நூல்: அழுகையை நிறுத்து
ஆசிரியர்: கோ.கலைவேந்தன்
பதிப்பகம்: தேங்கனி பதிப்பகம், 17, புதுநகர், குத்தாலம் – 609 801, மயிலாடுதுறை மாவட்டம்.
செல்: 89402 30310
ஆசிரியக் கவிஞர் கோ.கலைவேந்தன் அவர்கள் தனது படைப்பான “அழுகையை நிறுத்து!’’ என்னும் இந்நூலின் கவிதைகள் வாயிலாக சமுதாயம், பொருளாதாரம், அரசியல், பகுத்தறிவு, விடுதலை உணர்வு இவற்றுடன் இயற்கையையும் சேர்த்து மிகவும் எளிய நடையில் புரிந்து கொள்ளுமாறு அழகாகப் பாக்களைக் கொண்டு செலுத்துகிறார்.
சமூகத்தில் நிலவும் அவலங்களையும் அவற்றைப் போக்குவதற்கான சிந்தனை-களையும் விதைத்துள்ளார். ஆதிக்க வர்க்கத்தின் அதிகாரப் போக்கால் மக்கள் படும் துன்பங்களை யதார்த்தமாகக் காட்டியுள்ளார். அடிமைத் தளையில் இருந்து விடுதலை பெறத் தேவையான உணர்ச்சி அலைகளைத் தவழவிட்டுள்ளார். ஆங்காங்கே நறுக்குத் தெறித்தாற்போல் பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பதித்துள்ளார்.
ஏன் அல்லற்பட்டு அழவேண்டிய நிலை என்பதையும் படம் பிடித்துக் காட்டியதுடன், “அழுகை நிறுத்திட ஆர்த்தெழு!’’ என்பதை கவிதையின் உள்ளுறையாக வைத்திருப்பது பாராட்டத்தக்கது.
மொத்தத்தில் மானுடநேயத்தை மய்யமாகக் கொண்டு தமது கவிதை வரிகளில் சீர்திருத்தக் கருத்துகளைச் சிந்திச் சிந்திக்க வைத்துள்ளார்.
பொதுவாக மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் யாவரும் படித்துப் பயன்-பெறத்தக்க க(ருத்து)விதை நூல் என்பதில் அய்யமில்லை.