பாவலரேறு பெருஞ்சித்திரனார்
இந்து மதம் என்று இக்கால் கூறப்பெற்று வருவது உண்மையாக ஒரு தனி மதமே இல்லை. ஆரியரின் வேதமதமே; அஃதாவது, வைதீக மதமே. அண்டை அயல் கடவுள் கொள்கைகளை உட்கவர்தல் செய்து கொண்டு, இந்து மதம் என்னும் பெயரில், நம் மொழி, இனம், பண்பாடு, கலை, மெய்ப்பொருள் கொள்கை – முதலிய அனைத்துக் கூறுகளையும் அழித்துக் கொண்டுள்ளது.
நம் மறைமலையடிகளாரும், பாவாணரும் தமிழின மெய் வரலாறு கூறிய பேராசிரியர் பிறரும் தமிழர் மதங்களாகக் கூறுகின்ற சிவனியமும் சைவமும்), மாலியமும் (வைணவமும் கூடத் தூய தமிழர் மதங்கள் என்று சொல்லிவிடுகின்றபடி இன்றில்லை. இன்றுள்ள தமிழ் மொழி எவ்வாறு கலப்புற்றும், சமசுக்கிருதம் எவ்வாறு தமிழ் மொழியைத் தன்னுள் பெரும்பகுதி கரைத்துக் கொண்டும் உள்ளனவோ, அவ்வாறே தமிழரின் மதங்கள் என்று கூறுகின்ற சிவனியமும், மாலியமும், ஆரியக் கலப்புற்றும், ஆரியரின் மதமான வேத வைதீக மதம் அவற்றைத் தன்னுள் கரைத்துக்கொண்டும் திக்கு திசை தெரியாமல் மயங்கிக் கிடக்கின்றன.
தூயதமிழ் முயற்சி போல், தூயமத முயற்சியும் தமிழர் இனிமேல் தான் செய்ய வேண்டும். அதற்கு முன் நமக்கு ஒரு மதம் தேவையா என்பதை முடிவு செய்து கொள்வது நல்லது. இந்துமதம் தமிழினத்தைச் சிதைக்கின்றதா? ஆமாம் என்றால், எப்படி?
இந்து மதம் தமிழினத்தை ஏற்கனவே பெரும்பகுதி சிதைத்து அழித்து விட்டது. எஞ்சியுள்ள சில கூறுகளைத் தாம் நாம் இன்று தமிழ் மொழி, தமிழினம், தமிழ்க் கலைகள், தமிழ்ப் பண்பாடுகள், தமிழ் இலக்கியங்கள், தமிழ்நாடு என்றெல்லாம் கூறிவருகிறோம்.
இந்து மதம்
1. தமிழர்களை முதலில் பிறவி அடிப்படை-யிலும், பிறகு வருண அடிப்படையிலும், அதன் பிறகு ஜாதி அடிப்படையிலும் வேறு வேறாகப் பிரித்து, உயர்வு தாழ்வு கற்பித்துச் சிறப்பு இழிவு கூறி, இந்த இனம் என்றென்றுமே முன்னேறாமல் செய்து-வருகிறது.
2. தமிழ முன்னோர்களிடம் முன் இருந்திராத மூட நம்பிக்கைகள், அறியாமைகள், வேற்றுமைகள், இழிவுகள் போன்றவற்றை இந்துமதம் தன்னிடம் கொண்டுள்ள வேதங்கள், தர்ம சாத்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆயின கருவிகளின் வழியாக என்றென்றும் நிலைபெற்று இருக்குமாறு செய்து வருகிறது. பற்றாக்குறைக்கு மேற்சொன்ன கருத்துக் கருவிகளுடன் இன்றுள்ள அறிவியல் கருவிகளான வானொலி, தொலைக்காட்சி, செய்தித் தாள்கள், கல்வி, கலை, ஆட்சி, அதிகாரம் முதலியனவும் இந்துமதத் தலைவர்கள், ஆட்சியாளர்கள் கைகளில் கிடைத்துள்ளன.
இவற்றினின்று அறியாத தமிழர்கள் விடுபடுவதும், அறிந்த தமிழர்கள் அவர்களை விடுவிப்பதும் மிகமிகமிகக் கடினமான செயல்களாக இருக்கின்றன.
3. இந்து மதம் தனிமாந்தன் ஒருவனின் தன்னம்பிக்கையைத் தகர்த்து, அவன் தன்னறிவைக் கெடுத்து, அவன் தன் முயற்சியைத் தவிர்க்கச் செய்கிறது. இதனால் அவன் என்றென்றைக்குமே தன்னை சார்ந்தவரைப் பற்றிக்கொண்டோ, அல்லது தன் மதத்தைப் பற்றிக் கொண்டோ, அதுவும் இல்லையானால் தன் ஜாதியைப் பற்றிக் கொண்டோதான் வாழ வேண்டியுள்ளது. இது தனிமாந்தன் ஒருவன் அனைத்து நிலைகளிலும் முன்னேறுவதற்கு இட்டுக்-கொண்ட பெரிய தடையாகும். எனவேதான் இங்குள்ள மக்களின் அனைத்து வாழ்வியல், அறிவியல், ஆட்சியியல் கூறுகளும் அனைத்து நிலைகளிலும் தாழ்ந்திருக்கின்றன.
4. இந்து மதம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை அளிப்பதில்லை. பெண்களை ஆண்களுக்கு அடிமைகளாகவே கருதுகிறது. பெண்களாகப் பிறந்து விட்ட நிலையை அஃது இழிவுபடுத்துகிறது.
5. பொருளியல் நிலையில் பொதுவுடைமை, சமவுடைமைக் கோட்பாடுகளை இந்து மதம் ஆதரிப்பதில்லை. இன்னுஞ் சொன்னால் பொருளியல் சமன்பாட்டை அது தவிர்க்கிறது. ஏழைமைக்கும் செல்வ நிலைக்கும் அது முற்பிறவிக் கோட்-பாட்டைக் காரணம் காட்டிச் சமச்சீர் நிலைக்கு அது தடையிடுகிறது.
6. அதுபோலவே உழைப்பவனும் உழைக்காமல் இருப்பவனும் இருக்க வேண்டுமென்பதையே அது வலியுறுத்தி, முதலாளியக் கோட்-பாட்டுக்கு என்றென்றும் அரண் செய்கிறது. ஆட்சியதிகார நிலைகளைக் கூட அது முற்பிறவிக் கோட்பாட்டுடன் இணைத்துக் குடியரசுக் கோட்பாட்டை அஃது இகழ்கிறது.
7. மக்களின் வாழ்க்கைக் காலத்தில் பெரும்பங்கை அது மத நடவடிக்கை களுக்கெனப் பயன்படுத்திப் பொது உழைப்பிற்கும், இயற்கை வள உருவாக்கத்-திற்கும் எதிரான கோணத்தில் மாந்த முயற்சிகளை அது திசை திருப்புகிறது.
8. காலத்தையும் முயற்சிகளையும் கட்டுப்-படுத்தும் அறிவியல் அல்லாத கோட்-பாடுகளை அது வலியுறுத்துகிறது.
9. மாந்தப் பொதுநலமே அறம் என்று கருதாமல், அவனவன் பிறவி நிலைக்கு உகந்தபடி அவனவன் வாழ்வதே தர்மம் என்னும் மாந்த முன்னேற்றத்திற்குப் பொருந்தாத கோட்பாட்டை அது மக்கள் முன்வைக்கிறது. ஒருவன் தன் பிறவிக்கு மேலான நினைவு கொள்வதற்கு முயற்சி செய்வதற்கும் அது தடையாக இருக்கிறது.
10. மதத் தலைவர்களுக்கே, குமுகாய நிலையில் உள்ள எவருக்கும் மேலான இடத்தைத் தருகிறது. மதத்தலைவர்களைக் கடவுள் நிலைக்கு அஃது உயர்த்தி வைக்கிறது.
11. இந்து மதம் மக்களை அச்சுறுத்துகிறது; மக்களின் உரிமை உணர்வுகளை நசுக்குகிறது; அவர்களின் தங்கு தடையற்ற அறிவு வளர்ச்சிக்குத் தடையிட்டு, மூடநம்பிக்கைகளை வளர்த்து நிலைப்-படுத்துகிறது.
மற்றும் இன்னோரன்ன காரணங்களால் தமிழினத்திற்கு மட்டுமின்றி, மக்கள் இனத்திற்கே இந்துமதம் பொருந்தாத ஒரு கோட்பாடாக இருப்பதை அனைவரும் நன்கு சிந்தித்துப் பார்த்தால் நன்கு விளங்கும்.
– தென்மொழி, சுவடி : 22, ஓலை : 2, 1986