அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் ஏப்ரல் 14

ஏப்ரல் 1-15,2022

அண்ணல் அம்பேத்கரின் அரிய சிந்தனைகள்

டாக்டர் அம்பேத்கர்

இந்து மதத்தை அழிக்கத் தயக்கம் கூடாது!

மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று நான் கூறினேன். நான் இப்படிக் கூறுவதன் பொருள் _ சிலருக்குப் புரியாமல் இருக்கலாம். சிலருக்கு கலகம் விளைவிப்பதாகத் தோன்றலாம், சிலருக்குப் புரட்சியாகத் தோன்றலாம். எனவே, என் நிலைப்பாடு என்ன என்பதை விளக்குகின்றேன்.

இந்துக்கள், ‘மதம்’ என்று அழைப்பது உண்மையில் சட்டங்களையும் அல்லது சட்டமாக ஆக்கப்பட்டுள்ள வகுப்புவாரி நீதிநெறிகளைத்தான். இந்தச் சட்டங்களின் தொகுப்பை, மதமென்று கூறுவதை நான் மறுக்கின்றேன். மதம் என்று தவறாகப் பெயரிட்டு மக்கள் முன்பு நிறுத்தப்படுகின்ற இதுபோன்ற சட்டத் தொகுப்பால், விளைகின்ற கேடுகள் பல.

முதல்கேடு: ஒழுக்கத்துடன், சுதந்திரமான, தன்னிச்சையான வாழ்க்கையை இது மறுக்கின்றது. மாறாக அது (வெளியில் இருந்து திணிக்கப்படும் விதிகளை) அடிமைத்தனமாக ஏற்றுக் கொண்டு நடக்கின்ற இழிநிலைக்கு வாழ்க்கையைத் தள்ளி விடுகின்றது.

கொள்கை எண்ணத்திற்கு இந்து மதத்தில் இடமில்லை. கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் நிலைதான் இருக்கின்றது. ஆனால், இந்தச் சட்டத் தொகுப்பால் விளைகின்ற பெருங்கேடு என்னவெனில், இந்தச் சட்டங்களே முக்காலத்திற்கும் பொருந்துபவை என்று இருப்பதுதான். அனைத்து வகுப்புக்கும் பொதுவான ஒரே சட்டம் இல்லை என்ற வகையில் அது மோசமானது. ஆனால், எத்தனை தலைமுறையானாலும் சரி, இந்த அநியாயம் _ அநீதி என்பது நிரந்தரமாக நீட்டிக்கப்பட வேண்டிய ஒன்று என ஆக்கி வைக்கப்பட்டுள்ளதே!

சட்ட வல்லுநர்கள் அல்லது மகான்கள் என்று அழைக்கப்படுகின்ற சில மனிதர்களால் இவை ஏற்படுத்தப்பட்டது என்பதால் நான் இதை மறுக்கவில்லை. இதன் இறுக்கமும், மாறாத் தன்மையுடைய குணங்கள் இருப்பதாலேயே _ நான் இதை மறுக்கின்றேன்.

ஒரு மனிதனின் வாழ்நிலையும், சூழ்நிலையும் மாறும்போது _ அந்த மனிதனின் மனநிலை மாறும். அப்படி இருக்கையில், நிரந்தரமான இந்தச் சட்டத் தொகுப்பை எவ்வித மாற்றமும் இன்றி _ மனித இனம் எப்படிச் சகித்துக் கொள்ள முடியும்? எனவே, இதுபோன்ற ஒரு மதத்தை அழித்தாக வேண்டும் என்று கூறுவதில் _ எனக்குத் தயக்கம் எதுவுமில்லை.

இதுபோன்ற ஒரு மதத்தை அழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் பணிகள், மதத்திற்கு எதிரானவை அல்ல. சட்டத்திற்கு மதம் என்று தவறாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த முகத்திரையைக் கிழித்தெறியுங்கள்! இதுவே உங்கள் தலையாய கடமை.

மக்களின் மனதில் பதிந்திருக்கும் இந்த ‘மதம்’ என்ற தவறான கருத்தை நீக்குங்கள்! மதம் என்று தங்களுக்குக் கூறப்பட்டது மதமே அல்ல; சட்டவிதிகளே என்ற உண்மையை அவர்கள் உணர்ந்து கொள்ளச் செய்யுங்கள்! இப்பணியைச் செய்து முடித்ததுமே, மதம் எனக் கூறப்படும் இச்சட்ட விதிகளை சீர்திருத்தியாக வேண்டும் அல்லது அடியோடு அழித்துவிட வேண்டும் என்று வலியுறுத்துவதற்கான தார்மீக பலம் உங்களுக்குத் தானாகவே எழும்.

(‘பாபாசாகேப் டாக்டர்.அம்பேத்கர் ஆங்கில நூல், தொகுப்பு: 1, பக்கம்: 66)

ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரிகள் – பார்ப்பனியம் முதலாளியம்

தாழ்த்தப்பட்ட தொழிலாளர்கள் மாநாட்டை நடத்துவதன் மூலம், நாம் தொழிலாளர் அணியைப் பிளவுபடுத்து-கின்றோம் என்பதே -_ நமக்கு எதிரான குற்றச்சாட்டின் சாரமாக உள்ளது. எனது கருத்துப்படி, இந்நாட்டின் தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளை முறியடிக்க வேண்டி-யுள்ளது. பார்ப்பனியம், முதலாளியம் என்ற இரண்டும்தான் அந்த எதிரிகள்.

தொழிலாளர்கள் கணக்குத் தீர்த்துக் கொள்ள வேண்டிய எதிரிகளில் ஒன்றாக பார்ப்பனியத்தைப் பார்க்க நமது விமர்சகர்கள் தவறி விடுகின்றனர். எனவே, அவர்கள் விமர்சனம் ஒருதலைச் சார்பாக அமைந்துள்ளது. நாம் கணக்குத் தீர்க்க வேண்டிய எதிரி பார்ப்பனியம் என நான் கூறும்பொழுது, அதைத் தவறான புரிதலில் கூறவில்லை.

ஒரு ஜாதி என்ற முறையில், பார்ப்பனர்கள் பெற்றுள்ள அதிகாரம், சலுகைகள், சுயநலன்கள் போன்றவற்றை மட்டுமே நான் பார்ப்பனியம் என்று எடுத்துக் கொள்ளவில்லை. இப்பொருளில், நான் பார்ப்பனியம் என்னும் சொல்லைப் பயன்படுத்தவில்லை. விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற உணர்வுகளை மறுப்பதே பார்ப்பனியம் என்பதே என்னுடைய புரிதல்.

அனைத்துத் தொழிலாளர்களும் ஒரே இனத்தவர்; ஒரு வகுப்பினரே என்பது அடைய வேண்டிய லட்சியம். ஆனால், நடைமுறையில் இப்படித்தான் உள்ளது என்று கருதினால் _ அதுவே மிகப் பெரும் தவறாக இருக்கும்.

இந்தியாவில் உள்ள தொழிற்சங்கங்கள் பரிதாப நிலையில் இருக்கின்றன. தொழிற்-சங்கங்களின் முக்கிய லட்சியம் கைவிடப்பட்டு விட்டது. எனது கருத்துப்படி, தொழிற்சங்கங்கள் மிகவும் தேவையான நாடு _ இந்தியாவாகத்தான் இருக்க முடியும். ஆனால், இந்தியாவில் இன்று தொழிற்சங்கங்கள் தேங்கிப் போன _ நாற்றமெடுக்கும் குட்டைகளாக உள்ளன.

தொழிலாளர்களை அமைப்பாக்குவது, அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது, கிளர்ச்சி செய்ய உதவி செய்வது _ இவை மட்டுமே தொழிற்சங்கத் தலைவர்களின் கடமைகள் அல்ல. தொழிலாளர்களின் பிரதிநிதியாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்வது, அவர்கள் சார்பாகப் பேசுவது போன்றவைதான் இவர்களின் அக்கறையாகும்.

ஆனால், தொழிலாளர்களோடு எந்த ஒரு உறவையும் வைத்துக் கொள்வதைத் தவிர்த்தே வருவார்கள். தங்களுக்குச் செயலாளர், தலைவர் போன்ற பதவிகள் வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத் தொழிற்சங்கம் அமைக்கும் தொழிலாளர் தலைவரும் உண்டு. இவர்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்கள், இவர்கள் தங்கள் பதவிகளைக் காத்துக்கொள்ள, தங்கள் சங்கங்களைத் தனியாக வைத்திருப்பதுடன் _ மாற்றுச் சங்கங்கள் மீது ஒரு பகைமை நிலையையும் உருவாக்கி வருவார்கள்.

தொழிலாளர்களுக்கும், முதலாளிகளுக்கும் இடையில் இருக்கும் பகைமைகளைக் காட்டிலும் _ தொழிற்சங்கங்களுக்கிடையில் மிகத் தீவிரமான பகைமை இருக்கும் ஒரு வெட்கக் கேடான _ அதிர்ச்சியான நிகழ்வை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொழிலாளர்களிடையே தலைமைப் பதவியைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரு சிலரின் லட்சியம்தான் இதற்குக் காரணம். கம்யூனிஸ்டுகள், தொழிற்சங்கத் தலைவர்கள் மூன்றாம் வகையைச் சார்ந்தவர்கள். இவர்கள் நல்ல அறிவுள்ளவர்கள்தாம். ஆனால், தவறான வழிகாட்டலில் இருப்பவர்கள் என்பதைத் தயக்கமின்றிக் கூறுவேன். தொழிலாளர்களுக்கு இவர்களைக் காட்டிலும், பெருந்தீங்கு இழைத்தவர்கள் வேறு எவரும் இல்லை என நான் இன்னும் கூற முடியும்.

(1938ஆம் ஆண்டு, நாசிக் மாவட்டத்தில் நடைபெற்ற ஜி.அய்.பி. தாழ்த்தப்பட்டோர் ரயில்வே தொழிலாளர் மாநாட்டின் தலைமை உரையிலிருந்து…)

இந்திய தேசமே

ஒரு போலித் தோற்றம்

ஜனவரி 26, 1950 அன்று இந்தியா ஒரு சுதந்திர நாடாக இருக்கும். ஆனால், இந்த சுதந்திரம் நீடித்து இருக்குமா? அல்லது மீண்டும் சுதந்திரம் பறிபோய் விடுமா? இந்தியா எப்பொழுதும் சுதந்திரமான நாடாக இருந்ததில்லை என்பதல்ல.

பிரச்சினை என்னவெனில், இந்தியா தன் சுதந்திரத்தை ஒரு முறை இழந்துவிட்டது; இரண்டாவது முறையும் அதுபோல தன் சுதந்திரத்தை அது இழக்க நேரிடுமா? எதிர்காலத்தில் இந்தியா எப்படி இருக்கப் போகின்றது என்ற எண்ணமே என்னை மிகவும் சிந்திக்க வைக்கின்றது.

26.1.1950 முதல், இந்தியா ஒரு குடியரசாகத் திகழவிருக்கின்றது. அன்று முதல் இந்தியா, மக்களுக்கான மக்களால் நிருவகிக்கப்படும் ஒரு ஜனநாயக நாடாக விளங்கும். ஆனால், இந்திய குடியரசின் அரசியல் சட்டம் என்னவாகும்? அதையும் இந்த நாடு இழந்துவிடுமா?

அரசியல் சார்ந்த நமது மக்களாட்சித் தன்மையை, சமூகத் தளத்திற்கும் மாற்றியாக வேண்டும். அரசியல் ஜனநாயகத்திற்கு அடித்தளமான சமூக ஜனநாயகம் விளங்க வேண்டும். அப்போதுதான் அரசியல் ஜனநாயகம் நிலைத்து நிற்கும். சமூக ஜனநாயகம் என்பதன் பொருள் என்ன?

சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்து-வத்தை அங்கீகரிக்கும் வாழ்வியல் நெறியே சமூக ஜனநாயகம். சுதந்திரம் _ சமத்துவம் _ சகோதரத்துவம் இவை மூன்றும் தனித்தனி அங்கமாகக் கருதப்படக் கூடாது. இவை மூன்றும் ஒன்றிணைந்து விளங்க வேண்டும். ஒன்றிருந்து மற்றொன்று இல்லையெனில், அது ஜனநாயகத் தன்மையின் நோக்கத்தையே அழித்துவிடும்.

சுதந்திரத்தை சமத்துவத்திலிருந்து பிரிக்க முடியாது. சமத்துவத்தை சுதந்திரத்திலிருந்து பிரிக்க முடியாது. சுதந்திரத்தையும், சமத்து-வத்தையும் _ சகோதரத்துவத்திலிருந்து பிரிக்க முடியாது. சமத்துவமற்ற சுதந்திரம் ஒரு சிலரின் ஆதிக்கத்திற்கே வழிவகுக்கும். சுதந்திரமற்ற சமத்துவம், தனி மனித முயற்சிகளைப் பாழடித்து-விடும். சகோதரத்துவமற்ற சுதந்திரமும், சமத்துவமும் இயல்பான உறவை ஏற்படுத்தாது.

இந்திய சமுதாயத்தில் இரண்டு தன்மைகள் முழுவதுமாக இல்லை என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். 1. சமத்துவம், சமூகத்தளத்தில், இந்தியா படிநிலைப்-படுத்தப்பட்ட _ சமத்துவமற்ற சமுதாயமாகவே உள்ளது. இது ஒரு சிலரின் முன்னேற்றத்தையும் _ பலரின் வீழ்ச்சியையுமே வெளிப்படுத்துகின்றது. 2. பொருளாதாரத் தளத்தில், ஒரு சிலர் மட்டுமே பெரும் செல்வத்துடன் வாழ்கின்றனர்; பலர் கடும் வறுமையால் வாழும் முரண்பாடு உள்ளது.

26.1.1950 அன்று, நாம் முரண்பாடான வாழ்க்கையில் நுழையப் போகின்றோம். அரசியலில் நமக்கு சமத்துவம் இருக்கும். ஆனால், சமூக, பொருளாதாரத் தளத்தில் _ சமத்துவமற்றத் தன்மையே நீடிக்கும். அரசியலில் நாம் ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒரு நெறி என்பதை அங்கீகரிப்போம். ஆனால், நமது சமூக, பொருளியல் தளத்தில் _ ஒரு மனிதனின் அடிப்படை நெறியை மறுப்பவர்களாகவே இருப்போம்.

இதுபோன்ற ஒரு முரண்பட்ட வாழ்க்கை முறையை _ நாம் எத்தனை நாள்களுக்கு வாழப் போகின்றோம்? சமூக, பொருளாதாரத்தளத்தில் இன்னும் எத்தனை நாளைக்கு நாம் சமத்துவத்தை மறுக்கப் போகின்றோம்? இதுபோன்ற மறுப்புகள் தொடர்ந்து நீடித்தால் _ அரசியல் ஜனநாயகம் வீழ்வதைத் தடுக்க முடியாது.

இந்த முரண்பாடுகளை நாம் மிக விரைவில் களைந்தாக வேண்டும். இல்லை எனில், சமத்துவமின்மையால் அல்லலுறும் அடித்தட்டு மக்கள் _ கடும் உழைப்பால் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த அரசியல் ஜனநாயகத்தையே தகர்த்து விடுவார்கள்.

நாம் ஒரு தேசம் என்று நம்புவதே ஒரு போலித் தோற்றமாகும் என்பதே என் கருத்து. பல்லாயிரக்கணக்கான ஜாதிகளாகப் பிரிந்து கிடக்கும் மக்கள், எப்படி ஒரு தேசமாக முடியும்? நாம் சமூக அளவிலும், மனதளவிலும் ஒரு தேசமாக இல்லை என்ற உண்மையை _ எவ்வளவு விரைவில் உணர்கிறோமோ, அந்த அளவிற்கு நல்லது. அப்பொழுதுதான் நாம் ஒரு தேசமாக ஆக வேண்டிய அவசியத்தைப் புரிந்து கொண்டு, அதற்கேற்றபடி செயல்பட்டால்தான் அந்த இலக்கை அடைய முடியும்.

(25.11.1949 அன்று, அரசியல் நிர்ணய அவையின் இறுதிக் கூட்டத்தில் ஆற்றிய பேருரை.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *