தமிழ்நாட்டில் தாங்கள் ஆட்சியிலிருந்த 10 ஆண்டு காலத்தில் ஊராட்சி _ நகராட்சி _ கிராமப்புற மக்கள் நலன் பாதுகாக்க _ ஊர் வளம் பெற்று வளர வாய்ப்பு ஏற்படுத்தும் உள்ளாட்சிமன்றத் தேர்தல்களை நடத்தாமல் காலந்தாழ்த்தியதற்கு அ.தி.மு.க எவ்வித நியாயமான சமாதானத்தையோ, விளக்கத்தையோ தரவே இயலாத நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். தேர்தலில் அவர்கள் அளித்த வாக்குறுதிகளைச் செயல்படுத்திடும் வண்ணம் ஊராட்சித் தேர்தல்களை சில மாதங்களுக்கு முன் நடத்தி அதில் தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. _ பா.ஜ.க. கூட்டணி தோல்வி அடைந்தது!
வருகிற 19ஆம் தேதி (19.2.2022) மாநகராட்சிகளுக்கும், நகராட்சிகளுக்கும் தேர்தல்களை நடத்தி உள்ளாட்சி அமைப்புகளை இயக்கி மக்களின் நலன்காக்க ஆயத்தமாகி வருகின்றனர். முந்தைய ஆட்சி (அ.தி.மு.க. ஆட்சி) 10 ஆண்டுகளில் சாதிக்காதவைகளை _ எட்டே மாத ஆட்சியால் சாதித்துக் காட்டி, அதன் சாதனைகளைக் காட்டியே மக்களிடம் வாக்கு கேட்க நெஞ்சை நிமிர்த்தி வருகிறது தி.மு.க.
அது மட்டுமல்ல; தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து முற்போக்கு கட்சிகளையும் கூட்டணியாக இணைத்து, போராட்டக் களமானலும், தேர்தல் களமானாலும் தம்முடன் இணைத்துச் செல்லும் மாண்பு மற்றவர்களும் வியக்கத்தக்க ஒன்றாகும்!
தி.மு.க.வை வெறும் வசை மட்டுமே பாடிடும் _
அ.தி.-மு.க.வோ கடந்த 10 ஆண்டுகால ஆட்சி செய்த கட்சி என்ற தகுதியைக்கூட மறந்துவிட்டு, தேர்தல் பிரச்சாரத்தில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் தி.மு.க. ஆட்சி இன்னும் 27 அமாவாசைக்குள் இருக்காது என்று பேசுவது, சித்தபிரமை கொண்டவர்கள் உளறல்போலவே பல நடுநிலையாளர்களுக்கும் தோன்றுகிறது!
அ.தி.மு.க.வுடன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியிலிருந்த பா.ம.க.வோ, பா.ஜ.க.வோ இப்போது இந்தத் தேர்தலில் கூட்டணியில் இல்லை.
‘மருத்துவரே உம்மை குணப்படுத்திக் கொள்ளுங்கள் முதலில்’ என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி.
அதுதான் எதிர்க்கட்சித் தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரது தேர்தல் மேடைப் பேச்சுகளைக் கேட்கும் போதெல்லாம் நமக்கு நினைவுக்கு வருகிறது!
முன்னாள் அமைச்சர்கள் ஊழல் நாயகர்களாகியுள்ளனர். அவர்களின் அளவுக்கு மீறிச் சேர்த்த சொத்துக்கள், பினாமி சொத்துகள் இவைகள் மூலம், தமிழ்நாட்டுப் பா.ஜ.க.வோ இவர்களை அணைத்து அழித்திட திட்டம் தீட்டிச் செயல்படும் நிலையில், முதலில் தி.மு.க.விடமிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுவதை விட முக்கியம், பா.ஜ.க.விடமிருந்து உங்களையும் உங்கள் கட்சியையும் காப்பாற்ற முனையுங்கள்.
உள்ளாட்சியை நல்லாட்சியாகத் தர, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்திறன், சொன்ன வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் தருவதன் மூலம், இந்தியாவின் தலைசிறந்த முதல்வராக முதற்படிக்கட்டில் எட்டே மாதங்களில் ஏறி நின்று பெருமை பெறுகிறார்!
அவரைக் குறைகூறும் இந்தக் எதிர்கட்சிகளின் பிரச்சரம், பா.ஜ.க.வை வேரற்ற பாறையில் நடுவது போல ஆகிவிடும். இத்தேர்தலில் பா.ஜ.க. போன்ற கட்சிகளால், தி.மு.க. கூட்டணி வெற்றியை ஒருக்காலும் தடுத்து நிறுத்தி விட முடியாது!
காரணம் இப்போது நடைபெறும் மு.க.ஸ்டாலினின் விடியல் ஆட்சி, ஒரு கட்சி (தி.மு.க.) ஆட்சி அல்ல; அனைத்து மக்களுக்குமான உரிமை ஆட்சி. பொறுமை, பொதுமை, புதுமை _ செழுமை பூத்துக் குலுங்கும் புத்தெழுச்சிக்கான பூபாளம் பாடும் ஆட்சி. அதன் நீட்சியாகத்தான் உள்ளாட்சி தேர்தலின் வெற்றி அமையும்.
தி.மு.க. கூட்டணி வெற்றி வாகை சூடுவதன் மூலம் உள்ளாட்சி நல்லாட்சியாக மலருவது உறுதி. காரணம், மக்களின் பக்கம் ஸ்டாலின் ஆட்சி; முதலமைச்சர் ஸ்டாலின் பக்கம் மக்கள். எனவே, வெற்றி மக்களுடையதே! புரிந்து கொள்ளட்டும் புலம்புவோர்!
– கி.வீரமணி,
ஆசிரியர்