நிவேதா மகேந்திரன்
இன்றைய அறிவியல் உலகில் பல பேர் காலை நேரத்திற்கு எழுந்து கொள்வதே அதிசயமாக உள்ளது. இந்நிலையில் உடற்பயிற்சி செய்பவர்கள் எல்லாம் சிறிது குறைவாகவே காணப்படுகின்றனர். 40 வயதிற்குப் பிறகு, மூளையின் அளவு குறையத் தொடங்குகிறது. மூளை வழியாக குறைந்த இரத்த ஓட்டம், மற்றும் ஹார்மோன் மற்றும் நரம்பியக் கடத்தி அளவு குறைகிறது. வயதாவதால் புதிய பணிகளைக் கற்றுக் கொள்வது போன்ற சில செயல்பாடுகளில் தாமதத்திற்கு வழிவகுக்கிறது. அறிவாற்றல் முதுமை மூளையின் ஹிப்போகாம்பஸில் உள்ள நரம்பியல் ஸ்டெம் செல்களை நம்பியிருப்ப-தாகக் கருதப்படுகிறது. இது வாழ்நாள் முழுவதும் புதிய நியூரான்களைத் தொடர்ந்து உருவாக்குகிறது. மேலும் புதிய நினைவுகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதாகக் கருதப்படுகிறது. கொறித்துண்ணிகள் பற்றிய ஆராய்ச்சி, நாம் வயதாகும்போது, இந்த செல்கள் குறைவான மற்றும் குறைவான நியூரான்களை உருவாக்குகின்றன. மேலும் இது பிற்கால வாழ்க்கையில் குறைந்த அறிவாற்றல் திறன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆராய்ச்சிகள்:
இதயத்திற்கு நல்லது உங்கள் தலைக்கும் நல்லது என்று கூறுவார்கள். அதற்குப் பல எடுத்துக்காட்டுகளும் உண்டு. நீச்சல் மற்றும் மிதமான உடற்பயிற்சி செய்பவர்களின் மூளை அவர்களைவிட பத்து வயது இளமையாக இருக்கும் என்று தற்போதைய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
கலிபோர்னியாவில் உள்ள ஆராய்ச்சி யாளர்கள் உடற்பயிற்சியானது மூளையின் செல்களுக்கு இடையேயான தொடர்புகளை மேம்படுத்தும் சினாப்டிக் புரதங்கள் எனப்படும் புரதங்களின் இப்படி உற்பத்தி செய்வதன் மூலம் மூளையை இளமையாக வைத்திருக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். வழக்கமான உடற்பயிற்சி பயனுள்ள புரதங்களை அதிகரிப்பதன் மூலம் மனிதர்களின் மூளையை இளமையாக வைத்திருக்க உதவும் என்றும் கூறுகின்றனர். ஒரு வாரத்திற்கு இரண்டரை மணி நேரம் அல்லது அதற்கு மேற்பட்ட உடல் செயல்பாடுகள் உங்கள் ஒத்திசைவை அதிகரிக்கலாம் மற்றும் மூளையின் இயற்கையான வயதையும் மறதி நோயையும் (Dementia) குறைக்க உதவும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. மறதி நோயை (Dementia) தடுக்க உடற்பயிற்சி உதவுகிறது என்பது ஏற்கனவே தெரிந்ததே.
ஆனால், அது எப்படி என்பது முன்பு தெரியாமல் இருந்தது. இப்போது அறிவியலாளர்கள் இது ஏன் நிகழ்கிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். சினாப்டிக் புரதங்களை அதிகரிப்பதன் மூலம் இது ஊக்க சக்தியாக இருந்து மூளையின் இயற்கையான வயதை குறைக்கும் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். சான்பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள நரம்பியல் உளவியலாளர் கெய்ட்லின் கசலெட்டோ “மூளையின் தகவல் தொடர்பு-களை நன்றாக வைத்திருக்க உடல் செயல்பாடுகள் உதவியாக இருக்கும் என்று கருத்தை எங்கள் தரப்பு ஆதரிக்கிறது” என்று கூறியுள்ளார்.இதுபோன்று மியாமி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தலைமை தாங்கிய டாக்டர் கிளின்டன் ரைட் “வயதானவர்களுக்கு வழக்கமான உயிர் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பளிக்கும் அவர்களின் அறிவாற்றல் திறன்களை நீண்டகாலமாக வைத்திருக்க உதவும் என்பதை எங்கள் ஆய்வு காட்டுகிறது’’ என்று கூறியுள்ளார்.
எப்படிப்பட்ட உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்?
ஆறு மாத கால ஏரோபிக் சகிப்புத்தன்மை பயிற்சியின் (வீட்டுக்குள் சைக்கிள் ஓட்டுதல்) நீட்சி/ஒருங்கிணைப்பு பயிற்சியின் முடிவுகளை ஒப்பிட்டுப் பார்த்தால், 40-56 வயதிற்குட்பட்டவர்களில், இந்த இரண்டு செயல்பாடுகளும் உடற்பயிற்சி செய்யாத நபர்களுடன் ஒப்பிடும்போது நினைவாற்றலில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதைக் காட்டுகிறது. இந்த நடவடிக்கைகள் நிச்சயமாக இருதய உடற்திறனை மேம்படுத்தும், மேலும் ஆய்வில் பங்கேற்பாளர்கள், தங்கள் இருதய உடற்தகுதியில் அதிக முன்னேற்றத்தைக் காட்டியவர்கள், நினைவகத்திலும் சிறந்த முன்னேற்றங்களைக் கொண்டிருந்தனர்.
இதுமட்டுமல்லாமல் நாம் அன்றாடம் செய்யும் சிறிய உடற்பயிற்சிகளை நாம் தினமும் 30 நிமிடங்கள் செய்து வந்தால் மூளையின் திறனை அதிகரிக்க உதவும். அறிவாற்றல் பயிற்சி, அதாவது உங்கள் மூளைக்கு உடற்பயிற்சி செய்வது, உங்கள் மூளை நெகிழ்வாக இருக்க உதவுகிறது. உடல் பயிற்சியுடன் இதை இணைப்பது வயதானவர்களின் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துவதில் இன்னும் சிறந்த முடிவுகளைக் காட்டுகிறது.
வயதான நபர்களின் உடல்நலம் மற்றும் அறிவாற்றல் அவர்கள் உடற்பயிற்சி செய்வதை வைத்து மதிப்பீடு செய்யப்படுகின்றது. 40 வயதிற்குப் பிறகு, மூளையின் அளவு சுருங்கத் தொடங்குகிறது. எனவே, உடற்பயிற்சி மறதி (அல்சைமர்) நோய் போன்ற பலவீனமான நிலைமைகளின் அபாயத்தைக் குறைக்கிறது. உடற்பயிற்சி செய்வது லேசான வியர்வை ஏற்படுத்தும். ஆனால், சோர்வை ஏற்படுத்தாது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் வாரத்திற்கு அய்ந்து அல்லது அதற்கு மேற்பட்ட முறை 30 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு [WHO] பரிந்துரைக்கிறது. வயதானவர்கள் மட்டும் உடற்பயிற்சி செய்யாமல் இளைஞர்களும் செய்தால் பிற்காலத்தில் உடலும் மூளையும் ஆரோக்கியமாக இருக்கும்.