அறிவியல் : புகையில்லா விறகு அடுப்பு!

2022 ஆகஸ்ட் 16-31 2022


புகையில்லை, கேஸ் இல்லை, பேட்டரி இல்லை, பெரிய பெரிய மரக் கட்டைகளை அடுக்கி எரிக்கும் வேலை இல்லை, குறிப்பாக அவ்வப்போது அருகில் இருந்து ஊதிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. எப்படி கேஸ் அடுப்பில் சரியான அளவில், தேவைப்பட்டால் நெருப்பின் அளவைக் கூட்டி குறைத்து நாம் சமையல் செய்கிறோமோ அப்படி இந்த அடுப்பைப் பயன்படுத்தலாம். எப்படி சாத்தியம்? விளக்கமாகப் பேசினார் வுட் ஸ்டவ் உருவாக்கிய சாய் அருணின் மனைவி மோனிகா.

“நான் மோனிகா சாய் அருண். எங்களுக்கு சொந்த ஊர் சென்னை, அம்பத்தூர். நான் படிச்சது கம்ப்யூட்டர் இன்ஜினியரிங். என் கணவர் சாய் அருண். ஒரு எம்.என்.சி கம்பெனியிலே வேலை செய்துட்டு இருந்தார். ஆனால் எப்பவுமே அவருக்கு சொந்தமா ஒரு பிஸினஸ் செய்யணும்னு ஆசை இருந்துட்டே இருந்துச்சு. மேலும் எதாவது கண்டு-பிடிச்சிட்டே இருப்பார். இண்டஸ்ட்ரியல் சார்ந்த நிறைய பயிற்சிகளை அவரே தேடித் தேடி பயிற்சி எடுத்துக்கிட்டு செய்தும் முடிச்சிடுவார். அப்படி அவர் கண்டு பிடிச்சதுதான் இந்த வுட் ஸ்டவ். ஏற்கனவே இந்த முறை பெரிய பெரிய ஃபேக்டரி செட்டப்கள்ல இருக்கு. ஆனால் டொமெஸ்டிக்கா, வீட்டிலே சின்னதா பயன்படுத்த என்ன வழி அப்படின்னு யோசிச்சு உருவாக்கினதுதான் இந்த வுட் ஸ்டவ். இந்த முயற்சி நினைச்ச அளவுக்கு வரவேற்பு கிடைச்சதால என் கணவர் வேலையைக் கூட விட்டுட்டு இதிலேயே முழுமையா இறங்கினார்.

அடுப்புக்குக் கீழே ஒரு தட்டு மாதிரி இருக்கும். அதைத் தான் ஃபியூயெல் (எரிபொருள்) பிளேட் அப்படின்னு சொல்வோம். அதிலே மரத்தூள், எருவரட்டி, சிரட்டைத்தூள், தேங்காய் நார், இப்படி எதுவாயினும் பயன்படுத்தலாம். காகிதம். பாலிதீன் உள்ளிட்ட பொருள்கள் மட்டும் கூடாது. இதிலே ஒரு புளோயருடன் இணைக்கப்பட்ட ஃபேன் இருக்கும். மின் இணைப்பு கொடுக்கும்போது அந்த ஃபேன் வேலை செய்து நெருப்பை கட்டுக்குள்ள வைக்கவும், குறைச்சுக் கூட்டவும் பயன்படும். இந்த புளோயருக்கு போற மின்சாரம் மொபைல் சார்ஜருக்குக் கொடுக்கக் கூடிய மின்சாரத்தை விட குறைவுதான். கேஸ் அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பில் பயன்படுத்தப் படும் எரிபொருள் செலவைக் காட்டிலும் இதிலே எப்படி குறைவான செலவில் சமையல் செய்ய முடியும்.

ஒரு சிலிண்டர் = 40 கிலோ விறகு. அதாவது ஒரு வீட்டுக்கு ஒரு சிலிண்டர் எத்தனை நாள்கள் வருகிறதோ அதற்குப் பதிலாக 40 கிலோ விறகு வாங்கினால் இந்த வுட் ஸ்டவ் அடுப்பில் அதே அளவு நாள்கள் சமைக்க முடியும். மேலும் எப்படி கேஸ், மண்ணெண்ணெய் அடுப்புகளில் நெருப்பைக் கூட்டி, குறைத்து அதிக சூடு, மிதமான சூடு என சமைப்போமோ அதே பாணியில் இங்கேயும் குறைச்சு கூட்டுவதால் எரிபொருள் எடுத்துக்கற அளவும் குறையும். ரூ.4500க்கு வீட்டில் பயன்படுத்தப்படும் ஸ்டவ் துவங்கி பெரிய ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் கமர்சியல் அடுப்புகள் உள்பட சைஸ் பொறுத்து ரூ.42.000 வரை இந்த டர்போ வுட் ஸ்டவ் இருக்கு.

புகை கிடையாது, கேஸ் சிலிண்டருக்கு ஆகுற செலவிலே பாதி செலவு கூட இந்த ஸ்டவ்வுக்கு ஆகாது. மேலும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு கிடையாது. எங்களுடைய குடும்ப பிஸினஸா இப்போ இந்த வுட் ஸ்டவ் மாறிடுச்சு. விறகு அடுப்பிலே சமைக்கிற அதே சுவைகூட இருக்கறதா நிறைய பேர் மகிழ்ச்சியா சொல்றாங்க’’ என்று பாரம்பரிய முறையை நவீனமயமாக்கிய திருப்தியுடன் முடித்தார் மோனிகா.
– ஷாலினி நியூட்டன்
நன்றி: தினகரன் வசந்தம்