சிறுகதை : தோட்டி

2022 ஆகஸ்ட் 16-31 2022 சிறுகதை

கோவி. சேகர்

தோட்டி 1967ஆம் ஆண்டு ஜாதியும், பணமும் உச்சத்திலிருந்து சக மனிதனை மிருகத்தினும் கீழாய், அடிமையாய் நடத்திய காலம். ஏன் நமக்கு இந்தச் சுதந்திரம் கிடைத்தது என அடித்தட்டு மக்கள் ஏங்கிய நேரமும்கூட. நெருப்பாய் வெய்யில் அடித்தாலும் காலில் செருப்பு போடக்கூடாது. அப்படியே திருட்டுத்தனமாகப் போட்டாலும் உயர் ஜாதிக்காரர்களோ, பண்ணையார்களோ எதிரில் வந்தால், செருப்பைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு ஒதுங்கி, ஓரமாய் காத்திருக்க வேண்டும். அதையும் தாண்டி ஊருக்குள் எப்படி செருப்பைப் போட்டுக்கொண்டு வந்தாய் எனக் கூறித் தண்டிக்கப்பட்டவர்களும் உண்டு.
கிராமத்து தேநீர்க் கடைகளில் கீழ் ஜாதி மக்கள் தேநீர் அருந்த முடியாது. மறைவாகக் காத்திருக்க வேண்டும். ஊர்க்காரர்கள் எல்லாம் தேநீர் அருந்திவிட்டுச் சென்ற பிறகு, தனியாக உள்ள டபரா செட்டில் தேநீர் வரும். அதையும் மறைந்து நின்றபடியே குடிக்க வேண்டும். வெள்ளைக்காரன் கண் பட்டு, தப்பித்த பெண்கள்கூட ‘ஆண்டை’ கண்ணிலிருந்து தப்பிப்பது மிகவும் கடினம் என்பார்கள்.

சாதாரண கீழ் ஜாதி மக்களின் நிலையே சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலத்தில் இப்படி இருந்தது என்றால், மனிதனாகவே மதிக்கப்படாதவர்களின் நிலை எப்படி இருந்திருக்கும்?
கொண்டையன் அந்த ஊரின் தோட்டி. ஊர் மக்களின் மலம் அள்ளுபவன். எப்பொழுதும் வழக்கமான கருப்பு பனியன், காக்கி நிஜாருடன், போதை தரும் நீட்டு புகையிலையை மடித்து வாயில் ஓர் ஓரத்தில் அடக்கி, கையிலே ஒரு வாளியைப் பிடித்தபடி, மண் வெட்டியை மாட்டிய மலத்தை சேகரிக்கும் பீப்பாயை கர கர சத்தத்துடன் தெருவில் தள்ளி வர அவனுடன் சம வேகத்தில் ஓடி வருவாள் அவன் மனைவி இருளச்சி. எப்போதும் மாறாத அவனது காக்கி நிஜாருக்கும் ஒரு காரண-முண்டு. அந்த ஒரு நிறத்தில்தான், சமயத்தில் பிறர் மலம் உடையில் பட்டாலும் அது வெளியே தெரியாது. அவனுக்கும் அவன் மனைவிக்கும் குறைந்தது பத்து வயது வித்தியாசமிருக்கும். அவன் மனைவி அவனைவிட பெரியவள். இது அவர்கள் சமூகத்தில் மிகவும் வழக்கமான ஒன்றுதான். சில நேரத்தில் பத்து வயது பையனுக்கு இருபது வயது பெண்ணைக்கூட திருமணம் செய்து வைப்பார்கள். கொண்டையன் பீப்பாவைத் தள்ளி வருகிறான் என்றாலே தெருவில் நடமாட்டம் இருக்காது. எல்லோரும் மூக்கைப் பிடித்துக் கொண்டு ஒதுங்க ஆரம்பிப்பார்கள்.

அன்றைய கால கட்டத்தில் போக்குவரத்து நெரிசல் என்பதை யாரும் நினைத்துப் பார்க்காத, அனுபவிக்காத ஒன்று. ஊருக்கு ஒன்றிரண்டு இருசக்கர வாகனம் இருந்தாலே அதிகம். தெருவுக்கு ஒரு சைக்கிள் இருந்தால் வசதியானவர்கள் வாழும் தெரு என்று அர்த்தம். ஊரில் எங்காவது ஒரு மர்பி ரேடியோ இருப்பதே அரிது.
வீட்டுத் தோட்டத்தில் கட்டியிருக்கும் மாடுகளின் சாணத்தைச் சுத்தம் செய்யும் மக்கள் தங்களது கழிவுகளைச் சுத்தம் செய்ய மட்டும் இன்னொரு மனிதன் வேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருந்த காலம். அதைச் செய்தவர்கள் அதனை ஒரு தொழிலாக எடுத்துக் கொண்டு செய்தார்களா என்றால் இல்லை என்று சொல்லி விடலாம். இது பிறந்த ஜாதியால் திணிக்கப்பட்ட தொழில். பள்ளிக்குச் சென்று படிக்க முடியாது. தோட்டிகளின் குழந்தைகளை யாரும் பள்ளியில் சேர்ப்பதில்லை. அப்படியே சேர்த்தாலும் பிற மாணவர்கள் அவர்களுடன் உட்கார மாட்டார்கள். கொண்டையனும் அப்படி தன் மகனை பள்ளியில் சேர்க்க முயற்சி செய்து, அது முடியாமல் ஏமாந்தவன்தான். பிற தொழில் செய்ய முடியாது. வருவாய் பெற, வாழ்வை நடத்த மனித மலத்தைத்தான் கையால் எடுக்க வேண்டும். இது அந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு மனிதனும் தன்னை சர்வாதிகாரி என்று நினைத்துக்கொண்டு, ஏமாந்தவன் மேல் திணித்த வன்முறைதான்.

ஊர் மக்களின் மலத்தைச் சுத்தம் செய்ய கொண்டையன் அதிகம் சிரமப்பட்டது கிடையாது. ஆனால், அக்ரகாரம் அப்படியல்ல. பத்து வீடு இருந்தாலும் பத்தும் பத்து மாதிரி. “டேய், வண்டியை இங்கே நிறுத்தாதே, அங்கே நிறுத்தாதே, வீட்டு வாசல் பக்கத்தில் வராதே, வேகம் வேகமா எடு” இப்படி ஆளுக்கு ஒரு கட்டளை வரும். சின்னது முதல் பெரிசுகள் வரை பேர் சொல்லி அழைக்க மாட்டார்கள். ‘டேய் தோட்டி’ இப்படித்தான் பெரும்பாலோர் அவனை அழைப்பர்.
‘டேய்’ என ஒரு வாண்டு கூப்பிட்டாலும், ‘வரேன் சாமி’ என்றே பதில் சொல்ல வேண்டியது அன்றைய கட்டாயம்.
அக்ரகாரத்தில் கடைசியாக இருப்பது சேசாத்ரி அய்யங்கார் வீடு. யாரையும் மதிக்க மாட்டார். அந்த ஊரில் அவர் ஒருவர் மட்டுமே வழக்குரைஞர். அதுவே அவரது தலைக் கணத்திற்கு முக்கிய காரணம். மேலும், அவரது மகனையும் வழக்குரைஞருக்குப் படிக்க வைக்கப் போவதாகப் பேச ஆரம்பித்து விட்டார். அவர் ஒருவர் வீட்டைச் சுத்தம் செய்தாலே போதும், முழு அக்ரகாரத்தையும் சுத்தம் செய்த மாதிரி. சாம்பல் தர மாட்டார்கள், மண் தர மாட்டார்கள், தீட்டு ஒட்டிக் கொள்ளுமாம். வீட்டுக்கு பத்து அடி தள்ளிப் போக வேண்டும் என்று சொல்பவர்கள், கடந்த இரண்டு வாரமா வீட்டிற்குள் தோட்டத்து பக்கமாக கொண்டையனின் மனைவி இருளச்சியை மட்டும் வர அனுமதித்து இருக்கிறார்கள்.

ஆமாம். சேசாத்ரி அய்யங்காரின் வயதான அம்மா, படுத்த படுக்கையாகி-விட்டாள். எல்லாம் படுக்கையிலேயே, அம்மாவின் மலத்தை அள்ளவோ, மூத்திரத்தைச் சுத்தம் செய்யவோ சேசாத்ரியால் முடியாது. தன் மனைவியிடம் சொல்லிப் பார்த்தார். “இங்க பாருங்கோ, அந்தக் கருமத்தையெல்லாம் நான் சுத்தம் செய்ய முடியாது. இது போன ஜென்மத்து பாவம். நாளைக்கு எல்லாரும் என்னப் பாத்து, ‘ஆம்படையான் என்ன சொன்னாலும் செய்வியா, நோக்கு புத்தி இல்லையா’ன்னு கேட்டா நான் என்ன செய்வேன்? மத்தவாள விடுங்கோ, உங்க அத்திம்பேரே கேப்பார். செத்த நேரம் எனக்காக உங்கம்மா ஒதிக்கியிருக்காளா? என் மனசில தோணித்து சொல்லிட்டேன். உங்கம்மா படுத்தறது தாங்கமுடியல. நம்ப ஆத்துல அடிக்கிற நாத்தம், பக்கத்து ஆத்துக்கு பரவ ரொம்ப நாளாகாது. சாப்பிட முடியல. சொல்றேன்னு தப்பா எடுத்துக்க வேணாம். இதுக்கப்புறமா இருந்து என்ன செய்யப்போறா? இவளால நம்ப பிள்ளையாண்டான் ஓடியாடி விளையாட முடியல, படிக்க முடியல. ரெண்டு நாள் கெடு. எதுவும் நடக்கலைன்னா நான் எங்காத்துக்கு பிள்ளையாண்டானோடு போயிடுவேன்” அதற்கு மேல் அவரது மனைவி யாரையும் பார்க்காமல் நகர்ந்தாள்.
வீடே நாற ஆரம்பித்தது. இரண்டு நாள்களாக யாரும் சுத்தம் செய்யப் போகவில்லை. ஒரு தட்டில் சாம்பார் சாதத்தைப் போட்டு, மூக்கை மூடிக்கொண்டு, மெள்ள கதவைத் திறந்து தட்டைக் கீழே வைத்து, ஒரு குச்சியால் தள்ளிவிட்டு, அதே வேகத்தில் கதவை மூடினாள் அய்யங்காரின் மனைவி. அதற்குப் பிறகு அந்த சாப்பாடு பற்றியோ, அந்த ஜீவன் பற்றியோ யாரும் கவலைப்படவில்லை.

அப்போதுதான் சேசாத்ரி அய்யங்காருக்கு ஒரு யோசனை தோன்றியது. தோட்டி கொண்டையனின் மனைவியை வைத்து அம்மாவின் அறையை தினம் சுத்தம் செய்தால் என்ன என்று. மனைவியிடம் சொன்னதும் ஆரம்பத்தில் சம்மதம் கிடைக்கவில்லை. என்றாலும், வேறு வழியில்லாமல் சம்மதம் கிடைத்தது. எல்லாம் சுத்தம் செய்தவுடன், வெளியே போய், அவளே அவள் வந்து சென்ற இடத்தின் தீட்டை வெளியே இருந்து உள்ளே ஜலம் ஊத்தி கழுவ வேண்டும். அடுத்து அவள் அப்படி உள்ளே வந்து சுத்தம் செய்வதை வெளியே சொல்லக் கூடாது. அவள் சம்மதத்துடன் அப்படியே எல்லாம் நடந்தது.
முதல் நாள், கொண்டையனின் மனைவி, பாட்டி இருந்த நிலையைப் பார்த்து மனம் நொந்து போனாள். அவளுக்கு இதயம் வெடித்து விடும் போலானது. பாட்டி கட்டிய துணி முழுவதும் மூத்திரமும் மலமும் கலந்துவிட, நாற்றத்தில் எதுவும் தெரியாத புழுவாய்க் கிடந்தாள் பாட்டி. பாட்டியை தனியாகத் தூக்கிப் பிடித்து, தண்ணீர் ஊற்றிக் கழுவி, துணி மாற்றிவிட தன்னால் தனியாக முடியாது என்பதால், உதவிக்கு யாராவது வேண்டும் என, இருளச்சி அய்யங்கார் மனைவிடம் சொன்னாள்.
“அந்தக் கருமத்தையெல்லாம் என்னால் கிட்ட நின்னு பாக்க முடியாது. இன்னிக்கி ஒருநா கொண்டையனைக் கூட்டிக்க. அப்புறமா நீ தனியா செய்யக் கத்துக்க. லோகத்தில் நல்லவாளுக்கெல்லாம் சாவு வருது. பாவம் பன்னவாளுக்கு தீர்க்க ஆயுச பகவான் கொடுக்கிறான். எல்லாம் கலிகாலம்” என்று அய்யங்கார் காதில் விழும் அளவிற்கு பதில் வந்தது.
அய்யங்கார் பதில் பேசாமல் அமைதியானார்.

இருளச்சி, பாட்டியைச் சுத்தம் செய்ய, தன் கணவனைக் கூப்பிடவில்லை. அதை ஒரு பாவமாக நினைத்தாள். தானே பாட்டியை குளுப்பாட்டி, ஓர் ஓரமாகப் படுக்க வைத்து, மருந்து தெளித்து, எல்லாம் சுத்தம் செய்த பின், அவளே பாட்டிக்கு துணி மாற்றிவிட்டு, வெளியே போய், அங்கிருந்து உள்ளே தண்ணீர் ஊற்றி, அவள் வந்து சென்ற இடத்தின் தீட்டைக் கழுவினாள். அத்துடன் நிற்காமல், சேசாத்ரி அய்யங்காரின் மனைவி சொன்னது போல் பாட்டியின் துணியைத் துவைத்து தனியாகக் காயவைத்தாள். அய்யங்காரின் மனைவி, கொண்டையன் மனைவியை வைத்தே மாமியாருக்குச் சாப்பாடு, தண்ணீர் எல்லாம் மொத்தமாகக் கொடுத்து விட்டாள்.
மறுநாள் கொண்டையன் உடல் நலம் சரி இல்லாததால், தனக்குப் பதில் தன் மகனை மனைவி இருளச்சியுடன் மலம் அள்ள அனுப்பி வைத்தான். ஒவ்வொரு வீடாய் முடித்து வரும்போது மகன் கேட்டான், “யம்மோ, இவ்ளோ பீ நாத்தம் நாறுதே, தெனம் நீ இந்த பீ அள்ளிய கையோடு எப்படி சாப்புடுவே”.
“நல்லா கேட்டே. இதா நம்ம வாக்க. பீயையும் சேத்து சாப்டாலும், நாறுதுன்னு வெளியே சொல்லக் கூடாது. சரி வாய மூடு. சாமிங்க வீட்டுக்கு போணும். அங்க எதையும் பேசக் கூடாது.”
ஏம்மா பேசக்கூடாது. நீயும் தானே தெனம் சாமி கும்பிடுற. அப்ப அந்த சாமி ஏன் நம்ம மட்டும் அடுத்தவன் பீயை வாரச் சொல்லுது.”
இருளச்சி தன் கையிலிருந்த மலம் வாரும் முறத்தால், மகனை ஒரு போடு போட்டாள். “வாயை மூடு. எதாச்சும் சாமி காதுல விழுந்தா இந்த வேலையும் போயிடும்.”
“பெரிய துரை உத்தியோகம். போனா போட்டுமே. உன்ன விட்டா வேற யாரு பீ அள்ள வருவா”
இருளச்சி தன் ஒரு விரலை வாயில் வைத்து, வாயை மூடு’ என எச்சரித்தபடியே நடந்தாள்.

மகன் மலம் நிறைந்த பீப்பாவைத் தள்ளிவர, இருளச்சி ஒவ்வொரு வீடாக, தோட்டத்துப் பக்கம் போய் மலம் அள்ளினாள். இறுதியாக அய்யங்காரின் வீடு. அய்யங்காரின் வீட்டு மலத்தை அள்ளிய, இருளச்சி, மகனிடம் “தோ பாருடா, இங்கியே செத்த நேரம் குந்திக்க. நா சாமி ஊட்ல, பாட்டி எடத்த அலம்பிட்டு வரேன்”
‘தோ பாரு, இப்ப மட்டு நீ உள்ள போனா தீட்டு ஒட்டிக்காதா”
அவன் பேசியது அய்யங்காரின் காதில் விழுந்துவிட்டது.
“என்னடா சொன்ன நாயே, என் பீய அள்ளி சாப்பிடற நாயி நீ, உனக்கு அவ்ளோ திமிரா? கூப்பிடுடா அந்த ஓவர்சீயரை” அய்யங்கார் கத்தவும், அந்த வழியாக ஓவர்சீயர் போகவும் சரியாக இருந்தது.

கையைக் கட்டிக்கொண்டு ஓவர்சீயர், அய்யங்கார் முன் வந்து நின்றார். “சாமி என்ன ஆச்சி?”
“இந்த நாயிக்கு, இந்த வயசில எவ்ளோ திமிர், என்ன பேச்சி பேசறான், தே…. மவனே. அவன கட்டிவச்சி நாலு அடி செருப்பால அடிச்சி அனுப்பு’’
ஏன், எதற்கு என்று கேட்க யாருக்கும் தைரியமில்லை. சொன்னது வழக்குரைஞர் அய்யங்கார். அவர் சொன்னபடி கேட்காவிட்டால், அடுத்து எல்லோருக்கும் அடி விழும்.
“சாமி, ஒரு நிமிஷம்’’ என்று சொன்ன ஓவர் சீயர், கொண்டையனுக்கு ஆள் அனுப்ப, அடுத்த நிமிடம் கட்டியிருந்த கோவணத்தோடு கொண்டையன் வியர்க்க வியர்க்க ஓடி வந்தான்.
கொண்டையன் காதில் ஓவர்சீயர் ஏதோ சொல்ல, “சாமி, தப்பு பண்ண என் மொவன, நாலு இல்ல சாமி, நாப்பது அடி செருப்பால இப்ப அடிக்கறேன். இதோட அந்த நாய மன்னிச்சிடுங்க சாமி” என்றான்.
சொன்னபடியே கொண்டையன், ஓவர்சீயர் கொடுத்த அய்யங்கார் செருப்பால் தன் மகனை கை வலிக்க அடித்தான். ஏன், எதற்கு, என் மகன் என்ன செய்தான், என ஒரு வார்த்தை கூட கொண்டையன் கேட்கவில்லை. இருளச்சியும் மகன் அடிபடுவதைத் தடுக்கவில்லை. அடிமையின் ஆணிவேராய் கொண்டையன் நடந்து கொண்டதால், அய்யங்கார் சிறிது அமைதியானார்.

ஓவர்சீயர் அத்துடன் நிற்கவில்லை. இருளச்சியின் முதுகில் கை வைத்தார். அடுத்த நிமிடம் பொத்தான்கள் அறுபட அவளது ஜாக்கெட் அவர் கைக்கு வந்தது. பயத்தில் வாய் மூடி அவள் சேலையைச் சரிசெய்யும் முன்பே, ஓவர்சீயர் கத்தினார். “சரி சரி, சாமி மன்னிச்சிடுவார். எல்லாரும் அவர் காலில் தூரமா விழுந்து மன்னிப்புக் கேளுங்க.’’ மூவரும் அப்படி செய்த பின், ஜாக்கெட்டை அவள் முகத்தில் வீசிய ஓவர்சீயர், “உன் பையன் மரியாதை இல்லாம அய்யாகிட்ட பேசனதால, உனக்கு தண்டனையா இந்த மாச சம்பளம் பாதிதாண்டா” என்றார்.
அவர்கள் மூவரும் அங்கிருந்து சென்ற பின், சேசாத்திரி அய்யங்கார் ஓவர்சியரைக் கூப்பிட்டு, தான் கட்டியிருந்த பஞ்சகச்சம் வேஷ்டியிலிருந்து ஒரு அய்ந்து ரூபாய் நோட்டை எடுத்து அவர் கையில் திணித்தார். “நீ புத்திசாலியோவ், புத்திசாலி. உன்ன மாதிரி ஆளுங்க அரசாங்கத்துக்குத் தேவை. முக்கியமா உயர் அதிகாரிகளுக்கு, அவா அவா தேவையைச் சொல்லாமத் தெரிஞ்சி சரியா செய்யற. அவன் பொஞ்சாதியோட… நீ போ. கவலை இனி வேண்டாம். உனக்குப் பதவி உயர்வுக்கு நான் ஏற்பாடு செய்யறேன்.”
தன் பங்குக்கு ஒரு வணக்கத்தைச் சொல்லி, அய்யங்கார் காலைத் தொட்டு வணங்கி விடை பெற்றார் ஓவர்சீயர்.

மறுநாள் அதே அக்ரகாரத்தில் மணி அய்யர் வீட்டில் மலம் அள்ளச் சென்றபோது, மணி அய்யர், கொண்டையனைக் கூப்பிட்டுப் பேசினார். “டேய் இங்க வா! நேத்து நடந்ததை ஓவர்சீயர் மூலம் கேள்விப்பட்டேன். பட்டணத்திலே ஒரு இடம் இருக்கு. உன்ன மாதிரி ஏழை, ஆதரவற்றோர் குழந்தைகளை அவங்களே படிக்க வச்சி காப்பாத்துவாங்க. நீ எதுவும் செய்ய வேண்டாம். சாப்பாடு, துணி, தங்கும் இடம், படிக்கும் செலவு எல்லாம் அவங்களே பாத்துக்குவாங்க. ரொம்ப நம்பிக்கையான இடம். நீ பயப்பட வேண்டாம். நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்சதே தவிர, உன்னை மாதிரி ஆளுங்க, இன்னும் அடிமையாத்தான் வாழ வேண்டியிருக்கு. இது சரியாக எவ்வளவு நாள் ஆகுமுன்னு சொல்ல முடியாது. உன் பையனாவது, உன்ன மாதிரி இல்லாம் நல்லா வாழட்டுமே. என் பேச்சைக் கேட்டு உன் பையனை பட்டணத்துக்கு படிக்க அனுப்புவியா?”
கொண்டையன் பதில் பேசவில்லை. அப்படியே அவர் காலில் விழுந்தான். “சாமி, எதாச்சும் நல்லது செய்யுங்க சாமி.”
மணி அய்யரே தொடர்ந்தார். “வருஷத்துக்கு ஒரு தடவ மட்டும் உன் பையனப் பாக்கலாம். யாருகிட்டேயும் அவன் எங்கிருக்கான்னு நீயே சொல்லிக்கிட்டு இருக்காதே.”

“சாமி, அவன பாக்கவே போமாட்டேன் சாமி”
அடுத்த சில தினங்களில் மணி அய்யர், தான் சொன்னபடி கொண்டையன் மகனை, அவன் செலவிற்கு சிறிது பணத்தை அவரே கொடுத்து, பட்டணத்திற்கு அனுப்பி வைத்தார். கொண்டையன் வருடா வருடம் போய் மகனைப் பார்க்காவிட்டாலும், மணி அய்யர் உதவியால் இரண்டு மூன்று ஆண்டுக்கு ஒருமுறை மனைவியுடன் சென்று மகனைப் பார்த்து வர ஆரம்பித்தான். தன் மகன் நன்றாகப் படிக்கிறான் என்பதைத் தவிர, என்ன படிக்கிறான், எதற்காகப் படிக்கிறான் என்கிற விவரம் எதுவும் கொண்டையனுக்குத் தெரியாது.
ஆண்டுகள் பல ஓடின. எப்பொழுதும் கொண்டையனை வாடா போடா என்று பேசியவர்கள் கூட, கொண்டையனின் மகன் பட்டணத்தில் வழக்குரைஞராக இருக்கிறார் என்று தெரிந்ததும் மரியாதையாய்ப் பேச ஆரம்பித்தனர். கொண்டையனும் ஓவர்சீயராகப் பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்ற பின், மகனின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு, தன் மனைவியுடன் பட்டணத்திற்கே சென்றுவிட முடிவெடுக்-கிறார். கொண்டையனுக்கு நம்ப முடியாத ஒரு மாற்றம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மரியாதை இல்லாமல் நடத்தப்பட்ட தான், இப்பொழுது அனைவராலும் மரியாதையாக நடத்தப்படுவது ஆச்சரியமாகப்-பட்டது. பல ஆண்டுகளுக்கு முன் இருளச்சியின் ஜாக்கெட்டில் கை வைத்த ஓவர்சீயர், பேருந்து நிலையத்திற்கே வந்து கொண்டையனையும், அவர் மனைவி இருளச்சியையும் கை கூப்பி வணங்கி பட்டணத்திற்கு வழி அனுப்பி வைத்தார்.

கொண்டையன் மகன் ஒரு வழக்குரைஞர் என்றுதான் அனைவரும் நினைத்துக்கொண்டு இருந்தனர். ஆனால், அந்த வழக்குரைஞர் தனது ஏழு ஆண்டுகால வழக்குரைஞர் பணியை சிறப்பாகச் செய்து, முதல் நிலை மாவட்ட நீதிபதிகளுக்கான கடுமையான தேர்வில் போட்டியிட்ட மூவாயிரம் நபர்களில் தேர்வான பத்து பேரில் முதலிடத்தைப் பிடித்து மாவட்ட நீதியரசரான செய்தி, மணி அய்யர் தவிர வேறு யாருக்கும் கொண்டையன் உள்பட தெரியாது. மணி அய்யரும் தன்னைக் கேட்டுக்கொண்டபடி ரகசியத்தைக் காப்பாற்றினார்.
வழக்கமாக நீதியரசர்களை சொந்த மாவட்டத்தில் பதவி உயர்வு பெற்றபின் மாற்றம் செய்வது இல்லை. கொண்டையன் மகனின் முகவரி அனைத்தும் சென்னை. அத்துடன் பயிற்சியில் அவரின் குடும்பப் பின்னணியை பலரும் அறிய, வழக்கமான பதவி மாற்றம் அவருக்கும் வருகிறது.

மாவட்ட நீதிமன்றத்திற்கு புதிதாய் வரும் நீதியரசர்களை, தனது வயதான காலத்திலும் தவறாமல் மாவட்ட வழக்குரைஞர் கழக உறுப்பினர்களுடன் மரியாதை நிமித்தமாகச் சந்திப்பது, சேசாத்ரி அய்யங்காரின் வழக்கம். அப்படியே புதிதாய் வந்த நீதியரசரை வீட்டில் சந்திக்க, சேசாத்ரி அய்யங்கார் நேரம் கேட்க, தன்னை யாராகினும் அலுவல் நிமித்தமாக மட்டும் நீதிபதி அறையில் சந்தித்தால் போதும் எனவும், எக்காரணம் கொண்டும் வீட்டில் சந்திக்க வேண்டாம் என்ற நிபந்தனையுடன் முதல் முறை என்பதால் வீட்டில் சந்திக்க அனுமதியளித்தார் நீதியரசர்.

குறிப்பிட்ட நாளில் சேசாத்ரி அய்யங்கார், தனது மகன் மற்றும் பிற வழக்குரைஞர் கழக உறுப்பினர்களுடன் நீதியரசரின் வீட்டுக்குச் சென்றார். வெளியே காலணிகளை விட்டு, வணக்கிய கையோடு மரியாதையாய் குனிந்த-படியே உள்ளே வந்தவர்களை, வரவேற்று தனது அறைக்கு நீதியரசர் அழைத்துச் சென்றார். அதே நேரத்தில் வரவேற்பு அறையில் அமர்ந்திருந்த முதியவரைக் காட்டி, ‘அவர்தான் தன் தந்தை’ எனச் சொல்ல, உடனடியாக சேசாத்ரி அய்யங்கார், தன் மகனிடம், “தம்பி நீ போய் அப்பாவிடம் ஆசிர்வாதம் வாங்கி வா’ எனச் சொல்லி, மகன் கையில் மாலையுடன் பொன்னாடையையும் அளித்தார். நீதிஅரசரின் அறை சுவரில் மாட்டியிருந்த புகைப்படங்கள் சேசாத்ரி அய்யங்காரை நிலைகுலையச் செய்தது. முதலில் அவர் கண்ணுக்குப் பட்டது மணி அய்யரின் புகைப்படம். அடுத்து தந்தை பெரியார், பாபா சாகேப் அம்பேத்கர். அதற்கு அடுத்து இருந்த படம்தான் சேசாத்ரி அய்யங்காரின் தடுமாற்றத்திற்குக் காரணம். ஆம், அதுதான் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் தன் வீட்டில் மலம் அள்ளிய கொண்டையன் மற்றும் இருளச்சியின் புகைப்படம். வியப்பில், முகம் முழுவதும் வியர்த்த சேசாத்ரி அய்யங்கார் தன் மகனைப் பார்க்க, அவன் கொண்டையனுக்கு மாலை அணிவித்து, அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு இருந்தான்.