மஞ்சை வசந்தன்
தமிழர் வேலைவாய்ப்புப் பறிப்பும், இந்தித் திணிப்பும் மத்திய அரசு தொடர்ந்து செய்துவரும் செயல் என்றாலும், பாஜக.வின் கடந்த எட்டு ஆண்டு ஆட்சிக் காலத்தில், இவை ஆர்.எஸ்.எஸ். அஜண்டாபடி செயல் திட்டமாகவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, முன் எப்போதையும்விட விழிப்-போடும், எழுச்சியோடும் இச்சதியை தமிழர்கள் முறியடித்தாக வேண்டும். இல்லையேல் தமிழர்களின் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்-படும். அரசியல் வேறுபாடு கடந்து தமிழர் என்ற உணர்வில் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.
தமிழர் வேலை வாய்ப்புகள் பறிப்பும் வடமாநிலத்தார் நுழைப்பும்!
தமிழ்நாட்டில் உள்ள வேலை வாய்ப்புகளை வட மாநிலத்தவர் அதிக அளவில் பறித்து வருகிறார்கள். குறிப்பாக டெல்லி, உத்தரப்பிரதேசம், இராஜஸ்தான், அரியானா மாநிலத்தவர்கள் அதிக அளவில் ஒன்றிய அரசுத் துறைகளில் நுழைக்கப்பட்டு வருகிறார்கள்.
பாரதிய ஜனதா கட்சி, தனது தேர்தல் அறிக்கையில் வட மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டில் வேலை பார்ப்போருக்குக் குடியிருப்புகள் கட்டித் தரப் போவதாக தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உறுதி கூறி, அந்தத் தமிழர்களிடமே துணிந்து வாக்கு கேட்டது தமிழர்களுக்கு விடப்பட்ட சவால் என்பதை மறந்துவிடக் கூடாது.
2002 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் திருச்சி – திருவெறும்பூர் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் 138 பொறியாளர்கள் நியமிக்கப்-பட்டனர். இதில் தமிழ்நாட்டைச் சார்ந்த ஒருவர்கூட இல்லை. 2008ஆம் ஆண்டு 77 செயற் பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்-பட்டன. இதில் 17 பேர் மட்டுமே தமிழர்கள்.
2008ஆம் ஆண்டு சென்னை வருமான வரித் துறை அலுவலகத்தில் 200 உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதில் 4 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 2014இல் இதே அலுவலகத்தில் 78 பணியிடங்கள் நிரப்பப்பட்டன தமிழ்நாட்டைச் சார்ந்த 3 பேருக்கு மட்டுமே வேலை.
2012ஆம் ஆண்டு சென்னை இரயில்வே மண்டலம் 884 காலிப் பணியிடங்களை நிரப்பியது. இதில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்-கள் 80 பேர் மட்டுமே.
ஆவடி கனரக வாகனங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் 100 சார்ஜ்மேன் பணியிடங்கள் நிரப்பப்பட்டபோது தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு 15 பேருக்கு மட்டுமே வாய்ப்பு. இதே நிறுவனம் 2011ஆம் ஆண்டு 108 பயிற்சியாளர் பணிக்கு ஆள் சேர்த்தபோது தமிழ்நாட்டைச் சார்ந்த 15 பேருக்கு மட்டுமே வாய்ப்பு.
திருச்சி, பொன்மலை தொடர் வண்டிப் பணிமனையில் 58 பணியிடங்கள் நிரப்பப்-பட்டன. இதில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் 12 பேர் மட்டுமே.
2018ஆம் ஆண்டு இரயில்வே வேலை வாய்ப்பு அமைப்பு வழியாக ‘குரூப் -டி’ பணிக்காக 2362 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் 74 பேர் மட்டுமே.
மோசடியும் ஆள் மாறாட்டமும்
2015இல் கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வுக் கூடப் பணியாளர்கள் பணியிடங்களை நிரப்பிய போது இரசாயன ஆய்வுக்கூடப் படிப்பை முடித்திருப்பது கட்டாயம் என்று அறிவித்தார்-கள். ஆனால், இப்படிப்பு தமிழ் நாட்டில் எந்தப் பல்கலைக்கழகத்திலும் இல்லை.என்பதால் வட இந்தியர்களைக் கொண்டு நிரப்பி விட்டார்கள்.
மோசடிகள் செய்தும் வடநாட்டுக்காரர்கள் தமிழ்நாட்டு வேலைகளை அபகரித்து வருகின்றனர்.. 2016ஆம் ஆண்டு அஞ்சலகத் துறை வேலை வாய்ப்புகளுக்கான தேர்வை நடத்தியது. இதில் வடநாட்டுக்காரர்கள் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றது அம்பலமானது.
தமிழ் மொழியே தெரியாத ஒரு ராஜஸ்தான்காரர் தமிழ்மொழிப் பாடத் தேர்வில் 25க்கு 24 மதிப்பெண் பெற்றது கண்டறியப்-பட்டு, ஆள் மாறாட்ட மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. பிறகு இந்தத் தேர்வு செல்லாது என மறுக்கப்பட்டது.
பிகார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் தமிழர்களை விட அதிக மதிப்பெண்கள் நுழைவுத்தேர்வுகளில் பெறுகிறார்-கள் என ஒரு பொய்யான காரணம் கூறப்படுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல. அம்மாநிலங்களில் நிலவும் அளவுக்கதிகமான வேலைவாய்ப்பின்மையைப் பயன்படுத்திக்கொண்டு லக்னோ, பாட்னா, கோட்டா (ராஜஸ்தான்) மற்றும் சிறு நகரங்களிலுள்ள பயிற்சி நிறுவனங்கள் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு ஆணையத்திலுள்ள அதிகாரிகளையும், ஊழியர்களையும் தம் வசம் வளைத்து குறுக்கு வழியில் மோசடி செய்து வருகின்றன.
நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள்களைத் தேர்வுக்கு முன்னரே வெளியிட்டு விடுவது, தேர்வு நடைபெறும் மய்யங்களில் தேர்வு எழுதுபவர்களுக்குக் கால அளவைக் கூடுதலாக அளிப்பது, பணி நியமனத்திற்குப் பணம் அளித்தவர்களை ஒரு குறிப்பிட்ட மய்யங்களில் மட்டுமே தேர்வெழுத வைத்து அவர்களுக்கு வினாக்களின் விடையை அளித்து, தேர்வில் தேர்ச்சி பெற வைப்பது எனப் பல முறைகேடுகளை இப்பயிற்சி நிறுவனங்கள் அரங்கேற்றியுள்ளன. இதற்குச் சாட்சியாக ஒரே தேர்வு மய்யத்தில் தேர்வெழுதிய பலர், ஒரே வீதியைச் சேர்ந்த பலர் பிகாரிலிருந்தும், உத்தரப்பிரதேசத்தி-லிருந்தும் முறைகேடாகத் தேர்ந்தெடுக்கப்-பட்டு தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசுத் துறைகளில் இன்றும் பணியாற்றி வருகின்றனர்.
மோசடித்தனத்திற்கு ஓர் உதாரணமாக பல்வேறு பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட CGLE & 2013 (Combined Graduate Level Examination & 2013) தேர்வுகளின் முடிவுகள் பிகாரிலுள்ள 7 மய்யங்களின் வினாத்தாள்கள் வெளியானதால் ஓர் ஆண்டிற்கு முடிவுகள் அறிவிக்கப் படாமல் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. இத்தேர்வெழுதிய பலர் நீதிமன்றத்தை அணுகியதால் முறை கேடுகளை விசாரித்த நீதிமன்றம் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட இத்தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டு ஏப்ரல் 2014இல் இத்தேர்வுகள் மீண்டும் நடத்தப்பட்டன என்பதே இதற்கு முன்னர் எவ்வளவு முறைகேடு-கள் வெளிச்சத்துக்கு வராமல் போயிருக்கும் என்பதற்குச் சாட்சி. இத்தேர்விலும் முறைகேடுகள் நடந்து 2015ஆம் ஆண்டில் மூன்று பேர் காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
2017இல் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் பாலிடெக்னிக்குகளில் விரிவுரையாளர் நியமனத்தின்போது தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பணியாற்றுவோருக்கு முக்கியத்துவம் தராமல் 31 சதவிகித இடங்கள் பிற மாநிலத்தவருக்கு வழங்கப்பட்டது.
இதில் 1068 பணியிடங்களில் 68 சதவிகிதம் பேர் வடமாநிலங்களிலிருந்து நியமிக்கப்-பட்டனர். இதை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டதன் விளைவாய் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
2019ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின் வாரியத்தில் 300 உதவிப் பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதில் பணியமர்த்தப்பட்டவர்களில் 39 பேர் வடமாநிலத்தவர். இவர்களுக்குத் தமிழே தெரியாது; என்றாலும் நியமிக்கப்பட்டனர்.
அதி.மு.க. அரசின் துரோகம்
2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம், தமிழ்நாடு தேர்வாணையத்தில், தமிழர்கள் உரிமையைப் பறிக்கக்கூடிய ஆபத்தான ஒரு திருத்தத்தை ஓசைப் படாமல் கொண்டு வந்தார்.
தமிழ் தெரியாதவர்களும் தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதே அந்தத் திருத்தம். இதைப் பயன்படுத்தி, தமிழ்நாடு அரசுப் பணிகளிலும் வட-நாட்டுக்காரர்-கள் நுழைந்து விட்டார்கள்.
அரசுடைமை வங்கிகளில் தமிழர் புறக்கணிப்பு!
1. அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் கிளார்க் பணிகளில் மாநில மொழி அறிந்தவர்களுக்கு முன்னுரிமை என்று கூறிவிட்டு, தமிழ் மொழி தெரியாத வெளி மாநிலத்தவர் நியமிக்கப்படும் அவலம் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2018-இல் 1277 கிளார்க் பதவிகளில் 200 பேர் வெளி மாநிலத்தவர். அதாவது 16 சதவிகிதம். ஒவ்வொர் ஆண்டும் வெளி மாநிலத்தவர் சதவிகிதம் அதிகமாகி, நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் பணி நியமனம் பெற்ற 843 கிளார்க்குகளில், 50 சதவிகிதம் வெளி மாநிலத்தவர் என்கிற தகவல் கிடைத்துள்ளது.
2. 2019-ஆம் ஆண்டில், அன்றைய அதிமுக ஆட்சியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தில் உதவி மின்பொறியாளர் பணிக்குத் தேர்வு செய்யப்-பட்ட 300 பேரில், 36 பேர் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். மொத்தப் பணியிடத்தில் பிறமாநிலத்தவர்கள் சுமார் 12 சதவிகிதம் ஆக்கிரமித்துள்ளதை அறிந்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
3. 2013 முதல் 2016 வரை ஒன்றிய அரசு தேர்வாணையத்தில் உருவாக்கப்பட்ட பணியிடங்களில் தமிழ்நாட்டில் பணிகளில் அமர்த்தப்பட்ட வடநாட்டுக்காரர்கள் எவ்வளவு பேர் தெரியுமா? 1988 பணிகளில் தமிழர்களுக்குக் கிடைத்தது 110 பணிகள் மட்டுமே (6 சதவிகிதம்).
4. திருச்சியில் உள்ள பொன்மலை இரயில்வே பணி மனையில் தொழிற்பயிற்சி பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்ட 1,765 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 165 பேர் மட்டுமே. மீதமுள்ள 1,600 பேர் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் (‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ – 12.3.2019).
5. திருச்சிராப்பள்ளியில் உள்ள பொன்மலை இரயில்வே பணிமனையில் 581 டெக்னீஷியன் பணியிடங்கள் நிரப்பப்பட்டபோது, தமிழ்நாட்டில் இருந்து 12 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். மற்றவர்கள் பிகார் அல்லது ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள்.
இரயில்வே துறையிலும் பழிவாங்கப் பட்டுள்ளோம்
6. 2012இல் சென்னை இரயில்வே மண்டலத்தில் 884 காலி பணியிடங்களுக்கு இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்ஆர்பி) நடத்திய வேலைவாய்ப்பு இயக்கத்தில் 80 தமிழர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். 2013 ஆம் ஆண்டில், குரூப் ‘-டி’ பணிகளுக்கு பணியாளர்களை நியமிக்கும் இரயில்வே ஆட்சேர்ப்புப் பிரிவு (ஆர்ஆர்சி) 2,361 காலியிடங்களை நிரப்பியபோது, அது 74 தமிழர்களை மட்டுமே தேர்வு செய்தது.
7. 2002 மற்றும் 2005 க்கு இடையில், திருச்சிராப்பள்ளியின் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) 138 பொறியாளர்களைத் தேர்ந்தெடுத்தது, அதில் ஒரு வேட்பாளர் கூட தமிழ்நாட்டிலிருந்து இல்லை. 2008இல், 77 செயற்பொறியாளர்-களைத் தேர்வு செய்த போது, 17 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
8. சென்னையில் உள்ள வருமான வரி அலுவலகம் 2008இல் 200 உதவியாளர்களை நியமித்தது; நான்கு பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 2014இல் 78 காலியிடங்களை நிரப்பிய போது மூன்று பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
9. ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற் சாலையில் தேர்வு செய்யப்பட்ட 100 சார்ஜ்மேன்களில் 15 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 2011 இல், 108 பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுத்தது, அதில் 15 பேர் மட்டுமே தமிழர்கள்.
10. பிகார் – ராஜஸ்தான் மாநிலங்களின் பயிற்சி நிறுவனங்கள் ஒன்றிய தேர்வாணை-யத்திடம் ‘கள்ளக் கூட்டு’ வைத்துத் தமிழ்நாட்டுக்குள் முறைகேடாக வடநாட்டுக்-காரர்-களை வேலைகளில் திணித்ததை மறக்க முடியுமா? – இப்படி முறைகேடாக சென்னை வருமான வரித் துறையில் வேலைக்கு வந்த 3 வடநாட்டுக்காரர்கள் கண்டறியப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
11.2014ஆம் ஆண்டு ஒன்றிய தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் வட மாநிலத்துக்காரர்கள் இலஞ்சம் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்றது கண்டறியப்பட்டு, பிறகு தேர்வே ரத்து செய்யப்பட்டது.
அஞ்சல் துறையையும் விட்டு வைக்கவில்லை
12. அஞ்சல் துறையையும் விட்டு வைக்க-வில்லை. கடைநிலை ஊழியர்களுக்கான தேர்வுகளை அந்தந்த மாநில அரசுகளே நடத்தி மாநில மக்களுக்கு வேலை வழங்கி வந்தன. அதையும் அகில இந்தியத் தேர்வாக மாற்றியது மோடி ஆட்சி. அதனால் தமிழ்நாட்டு அஞ்சல் துறையில் வடநாட்டுக்காரர்கள், குவிந்தார்கள். தமிழே தெரியாத வடநாட்டுக்காரர்கள் கடுமையான தமிழ்மொழிக்கான தேர்வில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களைவிட கூடுதல் மதிப்பெண் பெற்றார்கள். பிறகு நடந்த மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பிறகு அந்தத் தேர்வும் ரத்து செய்யப்பட்டது.
13. 2011-ஆம் ஆண்டில் நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 44,00,000 பேர் பிற மாநிலத்தவர்கள் எனக் கணக்கிடப் பட்டிருக்கிறது. தற்போது, கிட்டத்தட்ட ஒரு கோடிப் பேராவது வெளி மாநிலத்தவர்கள் இருப்பார்கள். குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் வெளி மாநிலத்தவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். தவிர, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 10,000 பேர் வெளி மாநிலத்தவர்கள் இருக்கிறார்கள். வேலை வாய்ப்புகள் பறிபோவது மட்டுமல்லாமல், தேர்தல்களிலும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்திகளாகவும் அவர்கள்தான் இருக்கிறார்கள்.
“எமது இளைஞர்கள் _ படித்து வேலை கிட்டாமல் தற்கொலை முதல் – மன அழுத்தம், வேதனை காரணமாக, வேறு மார்க்கம் தெரியாமல் போதைப் பொருள்களுக்கு திசை தடுமாறி, ஆளாகி இளமை வாழ்வைப் பாழடித்துக் கொள்வதும், சிலர் கொள்ளை யடித்தும், கொலைகளில் கூட சில நேரங்களில் ஈடுபடும் அவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கேற்ப ‘கூலிப் பட்டாள’த் தொழிலுக்கு இரையாகியும் வருகிற கொடுமையை நினைத்தால் நெஞ்சு பதறுகிறது; நம் இரத்தம் கொதிக்கிறது!
இவை அத்துணைக் கொடுமைகளுக்கும் காரணம் ஒன்றிய அரசும், அதனிடம் தன்னை மீட்டுக் கொள்ளத் தெரியாது, தயவை எதிர்பார்த்தே காலந்தள்ளிய முந்தைய அடமான அரசுமே காரணமாகும்!’’ என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூறியுள்ளதை ஒவ்வொருவரும் கருத்தில் கொள்ள வேண்டும்; களத்தில் வெல்ல வேண்டும்.
இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!
“தி பீப்பிள்ஸ் லிங்விஸ்டிக்ஸ் சர்வே ஆப் இந்தியா’’வின் முதன்மை ஆசிரியர் பேராசிரியர் ஜி.என்.தேவி அவர்கள் இந்தித் திணிப்பைப் பற்றி மிகத் தெளிவாக கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“இந்திய அரசமைப்புச் சட்டமானது இரு விஷயங்களை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது: முதலாவது, இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்பு என்கிறது. இரண்டாவது, அரசமைப்புச் சட்டத்தை நாடு ஏற்றுக்கொள்ளும்போது மாநிலங்கள் இடையே தகவல் தொடர்புக்கென அதிகாரப்பூர்வமாக இருந்த மொழியே அவற்றுக்கிடையேயான தொடர்பு மொழியாகத் தொடரும் என்பதாகும்.
மாநிலங்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மாறலாம் என மொழிகள் தொடர்பான சட்டப் பிரிவுகள் தெளிவாகக் கூறுகின்றன. சட்டப் பிரிவு 344 (4)இல் மொழி தொடர்பான சட்டங்களை மேற்பார்வையிட 30 உறுப்பினர்கள் (20 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 10 மாநில சட்டமன்ற உறுப்பினர்களும்) கொண்ட குழுவை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொழி தொடர்பான விஷயங்கள் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகம் ஆகிய இரண்டு அமைச்சகங்களால் கையாளப்படும் என வரையறுக்கப்பட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பொறுப்பு கல்வி, கலாச்சாரம் ஆகியவை தொடர்பானது. மத்திய-மாநில உறவைப் பாதுகாப்பது, மொழிவாரிச் சிறுபான்மையினரது மொழி உரிமைகளைப் பாதுகாப்பது, இந்தி மொழியைப் பரப்புவது ஆகியவை உள்துறை அமைச்சகத்தின் பொறுப்புகள். மற்ற மொழிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இந்தியைப் பரப்ப வேண்டும் என்றும் அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிட்டுள்ளது.
ஏனைய மொழிகளை விழுங்கும் இந்தி
அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்-பட்டுள்ள விஷயங்களின் பின்னணியில் மத்திய உள்துறை அமைச்சகமும் இந்தி மொழிக் குழுவும் இரண்டு முக்கியமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும்: ‘கடந்த எழுபது ஆண்டுகளில் இந்தி சிறிதாவது வளர்ச்சியைக் கண்டுள்ளதா? அப்படி வளர்ச்சி இருந்திருந்தால், பிற மொழிகளின் வளர்ச்சியைத் தடுத்து அது வளர்ந்ததா?’
மக்கள்தொகைக் கணக்கெடுப்பைச் சற்று அலசினால் சுவாரசியமான விஷயங்கள் வெளிவரும். 2011இல் மொத்த மக்கள்தொகை-யில் 43.63% (52.83 கோடிப் பேர்) இந்தி மொழி பேசுவோராக இருந்தனர். 1971இல் இது வெறும் 20.27 கோடியாக (மொத்த மக்கள்தொகையில் 36.99%) மட்டுமே இருந்தது. 2001, 2011க்கு இடையிலான பத்தாண்டுகளில் மக்கள்-தொகைப் பெருக்க விகிதம் 2.6%ஆக இருந்தது. இந்திக்குப் பிறகு அதிகம் பேசப்பட்ட வங்க மொழியின் வளர்ச்சி எதிர்மறை விகிதத்தில் இருந்தது. 1991இல் 8.30% மக்களால் பேசப்பட்ட இம்மொழி, 2001இல் 8.11% மக்களாலும், 2011இல் 8.03% மக்களாலும் பேசப்பட்டது. அதேவேளையில் தெலுங்கு மொழி பேசும் மக்களின் வீதம் 1991இல் 7.87% ஆகவும், 2001இல் 7.19% ஆகவும், 2011இல் 6.70% ஆகவும் படிப்படியாகக் குறைந்தது.
மராத்தி மொழியின் கதையும் கிட்டத்தட்ட இதேதான். மராத்தி மொழி பேசும் மக்களின் வீதம் 1991இல் 7.45% ஆகவும், 2001இல் 6.99% ஆகவும், 2011இல் 6.86% ஆகவும் படிப்படியாகக் குறைந்தது.
தமிழின் வீழ்ச்சி
இந்தியாவின் வாழும் மொழிகளில் மிகத் தொன்மையான மொழியான தமிழின் வளர்ச்சிக்கு மத்திய உள்துறை அமைச்சக-மானது கொஞ்சமாவது முக்கியத்துவம் தந்திருக்க வேண்டும். ஆனால், தெலுங்கு, வங்கம், மராத்தி போன்றே தமிழ் மொழியின் வளர்ச்சியும் தேய்ந்துபோனது. 1991இல் மொத்த மக்கள்தொகையில் 6.32% ஆக இருந்த தமிழ் பேசுவோரின் சதவிகிதம் 2001இல் 5.91% ஆகவும், 2011இல் 5.70% ஆகவும் குறைந்தது.
குஜராத்தியும் சம்ஸ்கிருதமும் வளர்கின்றன
பத்தாண்டுகளில் சிறிதாவது வளர்ச்சி அடைந்த ஒரே மொழி குஜராத்தி மட்டும்தான். அதேபோல, சிறிதளவாயினும் வளர்ச்சி பெற்ற இன்னொரு மொழியாக சம்ஸ்கிருதத்தைக் குறிப்பிடலாம். 2021ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மேற்-கொள்ளும்-போது நாட்டிலுள்ள மொழிகள் எத்தனை எனத் திரும்பவும் கணக்கிட வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது தொகுதியில் பட்டியலிடப்-பட்டுள்ள அனைத்து மொழிகளின் நிலையும் (இந்தி, சம்ஸ்கிருதம், குஜராத்தி நீங்கலாக) சீரழிந்துள்ளது என்பதுதான் உண்மை. இந்நிலையில் இந்தி வளர்ச்சிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவானது இந்தியைத் தவிர பிற இந்திய மொழிகள் தேய்ந்துவருவது பற்றிய கவலையைத் தெரிவித்திருக்க வேண்டும்.
இந்தி மொழி வளர்ச்சி எப்படி?
மற்ற மொழிகளின் வளர்ச்சி குறைந்து-வரும்போது இந்தி மொழியின் வளர்ச்சி மட்டும் சீராக உயர்ந்ததன் காரணம் என்ன? உண்மையில் இதற்கான காரணம் அரசின் செயல்பாடுகளில் இல்லை; மக்கள்தொகை வளர்ச்சியில் இருக்கிறது!
ஆகவே, இந்தி மொழி வளர்ச்சி பெற்றுள்ளது என்பதே ஒரு கட்டுக்கதைதான். மேற்சொன்ன மொழிகளைப் பேசுபவர்களையும் இந்தி பேசுவோரின் பட்டியலுக்குள் சேர்க்காமல் இருந்திருந்தால் இந்தி மொழி பேசுவோரின் எண்ணிக்கை 39 கோடியாகப் பதிவாகியிருக்கும் (2011ஆம் ஆண்டின் மக்கள்தொகையில் இது வெறும் 32% மட்டுமே); இது மற்ற மொழி பேசுவோரின் சதவிகிதத்தைவிட அவ்வளவு பெரிதாகவும் இருந்திராது.
தெரிந்துகொள்ள வேண்டிய மொழி என்று பார்த்தாலும் கலைக்களஞ்சியங்களும் பழமையான இலக்கியங்களும் மிகுந்த தமிழ், கன்னடம், வங்கம், மராத்தி ஆகியவை இந்தியைவிடவும் வளமானவை. இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. இந்தி ஒப்பீட்டளவில் அண்மைக் காலத்தில் தோன்றியது.
இந்திப் பிராந்தியம் என்று சொல்லப்படும் இந்தி பேசும் மாநிலங்கள் வரும் 2024 தேர்தலில் வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும். இந்த மாநிலங்களின் வேலைவாய்ப்பின்மை என்னும் ஆழமான காயத்துக்குத் தடவும் களிம்பாக அமித் ஷாவின் இந்தப் பேச்சு இருக்கலாம். இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பாகிஸ்தான் அச்சுறுத்தலாக இருப்பதைச் சொல்லிப் பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளைப் பெறலாம் என்பதைப் போல, ஆங்கிலத்தைத் தேசவிரோத சக்தியாகக் காட்டுவதன் மூலம் இந்தி பேசும் மக்களின் வாக்குகளைப் பெற முடியாது என்பதை அமித் ஷா உணரவில்லைபோல் இருக்கிறது. இது மொழி சார்ந்த மாபெரும் அபத்தம். அதைவிட முக்கியமாக, இது கூட்டாட்சி அரசியலுக்கு எதிரானது.’’ என்கிறார்.
ஆக, பழமை வாய்ந்த மண்ணின் மொழிகளையெல்லாம் ஒழித்து, இந்தியை வளர்க்க முற்படுகிறார்கள் என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
இந்திக்கு அடுத்தபடியாக, சமஸ்கிருதமும், குஜராத்தியும் வளர்க்கப்படுகின்றன என்பதையும் இவரது கூற்று உறுதி செய்கிறது.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செழுமையான வளர்ச்சியைப் பெற்றிருந்த தமிழை, தென்கிழக்கு ஆசியா முழுமையும் மக்கள் மொழியாகப் பரவியிருந்த தமிழை இன்று மாநில மொழியாகக் கூட விட்டு வைக்க மாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ் கூறுவதும், அதை பி.ஜே.பி நடைமுறைப்படுத்த முனைவதும் தமிழர்க்கு விடுத்துள்ள அறைகூவலாகவே நாம் கொள்ள வேண்டியது கட்டாயம்.
தீர்வுகள் என்ன?
1 அயல்நாட்டுத் தொடர்பு இராணுவம், நாணயம் போன்ற துறைகள் தவிர்த்த மற்றெல்லாத் துறைகளும், அந்தந்த மாநிலத்துக்கே முழு அதிகாரம் உள்ளவையாக இருக்க வேண்டும்.
2 இக்கோரிக்கைகளை வலியுறுத்தும் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், வங்காளம் போன்ற மாநிலங்களை ஒருங்கிணைத்தல்.
3 மாநிலந்தோறும் இன்று உள்ள “ஒன்றிய அரசுத் துறைகள்’’ என்பவை அனைத்திலும், அந்தந்த மாநிலஆட்சி மொழியிலேயே அனைத்து நிருவாகமும் நடைபெற வழி காண வேண்டும்.
4 தமிழ்நாட்டில் தமிழிலும், ஆந்திரத்தில் தெலுங்கிலும், கருநாடகத்தில் கன்னடத்-திலும், கேரளத்தில் மலையாளத்திலும் இப்படி அந்தந்த மாநில ஆட்சி மொழியிலேயே அனைத்துத் துறை நிருவாகமும் நடைபெற வழி காண வேண்டும்.
5 அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ்., அய்.இ.எஸ். முதலான ஊழியத் தேர்வுத்-துறைப் பதவிகள் அனைத்தும் மாநிலஅரசு பணித் தேர்வுத் துறையின் கீழ்கொண்டு வரப்பட வேண்டும்.
6 தந்தை பெரியார் அவர்கள் 1967இல் வலியுறுத்தியதுபோல் அந்தந்த மாநில ஆட்சித் துறைகளின் அதிகாரிகள் அந்தந்த மாநில அரசினராலேயே தேர்ந்தெடுக்கப் பட்டு, அமர்த்தப்பட வேண்டும்.
கல்வியின் எல்லா நிலைகளிலும், தேர்வுகளிலும் அந்தந்த மாநில மொழியே பயிற்சி மொழியாகவும், தேர்வுமொழியாகவும் ஆக்கப் பெறல் வேண்டும்.
இவைகளை அடைய, திராவிடர் கழகம் முன்னெடுத்துள்ள இந்தி எதிர்ப்புப் போரில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் (பா.ஜ.க. நீங்கலாக) களத்தில் தீவிரமாக இறங்கிப் போராட வேண்டும். இது அரசியல் கடந்த தலைமுறைப் போர். தமிழ் மொழியைக் காக்கின்ற, வளர்க்கின்ற முயற்சி, செய்லதிட்டம்.
தங்கள் உயிரினும் மேலாகத் தமிழை மதிக்கின்றவர்கள் தமிழர்கள் என்ற வரலாற்றுப் பெருமையை முன்னிலும் வீரியமாய் எதிர்கொண்டு வென்றெடுக்க வேண்டும்.
தமிழ் மொழியை வளர்ப்பதும், இந்தித் திணிப்பைத் தடுப்பதும், தமிழர் வேலை-வாய்ப்பை வடமாநிலத்தவர் பறிப்பதைத் தடுப்பதும் நமது தலையாய கடமைகளாகும்; தலைமுறைக் கடமைகளாகும்! பாசிச பாஜக அரசின் இந்தித் திணிப்பையும், தமிழர் வேலைவாய்ப்பைப் பறிக்கும் சதியையும் தொடக்கத்திலேயே துடைத்தெறிய வேண்டும்! இது காலத்தின் கட்டாயம்!