உலகப் புத்தக நாள் : நல்ல நூல்கள் நல்ல நண்பர்கள்!

ஏப்ரல் 16-31,2022

கி.வீரமணி

ஏப்ரல் 23ஆம் நாள் உலகப் புத்தக நாள்! ஆங்கில இலக்கியத்தில் மிகப் பெரும் புலமையோடு உலகம் முழுவதிலும் உள்ளோர் பரவலாக அறிந்துள்ள, கற்றுள்ள ஷேக்ஸ்பியர் அவர்கள் நினைவு நாளையே, உலகப் புத்தக நாளாகக் கொண்டாடுகிறோம்!

நல்ல நண்பர்கள் _ விரும்பத்தகுந்த சிறந்த நட்புடைமையாளர்கள் _ நம் வாழ்நாளைப் பெருக்கும் மகத்தான மருத்துவர்கள் ஆவார்கள்!

நண்பர்கள் _ மனந்திறந்து உரையாடி மகிழும் நண்பர்கள் இருந்தால் _ மனம் எப்போதும் இளமையோடு _ வளமையோடு இருக்கும், முதுமையின் தாக்கத்தை வெகுவாகக் குறைப்பவர்கள் அவர்களே!

தனிமரமாக இருப்பதினால் ஆயுளும் குறையும். பரிமாறிக்கொண்டு, கலகலப்புடனே பேசி மகிழவும், தாளாத் துயரத்தைத் தாண்டி மீளவும் நட்புகளே வெகுவாகப் பயன்படக் கூடும்.

தந்தை பெரியார் சுயமரியாதைத் திருமண முறையை உருவாக்கி, விளக்கவுரை கூறுகையில், வாழ்விணையர்களிடம் உற்ற நண்பர்களாக இருப்போம் என்ற உறுதிமொழி ஏற்கக் கூறச்செய்தார்கள். கணவன் _ மனைவி பலரிடம், எஜமான் _ அடிமை என்ற நிலையில் இருக்காமல், சமமாகப் பழகும் நண்பர்களைப் போல் இருங்கள் என்று கூறுவார்கள். நண்பர்கள் என்றால் ஒருவர் பொறை _ இருவர் நட்பு என்ற தத்துவப்படி, கோபதாபங்கள், குற்றச்சாட்டுகள், பிழைபட உணர்தல் ஆகியவற்றால் நாம் தாக்குண்ட நிலையில்கூட, நண்பர்களிடம் தான் அதை வெகுவாக சகித்துக் கொண்டு நட்பைத் தொடருவோம். அதுபோன்று நட்பின் வயப்பட்டுள்ளவர்களாக இருப்பது முக்கியம் என்பதை அவ்வுறுதி வற்புறுத்துகிறது!

புத்தகங்களை விட நமக்குச் சிறந்த நண்பர்கள், நம்மை மகிழ்விக்கவும், நம் துயரங்களை நீக்கவும், நம்முடைய அறிவை விரிவு செய்து, அன்புப் பேழையில் அதனை வைத்துப் பயன்படுத்தவும், பண்படுத்தும் நண்பன் வேறு யாரே உளர்?

‘நகுதற் பொருட்டன்று நட்பு’ என்னும் மொழிக்கேற்ப, இடித்துரைத்து நம்மை தவறான பாதையிலிருந்து மீட்டெடுக்க உதவும் ஆசானாகவும் புத்தகம் என்னும் நண்பன் நமக்குப் பயன்படுவான்!

ஒவ்வொருவர் வீட்டிலும் புத்தக அலமாரியிலே _ அல்லது தனிப் புத்தக அறையிலே இருந்து நாம் படிப்பதை வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டும்.

1. அறிதல், 2. புரிதல், 3. மாறுதல்

இவற்றை ஏற்படுத்திடும் புத்தக ஆசான்கள் பல்வேறு துறைகளிலும் பலர் உண்டு!

பல சரக்குக் கடையில் பணியாற்றி பிறகு மிகப்பெரும் புரட்சி எழுத்தாளராக, தமிழ் இலக்கிய மேதையாக ஆன நூற்றாண்டு நாயகர் விந்தன். அச்சுக்கோத்த நிலையிலே படித்துப் படித்து பெரும் எழுத்தாளரான, சிறந்த பேச்சாளரான ம.பொ.சிவஞானம் என்ற ம.பொ.சி. அவர்களும் புத்தகங்களால் உருவாக்கப்பட்ட இலக்கியவாதி!

இவ்வரிசையில் நமது பகுத்தறிவுப் புலவர் வெற்றியழகன் தொல்காப்பியத்திற்கே தெளிவுரை தரும் நிலைக்கு உயர்ந்த, கடையில் பணிபுரிந்து, கடைத்தேறிய புலவர் ஆனவர். சுயசிந்தனை, பல்வேறு நூல்களைப் படித்து பலரும் விரும்பும் எனது எதிர்மறைக் கருத்தாசான் ஜெயகாந்தன் என்ற இலக்கிய மேதை அவரது பிறந்த நாள் 24. இப்படி _ புத்தாக்கத்தை புத்தகங்கள் உருவாக்கி புது உலகம், புரட்சி உலகத்தை தந்துள்ளன! ‘கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்’ என்பதற்கு அடித்தளம் புத்தகங்கள் தானே! ஆனாலும் கண்டதை யெல்லாம் படித்து, நம்மை நாம் பாழடித்துக் கொள்ளக் கூடாது என்பதை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள்.

நூலைப்படி, நூலைப்படி… என்று அவர் அறிவுறுத்தியபடி பொய்யிலே கால்படி, புரட்டிலே முக்கால் படியுள்ள புத்தகங்களைப் படிப்பது, தவறானவர்களை நண்பர்களாகக் கொண்ட-தேயாகும்! நெறி பிறழ்ந்த வாழ்க்கையில் அல்லாடும் கொடுமைக்கு ஆளாவதாகும்.

எனவே சிறந்த நூல் என்று பல அறிஞர்கள் சொல்லும்படியான நூல் என்றாலும், அதை உங்கள் சுயசிந்தனையின்படி, படித்து ஆராய்க. பிறகே வாழ்க்கை உயரும் படிகள் தானே உங்களுக்கு கிடைக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *