மதவெறிக்கு எதிராய்
மனிதச் சங்கிலி அறப்போர்!
கி.வீரமணி
புலவன்காடு மெ.நல்லான் _நல்.மாரிக்-கண்ணு ஆகியோரின் செல்வன் நல்.பரமசிவம், தஞ்சை காட்டுத்தோட்டம், வீ.திருமேனி_ தருமதேவி ஆகியோரின் செல்வி தி.மலர்விழி மற்றும் உரத்தநாடு வட்டம் புலவன்காடு மெ.நல்லான் _நல்.மாரிக்கண்ணு ஆகியோரின் செல்வன் நல்.மெய்க்கப்பன், உரத்தநாடு புலவர் கு.இராமசாமி _ காந்திமதி ஆகியோரின் செல்வி இராம. காயத்திரி ஆகியோரின் வாழ்க்கை ஒப்பந்த விழாக்கள் 22.8.1999 காலை 10:00 மணியளவில் தஞ்சை கிரேசி திருமண அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மணவிழாவிற்கு முன்னிலையேற்று தொழிலதிபர் டாக்டர் ‘வீகேயென்’ கண்ணப்பன், பூண்டி இளவல் டாக்டர் து.கிருட்டினசாமி ஆகியோர் உரையாற்றினர். நான் விழாவிற்குத் தலைமையேற்று மணமக்களை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதிமொழியைக் கூறச்செய்து மணவிழாவை நடத்தி, உரையாற்றினேன்.
16.9.1999 அன்று நண்பகல் 12:30 மணிக்கு ஆத்தூர் முல்லைவாடி புதுகல்லாநத்தம் ரோடு பி.கொமுரு இல்லத்தில் பி.கொமுரு _ பாப்பாத்தியம்மாள் மணி விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட தி.க. தலைவர் பொத்தனூர் க.சண்முகம் மணிவிழாவிற்குத் தலைமை வகித்தார். நான் இணையர் இருவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தேன்.
இந்தியாவில் சிறுபான்மையினர்க்கு எதிராக பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளின் மதவெறிச் செயலைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் மனிதச் சங்கிலி அறப்போர் 18.9.1999 அன்று வெகு எழுச்சியுடன் நடைபெற்றது.
மனிதச் சங்கிலி அறப்போரின் நிறைவுக் கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகில் எனது தலைமையில் நடைபெற்றது.
இந்தியக் குடியரசுக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் சக்திதாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.அய்.டி.யூ தொழிற்சங்கச் செயலாளர் டி.கே.ரெங்கராஜன், சிறுபான்மை சமுதாய அமைப்பின் தலைவர் ஞானராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் வி.தண்டாயுதபாணி, தமிழ்நாடு ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் கா.ஜெகவீரபாண்டியன், இந்திய தேசிய லீக் அகில இந்திய பொதுச் செயலாளர் பன்மொழிப் புலவர் அப்துல் லத்தீப், வடசென்னை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சவுந்தரராஜன், மக்கள் நல உரிமைக் கழக பொதுச் செயலாளர் பண்ருட்டி எஸ்.இராமச்சந்திரன், அ.தி-.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் இ.மதுசூதனன் ஆகியோர் மதவெறிக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்திய மனிதச் சங்கிலி அறப்போரினைப் பாராட்டியும், இந்த நாட்டிலே மதவெறிக்கு இடம் கிடையாது. மதவெறி பிடித்த பாசிசக் கும்பலின் கூட்டணி ஆட்சிகள் ஒழிக்கப்பட வேண்டியதை வலியுறுத்தியும் உரையாற்றினார்கள். இறுதியாக, நான் நிறைவுரையாற்றினேன்.
தந்தை பெரியார் அவர்களின் பெருந்-தொண்டர், சுயமரியாதை வீரர் மறைந்த திராவிடர் கழகப் பொருளாளர்
கா.மா. குப்புசாமி அவர்களது படத்திறப்பு விழா நிகழ்ச்சி 29.9.1999 அன்று காலை தஞ்சையில் நடைபெற்றது. மறைந்த கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி அவர்களது படத்தைத் திறந்து வைத்துப் பேசுகையில், “இங்கே திறந்து வைத்திருப்பது படமல்ல; நமக்கெல்லாம் வாழ்க்கைப் பாடம். அவர் பொருளாளராக எப்படி இருந்தார்? ஒரு குடும்பத் தலைவராக எப்படி இருந்தார்? ஒரு சிறந்த நண்பராக எப்படி இருந்தார்? என்று விளக்கினோம்.
கழகப் பொருளாளர் அவர்களுக்குச் சிலை வைக்க வேண்டும் என்று சொன்னார்கள். தஞ்சை வல்லத்திலே உள்ள கல்வி நிறுவனங்-களைப் பார்த்தால் யாராவது ஒருவருடைய உருவம் தெரியும் என்று சொன்னால் அது தந்தை பெரியார் அவர்களுடைய உருவம் எப்பொழுதும் தெரியும்.
அந்தக் கல்வி நிறுவனத்தைக் கட்டி முடித்து ஒரு சிறப்பை உருவாக்கியவர் என்று சொன்னால், அங்குள்ள அத்துணை நிறுவனங்-களும் கழகப் பொருளாளர் அவர்களின் நினைவுச் சின்னங்கள் என்பதை யாரும் மறந்துவிடவே முடியாது என்று அவரைப் பற்றிய பல செய்திகளையும் எனது உரையில் குறிப்பிட்டேன்.
அகரப்பேட்டையில் பெரியார் பெருந்-தொண்டர் புரவலர் பி.இரத்தினம் _ பிலோமினாள் ஆகியோரின் பெரு முயற்சியால் கட்டப்பட்ட தந்தை பெரியார் நினைவு பயணிகள் நிழலகம் திறப்பு விழாவும், அவர்களுக்குப் பாராட்டு விழாவும் 22.10.1999 அன்று மாலை 6:00 மணியளவில் அகரப்-பேட்டை ஊராட்சி மன்ற நடுநிலைப்-பள்ளியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தந்தை பெரியார் நினைவு பயணிகள் நிழலகத்தைத் திறந்து வைத்து நான் உரையாற்றினேன்.
அரசாங்கமும், ஊராட்சி மன்றமும் செய்ய வேண்டிய பணியை தந்தை பெரியாரின் கொள்கை வயப்பட்ட காரணத்தால் இரத்தினம் அவர்களும், அவரது துணைவியார் பிலோமினாள் அவர்களும் சிறப்பாகச் செய்துள்ளனர். அவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். அவருடைய உழைப்பு சமுதாயத்திற்காகப் பயன்பட்டிருக்கிறது. இந்த நிழலகத்தைத் திறக்கும்போது அதைக் கவனித்தேன்.
முன்பெல்லாம், இல்லறம், துறவறம் என இரண்டைத்தான் குறிப்பிடுவார்கள். தந்தை பெரியார் அவர்கள்தான் தொண்டறத்தைச் சொன்னார். பெரியாருக்குப் பின் இந்த இயக்கம் இயங்குமா என சிலர் கேட்டனர்? இரத்தினம் _ பிலோமினாள் போன்ற தந்தை பெரியாரின் தொண்டர்கள் இயங்கும் என்பதற்குச் சாட்சியாக உள்ளனர். மனிதனுக்கு தொண்டு உள்ளம்தான் முக்கியம் என்று எனது உரையில் குறிப்பிட்டேன்.
திருக்காட்டுப்பள்ளி ஒன்றியம் வளப்பக்குடி கிராமத்தில் பெரியார் படிப்பகத் திறப்பு விழா, கல்வெட்டு திறப்பு விழா, கழக கொடியேற்ற விழா என ‘முப்பெரும் விழா’ 22.10.1999 அன்று இரவு 7:00 மணியளவில் வளப்பக்குடி மந்தைவெளி திடலில் எழுச்சியோடு நடை-பெற்றது. அப்போது நான் பேசுகையில், “தந்தை பெரியார் படிப்பகம் திறக்கப்பட்டுள்ளது. பல பெரிய நகரங்களில்கூட இவ்வளவு சிறப்பான படிப்பகம் இல்லை. இந்தப் படிப்பகம் கட்சி, ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது. இந்தப் படிப்பகத்திற்காக தலைமைக் கழகத்தின் சார்பில் ‘விடுதலை’, ‘உண்மை’ போன்ற இதழ்கள் தொடர்ந்து அனுப்பப்படும்.
மக்களின் விடுதலையை மீட்டெடுக்க ‘விடுதலை’ நாளிதழைப் படியுங்கள். சமுதாயத்தில் நடைபெறும் உண்மைச் சம்பவங்களைத் தெரிந்துகொள்ள ‘உண்மை’ இதழ்களைப் படியுங்கள். இவைதான் நம் இனத்தின் மானத்தை மீட்டு அறிவைக் கொடுக்கக் கூடியவை’’ என்று குறிப்பிட்டேன்.
பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனர் தோழர் எம்.கல்யாணசுந்தரம் அவர்களின் முழு உருவச் சிலைத் திறப்பு விழா 23.10.1999 அன்று மாலை 6:00 மணியளவில் திருச்சி கல்யாண சுந்தரபுரத்தில் எழுச்சியோடு நடைபெற்றது. அய்க்கிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் மொகித் சென் அவர்கள் சிலையினைத் திறந்து வைத்தார். அனைத்துக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.
விழாவிற்கு தலைமையேற்று மாநகரத் தலைவர் பிச்சை உரையாற்றினார். விழாவினை அய்க்கிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் தா.பாண்டியன் தொடங்கி வைத்து உரையாற்றினார். அ.இ.அ.தி.மு.க அவைத் தலைவர் டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் ஆகியோர் உரையாற்றிய பின்னர் நான் உரையாற்றுகையில், “தோழர் கல்யாணசுந்தரம் அவர்கள் தொழிற் சங்கங்களுக்குத் தலைமை தாங்கி அவர் எடுத்த கொள்கைக்காக இறுதி மூச்சு அடங்குகிற வரையிலே எவ்வளவு அடக்குமுறைகள் பொழிந்தாலும், அவற்றைத் தெளிவாக, தான் ஏற்றுக்கொண்ட கொள்கையிலிருந்து ஓர் இம்மியளவுகூட நகராதவராக இருந்தார்.
இந்தச் சிலை உயர்ந்திருப்பதைப் போல அவர்களும் தன்னுடைய வாழ்க்கை பிறருக்கு உரியது என்ற பொது வாழ்க்கையில் உண்மையான தத்துவத்தின் அடிப்படையிலே அவர் வரலாறாகி இன்றைக்கு இருக்கிறார்கள்.
தலைவர் தந்தை பெரியார் அவர்கள் வெகுவாக மதித்த தலைவர்களிலே ஒருவராக தோழர் கல்யாணசுந்தரம் அவர்கள் திகழ்ந்தார்கள். அதிலும், தந்தை பெரியார் அவர்கள் வேறு ஊரிலே பிறந்தவராக இருந்தாலும் திருச்சியை மய்யமாகக் கொண்டு, தலைமையிடமாகக் கொண்டு பணியாற்றியதைப் போல, தோழர் கல்யாணசுந்தரம் அவர்களும் ‘கருப்பூரார்’ என்று அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவர் திருச்சிக்கு உரியவர் என்று சொல்லக்-கூடிய அளவிலே இங்கு மிகப் பெரிய அளவிலே தொண்டாற்றி இருக்கக்கூடியவர். எனவே, அவரது சிலை திருச்சியிலே அமைந்திருப்பது மிகவும் பொருத்தமானது, மகிழ்ச்சிக்குரியது என்று எனது உரையில் குறிப்பிட்டேன்.
புதுதில்லியில் எனது தலைமையில் பெரியார் மய்ய ஆலோசனைக் கூட்டம். 1.11.1999 அன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு தில்லி சென்றடைந்தேன். புதுதில்லி பாம்னொலி பகுதியில் உருவாகிவரும் ‘பெரியார் மய்ய’க் கட்டடப் பணிகளைப் பார்வையிட்டேன். என்னுடன் பேராசிரியர் நல்.இராமச்சந்திரன் அவர்களும் வந்தார். எங்களை கட்டடக் கலை நிபுணரும் ராவ் அண்ட் அசோசியேட் நிறுவன உரிமையாளருமான திரு.கஜராஜ் சிங், உள்ளூரில் எங்கள் பணிக்கு ஒத்துழைப்பு நல்கிவரும் பிரபல பொதுநலத் தொண்டர் திரு.விஜய் லோச்சேல், கட்டட ஒப்பந்தக்காரர் லலித்சிங் ஆகியோர் என்னை வரவேற்று அங்கு நடைபெறும் கட்டடப் பணிகளை விவரித்தனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு நான் தலைமை தாங்கினேன். இந்திய சமூகநீதி மய்யத்தின் தேசியத் தலைவர் திருவாளர் சந்திரஜித் யாதவ், முன்னாள் மத்திய கல்வி அமைச்சரும் சீரிய விஞ்ஞானியுமான திரு.டி.பி.யாதவ், திரு.விஜய் லோச்சேல், திரு.கஜராஜ்சிங், பேராசிரியர் நல்.இராமச்சந்திரன், காசி இந்து பல்கலைக்கழக பேராசிரியர் திரு.ஜி.எச்.குஷ்வாகா, திரு,லலித்சிங், பக்கத்து கிராமத்து ஊராட்சி மன்றத் தலைவர் திரு.துலீப் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். பணிகளை விரைவாக முடித்து பிப்ரவரியில் துவக்க விழா நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
5.11.1999 அன்று பெரம்பூர் சாந்த சுந்தர திருமண அரங்கில் பெரம்பூர் சபாபதி _இந்திராணி ஆகியோரின் செல்வி ச.எழில்மணி, திருச்சூர் எ.எல்.லூயிஸ் _ எலியா லூயிஸ் ஆகியோரின் செல்வன் ஜோசப் லூயிஸ் ஆகியோரின் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவினை சிறப்பாக நடத்தி வைத்தேன்.
5.11.1999 மாலை 5:45 மணிக்கு சீனக் கம்யூனிஸ்ட் தூதுக்குழுவினர் சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்தனர். சீன நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், பெய்ஜிங் நகராட்சி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளருமான லிஸி ஜியன் தலைமையில் வியூ ஹீசன், பெய்யோங்கி, திருமதி சென்பெய்வி, வியூ காயாங்க், ஜியாங்வெய், வியூஜிங் கேவோக்கிய ஓபிங் ஆகியோர் வந்தனர்.
அவர்களை நான் அன்புடன் வரவேற்று தந்தை பெரியார் அருங்காட்சியகம் அழைத்துச் சென்று தந்தை பெரியாருக்கு பொதுமக்கள் வழங்கிய பரிசுப் பொருள்கள், பாராட்டுப் பத்திரங்கள், மத்திய அரசு வெளியிட்ட தந்தை பெரியார் நினைவு தபால்தலைகள் ஆகியவற்றைக் காட்டி விளக்கம் கொடுத்ததோடு தந்தை பெரியார் அவர்கள் 1932ஆம் ஆண்டு ரஷ்யாவிற்குச் சென்றிருந்த சம்பவத்தையும் அவர் தன் வாழ்நாளில் மக்கள் நலனுக்காக சமூக முன்னேற்றத்துக்காக நடத்திய போராட்டங் களைப் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினேன்.
பின்னர் அவர்கள் அய்யா நினைவிடத்தில மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். சீனக் குழுவினர்க்கு நான் பெரியார் உருவம் பொறித்த தட்டு ஒன்றைப் பரிசளித்து சால்வை போர்த்திப் பாராட்டினேன்.
9.11.1999 அன்று மதியம் சென்னையில் உள்ள அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியார் படத்திறப்பு விழாவில் பங்கேற்று தந்தை பெரியார் படத்தினைத் திறந்து வைத்து உரையாற்றினேன். அப்போது மத்திய அரசின் கல்வித் துறையிலும் இட-ஒதுக்கீடு தேவை என்பதை வலியுறுத்தினேன்.
மறுநாள், 10.11.1999 அன்று முற்பகல் 11:00 மணியளவில் அடூர் தெலுங்குச் செட்டியார் திருமண அரங்கில் ஆதிதிராவிடர் சங்க மாநிலத் தலைவர் அ.இனமுரசு கோபால் _ இந்திராணி ஆகியோரின் செல்வன் இ.கோ.துன்பரா ராவ் பேதாதம்பட்டி மா.அரங்கசாமி _ மகேஸ்வரி ஆகியோரின் செல்வி அர.இந்திரா ஆகியோரின் வாழ்க்கை ஒப்பந்த விழாவினை நடத்தி வைத்தேன்.
அடுத்த நாள் 11.11.1999 அன்று காலை 10:00 மணியளவில் வந்தவாசி முத்துக்குமரன் திருமண அரங்கில் பெரியார் பெருந்தொண்டர் வந்தவாசி வேல்.சோமசுந்தரம் துணைவியார் சோ.இரத்தினம்மாள் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினேன்.
12.11.1999 அன்று காலை 8:00 மணியளவில் சிதம்பரம் தில்லை திருமண அரங்கத்தில் சிதம்பரம் நகர திராவிடர் கழகத் தலைவர் புலவர் சி.இராசாங்கம் _ இரா.பிச்சையம்மாள் ஆகியோரின் செல்வன் இரா.நச்சினார்க்கினியன், புதுவை இரா.பச்சையப்பன் பிஷோ _ காத்தாயி பிஷோ ஆகியோரின் செல்வி ப.கலைச்செல்வி ஆகியோருக்கும்;
14.11.1999 அன்று காலை 10:00 மணியளவில் திருச்சி ஓட்டல் சங்கத்தில் கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் கி.பழனிச்சாமி _ சம்பூர்ணம் ஆகியோரின் செல்வன் ப.பன்னீர்செல்வம், சென்னை எஸ்.சுப்பையா _ மோகனா ஆகியோரின் செல்வி க.சுதா ஆகியோருக்கும்;
அடுத்து 14.11.1999 அன்று மாலை 6:00 மணியளவில் தஞ்சாவூரில் நடைபெற்ற, பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரியின் விரிவுரையாளரும் உரத்தநாடு வட்டம் வடக்கூர் ரெ.கணேசன் _க.சாமியம்மாள் ஆகியோரின் செல்வன் க.ஜெகஜோதி, உரத்தநாடு வட்டம் ஆத்தங்கரைப்பட்டி க.சுப்ரமணியன் -_ பூமணி ஆகியோரின் செல்வி க.சாந்தி ஆகியோருக்கும்;
19.11.1999 அன்று மாலை 6:00 மணியளவில் தஞ்சாவூர், ஓரியண்டல் டவர்ஸ் திருமண அரங்கில் மறைந்த கழகப் பொருளாளர் சுயமரியாதைச் சுடரொளி கா.மா.குப்புசாமி _ ஞானாம்பாள் ஆகியோரின் பேரன் ஸ்டாலின்_ யோகப்பிரியா ஆகியோருக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவினை நடத்தி வைத்தேன்.
20.11.1999 அன்று காலை 10:00 மணியளவில் புதுப்பிக்கப்பட்ட ஈரோடு பெரியார் மன்றத்தின் திறப்பு விழாவும், பெரியார் பெருந்தொண்டர் களுக்கான பாராட்டு விழாவும் ஈரோடு பெரியார் மன்றத்தில் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது. மாவட்டத் தோழர்கள் சிறப்பான வரவேற்பு, தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கிடையே புதிய பொலிவுடன் புதுப்பிக்கப்பட்ட ஈரோடு பெரியார் மன்றத்தைத் திறந்து வைத்தேன்.
பெரியார் பெருந்தொண்டர்கள் எஸ்.ஆர். சாமி, சி.நடேசனார், இல.பெருமாள், புலவர் ஆறுமுகனார், இராமானுசம், செங்கரப்-பாளையம் இராமசாமி, அரசமாணிக்கனார், கொம்பக்கோவில் சின்னப்பன், ஆ.மாரப்பனார், மு.பழனியப்பன், ஓய்வு பெற்ற தாசில்தார் கோபி.சீனுவாசன் ஆகியோரின் ஓய்வறியா மனிதநேயத் தொண்டினைப் பாராட்டி கழகத்தின் சார்பில் அவர்களுக்குச் சால்வை அணிவித்துச் சிறப்பு செய்தேன்.
அன்று மாலை 5:00 மணியளவில் கழகச் செயல்வீரர் சுயமரியாதைச் சுடரொளி மறைந்த மேட்டூர் லூ.கருப்பரசன் அவர்களின் படத்திறப்பு விழா மேட்டூர் பாரதி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நாமக்கல் மாவட்டத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற விழாவில் கலந்துகொள்வதற்காக ஈரோட்டிலிருந்து புறப்பட்டு மாலை 4:00 மணியளவில் மேட்டூர் சென்றேன். அங்கு இளைஞரணிப் பொறுப்பாளர் பழனி முயற்சியால் கட்டப்பட்ட பெரியார் பொன்மொழிகள் எழுதிய கல்வெட்டினைத் திறந்துவைத்து கழகக் கொடியினையும் ஏற்றினேன். இந்தக் கல்வெட்டினை அப்பகுதியைச் சார்ந்த பழனிச்சாமி, சித்ரா, முகிலன் ஆகியோர் தங்கள் பொறுப்பில் அமைத்துக் கொடுத்தனர். பின்னர் மேட்டூர் புறவழிச் சாலை சந்திப்பு அருகில் தந்தை பெரியார் உருவப் படத்துடன் கூடிய வரவேற்புப் பதாகையினைத் திறந்து வைத்தேன். அதன்பின் சரியாக 5:00 மணியளவில், லூ.கருப்பரசன் படத்தைத் திறந்து வைத்து, அவரின் சிறப்புகளைப் போற்றி உரையாற்றினேன்.
23.12.1999 அன்று மாலை 5:00 மணியளவில் சென்னை அவ்வை சண்முகம் சாலை காதிகிராமோத் பவன் அரங்கில் சுயமரியாதை வீராங்கனை முன்னாள் அமைச்சர் சத்தியவாணிமுத்து அவர்களது படத்திறப்பு மற்றும் நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. மிசோராம் ஆளுநர் டாக்டர் எ.பத்மநாபன் அவர்கள், சத்தியவாணிமுத்து படத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். சத்தியவாணி-முத்து அம்மையார் நினைவு அறக்கட்டளையைத் திறந்து வைத்து டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் உரையாற்றினார். ஜி.கே.மூப்பனார் நூலகத்தைத் திறந்து வைத்தார். பல கட்சித் தலைவர்களும் உரையாற்றினர். நான் உரையாற்றியபோது அம்மையாரின் சிறப்புகளைப் பட்டிய-லிட்டதுடன் இந்த நூலகத்துக்கும், அறக் கட்டளைக்கும் திராவிடர் கழகம் எந்தப் பங்கை ஆற்ற வேண்டுமென்று தோழர்கள் விரும்-பினாலும் அந்தப் பங்கை ஆற்ற நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்று கூறி என் உரையை நிறைவு செய்தேன்.