– பொதட்டூர் புவியரசன்
ஏழையப்பர்
உயரப்பர்
ஒப்பப்பராக
கருத்தப்பம் தந்த
கவியப்பரே!
காற்றில் ஒலிக்கிறது
நீ தந்த தத்துவம்.
புதியதோர்
உலகம் செய்வோம்
என்றதேன்?
மதமும், மடியும்,
மலையும், மடுவும்
கொண்ட இவ்வுலகை
சாய்த்துச் சமன்செய்து
புதியதோர்
உலகம் செய்யாமல்
ஓடப்பரும்
உயரப்பரும்
ஒப்பப்பராகாரென
அறிந்து தானோ?
“இரவில் வாங்கும்
இந்திய சுதந்திரம்
என்று விடியுமோ?
யாரறிகுவரோ?’’
என்று நீ வைத்த
வினாக்குறியை,
முற்றுப் புள்ளியாய்
மாற்றாமல்
கருச்சிதைவு
செய்வது யார்?
தேசிய இனங்களின்
தனி நிலைப்பாடுகளை,
“வேற்றுமையில்
ஒற்றுமை’’ என்று
கரடிவிடும்
தேசியங்கள்,
ஒற்றுமையில்
வேற்றுமையை
உணர மறுப்பதேன்?
காற்றில் ஒலிக்கிறது.
நீ தந்த தத்துவம்.
பெண் கல்வி வளர்க்க
“கடிகாரம் ஓடுமுன்
ஓடு’’ என்றாய்.
ஓடுகிறார்கள்…
கடிகாரம் ஓடுமுன் –
திரைப்படங்களுக்கும்
திருவிழாக்களுக்கும்.
வேரில் பழுத்த
பலாக்களுக்காக
பதறித் துடித்தாயே!
ஆம்.
விதவைகள்
குறைந்து விட்டனர்.
வரதட்சணை
வல்லவரை
எதிர்கொள்ள
முடியாமல்,
மணமாலை சூடாத
கன்னியரால்
விதவைகள்
குறைந்துவிட்டனர்.
“எங்கள் வாழ்வும்
எங்கள் வளமும்
மங்காத தமிழ்’’ என்று
முழங்கிய சங்கு,
இன்று,
தமிழரின்
பிண ஊர்வலத்தில்
மட்டுமே
ஊதப்படுகிறதே;
கேட்கிறதா?
நீ…
மனிதப் புழுக்களைக்
கொட்டிக் கொட்டி
ஓய்ந்து போனதேன்>
நீர்மேல்
எழுத்துகள்கூட
தீப்பற்றினவாம்
அண்மை நாடுகளில்…
உன்
அமில எழுத்துகள்
மண்ணுக்குள்ளா?
அவை
என்றோ ஒருநாள்
பூமிப் பந்தை
பிளக்குமென
உணர முடிகிறது.
இருப்பினும்
ஆற்றா மனத்தால்
வேதனைப்படுகிறோம்.
இருட்டறை உலகை
இடித்துக் காட்டியதால்
உன்னை
இருட்டடிப்பு செய்த
எத்தர்கள்,
உண்மைப் புரட்சிக்கு
உதய கீதம்
தந்த உன்னை
ஓரம் வைத்து,
மாகாளி சக்திக்கு
மயங்கிக் கிடந்தோரைப்
பாரேற்றிவிட
நீ செய்த
குற்றமென்ன?
காகிதப் பூக்களைத்
தேரில் ஏற்றி,
வாசமலர்களை
வீதியில் வீசும்,
விசித்திர ஜீவிகளிடையே
நீ பிறந்ததுதான்
குற்றம்.