பெண்ணால் முடியும்!

ஜனவரி 16-31,2022

காவல் துறையில் சேவை நாயகி!

அண்மையில் தமிழ்நாட்டு முதல்வராலும், ஊடகத்தினால் பெரிதும் பாராட்டப்பட்டவர், டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி. கீழ்ப்பாக்கம் கல்லறையில் மயங்கிய நிலையில் கிடந்தவரை தனது தோள்களில் சுமந்து காப்பாற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலரான இவர் முன்மாதிரியாகப் பேசப்படுகிறார். அவருடைய பணி அனுபவத்தைப் பற்றிக் கூறுகையில்,

“எனக்கு ஊர் பெரியகுளம். ஆனால் பிறந்தது திருநெல்வேலி. படித்தது சென்னையில். சென்னை எம்.சி.சி. கல்லூரியில் முதுகலை முடித்தேன்.

முதலில் ராணுவத்தில் சேரவே ஆசைப்-பட்டேன். அப்போது ராணுவத்தில் பெண்களை எடுக்க மாட்டார்கள். எனவே காவல்துறை சீருடையை அணிய நேர்ந்தது. அசோக் நகர் காவலர் பயிற்சிக் கல்லூரியில் இணைந்து ஆணுக்கு நிகராக அனைத்துப் பயிற்சிகளையும் நானும் எடுத்தேன்.

பயிற்சியில் எனக்கு ஸ்ட்ராங்கான ஃபவுண்டேஷன் கிடைத்தது. பயிற்சி முடிந்ததும் 1991இல் முதல் நிலைக் காவலராக பணியில் சேர்ந்தேன். 2010இல் காவல் ஆய்வாளரானேன். தற்போது டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளராகப் பொறுப்பேற்று 3 மாதங்கள் ஆகிறது. “நேர்மையாக இரு. நியாயத்துக்காகப் போராடு. உன் கண் முன்னால் எந்தக் குற்றம் நடந்தாலும் தட்டிக் கேளு’’ என்ற என் அப்பாவின் தாரக மந்திரங்களை அப்படியே பின்பற்றி வருகிறேன்.

சென்னை பேசின் பிரிட்ஜ்தான் எனக்கு முதல் அப்பாயின்ட்மென்ட். லா அண்ட் ஆர்டரில் முதல் ஆய்வாளர் நான். நான் எப்போதும் நேருக்கு நேராக மோதுபவள். ஒருமுறை கஞ்சா அக்யூஸ்ட் ஒருவன் பாட்டிலை உடைத்து என்னை நோக்கி குத்த வந்தான். வாடா.. வா குத்து.. குத்து.. என்றேன். ஆனால், அவன் குத்தவே இல்லை. அவன் கையை அவனே கீறிக்கொண்டு திரும்பி ஓடிட்டான். சும்மா பயம் காட்டுவானுங்க. வா செய்யுன்னு எதிர்த்து நின்னால் ஓடிருவானுங்க. குற்றவாளியை  பிடிக்கணும்னு நினைத்தால் விடவே மாட்டேன்.

1992இல் மகாமகம் குள சம்பவத்தில் விபத்தில் சிக்கியவர்களையும், இறந்த உடல்களையும் அப்போதே என் தோள்களில் தூக்கிப்போட்டு மேலே கொண்டு வந்து சேர்த்தேன்.

2015 சென்னை வெள்ளத்தில் மக்களை மீட்டுக் காப்பாற்றியது, கோவிட் தொற்று நேரத்தில் கடும் பணியாற்றி  இறந்த உடல்களை மீட்டு மரியாதையுடன் அடக்கம் செய்தது என சவால்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஒரு மனித உடலைத் தூக்கி, தோளில் போட்டுச் செல்வது சாதாரணமில்லைதான்.

பெண்கள் உறுதியானவர்களாக இருக்க, பெண்களுக்கு உடற்பயிற்சி ரொம்பவே முக்கியம். சிறந்த போல்வால்ட் பிளேயர். போல்வால்ட்டில் ஏசியா ரெக்கார்ட் செய்திருப்பதுடன் பின்லாந்து, தாய்லாந்து, சீனா என பல்வேறு நாடுகளில் பரிசைகளைப் வென்றிருக்கிறேன்.

பெண்கள் விளையாட்டில் ஏதாவது ஒருதுறையில் கட்டாயம் இருக்க வேண்டும். அப்போதுதான் தைரியமும், தன்னம்பிக்கையும், சுய பாதுகாப்பும் உருவாவதால் நம்மால் எதையும் சாதிக்க முடியும்.

கீழ்ப்பாக்கம் கல்லறையில் மயங்கிக் கிடந்தவரை தக்க நேரத்தில் (Golden Hour)  காப்பாற்றியதற்காக தற்போதைய முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், என்னை அவர்கள் வீட்டுக்கே வரவழைத்து அன்பாக உபசரித்துப் பாராட்டி வழங்கிய மடல் இன்னும் நிறைய செய்வதற்கான உந்து சக்தியாக இருந்தது. இந்த ஊக்குவிப்புகளே சாதனை செய்யும் ஆர்வத்தை எனக்குத் தூண்டுகிறது

ஆண்கள்தான் ‘டிபென்டென்ட்’. நாம ‘இன்டிபென்டென்ட்’. எல்லா சவாலான வேலைகளையும் எதிர்நீச்சல் போட்டு பெண்களும் செய்ய முடியும்; செய்கிறார்கள். பெண்கள் அடிமையும் இல்லை; ஆண்கள் அடிமைப்படுத்துவதும் இல்லை. அப்படியாக நினைத்துக்கொண்டு அடிமையாக வாழ்கிறோம். பெண்கள் முதலில் தைரியமாக வெளியே வாருங்கள்’’ என்கிறார் நம்பிக்கையுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *