உணவே மருந்து!

2022 ஆகஸ்ட் 01-15 2022 உணவே மருந்து!

காளான் ஒரு காப்பாளன்!

காளான் வகைகள்:
காளான்களில் நஞ்சு உள்ளவை, நஞ்சு இல்லாதவை என இரண்டு வகைக் காளான்கள் உண்டு. நஞ்சுள்ள காளான்கள் பல வண்ணங்களில் இருப்பதோடு, துர்நாற்றம் வீசும் தன்மை கொண்டவை. இதனால் நஞ்சுள்ள காளான்களை உண்ணக்கூடாது. இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன. அவற்றில்,
1. மொட்டுக் காளான் அல்லது பட்டன் காளான்(Button Mushroom)
2. சிப்பிக் காளான் (Oyster Mushroom)
3. பால் காளான் (Milk Mushroom)
என்னும் 3 வகையான காளான்கள் மட்டுமே வியாபார நோக்கில் உற்பத்தி செய்யப் படுகின்றன.

மருத்துவப் பயன்கள்
1. புற்றுநோயைத் தடுக்கிறது
அழற்சியைத் தவிர்த்து புற்றுநோய் வளர்ச்சியைத் தடுத்துவிடுகிறது. காளான்களில் உள்ள வைட்டமின் ‘டி’ சத்து புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது. காளான்களில் உள்ள போலிக் ஆசிட் வைட்டமின் சத்து D.N.A.Synthesis-இல் முக்கிய பங்காற்றி புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கிறது.

2. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது
காளானில் கொழுப்புச் சத்து, மாவுச் சத்து எனப்படும் கார்போஹைட்ரேட் இல்லை. அதற்குப் பதிலாக அதிகளவு புரதச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள் உள்ளன. அத்துடன் நார்ச்சத்தும் உள்ளது. காளானில் இயற்கையாகவே இன்சுலின் இருக்கிறது. இந்த இன்சுலின் உணவில் இருந்து கிடைக்கும் இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்துகிறது.

3. இதயத்திற்கு நல்லது
இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. இதன் காரணமாக உயர் இரத்த அழுத்தம் (HIGH B.P.) மற்றும் இரத்தக் குழாயில் ஏற்படும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. தேவையில்லாமல் சேரும் கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது காளான். இதனால் இரத்தம் சுத்தம் அடையும். இதயம் பலப்படும், சீராகச் செயல்படும். இதயத்தைப் பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.

4. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது
காளானில் உள்ள செலீனியம் சத்து நோயை எதிர்க்கும் செல்களை உற்பத்தி செய்து நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. காளான்களின் செல்களில் உள்ள பீடா குளுகான் சத்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கி, புற்று நோய் செல்களைத் தடுத்துவிடுகிறது.

5. உடல் பருமன் நோயைத் தடுக்கிறது
காளானில் பீடா குளுகோன் (Beta Gulucon), சைடீன் (Chitin) எனப்படும் இரண்டு வித நார்ச்சத்துகள் உள்ளன. இவை உணவு சாப்பிடும் அளவைக் குறைப்பதோடு (Reduce Appetite) உடல் பருமனாவதைத் தடுக்கிறது.

6. வைட்டமின்களும் தாது உப்புகளும்
காளானில் (B Complex) B காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் எனப்படும் ரிபோபிளேவின், போலிக் ஆசிட், தையோமின், பான்டோதினிக் ஆசிட் மற்றும் நியாசின் வைட்டமின்கள் உள்ளன. பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உணவில் இருந்து சக்தியை எடுத்துக் கொள்ளவும் இரத்தச் சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கும் உதவுகிறது. கருவுற்ற பெண்களுக்கு குழந்தையின் வளர்ச்சிக்காக போலிக் ஆசிட் வைட்டமின் சத்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
காளானில் உள்ள காப்பர் (Copper) எனப்படும் தாமிரச்சத்து இரத்தச் சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் எலும்பு வளர்ச்சிக்கும் நரம்பு மண்டலம் சீராக இயங்கவும் உதவுகிறது. பொட்டாசியம் சத்து இதயமும் நரம்பு மண்டலமும் சீராக இயங்க உதவுகிறது.

தோலுக்குக் காப்பு:
காளானில் உள்ள ஹையலுரானிக் ஆசிட் (Hyaluranic Acid) வயதானவர்களுக்கு ஏற்படும் தோலின் சுருக்கங்களைத் தடுக்கிறது.
அனிமீயா எனப்படும் இரத்தச் சோகையின் காரணமாக தலை முடி உதிர்வதைத் தடுக்கிறது.
பாலூட்டும் தாய்மார்கள் காளான்களை கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது.