பெரியார் பேசுகிறார் : தந்தை பெரியார் ஆதரித்த தி.மு.க

ஏப்ரல் 1-15,2021

தந்தை பெரியார்

“நாடு பஞ்சம், வறட்சி என்று தவித்துக் கொண்டிருக்கையில், பார்ப்பான் பாரத ராமாயணம் படிப்பதை நிறுத்துகிறானா? ஆட்சி மீது குறை சொல்வதை நிறுத்துகிறானா? என் உயிர் உள்ளவரை தி.மு.க ஆட்சியை ஒழியவிடமாட்டேன்! என்று உறுதி தெரிவித்த பெரியார், நீதித்துறையில் யாரும் தொட்டுக் காட்டாத ஓர் அக்கிரமத்தை குறிப்பிட்டிருந்தார்.

ஜில்லா ஜட்ஜுகள் 16 பேர்தான் இருக்கிறார்கள். அவர்கள் தீர்ப்பு மீது அப்பீலை விசாரிக்க, அய்கோர்ட்டில் ஏன் 18 நீதிபதிகள்? என்ற கேள்விக்கு, என்ன பதில்? ஜட்ஜுகளை வக்கீலில் இருந்து நேரடியாக நியமிப்பதை பெரியார் இடைவிடாமல் எதிர்த்து வந்தார்.

17.9.1969 தோழர் பெரியாரின் 91ஆவது பிறந்தநாள் விழா தஞ்சையில் நடைபெற்ற கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி பேசும்போது,

“பெரியார்தான் தமிழக அரசு. தமிழக அரசுதான் பெரியார். நாங்கள் பகுத்தறிவாளர்கள் என்பதற்கு ஒரே சான்று, அதிர்ஷ்டமில்லாததென்று சொல்லப்படும் 13 தான் இன்றைய அமைச்சர்களின் எண்ணிக்கையாகும். நாங்கள் ஆதரவு பெற்றவர்கள் அல்ல. பெரியாராலேயே ஆளாக்கப்பட்டவர்கள்’’ என்று உணர்ச்சி பொங்க உரைத்தார்.

இன்று எனக்குள்ள குறையெல்லாம், தமிழர் சமுதாயத்தில் விபீஷணப் பரம்பரை வளர்ந்து வருவதுதான். இது தமிழரில் சில ஜாதிக்கு (வகுப்புக்கு) இயற்கை என்றாலும் இது வருந்தத்தக்கதேயாகும். எனது 90ஆவது வயதை விட, 91ஆவது வயது திருப்தியையும், மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது என்பது என் கருத்து.

தி.மு.க ஆட்சி, இனியும் குறைந்தது 10 ஆண்டுகளுக்காவது இருக்கும்படி, மக்கள் பார்த்துக் கொள்ளவேண்டும். எனக்கு இதற்கு மேல் கருத்தும் ஓடவில்லை; எழுதவும் முடியவில்லை.

                                               (‘விடுதலை’, 31.7.1969)

தோழர் பெரியாரின் நீண்டகால சமூகநீதியின் உச்சபட்ச கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர் கலைஞரின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சாதனை.

தமிழகத்தின் சென்னை உயர்நீதிமன்றம் 1861இல் துவங்கி 1973 வரை நிகழாத ஒரு வரலாற்று நிகழ்வு தோழர் பெரியாரின் வேண்டுகோளை ஏற்று 112 ஆண்டுகளுக்குப் பிறகு 14.2.1973 அன்று முதன்முறையாக உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த நீதிபதி ஏ.வரதராஜன் நியமனம் செய்யப்பட்டார்.

கலைஞர் குறித்தும்

தி.மு.க குறித்தும் பெரியார்

திராவிடர் இயக்க அரசியல் பிரிவான தி.மு.க குறித்து கலகக்காரர் தோழர் பெரியாரின் 1967 தொடங்கி 1974 முடிய பெரியாரின் மதிப்பீடுகள்:

கருணாநிதி அவர்கள் இராஜதந்திரம் மிக்கவர். இந்த நாடு சிக்கல் நிறைந்த நாடு. ஒழுக்கம், நாணயம், நேர்மை ஆகியவற்றைப் பற்றிக் கவலைப்படாத மக்களுள்ள நாடு. இந்த நாட்டில் மிகச் சிக்கலான பிரச்சனைகளை எல்லாம் மிக்க அறிவுத் திறன் காரணமாகத் தீர்த்து வருகிறார்.                                                     

(‘விடுதலை’, 10.2.1971)

யார் ஆள்கிறார்கள் என்பதைவிட எப்படி ஆள்கிறார்கள் என்பதுதான் எனக்கு முக்கியம். ஜாதி ஒழிப்பு, பகுத்தறிவு, வகுப்புவாரி உரிமை ஆகிய எனது கொள்கைக்கு ஆதரவாகப் பகுத்தறிவுவாதிகளே (தி.மு.க) ஆட்சிக்கு வந்து, பதவிப் பிரமாணம் கூட இவர்கள் கடவுள் பேரால் செய்யாதது திருப்தி அளிக்கிறது.

                                              – (‘விடுதலை’, 15.9.1967)

ஜஸ்டிஸ் கட்சி கவிழ்ந்ததற்குக் காரணம் இன்றைய காங்கிரசார் போலவே தமிழர்கள், பார்ப்பன தாசர்கள் செய்த துரோகம் அல்லாமல் வேறு காரணம் ஒன்றுமில்லையே! இன்னும் சொல்கிறேன் கடுகளவு தமிழர் உணர்ச்சி பற்றுள்ள யாரும் இன்றைய (தி.மு.க) ஆட்சியை கவிழ்க்க நினைக்கவே மாட்டார்கள்.

                                              – (‘விடுதலை’, 18.9.1967)

தாங்கள் பகுத்தறிவுவாதிகள்; கடவுள் நம்பிக்கை அற்றவர்கள்; தமிழர்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் என்பதைத் தங்களின் செயல் மூலம் காட்டிக் கொண்டார்கள். எல்லா மந்திரிகளையும் தமிழர்களாக பார்த்துப் போட்டார்கள். உத்தியோகங்களைத் தமிழர்களுக்குக் கொடுத்தார்கள்.

தண்ணீரில் தன் மகன் விழுந்து தத்தளிக்கும் போது, தன்மானத்தைப் பற்றிக் கவலை யில்லாமல் தன் சீலையை அவிழ்த்து ஒரு முனையை வீசித் தண்ணீருக்குள் எறிந்து, தத்தளிக்கும் மகனை அந்த முனையை பிடித்துக் கொள்ளச் செய்து கரைக்கு இழுத்துக் காப்பாற்றும் தாயைப்போல் நாம் (தி.மு.க.வை) காப்பாற்றக் கடமைப்பட்டிருக்கிறோம். 

                                                – (‘விடுதலை’, 5.3.1968)

தி.மு.கழகமென்றால் பகுத்தறிவு இயக்கம் என்று பெயர். அதில் உள்ளவர்கள் யாவரும் பகுத்தறிவாதிகளாவார்கள். யாரோ சில பேர் பட்டை நாமம் பேட்டுக் கொள்கிறவர்கள், கோயிலுக்குப் போகிறவர்கள் இருக்கலாம். அவர்கள் எல்லாம் பதவிக்காக சுயநலம்  காரணமாகத் தி.மு.கழகத்திலிருப்பவர்களே தவிர, கொள்கைக்காக இருப்பவர்கள் அல்ல.

                                                  – (‘விடுதலை’, 5.1.1971)

திராவிட முன்னேற்றக் கழகம் என்பது சற்றேறக்குறைய இரண்டு, மூன்று ஆயிரம் ஆண்டுகளாக ஆரியர்களால் தாழ்த்தப்பட்டு, அடக்கப்பட்டுத் தலைநிமிராமல் அழுத்தி வைக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கென்றே தோற்றுவிக்கப்பட்ட கழகமாகும்.

                                                 – (‘விடுதலை’, 11.3.1971)

பொதுவாகச் சொல்லவேண்டுமானால் இந்தியாவிலே பார்ப்பனர் தவிர்த்த மற்ற திராவிடர் சமுதாயத்திற்குச் சிறப்பாகச் சமூகத்துறையில் அரசியல் மூலம் தொண்டாற்றும் ஸ்தாபனம் திராவிட முன்னேற்ற கழகம் ஒன்றே ஒன்றுதான் என்று சொல்லும்படியான நிலையில் இருந்து வருகிறது.

                                                  -(‘விடுதலை’, 11.3.1971)

தி.மு.கழக ஆட்சியின் மூலந்தான் தமிழன் தான் அடைய வேண்டிய பலனை அடைய முடியும். ஆகவே, இந்த ஆட்சிக்கு ஆதரவாக இருந்து பாதுகாக்க வேண்டியது தமிழர் கடமையாகும்!

                                               – (‘விடுதலை’ 19.2.1973)

(உதவிய நூல்கள்: பெரியார் கணினி (தொகுதி -1, 2), பெரியார் 95, தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *