ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற
மாற்றுத் திறனாளி பெண்!
ஒவ்வொரு பெண்களுக்குள்ளும் அவர்களுக்-கான தனித் திறமை ஒளிந்திருக்கும், அதனைக் கண்டடைந்து பட்டை தீட்டுபவர்கள் உலகில் சாதனையாளராக விளங்கினார்கள். அப்படி பார்வைத் திறன் அற்ற பெண் மாற்றுத் திறனாளிக்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வென்று தந்து சாதனை படைத்துள்ளார் ரக்ஷிதா ராஜு. அவரது வெற்றிப் பயணத்தைப் பார்க்கையில்,
கருநாடகா மாநிலத்தில் இருக்கும் சிக்மகளூர் என்னும் சிறிய நகரம்தான் இவரது சொந்த ஊர். பார்வை மட்டுமா அவருக்கு இல்லாமல் போனது? சிறு வயதிலேயே அவருடைய பெற்றோரும் இறந்துவிட்டனர். காது கேட்காத வாய் பேச இயலாத பாட்டியிடம்தான் ரக்ஷிதா வளர்ந்திருக்கிறார்.
ஆஷாகிரணா பார்வையற்றோர் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, அவருக்கு உடற்பயிற்சி ஆசிரியராக இருந்தவர் ரக்ஷிதாவை தேசிய அளவில் நடைபெறும் ஓட்டப் பந்தயங்களில் கலந்துகொள்ள அழைத்துச் செல்வார். அங்கேதான் ரக்ஷிதா தன்னுடைய இப்போதைய கைடான சவும்யாவைச் சந்தித்திருக்கிறார். சவும்யா, ராகுல் பாலகிருஷ்ணா என்னும் பயிற்சியாளரிடம் அறிமுகப்படுத்தினார்.
ராகுல் அவரை பெங்களூருவில் இருக்கும் ஸ்போர்ட்ஸ் அத்தாரிடி ஆஃப் இந்தியாவில் சேர்த்துப் பயிற்சியளித்தார். 2017ஆம் ஆண்டில் யூத் ஏஷியன் பாராகேம்ஸ் பந்தயங்களில் கலந்துகொள்ளத் தேர்வான ரக்ஷிதாவால் அப்போட்டிகளில் கலந்துகொள்ள இயலவில்லை. காரணம், கடவுச்சீட்டு வாங்குவதில் சிக்கல். ஆனால், அடுத்த ஆண்டே ஏஷியன் பாரா கேம்ஸ் பந்தயங்களில் கலந்துகொண்டு 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் (ஜி11) தங்கப் பதக்கம் வென்றார். அவர் சார்ந்த பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்கிற பெருமையும் அவருக்குக் கிடைத்தது. அந்தப் பந்தயத்தில் வெல்ல அவர் எடுத்துக்கொண்ட நேரம் 5 நிமிடங்கள் 40.64 விநாடிகள் மட்டுமே!
ரக்ஷிதாவின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும், லட்சியத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற தாகமும் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தன. அதன் பிறகு அவரது தடகள வாழ்வில் ஏறுமுகம்தான்! 2019ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற உலக பாரா அத்லெடிக்ஸ் கிராண்ட் ப்ரிக்ஸ் பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் 2019ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நோட் வில்லில் நடைபெற்ற உலக பாரா அத்லெடிக்ஸ் ஜூனியர் சாம்பியன்ஷிப் 1,500 மற்றும் 800 மீட்டர் பந்தயங்களில் தங்கப் பதக்கமும் வென்றார்.
தனக்கு உரிய அங்கீகாரம் கருநாடகா மாநில அரசிடம் இருந்து கிடைக்கப் பெறவில்லை என்கிற ஆதங்கம் ரக்ஷிதாவுக்கு இருக்கிறது. “எனக்கு இன்னும் கூடுதலாகப் பொருளாதார வசதிகள் கிடைத்தால் கொஞ்சம் நல்லபடியாக வாழ்க்கையை நடத்துவேன்’’ என்று ஒரு நேர்காணலில் தெரிவிக்கிறார் ரக்ஷிதா. தனக்குக் கிடைத்த ரொக்கப் பரிசுகளை வங்கி இருப்பில் வைத்து, அதில் வரும் வட்டியில் வாழ்க்கையை நடத்துவதாகத் தெரிவிக்கிறார்.
இவருக்கு மாநில அரசில் பணி கிடைத்தால் அது பேருதவியாக இருக்கும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.
பார்வைத்திறன் இல்லையென்றாலும் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடுமையான பயிற்சி, அர்ப்பணிப்பு ஆகியவை ரக்ஷிதா ராஜுவுக்குப் பல வெற்றிகளைத் தந்திருக்கின்றன. தொடர் முயற்சிகள் ஒருவருக்கு வெற்றியை நிச்சயம் தரும் என்பதற்கு நம் முன்னே நிற்கும் ரக்ஷிதா ராஜு உண்மையான சான்றாவார்.