மஞ்சை வசந்தன்
உலகில் உள்ள சிக்கல்கள், அழிவுகள், கேடுகள், இன்னல்கள், இழிவுகள், ஆதிக்கம், ஏற்றத்தாழ்வுகள், மோதல்கள், பாழ்படுத்துதல், அறியாமை, மூடநம்பிக்கைகள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் அதற்குக் காரணம் அறிவின் வழி சிந்திக்காது, மரபு வழி மந்தைகளாய் செயல்படுவதே காரணம் ஆகும்!
கடவுள்: கடவுள் நம்பிக்கை பிறந்து வளரும் குழந்தைக்கு எப்படி வருகிறது? அதற்குப் பசி வருவதுபோல, தாகம் எடுப்பதுபோல கடவுள் பற்றிய எண்ணம், தானே வருகிறதா? வருமா? என்றால், இல்லை. அப்படி வராது. பின் எப்படி வருகிறது?
பிள்ளையைப் பெற்றவர்கள், சுற்றியுள்ள மற்றவர்கள் தங்கள் நம்பிக்கையை அக்குழந்தைக்குச் சொல்ல, அக்குழந்தையும் அதை அப்படியே பின்பற்றுகிறது. ஆக, கடவுள் உண்டா? இல்லையா? கடவுள் எது? எப்படிப்பட்டது? என்று ஆராய்ந்து ஒருவர் கடவுளை நம்புவதோ, ஏற்பதோ இல்லை. மாறாக, பெரியவர்கள் சொல்வதை அப்படியே ஏற்கின்றனர்.
கடவுளை ஏற்கும் பிள்ளை கடவுள் சார்ந்த மற்றதையும் ஏற்கிறது. கடவுள் அடிப்படையில் அமைந்த மதத்தை ஏற்கிறது. மத அடிப்படையில் சடங்குகளை ஏற்கிறது. விதியை ஏற்கிறது, பாவ புண்ணிய பலாபலன்களை ஏற்கிறது.
விதியை ஏற்கும்போது நம் கையில் எதுவும் இல்லை. எல்லாம் கடவுள் விதித்த விதிப்படிதான் நடக்கும், நடக்கிறது என்ற எண்ணம் வலுப்பெறுகிறது. அதனால், தன் நம்பிக்கையை இழக்கிறது.
அவன் ஏன் பணக்காரனாய் இருக்கிறான்? இவன் ஏன் ஏழையாய் இருக்கிறான்? அவன் ஏன் உயர் ஜாதி? நான் ஏன் தாழ் ஜாதி? அவன் மட்டும் ஏன் படிக்க முடிகிறது? நான் ஏன் படிக்கக் கூடாது? என்று சிந்திக்கும் பகுத்தறிவை விதி நம்பிக்கை தடை செய்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரே பதில் கடவுள் விதித்த விதி என்று சமாதானம் கூறுகிறான்; சமாதானம் அடைகிறான்.
கடவுள் விதியைப் படைக்கும்போது ஏன் ஒருவனுக்குச் சாதகமாகவும், இன்னொருவனுக்குப் பாதகமாகவும் படைக்க வேண்டும்? என்று கேள்வி கேட்டால் விதி நம்பிக்கை தகரும்; விதி பொய் என்பது விளங்கும்.
கடவுள் உண்டா? கடவுள் எது? என்று அறிவைப் பயன்படுத்திச் சிந்தித்தால் கடவுள் இல்லை என்பதும் உறுதியாக விளங்கும்.
கடவுள் இவ்வுலகைப் படைத்து, இயக்குகிறது என்றால், வெள்ளம், புயல், கொள்ளை நோய், கொரோனா தொற்று போன்ற அழிவுக் காரணிகள் ஏன் உருவாகின்றன?
கடவுள் உலகைப் படைத்திருந்தால், நீர் இல்லாப் பாலை நிலங்களையும், களர் நிலங்களையும் ஏன் படைக்க வேண்டும்? ஓரிடத்தில 50 அடி ஆழத்தில் தண்ணீர், இன்னோர் இடத்தில் 1000 அடியில் தண்ணீர், மற்றோர் இடத்தில் தண்ணீரே இல்லாமல் ஏன் படைக்க வேண்டும்? என்று கேள்விகளை அடுக்கினால், அறிவோடு கடவுளை அணுகி, நுணுகி ஆராய்ந்தால், கடவுள் இல்லை என்பது விளங்கும்.
கடவுள் இல்லை என்பது விளங்கினால், கடவுள் அடிப்படையில் அமைக்கப்பட்ட மதம் என்பதும் ஒழியும், மதம் ஒழிந்தால் மத அடிப்படையில் மோதல்கள் ஒழியும். கடவுளுக்காகவும், மதத்திற்காகவும் செலவிடப்-படும் நேரமும் பொருளும் மிச்சப்படும். அந்த நேரத்தையும், பொருளையும் நாட்டு வளர்ச்சிக்கும் மக்கள் நலத்திற்கும் பயன்-படுத்தினால், நாடும் மக்களும் நலம் பெற முடியும்; வளம் பெற முடியும்.
ஆக, மரபின்வழி மடமைக் கருத்துகளை அப்படியேற்று நடக்காமல், அறிவினால் ஆய்வு செய்து அறிவுக்கு உகந்ததை ஏற்று வாழ்ந்தால் மூடநம்பிக்கை தகரும்; தன்னம்பிக்கை வளரும்.
நம் முன்னேற்றம் நம் கையில், நாம் முயன்றால் எதையும் சாதிக்கலாம், எதையும் எட்டலாம், நம் வாழ்வை கடவுள் தீர்மானிப்-பதில்லை என்ற அறிவின்பாற்பட்ட விழிப்பு வந்தால், மரபு வழி மடமைகள், மதவழி மடமைகள் அகல, அறிவின்பாற்பட்ட அர்த்தமுள்ள, காரணங்களோடு கூடிய வாழ்வு அமையும்.
சரியான தீர்வு: எந்த ஒன்றுக்கும் தீர்வு காண்பதில் மனிதனுக்கு மனிதன் வேறுபாடு உண்டு. அவன் பெற்றுள்ள அறிவு, தெளிவு, விழிப்பு, சிந்தனைத் திறன் இவற்றைப் பொறுத்து தீர்வுகளும் மாறும்.
நோய் வந்தால் ஒருவர் மந்திரவாதியிடம் செல்கிறார்; மற்றொருவர் கோயிலுக்குப் போய் வேண்டுகிறார்; இன்னொருவர் மருத்துவரிடம் போகிறார். இதில் சரியான தீர்வு எது?
மந்திரம் ஓதினால் நோய் குணமாகுமா? மந்திரவாதிக்கே நோய் வந்தால் மருத்துவரிடம்-தானே செல்கிறார்? மந்திரம் நோயைத் தீர்க்கும் என்றால் மருத்துவர்கள், மருத்துவமனைகள் ஏன்? என்று சிந்தித்தால் மந்திரம் பொய் என்பது விளங்கும்.
கடவுள் நோய் தீர்க்கும் என்றால், நோய் வந்தவர்கள் எல்லாம் கடவுளை வேண்டிக் கொண்டு வீட்டிலேயே இருப்பார்களா? விளைவு என்னாகும்?
எந்தப் பக்தனும் நோய்க்கு மருத்துவரிடம் தானே செல்கிறான்? மருத்துவர் செய்யும் மருத்துவம்தானே நோயைக் குணப்படுத்து-கிறது? இதில் கடவுளுக்கு என்ன வேலை?
கொரோனா தொற்று வந்தபோது கோயில்களே மூடப்பட்டனவே! கடவுள் நோயைக் குணப்படுத்தும் என்றால், கோயிலை ஏன் மூடவேண்டும்? அறிவோடு சிந்தித்தால் – அறிவியல் அடிப்படையில் சிந்தித்தால் உண்மை தெரியும், சரியான தீர்வும் கிடைக்கும்.
நோய் வந்தால் மருத்துவரிடம் செல்வதே சரி என்ற உண்மை உறுதியாய், தெளிவாய்த் தெரியும். எனவே, நோய் வந்தால் அறிவின் அடிப்படையில் அணுகி, தீர்வு காணவேண்டும்.
பொருளாதாரம்: பொருளாதாரத்தின் பெரும்பகுதி வீண் செலவுகள், சடங்குகள், மூடநம்பிக்கைகளுக்காகவே செலவிடப்-படுகின்றன. பொருளாதாரம், சிக்கனமாகவும், ஆக்கபூர்வமாகவும் வளர்ச்சிக்கு உரிய வகையிலும் செலவிடப்பட வேண்டும் என்றால் அறிவியல் அணுகுமுறை கட்டாயம்.
பிறப்பு முதல் இறப்பு வரை அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத, எதிரான பல சடங்குகள். ஒவ்வொரு சடங்கிற்கும் பெரும் பொருள் செலவுகள்.
பிறந்த குழந்தைக்குப் பெயர் சூட்ட ஒரு விழா. காது குத்துவதற்கு ஒரு விழா, பெண் பிள்ளை பருவம் அடைந்தால் ஒரு விழா, திருமணம் நடத்த பெரும் பொருள் செலவு, கருவுற்ற பெண்ணுக்கு வளையல் காப்பு விழா, இறந்த பின் அடக்கம் செய்ய பொருள் செலவு, கருமாதி, ஓர் ஆண்டு ஆன பிறகு திவசம் இப்படி ஒவ்வொன்றுக்கும் ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான ரூபாய் செலவு. கடன் வாங்கி பெரும்பாலும் இவ்விழாக்களுக்குச் செலவு செய்யப்படுகிறது. அக்கடனை அடைக்கும்வரை வட்டிகட்டியே வாழ்நாள் எல்லாம் துன்பப்படுகின்றவர்கள் பலர்.
பெயர் சூட்டவும், காது குத்தவும், பருவம் அடைந்தாலும் விழா வேண்டுமா? ஒரு மனிதன் அடையாளம் காண – அழைக்கப்பட பெயர் வேண்டும். அதற்கு எதற்கு விழா?
காதில் நகை அணிய ஓட்டை போட ஒரு விழாவா? குழந்தை மருத்துவரிடம் சென்றால் 10 நிமிடத்தில ஓட்டை போட்டு நகையை மாட்டி விடுவார். இதற்கு எதற்கு விழா? ஒரு ஆணோ பெண்ணோ பருவம் அடைவது 13 வயதுக்கு மேல் நடக்கும் இயற்கை நிகழ்வு. இதற்கு எதற்கு விழா?
திருமணம் என்பது ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து இல்வாழ்வு நடத்த ஒப்பந்தம் மூலம் ஒன்று சேர்வதே திருமணம். இதற்கு ஏன் இலட்சக்கணக்கான தொகையில் விழா? பதிவு அலுவலகத்தில் சென்று பதிந்தால் போதாதா?
வீண் செலவு செய்வதில் மதிப்பு, மரியாதை வருகிறதா? கடனை அடைக்க முடியாமல் மானம் இழப்பதைவிட, கடன் வாங்காமல், செலவு இல்லாமல் எளிய முறையில் திருமணத்தை நடத்திக் கொள்வதுதான் அறிவுக்கு உகந்தது!
வயிற்றில் வளரும் குழந்தையைப் பாதுகாக்க வளையல் அணிவிழா! தாயும், குழந்தையும் நலமாக இருக்க மருத்துவர் கண்காணிப்பும், நல்ல உணவும்தான் தேவை. வளையல் காப்பு எந்த வகையில் இதற்கு உதவும். அறிவோடு சிந்தித்தால், அறிவியல் கண்ணோட்டத்தில் ஆராய்ந்தால், இவையெல்லாம் வீண் செலவுகள் என்பது விளங்கும்.
இறந்தவரை மரியாதையுடன் அடக்கம் செய்வது கட்டாயம். மாறாக, அதற்குச் சடங்குகள் செய்வது எந்த அறிவியல் காரணத்திற்காக? யாராவது விளக்குவார்களா?
ஆக, அறிவோடு சிந்தித்தால் பெரும் செலவு, கடன், அலைச்சல் போன்ற பலவற்றைத் தவிர்க்கலாம். கடன் இன்றி மன நிறைவுடன் மகிழ்வாக வாழலாம்.
உணவுப் பொருள்கள் பாழ்:
அறிவுக்கும், அறிவியலுக்கும் எதிரான மூடநம்பிக்கைகளால் பொருளாதார இழப்புகள் ஏற்படுவதுபோலவே, உணவுப் பொருள்களும் பாழாக்கப்படுகின்றன.
திருஷ்டிப் பூசணி:
கண்பட்டுவிடக் கூடாது என்பதற்காக நல்ல பூசணிக்காயில் கருப்பு மையால் படம் வரைந்து வீட்டில் வைத்து பின் சாலையில் போட்டு உடைப்பர். அவ்வாறு உடைக்கப்படும் பூசணிக்காயால் வழுக்கி விழுந்து அடிபடுபவர்-கள் ஏராளம். உடல் குளிர்ச்சிக்குப் பயன்-படக்கூடிய நல்ல உணவுப் பொருளான பூசணியை சாலையில் உடைத்துப் பாழாக்குவது அறிவுடைமையா? ஒரு பூசணியை வடகம் போட்டு வைத்துக்கொண்டால் ஆண்டு முழுவதும் புளிக்குழம்பு வைக்கலாம். பூசணி மோர்க் குழம்பு சிறப்பானது. பூசணி அல்வா மற்ற அல்வாவைவிட உடல் நலத்திற்கு ஏற்றது. அதைப் பாழாக்கலாமா?
பாலாபிஷேகம்:
கற்சிலையைக் கடவுளாக நம்பி அதன் மீது பாலை ஊற்றி, தேனை ஊற்றிப் பாழாக்கு-கின்றனர். குழந்தைகளுக்குப் பால் பற்றாக்குறை இருக்கும்போது இப்படிப் பாழாக்கலாமா? பால் ஒரு சத்தான உணவு. அதன் பலனை கற்சிலை பெறுமா? அறிவுடன் சிந்தித்தால் இந்த அவலத்திலிருந்து விடுபடலாம்.
எலுமிச்சை:
எலுமிச்சை ஒரு சிறந்த உணவுப் பொருள். சாறு குடிக்கலாம்; எலுமிச்சை சோறு தயார் செய்தால் இரண்டு நாள்கள் கெடாமல் இருக்கும். உடலுக்குக் குளிர்ச்சியும், நோய் எதிர்ப்பாற்றலும் தரும். அப்படிப்பட்ட உணவுப் பொருளை காவு கொடுப்பதாகச் சொல்லி, இரண்டாகப் பிளந்து வீசுவார்கள். வாகனங்களில் செருகி வைப்பார்கள். சக்கரங்களை எலுமிச்சை பழத்தின் மீது ஏற்றி நசுக்கிப் பாழாக்குவார்கள். இதுவெல்லாம் ஏன் நடக்கிறது? அறியாமை, மூடநம்பிக்கை. இவை அகல ஒரே தீர்வு _ அறிவுடன் சிந்திப்பதும், அறிவியல் கற்பதும்தான்.
அறிவியல்படி கல்லில் கடவுள் இல்லை, கடவுளும் இல்லை. எலுமிச்சை காவு கொடுத்தால் விபத்து நடக்காது என்பது உண்மையல்ல. கண்படுதல் என்பது (திருஷ்டி என்பது) மூடநம்பிக்கை. கண்பட்டு எந்தத் தாக்கமும் வராது. அறிவியல் அடிப்படையில் அணுகிச் சிந்தித்தால், இவையெல்லாம் பொய் என்பது உறுதி செய்யப்படும், உண்மை விளங்கும். உண்மை விளங்கினால், இந்த மடமைகள் விலகும். கேடும், பாழும் தவிர்க்கப்படும்.
மந்திரம்:
படித்துப் பட்டம் பெற்றவர்கள்கூட மந்திர சக்தியை நம்புகின்றனர். மந்திரம் என்பது என்ன? வாயால் சொற்கள் உச்சரிக்கப்படுவது தான். வாயால் உச்சரிக்கப்படும் சொற்களுக்கு சக்தி எப்படி வரும்? சிந்திக்க வேண்டாமா?
பாம்பு கடித்தவரின் உடலில் ஏறிய விஷம் மந்திரம் சொன்னால் இறங்கும் என்று மந்திரம் ஓதுகிறார்கள். உடலில் ஏறிய விஷம் மந்திரத்தால் இறங்கவே இறங்காது. இது உறுதி செய்யப்பட்ட உண்மை. இந்த உண்மை புரிய, மடமை விலக அறிவியல் பார்வை வேண்டும். சோதித்துப் பார்க்க வேண்டும். சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மந்திரம் ஓதித் தயாரித்த தகடு, கயிறு என்று சொல்லி ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் மோசடிகள் நடப்பது எதனால்? மூடநம்பிக்கை-யினால்.
கண்ணை மூடிக்கொண்டு பிறர் கூறுவதை நம்பாமல், அறிவியல் பார்வையில் சிந்தித்தால், சோதித்தால் மந்திரம் இல்லை என்பது உறுதி செய்யப்படும். அப்படி உறுதியானால், மடமை அகல, அறிவு துலங்கும். மூடச் செயல்கள் தவிர்க்கப்படும். அதனால் வரும் கேடுகளும் இல்லாமல் போகும்.
ஜாதி: ஜாதி நம்பிக்கை, பற்று எதனால் வருகிறது? அறியாமையால். ஜாதி என்றால் என்ன? சிந்தித்தால் ஜாதியை எவரும் நம்ப மாட்டார், ஏற்க மாட்டார்.
அறிவியல்படி எல்லா மனிதர்கள் உடலும் ஒரே அமைப்பும், இயல்பும் உடையவை. ஜாதிக்கு ஜாதி எந்த வேறுபாடும் இல்லை. ஜாதி என்பது ஒரு கற்பிதம். அது பிறப்பால் வருவது இல்லை என்பது விளங்கும். இதை விளங்கிக் கொள்ள அறிவியல் பார்வை வேண்டும்.
உனக்கு கல்வி வராது, எனக்குதான் வரும், நான் மட்டுமே படிக்க வேண்டும். நீ ஏர் ஓட்டு, மலம் அள்ளு. உனக்கு அதற்குத்தான் தகுதி என்று ஜாதியால் கட்டாயப்படுத்தப்பட்டது.
சில ஜாதியினர் படிக்கக் கூடாது என்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் தடை செய்யப்பட்டது அறியாமையால். ஜாதி அடிப்படையில் எவருக்கும் அறிவும், திறமையும் வருவதில்லை. வாய்ப்பு அளித்தால் எல்லா மக்களும் படிப்பர்¢; சாதிப்பர். இன்று அறிவியல் வளர்ச்சியால், ஜாதியால் வந்த சதி முறியடிக்கப்பட்டுவிட்டது. எல்லோருக்கும் கல்வி வாய்ப்பு கிடைத்து, எல்லோரும் கற்று ஏற்றம் பெறுகின்றனர்.
பெண்ணடிமை:
பெண்கள் கற்கக் கூடாது, பெண்கள் வலுவற்றவர்கள், பெண்கள் ஆணுக்கு இணையானவர்கள் இல்லை என்ற எண்ணங்கள் அறியாமையால் வந்தவை. அறிவியல்படி பெண் ஆணுக்கு இணையானவள். இன்னும் சொல்லப்போனால் ஆணைவிட அறிவும் ஆற்றலும் நுட்பமும் உடையவள் என்பது இப்போது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டு, பெண் ஆணையும் வென்று சாதிக்கிறாள். ஆக, அறிவியல் அணுகுமுறை வந்தால் அறியாமை, அகலும். சிக்கல்கள், அநீதிகள், ஏற்றத்தாழ்வுகள் அகலும்.
ஆதிக்கம் நிலைக்க அறியாமையே அடிப்படை:
ஆதிக்கவாதிகள் எப்போதும் மக்கள் அறியாமையில், மூடநம்பிக்கையில் இருக்க வேண்டும் என்றே முயற்சி செய்வர். அதற்கான திட்டங்களையே செயல்படுத்துவர். காரணம், விழிப்பு வந்தால் மக்கள் எழுச்சி வரும், ஆதிக்கம் வீழ்ச்சியுறும். எனவேதான் ஆதிக்கம் செலுத்த விரும்பும் எவரும் மக்கள் அறிவியல் சிந்தனையுடன் வளர்ச்சி அடைவதை விரும்ப மாட்டார்கள். அவர்களை மடமையில், மூடநம்பிக்கையில் மூழ்கியிருக்கச் செய்யவே விரும்புவர்.
ஆதிக்கம் தகர்க்க அறிவு வளர்ச்சி வேண்டும்:
எனவே, ஆதிக்கம் தகர்க்க அறிவு வளர்ச்சி மக்களிடையே வேண்டும். உண்மை எது, சரி எது, நீதி எது, அநீதி எது, நல்லது கெட்டது எது, சதி எது, சூழ்ச்சி எது என்பதை அவர்கள் பகுத்தாய்ந்து புரியும்படி செய்ய அவர்களுக்கு அறிவு வளர்ச்சி வேண்டும்.
எனவேதான், தந்தை பெரியார் அவர்கள் ஆதிக்கம் அகற்ற பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தார். மனிதன் ஆதிக்கத்திலிந்து விடுபட மானமும் அறிவும் வேண்டும் என்றார். இந்த இரண்டுமே ஆதிக்கம் தகர்த்து, இழிவு நீக்கி, உரிமை மீட்டு சமத்துவத்தை சமூகநீதியை நிலைக்கச் செய்யும்.
மனிதனை மனிதன் சுமப்பது ஏன்?
மனிதனை மனிதன் சுமக்கும் அவலம் ஏன் வருகிறது? மனிதனுக்குத் தன்மான உணர்ச்சி இல்லாததால். தன்மான உணர்ச்சி இல்லாததற்கு என்ன காரணம்? அவனது அறியாமை மூடநம்பிக்கை. பல்லக்கில் ஏறுகிறவன் என்ன நினைக்கிறான்? நாம் செய்த புண்ணியத்தால் நமக்கு இந்த உயர்வு என்று. பல்லக்கைத் தூக்குகிறவன் என்ன நினைக்கிறான்? நாம் செய்த பாவம் பல்லக்குச் சுமக்கிறோம் என்று. பாவமும் இல்லை, புண்ணியமும் இல்லை. பல்லக்கில் ஏறுவது ஆதிக்க எண்ணம். பல்லக்கைச் சுமப்பது அடிமை எண்ணம். இந்த நிலை மாற அறிவும் மானமும் வேண்டும்.
பல்லக்கு, வண்டி, தேர் போன்றவை இயந்திர வாகனங்கள் வருவதற்கு முன் ஓர் இடத்தி-லிருந்து இன்னோர் இடத்திற்குச் செல்லப் பயன்படுத்தப்பட்டன. ஆனால், இன்றைக்கு மாற்று வாகனங்கள் வந்த பின்பும், மனிதனைச் சுமக்கச் செய்து நான் பல்லக்கில்தான் செல்வேன் என்பது ஆதிக்கம், ஆணவம், மனிதத் தன்மை இல்லாத மாண்பு இல்லாக் கொடியநிலை.
அதுவும் கடவுள் பெயரால் இக்கொடுமைகள் நடப்பது கடவுள் கோட்பாட்டிற்கே எதிரானது. கடவுள் இதை ஏற்பாரா? என்று சிந்திக்கும் சிற்றறிவு இருந்தால்கூட இந்த அவலம் நடக்காது.
மனிதனை மனிதன் சுமக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது, அதை கவுரமாகக் கருதுவது, சவால் விடுவது அதற்காக அணி சேர்ப்பது அனைத்தும் மனித எதிர்ச் செயல்களேயாகும். சட்டமும் சமூகநீதியும் இதை ஏற்பதில்லை.
விருப்பப்பட்டு பல்லக்கு தூக்குகிறார்கள். நாங்கள் அமர்ந்து செல்கிறோம் என்பது அற்பவாதம்! விருப்பப்பட்டு தற்கொலை செய்கிறான். சட்டம் ஏற்குமா?
இப்படியெல்லாம் சிந்திக்க அறிவு வேண்டும். அறிவு வளர அறிவியல் அணுகுமுறை வேண்டும். அதற்கு கல்வி வேண்டும், பிரச்சாரம் வேண்டும், மக்கள் விழிப்பும் எழுச்சியும் பெற வேண்டும்.
மதத்தின் பேரால் மக்களை மடையர்களாக வைத்திருப்பதைத் தடுப்பதற்கும், பழைய சனாதன நடைமுறை-களைச் செயல்படுத்த முனையும் பாசிசக் கூட்டத்திற்குப் பதிலடி தருவதற்கும், சமத்துவம், சமூகநீதி மனித உரிமை மீட்பதற்கும் காப்பதற்கும் அறிவியல் அணுகுமுறை கட்டாயம். அது அரசுக்கும் வேண்டும்; மக்களுக்கும் வேண்டும்!