கவிதை – அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் ஏப்ரல் 14

ஏப்ரல் 1-15,2022

சதிவலை கிழித்த அண்ணல் அம்பேத்கர்

– தமிழேந்தி

ஆமையைப் போல

அடங்கிக் கிடந்திட்ட

ஊமைச் சனங்களுக்கு

உச்சரிப்புத் தந்தவன் நீ !

 

ஆண்டவன் பேர்சொல்லி

ஆல்போல் தழைத்திருந்த

தீண்டாமை யின்வேரில்

தீவைக்க வந்தவன் நீ !

 

தலையெழுத் தெனச்சொல்லித்

தற்குறிகள் ஆக்கிவைத்தார்

கலைமகளை உன்தன்

காலடிக்கீழ் வைத்தவன் நீ !

 

மாளிகையில் மட்டுமே

விடுதலையின் வெளிச்சம்; அதை

ஓலைக் குடிசைக்கும்

உள்ளிழுக்க முயன்றவன் நீ !

 

தொட்டால் தீட்டென்றும்

பார்த்தால் பாவமென்றும்

சட்டங்கள் செய்தோர்

சதிவலைகள் கிழித்தவன் நீ !

 

மகாத்துமா மகிமை

மயக்கத்தில் பலரிங்குச்

சுகங்கண்டார்; அன்னார்

சூழ்ச்சிகள் ஒழித்தவன் நீ !

 

காரணைகள் வெண்மணிகள்

கணக்கு முடியவில்லை

தாமிர வருணித்

தண்ணீரும் காக்கவில்லை

 

என்றாலும் அண்ணலே

எழுச்சி தெரிகிறது

வென்றிடுவோம் என்னும்

நம்பிக்கை விரிகிறது.

(தமிழேந்தி கவிதைத் தொகுப்பிலிருந்து…)

 

 


படைக்குல மறவர் அம்பேத்கர்

– கவிஞாயிறு தாராபாரதி

‘ஆதிக் குடிமகனை

               ஆதிக்கக் குடிமக்கள்

வீதிக்கு அனுப்பிவிட்டு

               வேற்றுமைகள் பேசுவதா?’ – என

 

பாதிக்கப் பட்டவர்க்குப்

               பரிந்துரை யானதுடன்

நீதிக்குக் குரல்கொடுத்து

               நிமிர்ந்தெழுந்தார் அம்பேத்கர்!

 

ஆண்டாண்டு காலம்

               அன்னை நாட்டில்

அடிபதிக் கின்ற

               மக்கள் பதிப்பில்

 

‘தடைகளைத் தகர்’ – என

               தன்னம்பிக்கை யூட்டிய

படைக்குல மறவர்நம்

               பாபா அம்பேத்கர்!

 

முற்பட்ட சாதிகட்கே

               மூலதனம் மூளையென்று

கற்பித்த தப்பிதத்தைக்

               களைந்தெறிந்த மாமனிதர்!

(‘இன்னொரு சிகரம்’ தொகுப்பிலிருந்து…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *