்கியபடியால் எனது செயல்-பாடுகள் பிற மாணவர்களிலிருந்து கொஞ்சம் வேறுபட்டதாய் இருந்தது. அதிராம பட்டினத்தில் ஒன்றிரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அப்பாவை நீலகிரிக்கு மாற்றினார்கள்.
நீலகிரி மாவட்டத்தின் எல்லநள்ளி கனரா வங்கிக் கிளைக்கு மேலாளராகப் போனார் அப்பா. நான் விடுமுறைக்குத்தான் அங்கே முதன்முதலாகப் போக எண்ணியிருந்தேன். அப்போது தீபாவளிப் பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்த நேரம்.
அப்பாவுக்கு நீலகிரி மாவட்டம் எல்லநள்ளி மாற்றலானதும் என் குடும்பம் குன்னூரில் குடியேறியது. அவர்கள் குடிபோய் சில மாதங்களுக்குப் பிறகே நான் அங்கு செல்ல முடிந்தது.
நான் என்.சி.சி. எனும் தேசிய மாணவர் படையில் இருந்தேன். மன்னார்குடிக்கு ‘கேம்ப்’ போகவும் நேர்ந்தது. அப்போது தமிழகமெங்கும் கடும் வறட்சி தாண்டவமாடியது. நாடே வறட்சியின் பிடியிலிருந்தது. வசதி ஏதுமற்ற ஏழை விவசாயக் கூலிகள், கால்நடைகள் மரணத்தின் பிடியிலிருந்த கொடுமையான வறட்சி அது.

பள்ளி விடுதியில் நன்றாகச் சாப்பிட்டு, விளையாடிக் களித்திருந்த எங்களின் உள்ளம் வறட்சியை நினைத்து வருத்தம் கொண்டது. நான் எங்கள் விடுதிக் காப்பாளரிடம் சென்றேன்.
அவரிடம் சொன்னேன்: “வறட்சி நிவாரணப் பணி ஏதேனும் செய்யவேண்டும் சார். “என்ன செய்யலாம் நீயே சொல்லு?’’ என்றார் விடுதிக் காப்பாளர். சட்டென எனக்கொரு யோசனை தோன்றியது. மக்களிடம் நிதி வசூலிப்பதற்கு அது ஒரு சுலபமான வழியாக எனக்குப் பட்டது.
நான் சொன்னேன்:
“இரண்டு குழுக்களாக தினமும் மாலை வேளையில் சென்று நாங்கள் பூட்பாலீஷ் போடுகிறோம் சார்’’
என்னது ஷூ பாலீஷா? -_ அவர்.
“ஆமாம் சார். கூடவே ஒரு உண்டியலையும் வைத்துவிட்டால் மக்கள் தாராளமாகக் காசு போடுவார்கள்’’ என்றேன் நான்.
சற்று நேர யோசனைக்குப்பின் என்னை அங்கீகரித்தார் விடுதிக் காப்பாளர். கருப்பு, பிரவுன் பாலீஷ் டப்பாக்கள், பிரஷ்கள், பாலீஷ் போட்டுக்கொள்பவர் கால் வைக்க மரப்பெட்டி, செருப்பை, பூட்ஸைத் துடைக்க நல்ல துணி என எல்லாம் செய்து கொண்டோம்.
என் தலைமையில் ஒரு குழு திருச்சி மெயின் கார்டு கேட்டில் தெப்பக்குளம் எதிரிலும், இன்னொரு குழு திருச்சி சிங்காரத் தோப்பிலும் தினசரி பள்ளி விட்டதும். சீருடையுடனேயே செருப்புப் பாலீஷ் போடக் கிளம்புவோம்.

இரவு 7:30 மணி அளவில் விடுதி திரும்புவோம். ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர். நடந்து போவோர் வருவோரையெல்லாம் செருப்புக்குப் பாலீஷ் போட்டுக்கொள்ளச் சொல்லி அழைப்போம்.
சிலர் பாலீஷ் போட்டுக்கொண்டு உண்டியலில் காசு போடும் போது, “எவ்வளவு ப்பா’’ என்பார்கள். “நீங்கள் எவ்வளவு போட்டாலும் சரி’’ என்போம் நாங்கள்.
“பாலீஷ் வேண்டாம்ப்பா, நீங்க படிக்கிற பசங்க, பாவம். நான் காசு போடுகிறேன்’’ என்பார்கள் சிலர்.
நானோ, பாலீஷ் போட்டுக் கொண்டால்தான் காசு வாங்கிக்கொள்வோம் என மறுப்பேன். காலைத் தூக்கி மரப்பெட்டி மேல் வைத்ததும் ஒவ்வொருவருக்கும் அவரவர் செருப்புகளைத் துடைத்துவிட்டு, பிரஷ் கொண்டு ‘சிக்குசிக்கு’ எனப் பாலீஷ் போடுவேன் நான்.
நண்பர்கள் பலரும் கேலியாக, கேவலமாகப் பேசினார்கள். யார்யார் காலையோ, கண்டவர்-களின் செருப்பையோ கையால் தொடுகிறீர்களே என்றார்கள். நான் அதைப் பெருமையாக உணர்ந்தேன்! பொது நோக்கத்துக்காகத் தொண்டு செய்வதில்தான் எவ்வளவு இன்பமிருக்கிறது!
எங்களுக்குப் பின்னே, “வறட்சி நிவாரண நிதிக்காக’’ எனும் தட்டி இருக்கும்.

இளம் மாணவர்கள் நம் காலைத் தொட்டு, செருப்புக்கு பாலீஷ் போடுகிறார்களே என்று பெரும்பாலோர் கூசுவார்கள். குற்ற உணர்வு கொண்டவர்கள் போல தயக்கத்தில் நெளிவார்கள். இப்படியே பத்து, பதினைந்து நாள்கள் ஓடிவிட்டன.
பாலீஷ் போட்டதில் ஓரளவுக்கு நிதி சேர்ந்திருந்தது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நாங்கள் இன்னும் கூடுதல் நிதி அனுப்ப விரும்பினோம்.
மீண்டும் எனக்கு ஒரு புது யோசனை தோன்றியது. அதன்படி, ஒவ்வொரு நாளும் இரவு உணவைத் தவிர்ப்பது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்களது இரவு உணவை ஒருவார காலம் தியாகம் செய்து அந்தப் பணத்தையும் பாலீஷ் போட்டுச் சேர்த்த பணத்தோடு சேர்த்து நிவாரண நிதியாக அனுப்பலாம் என்று முடிவு செய்தோம்.
அதன்படி எல்லாம் வெற்றிகரமாக நடந்தது. ஒவ்வொரு நாளும் விடுதி மாணவர்கள் எல்லோரும் இரவு பட்டினி கிடந்தோம். முதலமைச்சர் நிவாரண நிதிக்குப் பணத்தை அனுப்பி வைத்தோம். அப்போது முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தார்.

மனமெங்கும் ஒரு வித அமைதியையும், நிம்மதியையும், நல்லதொரு சமுதாயப் பணியைச் செய்ததால் உண்டான பெருமையையும் வாழ்வில் முதல்முறையாக உணர்ந்தேன். இதை முடித்துவிட்டு என்.சி.சி. முகாமுக்குக் கிளம்பினேன்.
இந்த வேலைகள் முடிய, தீபாவளி வந்து சேர்ந்தது. நான் முதல்முறையாக எங்கள் குடும்பம் குடியேறியிருந்த நீலகிரியின் குன்னூர் நோக்கிப் பயணப்பட்டேன். ஊட்டியின் குளிரை நோக்கிய பயணமென்றாலும், நாட்டின் வறட்சி உள்ளமெங்கும் வெப்பத்தை நிரப்பியிருந்தது.
குன்னூர் வீட்டில் போய்ச் சேர்ந்ததும், தீபாவளிக்குப் புத்தாடைகள் வாங்க அப்பா கடைக்கு அழைத்தார். நான் அப்பாவிடம்,
இந்த முறை எனக்குப் புத்தாடைகள் எதுவும் வேண்டாம் அப்பா. எந்த இனிப்புப் பண்டத்தையும் தொடப்போவதில்லை நான் _ என்றேன்.
ஏன் மகனே, என்னாச்சு? -_ கேட்டார் அப்பா.

நாடே வறட்சியில் வாடுகிறபோது நாம் மட்டும் எப்படி மகிழ்ச்சியாகப் பண்டிகையைக் கொண்டாட முடியும்?
அப்பாவுக்கு என் சொற்களில் இருந்த நிஜமும், வலியும் புரிந்தது. விவரம் அவ்வள-வாகப் புரியாத வயதில் நான் மேற்கொண்ட அந்த விரதத்துக்கு என் வீட்டில் ஆதரவு கிடைத்தது.
நான் வீட்டில் அம்மாவுக்கு உதவுவதும், புத்தகங்கள் வாசிப்பதும், புதிய ஊரைச் சுற்றிப் பார்ப்பதுவுமாக தீபாவளி விடுமுறையைக் கழித்தேன். அந்த வருடம் தொடக்கம் நான் தீபாவளியைக் கொண்டாடுவதையே விட்டுவிட்டேன்.
அதன் புராண உள்ளடக்கத்திலிருந்த கற்பனையை அப்போது என்னால் ஏற்கவே இயலாமல் தீபாவளியைக் கைகழுவினேன். ஒவ்வொரு வருடமும் அப்பா புத்தாடைக்காகத் தரும் பணத்தில்தான் புத்தகங்களை வாங்கிக் குவித்தேன்.
அப்படியே தவிர்க்க இயலாது எவராவது புத்தாடை வாங்கிக் கொடுத்த போது, நான் செங்கொடி இயக்கத்துக்கு வந்தபின் தொடர்ந்துவரும் நவம்பர் (ரஷ்யப்) புரட்சி நாளில் புத்தாடை அணியும் வழக்கமாக அது மாறியது.

இடையில் என் மகனுக்காகச் சிலகாலமும், மகளுக்காகச் சில ஆண்டுகளும் என் வீட்டில் பட்டாசுச் சத்தம் கேட்டதுண்டு. ஆனாலும், அதிவிரைவிலேயே என் குழந்தைகள் எனது உள்ளம் அறிந்தவர்களாக, சுற்றுச்சூழல் விழிப்புப் பெற்றவர்களாக ஆனபோது இடைப்பட்ட சிலகாலப் பட்டாசுப் பழக்கமும் என் வீட்டில் ஒழிந்தே போனது.
உறவுகள், நண்பர்கள் வீட்டுப் பலகாரங்களை ருசிப்பதும், வாழ்த்துச் சொல்லும் நட்புக்களுக்கு மறுமுகம் சொல்வதும் என்கிற அளவிலேயே எங்கள் இல்லத்தில் தீபாவளி நாள் ஒவ்வொரு ஆண்டும் கழியும்.
பல வகைகளிலும் மிக இளம்பிராயத்திலேயே பெரியார் ஏற்றிவிட்டுச் சென்ற அறிவுச்சுடர் மட்டும் அணையாமல் கனன்று கொண்டுதான் இருக்கிறது -_ அன்றும், இன்றும், என்றும் உள்ளமெங்கும் அந்த தீபஒளி போதுமே!
பின்னாளில் கற்ற மார்க்சிய மெய்ஞ்ஞானம் சிந்தனையை மேலும் வளர்த்து விரிவுபடுத்தியது; விசாலமாக்கியது. துவக்கப் புள்ளியாய் நெஞ்சில் குடிகொண்ட பெரியாரியம் அசைக்க இயலாத அடிக்கல்லாகியது; அடியுரமாகியது.
பெரியாரை மிகச் சரியாகப் புரிந்துகொண்டு, உள் வாங்குவோருக்கே கிட்டும் அறிவின்பாற்பட்ட ஆக்கபூர்வமான வாழ்நாள் மகிழ்ச்சிக்கு _ மன நிறைவுக்கு குறைவுமில்லை!
ஈடுமில்லை!
எந்தப் பண்டிகையும் ஈடாகுமோ அதற்கு?