பாவலேறு பெருஞ்சித்ரனார்
இந்தியத் தலைமையமைச்சராய் இராசீவ் இருந்தபோது தமிழ்நாட்டுக்கு வந்தார். பின் குருவாயூர்க் கோயிலுக்குப் போய்த் தம் எடைக்கு எடை சருக்கரை அளந்து துலைபாரம் நிறுத்தி வழிபட்டார். பின் சென்னை வந்தபொழுது, காஞ்சி சென்று மூன்று சங்கராச்சாரிகளையும் வழிபட்டுச் சென்றார்.
வேறு வகையிலெல்லாம் அவரைக் குறை கூறிய பார்ப்பனர்கள், இராசீவின் இந்தச் செய்கைகளால், உச்சி குளிர்ந்து போயினர். மதச்சார்பு ஒன்றே பார்ப்பனத் தன்மையை உறுதிப்படுத்துவது என்பது அவர்களின் கணிப்பு. ஒருவன் எத்துணைக் கொடியவனாக, கயவனாக, அதிகார வெறிபிடித்த கொடுங்கோலனாக இருந்தாலும், அவன் பார்ப்பன (இந்து) மதத்தை மதிக்கின்றான் என்றால், பார்ப்பன இனம் அவனை மன்னித்துவிடும்; பேணிக் கொள்ளும்; கட்டிக்காத்து நிற்கும். தலைமையமைச்சர் ஒருவர்க்கு இருக்க வேண்டிய பொறுப்புகளுக்கு இடையில் ஏறத்தாழ ஒரு நாள் என்பது ஆயிரக் கணக்கான உருபா மதிப்பு உடையது. இத்துடன் அவருக்கும் அவரின் பரிவாரங்களுக்கும் ஆகும் போக்குவரத்துகள், தங்கல் ஏற்பாடு ஆகியவற்றுக்கான செலவுகள் வேறு இலக்கக் கணக்கான மதிப்புடையன. இவையன்றி, அவரின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் ஆகியனவும் பல இலக்கக் கணக்கான மதிப்புடையவை. இத்துணைச் செலவுகளையும் செய்து கொண்டு, அரசு வரிப்பணத்தில், அவரின் தனிப்பட்ட மத ஆசைகளை அல்லது வெறிகளைத் தணித்துக் கொள்வது கண்டிக்கத் தக்க குற்றமாகும். சங்கராச்சாரியார் அரசியல் தொடர்புக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டியவர். அவரிடம் ஒரு மணி நேரம் இவர் தனித்துப் பேசுகிறார் எனில், இவர் தலைமை யமைச்சராக இருக்கவே தகுதியற்றவராகிறார். இவரின் தனிப்பட்ட பத்திமை வேறு, அரசியல் கடமைகள் வேறு. அரசியல் கடமைகளை ஆற்ற வந்தவிடத்தில் இவரின் தனிப்பட்ட மத ஆசை பாசங்களுக்கு இவர் இடம் தந்திருக்கக் கூடாது.
சங்கராச்சாரியார் ஒரு மதத்தலைவர் மட்டுமல்லர். பார்ப்பன இனத்தின் ஒட்டுமொத்தத் தலைவரும் ஆவார். இந்த வகையில் இந்தியாவில் உள்ள வேறு மடத்தலைவர் எவரையும் விட, காஞ்சியில் உள்ள இவருக்குத்தான் அதிகக் கவர்ச்சி உண்டு. அத்தகைய ஓர் இனவெறித் தலைவரை, இந்திய நாட்டின் தலைமையமைச்சரும், மற்றும் தலைமை, துணைக் குடியரசுத் தலைவர்களும் வந்து சந்தித்துப் பேசி, வழிபட்டுப் போகின்றார்கள் என்றால், இந்த நாடு ஒரு குடியரசு நாடு என்று சொல்லத் தகுந்ததா? ஞாயம் உண்டா? இப்படித்தான் இந்திராகாந்தியும் முன்னர்ச் செய்து வந்தார்.
இவர்கள் செய்கின்ற வெளிப்படையான இம்மத ஈடுபாடுகளாலும் வழிபாடுகளாலும், இவற்றின் பெயரால் செய்யும் கருத்துக் கலப்புகளாலும் மக்கள் மனவியல் அடிப்படை-யிலும், அரசியல் அடிப்படையிலும் பலவகை-யான வெறுப்புகளையும் பகையுணர்வுகளையுந்-தான் கொள்ளப் போகின்றார்கள்.
மேலும் இவர்கள் தங்களைப் பச்சையான இந்து மதச் சார்பாளர்களாகக் காட்டிக் கொள்வதால், இந்து மதத்தை அஃதாவது பார்ப்பன மதத்தை மறைமுகமாக ஊக்குவிக்-கிறார்கள் என்றும், அதன் வழியாகப் பிற மதங்களைத் தவிர்க்கக் குறிப்புக் காட்டு-கிறார்கள் என்றுந்தான் பொருள்படும். இது கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறிவதைப் போன்றது.
நேரு சிலை திறப்பு விழாவில், இராசீவ், நேருவைப் பற்றிக் குறிப்பிடுகையில், “அவர் முழுமையாக மதச் சார்பின்மையைக் கடைப்பிடித்தார்” என்று பாராட்டினார். நேருவின் ஆட்சி நாளில், மதத்திற்கோ மதத்தலைவர்களுக்கோ இத்துணை ஆளுமை, அரசியல் தலையீடு, இருந்ததில்லை. இப்பொழுதுதான் இருக்க இருக்க ஆட்சி, பார்ப்பன ஆளுமையாகவே மாறிவருவதைப் பார்க்கிறோம். இஃது அவர்களுக்கும் நல்லதன்று; நாட்டின் எதிர்காலத்திற்கும் நன்றன்று என்று எச்சரிக்கின்றோம். மதம் ஆட்சிக்கட்டில் ஏறினால், ஆட்சி இருண்டுவிடும் என்பது அழிக்கமுடியாத உண்மை!
– தமிழ்நிலம், இதழ் எண் : 97, 1987