மூடநம்பிக்கை ஒழிப்பு : கைரேகை ஜோதிடம்!

2022 ஆகஸ்ட் 16-31 2022 மற்றவர்கள்

ஒளிமதி

உள்ளங்கையில் உள்ள ரேகைகளைப் பார்த்து ஜோதிடம் சொல்லும் முறையும் உலகில் பெருவாரியாகக் காணப்படுகிறது.
கையில் உள்ள கோடுகள் இறைவனால் பதிவு செய்யப்பட்டவை என்கிற நம்பிக்-கையையும் மக்களிடையே மதவாதிகள் பரப்பி வருகின்றனர்.
“நான் இக்கட்டுரையில் முன்னர் குறிப்பிட்டபடி அவரவருடைய வினைகளுக்குத் தகுந்த தலையெழுத்தை ஆணுக்கு வலது உள்ளங்கையிலும், பெண்ணுக்கு இடது உள்ளங்கையிலும் சுருக்கெழுத்துப் போன்ற ரேகைகளால் பொறித்துக் கடவுள் பிறக்கச் செய்கிறான்’’ என்று மதுரை ஆதினகர்த்தர் கூறியுள்ளார்.
அதாவது நாம் எப்படி வாழப் போகிறோம் என்கிற விதியை கடவுள் கையில் ரேகையாகப் பதித்துள்ளான். அதைப் பார்த்து, நம் வாழ்வு இப்படித்தான் இருக்கும் என்று அறிந்து கொள்ளலாம் என்பதே இதன் பொருள்.

ஆணின் தலையெழுத்தை ஆணின் வலக்கையிலும், பெண்ணின் தலையெழுத்தைப் பெண்ணின் இடக்கையிலும் ஆண்டவன் விதிக்கோடுகளாகப் பதிவு செய்துள்ளதாகக் கூறுகிறார். அப்படியென்றால் ஆணுக்கு இடது கையிலும், பெண்ணுக்கு வலது கையிலும் உள்ள கோடுகள் என்ன கோடுகள்?
விதிக் கோடுகள்தான் ரேகைக் கோடுகள் என்றால், இன்னொரு கையில் ரேகையே இருக்கக் கூடாது அல்லவா?
அது மட்டுமா, கால்களில்கூட ரேகைகள் உள்ளனவே!

ஆணிலும் சேராத, பெண்ணிலும் சேராத திருநங்கைகளுக்கு விதிக்கோடு எங்கு பதிவு செய்யப்படுகிறது? பதில் சொல்வார்களா?
ஆணாய் இருந்து பெண்ணாகவும், பெண்ணாய் இருந்து ஆணாகவும் மாறுகிறார்கள். அவர்களுக்கு ரேகைக்கோடு எந்தக் கையில் பார்ப்பது?
மேலும், ரேகைக் கோடுகள் அடிக்கடி மாறிக் கொண்டிருக்கின்றன. ரேகைக் கோடுகள் விதிக் கோடுகள் என்றால் ஆயுள் முழுவதும் மாறாமல் அப்படியே அல்லவா இருக்க வேண்டும்?
எனவே, ரேகைக் கோடுகள் விதிக் கோடுகள் அல்ல. அவை நம் வாழ்வைக் காட்டக் கூடியவையும் அல்ல என்பது தெளிவாகிறது.

கைரேகைக் கோடுகள், உடல்கூறு, உடல் நலம் சம்பந்தப்பட்டவற்றை வேண்டுமானால் ஓரளவிற்குப் பிரதிபலிக்கலாமே தவிர, விதியையும் வாழ்வையும் அல்ல.
இராணுவத்தில் உள்ள சிப்பாய்கள் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கில் இறக்கிறார்கள். அப்படியென்றால் அவர்கள் அத்தனை பேர் கையிலும் உள்ள ஆயுள் ரேகைகள் அன்றோடு அவர்கள் இறந்து போவதாகக் காட்டுமா?
இப்படி அறிவோடு சிந்தித்தால் இவற்றில் உண்மையில்லை என்பது எளிதில் விளங்கும்.
இங்கு என் வாழ்வையே உதாரணமாகக் காட்ட விரும்புகிறேன்.
எனக்கு அப்போது வயது பதினாறு. நான் கல்லூரியில் புகுமுக வகுப்பில் (P.U.C.) சேர்வதற்காக வீட்டில் கலந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு ஜோதிடர் தற்செயலாக வந்தார்.

என் கையைக் காட்டச் சொன்னார். காட்டினேன். என் கை ரேகையைப் பார்த்தார்.
“தம்பிக்கு அவ்வளவாகப் படிப்பு வராது. மேற்படிப்புக்கு உரிய அறிகுறிகள் இல்லை. இரும்பு சம்பந்தமான வியாபார வாய்ப்புதான் இருக்கிறது’’ என்றார்.
ஆனால், நான் தொடர்ந்து படித்தேன். படித்து அதன் அடிப்படையில் வேலை ஏற்றுத்தான் வாழ்க்கை நடத்துகிறேன். வியாபாரம் எதுவும் நான் செய்யவில்லை. எனவே, ஜோதிடர் கூறுவதற்கும் வாழ்க்கைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.ஸீ