சிந்தனைக் களம் : உவமைத் திறனில் ஒளிரும் ஆசிரியர்

பிப்ரவரி 16-28,2022

முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

ஆதாரங்களை அடுக்கடுக்காய்க் காட்டி தன் கருத்தை நிலைநாட்டுவதில் ஆசிரியர் வல்லவர் என்பதை அனைவரும் அறிவர். அதேபோல் உவமை கூறும் ஆற்றலிலும் அவர் வல்லவர். எடுத்துக்காட்டாக, தந்தை பெரியார் எப்படிப்பட்டவர் என்பதை விளக்க, ஆசிரியர் கூறிய உவமை இதோ:

ஓவியம்

“ஓவியத்திற்கு என்று ஒரு முறை உண்டு. ஓவியம் வரையலாம். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் கூட ‘ஓவியம் வரைந்தான் என் உள்ளத்தினை வரைந்தான்’ என்று சொல்வதைப் போல _ ஓவியத்திலே கெட்டிக்கார திறமைசாலியான ஓவியர்கள் உண்டு. அந்த ஓவியரைப் பார்த்து எதைக் கேட்கலாம்? படத்தையே கூடக் கொடுக்காமல் ஓர் உருவத்தையே வரையச் சொல்லலாம். என்னுடைய தாத்தா ஒருவர் இருந்தார். அவருடைய புகைப்படம் இல்லை. ஆனால், தாத்தாவினுடைய ஓவியம் சிறப்பாக இருக்க வேண்டுமென்று நான் கருதுகிறேன். அதைப் போல ஒன்றை நீங்களாவது கொடுங்கள் என்று சொன்னால் ஓவியர் சரி என்று சொல்லுவார். வரைந்து கொடுப்பார். ஓவியருக்கு அந்தத் திறமை உண்டு. அவர் பேரன் இப்படியிருந்தால் தாத்தா எப்படியிருப்பார் என்ற கற்பனையிலேயே அவருடைய ஆற்றல், அறிவு, திறமை ஆகிய எல்லாவற்றையும் செலவழித்து ஓர் ஓவியத்தை வரைந்து கொடுப்பார். இது ஓவியருடைய வரைமுறை.

புகைப்படக்காரர்

அடுத்தபடியாகப் புகைப்படக்காரர். அவரைப் பார்த்து, ‘புகைப்படம் எடுத்துக் கொடு’ என்று சொன்னால் இருப்பவர்களைப் பார்த்துத்தான் அவர் புகைப்படம் எடுத்துக் கொடுப்பார் அல்லது ஏற்கெனவே நீங்கள் கொடுத்த புகைப்படத்தைப் பெரிதாக்கிக் கொடுப்பார் அல்லது அதையே எடுத்துக் கொடுப்பார். இது அவர்களுடைய ஆற்றலைப் பொறுத்தது. இன்னும் கேட்டால் நாம் அவர்களைப் பல நேரங்களிலே புகைப்படம் எடுத்துக் கொடுக்கும்போது கேட்கிறோம். ‘என்ன? என்னுடைய படம் அழகாக இல்லையே’ என்று கேட்பதுண்டு. அதற்கு அவர் என்ன செய்வார்? ‘உங்கள் படம் உங்களை மாதிரித்தானே இருக்கும் என்று முடிவாக அவர் சொல்ல முடியாது. ஏனென்றால் அவர்கள் அந்தத் தொழில் துறையிலே ஈடுபட்டிருக்கிற காரணத்தால் அவர், ‘பரவாயில்லை நான் முயற்சி செய்கிறேன். இன்னும் கொஞ்சம் ‘டச்அப்’ செய்கிறேன்’ என்று சொல்லி அவர் தன்னுடைய திறமையை எல்லாம் காட்டி இவரை அழகாகக் காட்டுவார்.

இவரை இவராகவே காட்டுகிறார் என்பது முக்கியமல்ல. இவர் அழகைக் கூட்டிக் காட்டுகிறார் என்பது பொருள். எனவே, இது ஒரு வகை.

அழகாக இல்லாதவர்களைக் கூடத் தன்னுடைய கை வண்ணத்தால் அழகாக ஆக்கிக் காட்டுவது புகைப்பட நிபுணருடைய சிறப்பாகும்.

எக்ஸ்ரே

இன்னொரு வகை நிபுணர்கள். அவர்-களுடைய பெயர்தான் எக்ஸ்ரே நிபுணர்கள்.     எக்ஸ்ரேக்காரரும் கிட்டத்தட்ட புகைப்படக்-காரர்தான்.

எக்ஸ்ரேயை டாக்டர் போட்டுப் பார்த்து எலும்பு உடைந்திருக்கிறது என்று சொன்னவுடன், அதைப் பார்த்து ஒருவர் இதையும் கொஞ்சம் ‘டச்அப்’ செய்து கொஞ்சம்  மாற்றி அழகாகக் கொடுங்கள் என்று கேட்டால் எக்ஸ்ரே நிபுணர் என்ன சொல்வார்?

இது என்னுடைய வேலை இல்லை. அப்படிச் செய்தால் என்னுடைய வேலையே போய்விடும் என்பார்.

ஓவியக்காரர் பார்க்காமல் வரைவார். புகைப்படக்காரர் கொஞ்சம் அழகுகூட்டிக் காட்டுவார். ஆனால், இருப்பதை அப்படியே காட்டுவார் எக்ஸ்ரே நிபுணர்.

இந்தச் சமுதாயத்தில் எத்தனையோ தலைவர்கள் தோன்றினாலும் தந்தை பெரியார் அவர்கள் ஒரு எக்ஸ்ரே நிபுணர்தாம்! தன்னைப் புகைப்படக்காரர் ஆக்கிக் கொண்டதில்லை.

பதவிக்கே அவர் போகாத காரணத்தால் புகைப்படக்காரராகத் தன்னை அவர் ஆக்கிக் கொண்டதில்லை.

உடைந்த எலும்புகளைக் காட்டி அதற்குப் பரிகாரம் காண வேண்டிய காரணத்தினால்தான் அப்பட்டமான உண்மைகளை அப்படியே எடுத்து வைத்தார்.

பொருளாதாரமா?

பொருளாதாரத்தில் உயர்வு தாழ்வு என்பதை நீக்கிவிட்டால், அதாவது தாழ்த்தப்பட்ட ஒருவன் கோடீசுவரன் ஆகிவிட்டால் எல்லா பேதமும் ஒழிந்துவிடும் என்று பேசும் சமதர்மவாதிகள் இருக்கிறார்கள் அல்லவா? அவர்களைப் பார்த்து ஆசிரியர் கேட்ட கேள்வி, “ஏழ்மை என்பது இருக்கின்ற நிலையில் அது மாற்றப்பட்டால் ஜாதி ஒழிந்துவிடுமா?’’ இக்கேள்விக்கு ஒழியாது; நிச்சயம் ஒழியாது என்று கூறிவிடலாம்.

முதல் உதாரணம் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் பற்றியது. நீண்ட காலம் பதவியில் இருந்தவர் என்ற பெருமைக்குரியவர். பாதுகாப்பு அமைச்சர். அந்நாளில் முப்படைகளுக்கும் அமைச்சர். அவர் ஆணையிட்டால் படை எங்கும் படை எடுக்கும். அப்படிப்பட்ட பதவிக்குரிய சக்தி வாய்ந்தவர். மொத்தத்தில் _ சக்தி வாய்ந்தவருக்கே ஜாதிக் கொடுமையிலிருந்து பாதுகாப்பு இல்லை. அது மட்டுமா? பொருளாதாரத்திலும் நல்ல வலிமை படைத்தவர்.

அத்தகையவருக்கு நேர்ந்த அவமானம் _ ஜாதிக் கொடுமை அன்றைய நாளில் பாவம் போக்கும் காசி, புண்ணியம் சேர்க்கும் வாரணாசியிலே நடந்தது.

“காசி என்று அழைக்கக்கூடிய வாரணாசியிலே டாக்டர் சம்பூர்ணானந்த் அவர்களின் சிலையைத் திறந்துவைக்க பாபு ஜெகஜீவன்ராம் அழைக்கப்பட்டு அவர் அங்கே போனார். பாபு ஜெகஜீவன்ராம் திறந்து வைக்கக் கூடிய சிலை இருக்கிறதே அது தெருவில் இருக்கக் கூடிய சிலைதான். கோயில் மணி அடிக்கக்கூடிய சிலைகூட அல்ல. தெருவில் நிறுத்தப்பட்ட சிலை. அவர் இராணுவ அமைச்சசராகப் போய்த் திறப்பதற்காக இறங்கும்போது காசி இந்து சர்வகலா சாலை மாணவர்கள் இவருக்கு எதிராகக் கோஷம் போட்டு இவரைக் கேவலப்படுத்தி, ‘தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரரான ஜெகஜீவன்ராமே திரும்பிப் போ’ உயர்ந்த ஜாதிக்காரரான சம்பூர்ணானந்த் சிலையை நீங்கள் திறந்தால் இந்தச் சிலை தீட்டாகிவிடும்’  என்று கூறினார்கள்.

பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் அந்த நிகழ்ச்சியில் உரைகூட நிகழ்த்தாமல் _ நேரே போனார். ஒரு பொத்தானை அழுத்தினார். சிலையைத் திறந்தார்; திரும்பினார். உடனே கங்கையிலே இருந்து கொண்டு வந்த பத்துக் குடம் தண்ணீரை அந்த மாணவர்கள் அந்தச் சிலையினுடைய தலையிலே ஊற்றினார்கள். ஏன்?

அட பிரகஸ்பதிகளே! அந்தப் பத்துக் குடம் தண்ணீரை ஜெகஜீவன்ராம் தலையிலே ஊற்றி அவரையே மேல்ஜாதி ஆக்கியிருக்கலாமே!

அவர்மீது இருக்கும் தீட்டு போயிருக்குமே! அவரும் ‘வாழ்நாளிலே கிடைக்க முடியாத பிரமோஷன் கிடைத்திருக்கிறது’ என்று திருப்தியோடாவது இருந்திருப்பார்.’’ இவற்றைக் கூறிய பகுத்தறிவுப் போராளியின் பகுத்தறிவுச் சிந்தனைதான் நம்மை வியக்க வைக்கிறது.

இங்கே திருமயிலையில் குடமுழுக்கிற்கு ரூ.50,000 கொடுத்தார் சர்.தியாகராயர். குடமுழுக்கு நடைபெறுகையில் இவர் கீழே நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார். இவரிடம் கைநீட்டிச் சம்பளம் வாங்கும் பார்ப்பனர் பூணூல் ஜாதி என்பதால் கோபுரத்தின் மேலே. சொரணை வந்தது தியாகராயருக்கு. கருத்து மாறுபாடு கொண்டிருந்த டி.எம்.நாயருடன் சேர்ந்தார். நீதிக்கட்சி எனும் தென் இந்திய நல உரிமைக் கழகம் பிறந்தது.

இப்படி எடுத்துக்காட்டுகளாலேயே சமூகநீதிக் கோட்பாட்டை, பகுத்தறிவுச் சிந்தனையை வகுப்புரிமைச் சிறப்பை எடுத்து விளக்கும் ஆற்றல்மிக்க ஒருவர், தமிழர் தலைவர் ஆசிரியர் ஒருவரே என்பதைக் காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *