சிந்தனைக் களம் : தட்டிப் பறிக்கப்படும் தமிழர்களின் வேலைவாய்ப்பு!

மார்ச் 16-31,2022

தமிழ்நாட்டில் தபால்துறை, ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கு தமிழர்களை விட வட மாநிலத்தினரே அதிக அளவில் தேர்வு செய்யப்படும் அநீதி தொடர்கிறது. அண்மையில் தபால்துறை பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 946 பேரில் 46 பேர் மட்டுமே தமிழர்கள் என்கிற செய்தி  அதிர்ச்சியளிக்கிறது.

தபால்துறையில் தமிழ்நாட்டில் பணியாற்ற தபால் உதவியாளர், தபால் பிரிப்பு உதவியாளர் ஆகிய பணிகளுக்கு 946 பேர் கொண்ட தேர்வுப் பட்டியல், பிப்ரவரி 10ஆம் தேதி வெளியிடப்-பட்டது. மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடைபெற்று, வெளியிடப்பட்ட தேர்வுப் பட்டியலில் வடஇந்தியர்களின் பெயர்களே நிறைந்துள்ளன. தமிழே தெரியாத நிலையில், இவர்கள் எப்படித் தமிழில் எழுதப்பட்டிருக்கும் முகவரிகளை வாசித்து, தபால்களைப் பிரிப்பார்கள் என்ற கேள்வி ஒருபுறமிருக்க… மத்திய அரசுத் துறைகளில் தமிழர்களுக்கான வேலைவாய்ப்பு தட்டிப் பறிக்கப்படுகிறது என்பது தீவிரமாகக் கருத்தில் கொள்ளவேண்டும்.

இப்படி நடப்பது இது முதன்முறை அல்ல. 2016இல் நடைபெற்ற நேரடி தபால்காரர் பணிக்கான தேர்வில் நடந்த மோசடி “அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொது அறிவு, கணிதம், ஆங்கிலம், தமிழ் ஆகிய தேர்வுகளில் முதல் இரண்டு இடங்களை அரியானாவைச் சேர்ந்தவர்களே பிடித்தனர். தமிழ்த் தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகபட்சமாக 19 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், அரியானாவைச் சேர்ந்தவர்கள் 24, 22 என மதிப்பெண்களைப் பெற்று முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர். அரியானாவைச் சேர்ந்த பல மாணவர்கள் 20 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தனர். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தமிழ்நாட்டு மாணவர்கள், அரியானா மாணவர்களின் செல்போன் எண்களைக் கண்டறிந்து, அவர்களிடம் பேசியபோது, அவர்களுக்குத் தமிழே தெரியவில்லை; மோசடி செய்து அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது அம்பலமானது. அன்றைய தி.மு.க. எம்.பி.க்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பியதைத் தொடர்ந்து சி.பி.அய். விசாரணை நடத்தப்பட்டு, தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து தேசிய தபால் தந்தி ஊழியர் சம்மேளனத்தின் முன்னாள் பொதுச்-செயலாளர் ராமமூர்த்தி அவர்கள் கூறுகையில், “தமிழ்நாட்டில் தபால்துறையின் காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியை 2014க்கு முன்புவரை தபால்துறையே செய்துவந்தது. அதுவரை, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே பணியில் சேர்ந்தனர். ஆனால், தேர்வு செய்யும் பணி 2014லிருந்து மத்திய பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்கக் கூடாது என்று ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்-தோம். நாம் அச்சப்பட்டதுபோல இன்றைக்குத் தமிழ்நாடு இளைஞர்களின் வேலைவாய்ப்பு தட்டிப் பறிக்கப்படும் சூழல் தொடர்கிறது. தமிழ்நாட்டில் அனைவருமே ஆங்கிலத்தில் முகவரியை எழுதுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. தமிழில் எழுதப்பட்ட முகவரிகளைப் படித்து, தபால்களைப் பிரிக்க வேண்டும். தமிழ் தெரியாத வடமாநிலத்தவர் எப்படி இந்த வேலையைச் செய்வார்கள்? இதனால், மக்கள்தான் பாதிப்படைவார்கள்’’ என்றார் கவலையுடன்!

ரயில்வே துறையிலும் இதே அநீதிதான் நடந்தது… 2020இல், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தேர்வு செய்யப்பட்ட 581 தொழில்நுட்பப் பணியாளர்களில் 12 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்; மற்ற அனைவரும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்-களே. 2012இல், சென்னை மத்திய மண்டல ரயில்வேயில் நிரப்பப்பட்ட 884 காலிப் பணியிடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 80 பேர் மட்டுமே வேலைவாய்ப்பு பெற்றனர். 2013இல், ரயில்வே குரூப் 4 பதவிகளுக்கு நிரப்பப்பட்ட 2,361 காலிப் பணியிடங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 74 பேர் மட்டுமே வேலைவாய்ப்பு பெற்றனர்.

இப்படி மத்திய அரசின் துறைகளில் மட்டுமல்லாமல், மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் வெளிமாநிலத்தவர் நியமிக்கப்-பட்ட சூழலையும் தமிழ்நாடு கண்டது. 2019இல், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 325 உதவிப் பொறியாளர்கள் பதவிகளுக்குத் தேர்வு நடைபெற்றதில், வெளி மாநிலங்களைச் சேர்ந்த 38 பேர் தேர்வாகினர். தமிழ்நாட்டிலேயே ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் இருக்கும் சூழலில், அவர்களின் வாய்ப்பு வெளிமாநிலத்தவருக்குப் போனது.

மத்திய அரசுத் துறைகளுக்கான பணியாளர் தேர்வு, மய்யப்படுத்தப்பட்ட தேர்வாக இல்லாமல் மாநில அளவில் நடத்தப்படுகிற தேர்வாகவும், தமிழில் எழுதக்கூடிய வகையிலும் இருப்பதே இதற்கான தீர்வு ஆகும். தீர்வு எளிதில் வராது. ஒட்டுமொத்தத் தமிழர்களும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *