நூல்: அறியப்படாத இந்து மதம்
(முதல் பாகம்)
ஆசிரியர்: செ.தி.ஞானகுரு
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 050.
தொலைப்பேசி: 044-26251968, 26258410, 48601884
www.ncbhpublisher.in | email: info@ncbh.in
அணிந்துரை
அடிமை வாழ்வே அறம்!
இந்தியாவில் முதலில் தோன்றிய பழமையான சமயங்கள் எல்லாம் உலக வாழ்வியலில் துன்பங்களை வீழ்த்தி, அமைதியான, நிறைவான வாழ்க்கையை வாழும் இன்பவியல் கோட்பாடுகளைக் கொண்டவை யாகத்தான் இருந்தன. சாங்கியம், சார்வாகம் (உலகாயதம்), நியாயம், யோகம், வைசேடிகம், சமணம், பவுத்தம், ஆசீவகம் அனைத்தும் அறத்துடன் வாழும் வாழ்க்கைக் கோட்பாட்டு அடிப்படையில் அமைந்தவையே.
இனக்குழுக்கள், சமுதாயம், நாடு, பேரரசு என்று மனித சமுதாயம் வளர்ச்சி பெற்ற காலத்தில், மன்னராட்சியை ஏற்காத இனக்குழுக்கள் முன்வைத்த தேவன் (கடவுள்) என்ற கோட்பாடு விவாதப் பொருளாக நிலவி வந்தது. தனக்கு இணையான வேறோர் அதிகார மையத்தை ஏற்றுக் கொள்ள பெரும்பாலான மன்னர்கள் முன் வரவில்லை. கண்ணால் காண்பது அல்லது நேரடியாக உணர்வது என்னும் பிரத்தியட்சக் கருத்துகள் கொண்ட மேற்கூறிய பழமையான சமயங்கள் கடவுள், ஆன்மா, மறு உலகம் ஆகியவற்றை மறுதலித்தன. அதேநேரம், ஊகம் (அனுமானம்), ஆப்த வசனம் (நம்பத்தகுந்தோர் கூறுகின்ற வாக்கு) ஆகியவற்றைப் பிரமாணங்களாக (அடிப்படைகளாக) ஏற்றுக்கொண்ட சமயங்கள் கடவுள், ஆன்மா, மறுவுலகக் கோட்பாடுகளைக் கட்டமைத்தன. இவற்றை ஏற்றுக்கொள்ளும் சமயங்களை ஆத்திகச் சமயங்கள் என்றும், இவற்றைக் கருதாத (மறுதலிக்கும்) பழமையான சமயங்களை நாத்திகச் சமயங்கள் என்றும் அவர்களே கூறலாயினர்.
வெளியிலிருந்து உள்நுழைந்து, வேள்விகள் வழித் தங்களை அந்நியப்படுத்தி கொண்ட ஆரியர்கள் இம்மண்ணிற்குப் பொருத்த-மில்லாதவைதிகக் கோட்பாடுகளை முன் மொழிந்தனர். அவற்றை வேதங்கள் மொழிந்ததாகவும் சொல்லி வைத்தனர். அக்காலங்களில் மன்னர்கள் போர் செய்து, அதில் தோற்றவர்களை அடிமைகளாக்கி வந்தனர். ஆனால், போர் எதுவும் செய்யாம-லேயே, சமுதாயத்தில் அனைத்து வகைத் தொழில் செய்பவர்களையும் அடிமைகளாக்கும் வைதிக முறையைக் கடவுள் பெயரால் ஆரியர்கள் முன்வைத்தபோது, அதை மன்னர்கள் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டனர். இதனால் ‘இரு பிறப்பாளர்’ என்னும் கோட்பாடு அரசாண்டது. பார்ப்பன இராஜகுரு விதிக்கப் படாத மன்னன் ஆனான். மற்றவர்க்கெல்லாம் ‘அடிமை வாழ்வே அறம்’ ஆனது. இந்த அதர்மத்தைத் ‘தர்மம்’ என்பதுதான் இந்து மதம்.
இரு பிறப்பாளர்களுக்கு அடிமைச் சேவகம் செய்வதே சூத்திரர்களுக்கும், தங்களை இந்துவாக என்னும் அவர்ணர்களுக்கும் ஆன தர்மம் ஆனது. தங்களை இந்துவாக எண்ணாத அவர்ணர்களை வேற்று மனிதர், வேற்று மதத்தினர், மிலேச்சர், எதிரிகள் என்றும், அவர்கள் மனிதர்களே அல்ல என்றும் பக்கம் பக்கமாகப் பல சாஸ்திரங்களில் பதிந்து வைத்துள்ளனர் வைதீக மதத்தினர். இவை எதுவும் தெரியாத அவர்ணர்கள், தங்களை இந்துவாக எண்ணிப் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். வைதிக சாஸ்திரங்களின்படி கீழ்நிலையில் வைக்கப்படும் ஆண்களின் நிலை பாதாளத்தில் என்றால், மகளிரின் நிலையோ அதலபாதாளத்தில். இரு பிறப்பாளர் என்ன, ஒரு பிறப்பாளராகக் கூட பெண்கள் மதிக்கப்படவே இல்லை. மனைவியோடு ஒன்றாக உணவருந்துதல் கூடக் குற்றம் என்கிறது ‘காஞ்சிபுராணம். இது சாதாரணம் தான். உள்ளே போகப்போக வைதிகம் மகளிரை விலங்குகளை விடவும் இழி நிலையில் வைத்திருக்கிறது. பாவயோனி என்று ஆபாச வசவுகள் வேறு.
“தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்” என்று பகவத் கீதை சொல்லும் வாசகங்களைக் கேட்க மயக்கமாகத்தான் இருக்கும். ஆனால், அதிலுள்ள சூழ்ச்சிகளைப் புரிந்துகொண்டால் நாம் இத்தனை ‘ஏமாளிகளா?’ என்று எண்ணத் தோன்றும். அந்த எண்ணத்தைத் தோற்று-விக்கும் முயற்சியே இனிய நண்பர் திரு செ.தி. ஞானகுரு அவர்கள் எழுதிய ‘அறியப்படாத இந்து மதம்’ என்னும் இந்நூலின் நோக்கம்.
எந்த ‘முன் முடிவும்’ இல்லாமல் இந்நூலை வாசிக்கவும் என்று எச்சரிக்கையுடன் தொடங்கும் திரு ஞானகுரு, தான் ‘இந்து’ என்பதை ஒருவன் ஒப்புக் கொண்டாலே அவன் மீது சுமத்தப்படும் இழிவுகளை மிக நாசுக்காக அல்ல, மிகப் பட்டவர்த்தனமாக, ஆணித்தர-மாக விளக்கியிருக்கிறார். அது ஏதோ அவராகவே இட்டுக்கட்டி எழுதியதாக இல்லாமல், இந்த இந்து மதத்தினை எந்த சாஸ்திரங்கள் கட்டமைத்தனவோ, அந்த சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள விளக்கங்-களைக் கொண்டே அவற்றை நிறுவியிருக்கிறார். அதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கும், பட்ட பாடுகளுக்கும் இந்த ‘இந்து’ சமுதாயமும், இந்துவல்லாத சமுதாயங்களும் அவருக்கு நன்றி உடையவர்-களாக ஆக வேண்டும். இந்து மதத்தை ஏற்பவர்களும், ஏற்க விரும்பாதவர்களும் இந்நூலை அவசியம் படிக்க வேண்டும்
. படிப்பது மட்டும் இல்லாமல், அதைப் புரிந்துகொள்ளும் ஞானமும் வேண்டும். அதைப் புரிந்து, போதிக்கும் ஞானம் கைவரப் பெற்றதனால்-தான் இந்நூலாசிரியர் ஞானகுருவாக ஆகியிருக்கிறார். ஒரு மனிதனுக்கு ஏற்படும் இழிவுகளையும், அதனால் ஏற்படும் துயரங்களையும் நீக்குபவர்தான் ஞானகுரு என்று சமய நூல்கள் கூறுகின்றன. இங்குக் கோடானு கோடி மக்கள் தங்கள் பிறப்பினால் ஏற்படும் இழிவுகளைப் போக்கிக்கொள்ள உபதேசிக்கும் நமது தோழர் செ.தி. ஞானகுரு, உண்மையிலேயே மாபெரும் ஞானகுருவாகப் போற்றப்படுவார் என நம்புகிறேன். அதை முன் மொழிவது போலவே இந்நூலின் அட்டைப்படம் அமைந்திருப்பதும் வெகு பொருத்தம்.
ஏதோ இந்து மதத்தில் நாம் அறியாத சில பக்கங்களை ஞானகுரு காண்பிக்கப் போகிறார் என்று உள்ளே நுழைந்தால், “இதய பலம் இல்லாதவர்கள் இதைப் படிக்க வேண்டாம்’ என்று எச்சரிக்கும் அளவில் அத்தனை திடுக்கிடும் செய்திகள் இதில் நிறைந்துள்ளன.
சூத்திரர்களையும், குதிரையையும் ஒன்றாகப் பார்க்கும் வன்மத்தின் பிறப்பிடமாகப் ‘புருஷசூக்தம்’ இருக்கிறது. மருத்துவம் பொதுவானதல்ல என்று ‘ஸுசுருத சம்ஹிதை’யும், கோயில்கள் பொதுவானவை அல்ல என்று ‘காமிகாகம’மும், இரு பிறப்பாளர் அல்லாதோர் வேதம் கேட்டால், ஓதினால், மனனம் செய்தால் என்ன விதமான கொடும் தண்டனைகள் என்பதை ஸ்ரீபாஷ்யமு’ம் விவரிக்கின்றன. ‘சம்புரோக்ஷணம்’ என்பதைக் கோவிலில் நடக்கும் ‘சிறப்பு அர்ச்சனை’ என்று நினைத்தது போக, அது தீட்டுக் கழிக்கும் சடங்கு என்பதை இராமானுஜரின் ‘ப்ரபத்தாம்ருதம்’ கூறுகிறது. அனைத்து பாவங்களுக்கும் பெண்களே ஆணிவேர் என்கிறது ‘உமா சம்ஹிதை’. சிவபுராணத்தில் பஞ்சசூடை என்னும் தேவலோகப் பெண் நாரதரிடம், “பெண்களின் இயல்பைப் பற்றிக் கூறுவதை காது கொடுத்துக் கேட்க முடியாது.
நாரதன் எப்படித்தான் கேட்டானோ? கேட்டுப் பிற தேவர்களுக்கும் சொல்கிறான்; இது மகாபாரதத்தில்! அந்த வாசகங்களைத் தமிழில் தர மனம் கூசுவதால் ஆங்கிலத்தில் தந்திருக்கிறார் நூலாசிரியர் ஞானகுரு. இன்னும் ஆதி சிவனின் படுகேவலமான லீலைகளை திருமூர்த்தி உண்மை’ கூறுகிறது. லிங்கங்களைக் கூட நான்கு வர்ணர்களுக்கும் தகுந்தாற் போல் விவரிக்கிறது ‘ஸ்ரீ காசியப சில்ப சாஸ்திரம்’ நூல். இப்படிப்பட்ட சிவனடியார்களுக்கு மட்டுமே சொர்க்கம் என்கிறது ‘தரும சம்ஹிதை’. கண்ணன் _ கோபியரின் ரசக் கிரீடைகளை ‘ஸ்ரீ கோபிகா கீதை’ விவரிக்கிறது. பேதம் இல்லை என்பதே பேதைமை என்பதை நிரூபிக்கிறது ‘பராசர ஸ்மிருதி’. மிருகபலி, நரபலிகளைப் புனிதமாக ஆக்குகிறது ‘யாகமும் வைதீக மதமும்’ நூல். இது தெய்வத்தின் குரல்’ ஆகவும் ஒலிக்கிறது. மண், மரம், கல், உலோகம் உள்ளிட்ட இறைவனின் அனைத்து விதப் படைப்புகளிலும் ஜாதி உண்டு என்று ‘பிராம்ஹீய சித்ரகர்ம சாஸ்திரம்’ கூறுகிறது. மந்திரம், ஏவல் போன்றதே அர்ச்சகம் என்பதை ‘காமிகாகமம்’ தெரிவிக்கிறது. இப்படியாக வைதிகத்தின் அனைத்து சூழ்ச்சிகளையும் அவர்களே வெளியிட்ட சான்றாதாரங்களோடு நிரூபிக்கிறார் நூலாசிரியர் ஞானகுரு.
இந்து மதச் சாத்திரங்களான ‘புருஷசூக்தம்’, ‘சம்ஹிதைகள்’, ஸ்ரீபாஷ்யம்’, ‘காமிகாகமம்’, ‘கிருக சூத்திரம்’, ‘சிவ புராணம்’, காஞ்சி புராணம்’ போன்ற நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட பழைய புராணங்களைத் தேடிப் பிடிப்பதே கடினம். பன்மொழிக் கலப்புள்ள அவற்றை வாசிப்பது அதைவிடக் கடினம். வாசித்ததைப் புரிந்து கொள்வது மிகமிகக் கடினம். புரிந்ததைக் கோவையாக்கிப் பிறருக்கும் விளங்க வைப்பது மகா கடினம். இக் கடினமான, கடுமையான பணியைத்தான் பல ஆண்டுகளாக அரிதின் முயன்று, அதன் பயனாகத் திரு ஞானகுரு இந்நூலை நமக்கு வழங்கியிருக்கிறார். இதன் விளக்கங்களைப் படிக்கும்போதே அவருடைய கடுமையான உழைப்பை நாம் அவதானிக்க முடியும்.
இந் நூலின் பல பகுதிகள் அவருடைய முகநூல் பதிவுகளாக முன்னரே வெளிவந்து, காரசாரமான விவாதங்களை ஏற்படுத்தி-யுள்ளன.
அப்போதே இது நூலாக்கம் பெற வேண்டும் என்று பல அன்பர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ‘இந்து’ என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ஒருவர் மீது, அவரது பிறப்பின் வழி ஏற்படுத்தப்படும் மிகக் கேவலமான அவமானங்கள்; மேலும், இரு பிறப்பாளன், ஒரு பிறப்பாளன், அதுவுமற்ற அவர்ணர்கள், இவர்கள் அனைவருக்குமான சமுதாயங்களுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் அனைத்துச் சமுதாய மகளிர், ஆகியோர் மீதும் சுமத்தப்படும் அக்கிரமத் தனமானதும், ஆபாசம் நிறைந்ததும், அருவருக்கத் தக்கதுமான பழி பாவங்களை அவர்கள் உணர்ந்து, தன்மானம் அடைய வேண்டும் என்பதே அவரின் இறுதி நோக்கமாக உள்ளதை இந்நூலைப் படிப்போர் அனைவரும் உணர முடியும்.
அவ்வகையில் பன்மொழி வல்லமை பெற்று, ஓர் இயக்கம் செய்திருக்க வேண்டிய பணியைத் தனி ஒருவராகச் செய்திருக்கிறார் _
திரு செ.தி.ஞானகுரு அவர்கள்.
மக்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தன்மான வாழ்வு வாழ வேண்டும் என்ற நோக்கில், ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்று பெரியோர்கள் நிறுவிய உண்மையை உணர வைத்திருக்கிறார் நூலாசிரியர். தன்னலம் கருதாமல் ஆற்றியிருக்கும் அவரது இப்பணி, தமிழர்களால் மட்டுமல்ல, இந்துக்களால் மட்டுமல்ல, மனித சமுதாயம் முழுமையாகவும் போற்றப்படும் என்பதில் அய்யமில்லை.
– முனைவர் சிவ இளங்கோ
புதுச்சேரி
(31.03.2022)
«««
அணிந்துரை
தமிழ்ச் சமூகத்தில் எப்போதெல்லாம் ஜாதி எதிர்ப்பு, வர்ணாசிரம எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு இவற்றை முன்னெடுக்கிறோமோ அப்போதெல்லாம் மக்களிடமிருந்து நாம் அதிகமும் எதிர்கொள்கிற கேள்விகளில் ஒன்று.
“இதுல என்ன தப்பு இருக்குங்க….’’
“என்னுடைய நம்பிக்கையை நான் பின்பற்றுகிறேன். இதனால் யாருக்கு என்ன பாதிப்பு’’ என்கிற சராசரி எண்ணம்தான் இதன் அடிப்படை. “எனக்கு ஜாதிமதவெறி எல்லாம் கிடையாதுங்க; சமூகத்துல யாருக்கும் தொந்தரவில்லாத ஒரு சாதாரணமான இந்துவா இருக்கேன், அவ்ளோதான். அதனால என்ன’’ இதுவே பெரும்பான்மை சமூகத்தின் நிலைப்பாடு.
நெருக்கமானவர்கள். அவர்கள் தவறே செய்தாலும் தண்டித்து விடக் கூடாது.
பார்ப்பனர்கள்தான் கல்வி கற்கவும் அதை உபதேசிக்கவும் தகுதியான ஒரு வர்ணத்தவர். மற்றவர்களுக்கு நிறைய விதிகள் உண்டு. அவர்ணர்களுக்கு அதுவும் கிடையாது.
பார்ப்பனர்களுக்கே உலகில் எங்கும் நுழைய அனுமதி உண்டு, யாரையும் கேள்வி கேட்கிற அதிகாரம் உண்டு.
இப்படி வேதங்களில் புராணங்களில் எதை எடுத்து ஆய்வு செய்தாலும் இந்த விஷயத்தையேதான் வேறு வேறு மாதிரி சொற்களை மாற்றிப் போட்டு ஜிலேபி ஜிலேபியாக எழுதி வைத்திருப்பார்கள். இந்தப் புனைவு புராணக் கதைகளிலும் கூட இதே விஷயம்தான் இடம்பெறும். புனைவு புராணக்கதைகளிலும் கூட இதே விஷயம்தான் இடம்பெறும். ஏன் எனில் இதை எழுதியவர்கள் எல்லோருமே பார்ப்பனர்கள். இதை இன்று வரை விடாப்பிடியாக வலியுறுத்துகிறவர்கள் பார்ப்பனர்கள்.
அவர்களுடைய பேனா நம் நலனுக்காகவா எழுதும்? அதனால்தான் மிகச் சிறுபான்மை-யினராக இருந்த போதும் ஆயிரம் ஆண்டுகளாக இங்கே நம் மண்ணில் அவர்களால் ஆதிக்கம் செலுத்த முடிந்திருக்கிறது.
பெரியாரின் வரவுக்குப் பின்பும் திராவிட இயக்க எழுச்சிக்குப் பிறகும் பார்ப்பனர்களின் பொய் புரட்டுகளுக்குச் சவுக்கடிகள் விழத்தொடங்கின. புராணப் புரட்டுகளை பெரியாரின் தொண்டர்கள் வீதிவீதியாக மக்களிடம் கொண்டு சேர்த்தனர். வேதங்களின் அருவருக்கத்தக்க பக்கங்களை அவர்கள் வெளிச்சமிட்டுக் காட்டினர். சமூகநீதி என்பதன் அவசியமும், நாம் யாருக்கும் கீழோர் அல்லர் என்கிற தெளிவும் மக்களுக்கு பிறக்கத் தொடங்கியதே கடந்த எழுபது ஆண்டுகளாகத்தான். அதில் திராவிட இயக்கத்தின் பங்கு மிகப் பெரியது. சூத்திரர்கள், அவர்ணர்கள், பெண்கள் எல்லாம் எத்தகைய அநீதிக்கு ஆளாகினர் என்கிற விழிப்புணர்வு பரவலானதே பெரியாரின் வருகைக்குப் பின்புதான்.
ஆனால் அண்மைக்காலத்தில் குறிப்பாக சமூகவலைதளங்களின் வருகைக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் மீண்டும் வேத விற்பன்னர்-களின் பொய் புரட்டுகளும் சல்ஜாப்புகளும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.
குறிப்பாக வாட்ஸ்அப், யூடியூப், ஃபேஸ்புக் முதலான தளங்களின் வழி இந்த மீள் கருத்தாக்கத்தினை ஆக்ரோஷமாகச் செய்யத் தொடங்கி இருக்கிறது இந்துத்துவ கும்பல். எதையெல்லாம் எரித்துச் சாம்பலாக்கி சமத்துவ சமூகத்தை உருவாக்க வேண்டும் என பெரியாரும் அவர்தம் தொண்டர்களும் கனவு கண்டார்களோ அதே புரட்டுகள் புதுவடிவம் பெற்றுள்ளன. இன்று இணையமெங்கும் மீண்டும் இந்துவிஷம் பரவலாகத் தொடங்கியுள்ளது.
வர்ணாஸிரம (அ)தர்மங்களை நியாயப் படுத்துவது அதிகரித்திருக்கிறது. வேதங்கள் நல்லது, அது மானுட குலத்துக்கே வரமாக அமைந்தது என்றும் ஏன் இந்து மதம் நல்ல மதம் என்றெல்லாம் எச்.ராஜா, எஸ்.வி.சேகர் வகையறாக்கள் தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான பொய்களைப் பரப்பவும் தொடங்கி இருக்கிறார்கள்.
இது முதல் பத்தியில் சொன்ன அந்த சாதாரண எளிய ‘ஃபீல் குட்’ இந்துக்களுக்கு வசதியான கருத்தியலாக இருக்கிறது. குற்றவுணர்வின்றி தங்களுடைய மதத்தினைப் பின்பற்ற உதவுகிறது. ஜாதி அடையாளத்தைத் தாங்கிக் கொள்ள வசதி செய்கிறது. திராவிட இயக்கங்கள் போராடி உருவாக்கிய கருத்தியல்களை இந்தப் புரட்டுகள் உடைக்க உதவுகின்றன.
ஜாதிய இழிவு என்பதே வெள்ளையர் காலத்தில்தான் வந்தது, அதற்கு முன்னால் இந்தியாவில் பாகுபாடே கிடையாது, இங்கே பொன்னுலகம் இருந்தது என்றெல்லாம் பேசத்தொடங்கிவிட்டார்கள்.
இன்னொரு பக்கம் ஜக்கி வாசுதேவ், ஸ்ரீஸ்ரீ மாதிரியான சாமியார்கள் ஆன்மிக வியாபாரத்திற்கு இந்து மத வேதங்களை, சமஸ்கிருத ஸ்லோகங்களை பண்டங்களாக மாற்றி அதை முன்னிறுத்தி பிஸினஸில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கி இருக்கிறார்கள். பாஜக மாதிரியான கட்சிகள் இந்தியாவை இந்து மதப் புரட்டுகளின் வழிதான் எட்டு ஆண்டுகளாக வலுவான மக்கள் ஆதரவோடு ஆண்டுகொண்டிருக்கிறது. எவ்வித வளர்ச்சியும் பெறாத உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று முறை மீண்டும் மீண்டும் ஆட்சி அமைக்க முடிகிறது. இதற்குப் பின்னால் இருப்பது நம்முடைய மதவாதம் என்னும் மாயை.
உத்தரப்பிரதேச ஆபத்து தமிழ்நாட்டையும் கூட நெருங்கிவிட்டது. இங்கே நேரடியான ஆர்எஸ்எஸ் அஜென்டாக்களை நிறைவேற்ற முடியாவிட்டாலும், இங்கேயும் யோகா கற்றுத்தருகிறோம், பக்தி இலக்கியம் பயிற்றுவிக்கிறோம், ஒழுக்கம் போதிக்கிறோம் என்று பள்ளிக் குழந்தைகளை, அடுத்த தலைமுறையினரை மூளைச்சலவை செய்ய முயல்கிறார்கள். நம் எதிர்கால சந்ததியினரை மதவெறியர்களாக மாற்றுகிற புறவாசல் வழிகளை எல்லாம் தேடித் தேடித் திறக்கின்றன இந்துத்வ சங்கி கும்பல். இது நாம் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம். பெரியார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொண்ட ஒரு சமூக நீதிப் புரட்சியை மீண்டும் அறிவின் துணைகொண்டு மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இன்று தமிழ்நாடு பாஜக அரசின் மூலமாக எதிர்கொள்கிற அத்தனை சவால்களுக்குப் பின்னாலும் அத்தனை நெருக்கடிகளுக்குப் பின்னாலும் ஒளிந்திருப்பது இந்த சனாதன அதர்மங்களும் பார்ப்பன வேதங்களும் உருவாக்கி இருக்கிற கருத்தியல்தான். நீட் தேர்வு மாதிரியான விஷயங்கள் ஏன் கொண்டு வரப்படுகின்றன. ஏன் நமக்குக் கல்வி மறுக்கப்படுகிறது. ஏன் ஒன்றிய அரசு கல்வியைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப் பார்க்கிறது, ஏன் கோயில்களை அரசிடமிருந்து கைப்பற்றி மீண்டும் பார்ப்பனர்களிடம் ஒப்படைக்கத் துடிக்கிறார்-கள் என்கிற பல கேள்விகளுக்கும் விடை இந்தப் பார்ப்பன வேதங்களில் இருக்கிறது. இத்தகைய வேதங்களை எல்லாம் படித்து ஆராய்ந்து அந்த ஆதாரங்களை எல்லாம் தேடித்தேடி தொகுத்திருக்கிறார் செ.தி. ஞானகுரு.
இந்த நூலை இன்றைய சனாதன மதவாதிகளுக்கு எதிரான ஆயுதமாகவே பார்க்கிறேன். இது இந்து மதம் என்கிற கோட்பாடு எத்தனை தந்திரமானது, அது எப்படி ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே ஒட்டு மொத்த அதிகாரத்தையும் வழங்கி நம்மை அடிமைப் படுத்துகிற ஒன்றாக இருக்கிறது என்பதை மற்றோருக்கு விளக்கவும், விளங்கிக் கொள்ளவுமான ஒரு Perfect Ready reckoner. இதன் ஒவ்வொரு பக்கங்களிலும் இருப்பது ஆய்வுபூர்வமான ஆதாரங்கள். ஆன்மிகத்தின் பேரால் நடக்கிற அத்தனை அநீதிகளுக்கும் எதிரான வெடிகுண்டுகளாகவே இருக்கின்றன. ஞானகுருவின் எழுத்துகள் நம்முடைய பல உள்ளார்ந்த நம்பிக்கைகளைச் சிதறடிக்கின்றன.
ஞானகுரு செய்திருப்பதெல்லாம் வேத நூல்களிலும் மற்ற பக்தி இலக்கிய, புராண நூல்களில் இருப்பதை எல்லாம் உள்ளது உள்ள படியே கொடுத்ததுதான். “இங்கே பாரப்பா நீ நினைப்பது போல இல்லை, இந்த விஷயத்தில் நீ சொல்கிற சாஸ்திரத்திலேயே என்ன போட்டிருக்கிறது பார்த்தாயா’’ என்று உண்மைகளை அடுக்குகிறார்.
ஞானகுரு சுட்டிக்காட்டுகிற அத்தனையும் எந்த அலங்காரம் பூச்சுகளுமற்ற உண்மைகள்.
நம் கோயில்களில் நாம் நுழைய நாமே காசும் கொடுத்து, நாம் போய் வந்ததற்கான தீட்டுக் கழித்தலுக்கும் நம்மிடமே கட்டணம் வசூலிக்கிற பார்ப்பன அயோக்கியத்தனங்களை எல்லாம் பட்டவர்த்தனமாக வெளிப் படுத்துகிறார். பெண்களுக்கு எதிரான அநீதிகளை, அவர்ணர்களுக்கு நிகழ்ந்த _ நிகழ்ந்து கொண்டிருக்கிற புறக்கணிப்புகளை எல்லாம் பட்டியலிடுகிறார். வேதங்களின் பேரால் சமஸ்கிருத மந்திரங்களின் பேரால் நம் மூளையை மழுங்கடித்துக் கொண்டிருந்த பல மூடநம்பிக்கைகளை உடைத்தெறிகிறது ஞான குருவின் எழுத்து. மருத்துவத்துறையில் அய்.அய்.டி மாதிரியான உயர்கல்வி நிறுவனங்-களில் நிகழும் வன்முறைகளுக்கான காரணங்-களை வேதங்களில் கண்டறிந்து தருகிறார். சனாதனம்தான்ங்க ஆபத்து சைவம் நல்லதுங்க, பெரிய புராணம் படிங்க என்று சொல்கிறவர்-களுக்கும் சவுக்கடிகளைத் தரத் தவறவில்லை. இலங்கையிலும் கூட எப்படி பார்ப்பனப் புரட்டுகளும் சமஸ்கிருத ஆதிக்கமும் உண்டானது என்பதையும் ஆராய்கிறது.
இந்த சாஸ்திரங்களும் வேதங்களும் புராணங்களும் உபநிடதங்களும் மனிதர்களை எப்படியெல்லாம் கூறுபோட்டுக் கீழ்மைப்-படுத்தின என்பதை மெனக்கெட்டு தேடித்-தேடித் தொகுத்திருக்கிறார். இதில் வருவன எல்லாமே இந்து மதம் குறித்து நாம் இதுவரை அறிந்த தகவல்தான். ஆனால் அதில் “இதுல என்ன தப்பு இருக்கு” மாதிரி விஷயங்கள் அத்தனைக்கும் இந்நூலில் பதில் தருகிறார். கூடவே இந்து மதம் மனிதர்களை மட்டுமல்ல; மண், மரம், உலோகங்களைக் கூட எப்படியெல்லாம் பிரித்துப் பார்க்கிறது என்பதை விளக்குகிறார். மன்னர்கள் கட்டிய கோயில்கள் எதுவுமே பொதுமக்களுக்காகக் கட்டப் படவில்லை என்கிற அதிர்ச்சியான விஷயத்தையும் வெளிப்படுத்துகிறார்.
இன்றைய தேதியில் வேதத்தில் இப்படி மோசமாகப் போட்டிருக்கிறதே இதற்கு என்ன சொல்ற என்று ஆத்திகர்களிடம் சும்மா கேட்க முடியாது. உடனே ஆதாரம் கொடு என்று நிற்பார்கள். இல்லாத கடவுளோடு உரையாடுகிறேன், அர்ச்சனை பண்ணுகிறேன் என்று ஏமாற்றிப் பணம் பறிக்கிறவர்களிடம் ஒருநாளும் இவர்கள் இப்படிக் கேட்பதில்லை. ஆனால் “தம்பி இவர்கள் உன்னை வஞ்சிக்கிறார்கள், இவர்கள் உன்னைச் சூத்திரன் என்று கீழ்மைப்படுத்துகிறார்கள்’’ என்று சொன்னால் ஆதாரம் கேட்பார்கள். அத்தகை-யோருக்காகவே தொடர்புடைய நூல்களின் பக்கங்களையெல்லாம் மின்-அச்செடுத்து கட்டுரைகளோடு இணைத்துக் கொடுத்திருப்பது மிக நல்ல முயற்சி. இந்தப் பக்கங்களைக் கொண்டே புரட்டாளர்களின் முகத்தில் ஆதாரங்களால் அடிக்கலாம்.
ஒவ்வொரு பக்கத்திலும் சொல்லிலும் அவருடைய உழைப்பு வெளிப்படுகிறது. இந்நூலை வாசிப்பதற்கே பெரிய உழைப்பு தேவைப்படும்போது இதனைத் தொகுக்க இவர் எத்தகைய உழைப்பைச் செலுத்தி இருப்பார் என்கிற மலைப்பு நமக்கும் வந்துவிடுகிறது. ஆனால், அந்த உழைப்பு அடுத்த தலை-முறையை இந்துத்துவ ஆதிக்கத்திலிருந்து மீட்கவேண்டும் என்கிற சீரிய எண்ணத்தி-லிருந்து உருவானது என்பதை இந்நூலை வாசிக்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது.
இதை மிகுந்த முனைப்போடு எழுதித் தொகுத்திருக்கிற செ.தி.ஞானகுரு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.
மிகுந்த அன்புடன்,
– அதிஷா