மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் மகளான பரணிகா தேசிய அளவிலான போல்வால்ட் (Polewalt) போட்டியில் அதிக உயரம் தாண்டி சாதனை படைத்துள்ளார். மாநிலங்களுக் கிடையேயான 61ஆம் தேசிய மூத்தோர் பிரிவு வாகையர் (சீனியர் சாம்பியன்) போட்டிகள் ஜூன் 10ஆம் «தி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் நடைபெற்றது.
இப்போட்டிகளில் கோல் ஊன்றி உயரம் தாண்டும் (Polewalt) போட்டியும் ஒன்று. இதில் தமிழ்நாடு, கேரளா, கருநாடகா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம், சேந்திரபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இளங்கோவன் என்பவரின் மகள் பரணிகா இப்போட்டியில் பங்குபெற்று, பங்குபெற்ற அனைவரையும் பின்தள்ளி 4.05 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் தன் காலில் அடிபட்டு, அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டதனால் மருத்துவர்கள் 8 மாதம் ஓய்வு தேவை என்று கூறிய நிலையில் 6 மாதத்திலேயே ஓடி இச்சாதனையைப் புரிந்துள்ளார்.
தங்கம் வென்றதோடு இவ்வெற்றியின் மூலம் ஒரு புதிய சாதனையையும் படைத்திருக்கிறார். இதற்கு முன்னர் கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த கயாந்தி என்ற வீராங்கனை 2018ஆம் ஆண்டு நடந்த போட்டியில் 4.0 மீட்டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது.
தன் சாதனை பற்றி பரணிகா கூறுகையில், “நான் என்னுடைய பள்ளிப் படிப்பை பழைய கூடலூரில் உள்ள டாக்டர் ஜி.எஸ்.கே. மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். நான் பள்ளி செல்லும்போதே ஓட்டப் பந்தயத்தில் 400 மீட்டர், 200 மீட்டர், நீளம் தாண்டுதல், தாவிக்குதித்துத் தாண்டுதல் (Triple Jump) போன்ற போட்டிகளில் கலந்துகொண்டேன். என்னுடைய உயர் கல்விக்காக எத்திராஜ் கல்லூரியில் பயின்றபோது உடற்கல்வி ஆசிரியர் உமாதேவன் என்பவர் போல்வால்ட் நிகழ்ச்சி (Event) பற்றி அறிமுகப்படுத்தினார். கடந்த 6 ஆண்டுகளாக போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறேன். என்னை பயிற்சியாளர் மில்பர் ஸ்கைவாக் அகாடமிக்கு அழைத்துச் சென்றார். ஆரம்பத்தில் இதில் எனக்குப் பெரிதும் ஆர்வம் இல்லை. விளையாட்டுத்தனமாக இந்தப் பயிற்சியை ஆரம்பித்தேன். காலப்போக்கில் ஆர்வம் கூடி இதில் சாதனை படைக்க வேண்டும் என்கிற குறிக்கோளுடன் பயிற்சி பெற்றேன். இதற்கு முக்கியக் காரணம் என்னுடைய பயிற்சியாளர்’’ என்றார்.
பயிற்சியாளர் மில்பர் கூறுகையில், “பரணிகா பயிற்சிக்கு வரும்பொழுது எனக்கு இவர் மீது நம்பிக்கையில்லாமல் இருந்தது. இரண்டு வாரத்தில் சென்று விடுவார் என்று நினைத்தேன். ஆனால், அவரது விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, இவரின் தந்தையின் ஊக்கம், சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் பயிற்சி மேற்கொண்டார். மூன்றாண்டுகள் தாண்டி முதற் பதக்கம் வாங்கினார். equal meter record break பண்ணினாங்க.All India University-யில் இணைந்து இவருக்கு இரயில்வே துறையில் பணியமர்த்த ஆலோசனை நடைபெற்றது’’ என்றார்.
விளையாட்டுத் துறையில் இவர் படைத்த சாதனைக்காக இவருக்கு இரயில்வே துறையில் எழுத்தர் பணி கிடைத்தது. தற்போது பணியாற்றி வருகிறார். படிப்பு, பணிக்கிடையில் பொருளாதார நெருக்கடிகளைத் தாண்டி அயராது தொடர்ந்து பயிற்சி எடுத்து வரும் பரணிகாவின் அடுத்த இலக்கு ஆசிய அளவிலான போட்டிகளில் தங்கம் வெல்ல வேண்டும் என்பதுதான். அவரது விடாமுயற்சி வெற்றிபெற வாழ்த்துவோம்!
பெண்ணால் முடியும் என்பதற்கு இத்தமிழ்ப் பெண் சரியான சான்று!
===