மஞ்சை வசந்தன்
சமூகநீதிக்கும் இடஒதுக்கீட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதே போல், இடஒதுக்கீட்டிற்கும் ஜாதிவாரி கணக் கெடுப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. காரணம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஜாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்கள் இந்தியாவில் வாழும் 90% மக்கள். எனவே, ஜாதிவாரி கணக்கீடு என்பது இடஒதுக்கீட்டிற்கு அடிப்படை. அப்படியிருக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு (பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பு) தேவையில்லை என்ற மத்திய அமைச்சரவையின் முடிவு – இடஒதுக்கீட்டை, குறிப்பாக பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை ஒழிப்பதற்கான முதல் முயற்சியாகும்.
இதை தமிழர் தலைவர் ஆசிரியர் கீழ்க்கண்டவாறு கண்டித்துள்ளார்.
“ஒடுக்கப்பட்ட மக்கள் என்பவர்களின் மக்கள் தொகைதான் இந்தியாவின் 130 கோடி மக்கள் தொகையில் 85 விழுக்காட்டிற்குமேல்; சிறுபான்மையினரையும் இணைத்தால் 90 விழுக்காடாகக் கூடும்.
உயர்ஜாதி என்பவர்கள் வடபுலத்தில் ஒரு சில மாநிலங்களைத் தவிர, பெரிதும் 10 விழுக்காட்டிற்குள்தான் அடங்குவர்.
அவர்களே 100 இடங்களில் 90 இடங்களை (சிற்சில பதவிகளில் 100க்கு 100) ஏகபோகமாக அனுபவிக்கிறார்கள். கல்வி, உத்தியோகங்களில் இது பளிச்செனத் தெரியும்.
இந்த ஏகபோகச் சுரண்டலிலிருந்து பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள், எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மையர் இவர்களை மீட்டெடுக்கவே இந்த இடஒதுக்கீடு என்கிற பெரியதொரு மாற்றுத் தீர்வு.
ஜாதி வாரி கணக்கெடுப்பைக் கைவிட முடிவு செய்துவிட்டதாம் – மோடி அமைச்சரவை!
இதனைப் பறிக்க இப்போது குறுக்கு வழியாக – வரும் மக்கள் தொகை தொகைக் (census) கணக்கெடுப்பில் – ஜாதிவாரிக் கணக்கெடுப்பு- பிற்படுத்தப்பட்டோர் – ஓபிசி என்று தனியே பிரித்து எடுப்பதைச் செய்யாமல், விட்டுவிட மோடி அமைச்சரவை முடிவு செய்துவிட்டதாம்!
நீதிமன்றங்களில் வழக்கு சென்றால், அங்கே நீதிபதிகள் எழுப்பும் கேள்வி, இட ஒதுக்கீடு இத்தனை விழுக்காடு தருவதற்கு அடிப்படைப் புள்ளி விவரங்கள் – ஆதாரங்கள் என்ன என்பதே! இந்த நிலையில், இந்த ‘‘கண்ணாமூச்சியை’’ இப்படி நிருவாகத் துறையும், நீதித் துறையும் மாறி மாறி ஆடுவது, ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமையைப் பறிக்கத்தானே!
பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி., எஸ்.டி.,) பிரிவினர் என்று பிரிக்கும் போது, அங்கே ஜாதிவாரி என்பது பற்றிய தெளிவு இல்லை. முதலில் பிற்படுத்தப்பட்டோர் தலையில் கைவைக்கவேண்டும்; அடுத்து மற்றவர் – கடைசியில் வெறும் அடிப்படையில் என்ற போர்வை போர்த்தி உயர்ஜாதியின ருக்குத் ‘தாரை’ வார்க்கும் உத்திகளைப் படிப் படியாகச் செய்யத்தான் இந்த முன்னேற்பாடு.
‘‘ஒரே ஜாதி’’ என்று ஓர் அவசரச் சட்டத்தை ஏன் பிறப்பிக்கக் கூடாது?
ஏதோ ஜாதி ஒழிப்பில் அக்கறை செலுத்தும் அரசுபோல காட்டிக் கொள்ளும் இவர்கள் – மோடி அரசு – மத்திய பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். ‘‘ஒரே மதம், ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே ஆட்சி, ஒரே ரேசன் கார்டு, ஒரே கல்வி முறை’’ என்று கூறிடும் நிலையில், ஏன் ‘‘ஒரே ஜாதி’’ என்று ஓர் அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்கக் கூடாது?
பிற்படுத்தப்பட்ட ஜாதி லேபிளையும் காட்டி, 2014 இல் பிரதமர் பதவிக்கு வரும் போது, பிரதமர் மோடியால் பிரச்சாரம் செய்யப்பட்டதா இல்லையா? அவரது ஜாதிப் பிரிவும் தொடக்கக் காலத்தில் இல்லை. குஜராத் அரசில் சில ஆண்டுகளுக்கு முன்புதான் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் கொண்டு வரப்பட்டது என்ற தகவல் பல நூல்கள்மூலம் வெளிவந்துள்ளனவே!
‘ஜாதி’ (Caste) என்னும் சொல் இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே 18 இடங்களில் இடம்பெற்றுள்ளது. (ஹேவனூர் கமிஷன் அறிக்கை).
அரசமைப்புச் சட்டத்தின் 340ஆம் பிரிவு பிற்படுத்தப்பட்டோர் நலன் பற்றியது என்பதை மறுக்க முடியுமா?
மக்கள் நல விரோத நடவடிக்கை அல்லவா?
ஒவ்வொரு மாநிலத்திலும் பிற்படுத்தப் பட்டோர் ஆணையமும், மத்திய தேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணை யமும் – மண்டல் தீர்ப்புப்படி ஏற்படுத்தப்பட்ட நிலையில், சென்சசில் ஓபிசி – பிற்படுத்தப் பட்டோர்பற்றிய விவரக் கணக்கெடுப்பை கைவிட்டால், அது அரசமைப்புச் சட்ட விரோதம் – மக்கள் தொகையில் 65 விழுக் காட்டுக்குமேல் (சுமார் 90 கோடிக்கு மேல்) உள்ள மக்களுக்கு எதிரான மக்கள் நல விரோத நடவடிக்கை அல்லவா?’’ என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கேட்டுள்ளார்.
அது மட்டுமல்ல, உச்சநீதிமன்றமே ஜாதிவாரி கணக்கெடுப்பின் கட்டாயத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொதுநல வழக்கு – வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு, சென்சஸ் -2021 இல், ஜாதிவாரியாக மக்கள் விவரங்களை பதிவு செய்தால் அது பல வகையில் பயன்படும். எனவே, அவ்வாறு பதிவு செய்ய நீதிமன்றம் ஆணையிட வேண்டும் என்று அந்தப் பொதுநல வழக்கில் கேட்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவு
இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், அதன் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் உள்துறைக்கு இதுபற்றி பரிசீலிக்கலாம்; இது நல்ல யோசனை _- கோரிக்கைதான் என்ற கருத்துக் கூறி, நோட்டீஸ் அனுப்ப ஆணையிட்டிருக்கிறது.
இது ஒரு நல்ல செய்தியாகும்; நாம் பல ஆண்டுகளாக வற்புறுத்தி வருகிறோம்; நாட்டில் உள்ள பல்வேறு சமூகநீதி கோரும் பல சமூக அமைப்புகளும், சமூக விஞ்ஞான உணர்வாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தவே செய்கின்றனர்!
உயர்ஜாதியினர் மற்றும் நம்மில் புரியாத சிலரும்கூட _- ஜாதியை பதிவு செய்து புதுப்பித்து வளர்க்க வேண்டுமா என்று சாதி ஒழிப்பு வீரர்கள் போல் கேட்கிறார்கள். “ஆமாம்; இந்தக் காலத்தில் ஜாதியைக் கேட்டுப் புதுப்பிக்க வேண்டுமா?’’ என்று கோரஸ் பாடுவார்கள்.
அவர்களுக்கு ஒரே ஒரு நேரடிக் கேள்வி – நாட்டில் ஜாதி இருக்கிறதா? இல்லையா?
நாட்டில் ஜாதி ஒழிந்துவிட்டதா?
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதி என்னும் சொல் 18 இடங்களில் வருகிறதா? இல்லையா?
ஜாதி ஒழிந்துவிட்டது என்று இந்தியாவில் எங்காவது, எந்தச் சட்டத்திலாவது இருக்கிறதா? இடம் பெற்றிருக்கிறதா?
12,000 ஆண்டுகளுக்கு முன் இந்திய கலாச்சாரம்பற்றி ஆய்வு செய்யவேண்டும் என்று முனையும் மத்திய அரசின் கலாச்சாரத் துறை அமைச்சகம் அமைத்த குழுவில், ஜாதி சங்க உலகத் தலைவரான – இருவரை பகிரங்க அங்கீகாரம் தந்து நியமித்துள்ளது. (ஒருவர் டில்லி; இன்னொருவர் கனடா நாட்டு பிராமணர் சங்கத் தலைவராம்!)
யாருக்காவது ஆட்சேபனை உள்ளதா?
ஏடுகளில் மணமக்கள் தேவை! விளம்பரங்களில் தனித்தனி ஜாதிக்கு ஏற்ப மணமகன், மணமகள் வரன்கள் தேவை என்று கூச்சநாச்சமின்றி ஜாதிப் பெயரில் திருமண நிலையங்கள் இயங்குகின்றனவே… – அதுபற்றி யாருக்காவது ஆட்சேபனை உள்ளதா?
இன்னமும் ஆவணி அவிட்டம், பூணூல் மாற்றும் – பண்டிகை – அதற்கு விடுமுறை போன்ற கூத்துகள் உள்ளனவே… அவை மாறிவிட்டனவா?
இன்னமும் ஜாதிப் பட்டத்தை அது ஏதோ படித்து உழைத்துப் பெற்ற பட்டம் போல் வெட்கமின்றி போட்டுத் திரிகிறார்களே… அவர்களை யாராவது தடுத்தது உண்டா?
ஆக, ஜாதியை நிலைநிறுத்த விரும்புகின்ற ஆதிக்க ஜாதியினர்தான், சாதிவாரி கணக்கீட்டை எதிர்க்கிறார்கள். அவர்கள் எதிர்ப்பு ஜாதியை ஒழிக்க அல்ல. பிற்படுத்தப்பட்டோரின் பலம் என்ன என்பது தெரிந்துவிடக் கூடாது என்பதே.
எனவே, இப்படி மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி வாரியாக சென்சஸ் நடத்தினால், ஒவ்வொரு ஜாதிக்கும் உரிய சமூகநீதி சரியாகக் கிடைக்கும்.
காலத்தின் கட்டாயம்; சமூகநீதிக்கான அளவுகோல்
எனவே, மத்திய அரசு, உச்சநீதிமன்றமே வரவேற்றுள்ள இந்தக் கருத்தினை ஏற்கவேண்டியது நியாயம்; காலத்தின் கட்டாயம்; சமூகநீதிக்கான அளவுகோல் ஆகும்.
தாமதிக்காமல் இப்போதிருந்தே அதற்கான சமூகநீதி ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். நாட்டில் உள்ள அத்துணைக் கட்சிகளும், சமூக அமைப்புகளும் இதனை வலியுறுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றிட வேண்டும்.
தமிழக அரசு செய்ய வேண்டியது
ஆனால், இந்திய ஒன்றிய அரசு இவ்விஷயத்தில் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று மகாராஷ்டிர சட்டமன்றத்தில் 2020 ஜனவரி 7ஆம் தேதியன்று ஒரு மனதாகத் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையருக்கு அனுப்பியது மகாராஷ்டிர அரசு.
அதற்கு பதிலளித்து மத்திய அரசின் பதிவுத்துறை பொதுமேலாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர், மஹாராஷ்டிர மாநில அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஜாதி வாரியான கணக்கெடுப்பு இப்போது வேண்டாம்; குறிப்பாக இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பில், உட்பிரிவு, துணைப்பிரிவு, இன்ன குலப்பிரிவு, கோத்திரப் பிரிவு என்று சொல்லி அவர்கள், உச்சரிப்பு நிலையிலேயே பெரும் குழப்பத்தை உண்டு பண்ணி விடுவார்கள். அது கணக்கெடுப்பின் துல்லியத் தன்மையைப் பாதித்துவிடும் என்று முட்டுக்கட்டை போட்டுள்ளார்.
மத்திய அரசின் இந்த நிலைப்பாடு இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் வயிற்றில் நெருப்புக் கங்குகளை வாரிக் கொட்டுவதாக உள்ளது?
பிரிட்டிஷ் அரசு 1931ஆம் ஆண்டு நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பின் 2021ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள கணக்கெடுப்பை, ஜாதிவாரியிலான கணக்கெடுப்பாக நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக பிகார் மாநில துணை முதல்வரும், நிதியமைச்சருமான பா.ஜ.க தலைவர் சுசில்குமார் மோடி, அக்கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் அறிவித்தார்.
இவ்வளவு நம்பிக்கை ஊட்டிய பின்னும், தற்போது மத்திய அரசு பின்வாங்குவது அதற்கு இருக்கும் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
இவர்களைத்தான் அறிஞர் அண்ணா, பேச நா இரண்டுடையாய் போற்றி! என்றாரோ?
பெயர், பாலினம், கல்வித் தகுதி, திருமணம் ஆனவரா, ஆகாதவரா, தொழில் முதலியவற்றைக் குறித்து பொதுக் கணக்கெடுப்பு எடுக்கிறபோது ஜாதி, அதன் உட்பிரிவு என ஒரு பிரிவு இருப்பதுவும், அதில் இன்னதென்று குறிப்பதுவும் அலுவலர்களுக்கு என்ன இடப் பிரச்சினையை ஏற்படுத்தி விடப் போகிறது?
இல்லை, மருத்துவப் படிப்புக்கான இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட பிரிவி னருக்கு விரோதமாக நடந்துகொண்டதுபோல், பொதுத்துறை வங்கிகளுக்கான அதிகாரிகள் தேர்வில் பிற்படுத்தப்பட்டோரின் இடங்களைப் பிடுங்கி, துரோகம் செய்ததுபோல் மத்திய அரசு எதிர்மறையான போக்கைக் கடைப்பிடிக்கிறதா?
இல்லை, ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால், அதில் பார்ப்பனர்களின் எண்ணிக்கையை உலகறிந்து விடுமே – அறிந்துவிட்டால், பார்ப்பன சமூகத்தினர் இப்போது, மத்திய, மாநில அரசுப் பணிகளில் இருப்புக்கு அதிகமாக அதிக இடங்கள் பெற்று வருவது, அம்பலமாகி விடுமே _ என்கிற அச்சத்தால் மறுக்கிறதா?
ஏற்கெனவே அகில இந்திய அளவில் 3 முதல் 5 விழுக்காடு மட்டுமே உள்ள பார்ப்பனர்களுக்கு, மேலும் கூடுதலாக ஏழை முற்பட்ட ஜாதியினர் என்ற சலுகைபோல் 10 விழுக்காடு ஏன் ஒதுக்கப்பட வேண்டும்? என்று மக்கள் போராட ஆரம்பித்துவிடுவார்களே என்கிற பயமா?
இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் வரும் போதெல்லாம், மக்கள் தொகையில் எவ்வளவு பேர் இருக்கிறீர்கள் என்ற கணக்கு இருக்கிறதா என்று திரும்பத்திரும்பக் கேட்கின்றன, மாண்பமை நீதிமன்றங்கள். ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கு இல்லாத காரணத்தால் பல வழக்குகளில் சரியான முடிவுகள் எட்டப்படாமலே இருக்கின்றன.
1871 முதல் 1931 வரை ஒவ்வொரு பத்தாண்டிலும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எடுத்தது அன்றைய ஆங்கில அரசு. இரண்டாம் உலகப்போர் காலத்திலும்கூட 1941ஆம் ஆண்டு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுத்தது. அப்போதைய நிதிச் சூழல் காரணமாக அதைப் பட்டியலிட்டு நிறைவு செய்யமுடியாமல் போனது. எனவே, 80 ஆண்டுகளுக்குப் பின்னும் 1931ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலேயே இடஒதுக்கீடு பிரச்சினையை அணுக வேண்டியுள்ளது.
எனவே, இந்த முறை மக்கள் தொகை கணக்கீட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கட்டாய தேவையாகிறது.
மத்திய அரசுகள் இதுவரை அமைத்துள்ள காகா காலேல்கர் தலைமையிலான முதல் பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் நலக்குழுவும், பி.பி.மண்டல் தலைமையிலான இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக்குழுவும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கவேண்டும் என்பதைப் பரிந்துரைத்துள்ளனர்.
பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் மறுப்பது ஏன்?
எஸ்.சி./எஸ்.டி கணக்கெடுப்பு எடுக்கும், அரசு பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பை எடுப்பதில் என்ன தடையிருக்கப் போகிறது – மனத்தடையைத் தவிர?
இதற்கு நியாயம் கேட்க, உச்சநீதிமன்றத்தில் ஒரு சமூக ஆர்வலர் தொடுத்த பொதுநல வழக்கைத் தான், அதன் அறிமுக நிலையிலேயே ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே,
“பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதிவாரியான கணக்கெடுப்பு என்பது சரியான ஆலோசனைதானே? அதனை நடைமுறைப் படுத்துவது குறித்து விவாதியுங்கள்’’ என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சட்டத்தை – நீதியை மதிக்காத மத்திய அரசு, உச்சநீதிமன்ற உத்தரவையாவது மதிக்க வேண்டும்.
ஒன்று சேர்வோம்! உரிமை மீட்போம்!
மண்டல் பரிந்துரையை நடைமுறைப்படுத்தி, பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வரக்கூடாது. வராமல் தடுக்க இரத யாத்திரை நடத்தினார்; பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளித்த சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தனர். அவர் வழங்கிய இடஒதுக்கீட்டை இன்றுவரை அளிக்காமல் பிற்படுத்தப்பட்டோரை வஞ்சித்து வருகின்றனர். பிற்படுத்தப்பட்டோர் பணி வாய்ப்புகளைப் பறித்து ஏமாற்றி வருகின்றனர். தற்போது அவர்களுக்கு உரிய இடம் கிடைக்காமல் செய்ய ஜாதிவாரி கணக்கீட்டை மறுக்கின்றனர்.
எனவே, சமூகநீதியில் அக்கறையுள்ள அனைவரையும், தமிழகத் தலைவர்கள் ஒன்று திரட்டி, உடனடியாகப் போராடி பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பை எடுக்கச் செய்ய வேண்டும். இது காலத்தின் கட்டாயம்!