சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் : சித்தர்களும் சமூகப் புரட்சியும்

பிப்ரவரி 16-28 2021

நூல்: சித்தர்களும் சமூகப் புரட்சியும்

ஆசிரியர்: வழக்குரைஞர் இரா.சி.தங்கசாமி

பதிப்பாளர்: மொழிஞாயிறு பதிப்பகம்,

பால்நகர், சங்கர்நகர் – 627 357.

திருநெல்வேலி மாவட்டம்.

அலைபேசி : 93603 58114

பக்கங்கள்: 200 விலை: ரூ.500/-

சென்ற இதழின் தொடர்ச்சி (2)

‘சித்தர்களும் சமூகப் புரட்சியும்’ என்னும் இந்நூலில் கி.மு.600_300ஆம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் தோன்றியதாகக் கருதப்படும் சித்தர்களின் இலக்கியங்களை மய்யமாகக் கொண்டு, அவர்களுடைய மய்ய இயங்கியலாய் பகுத்தறிவுடன் கூடிய சமூக சிந்தனைகளையும், அக்கால கட்டத்தில் அவர்கள் எவ்வாறு வருணாசிரம தர்மம் என்பதனை நிராகரித்து சமூக ஒற்றுமைக்கு வழி அமைத்தனர் என்பதனையும் நூல் ஆசிரியர் இரா.சி.தங்கசாமி அவர்கள் பலதரப்பட்ட தரவுகளை அடிகோலிட்டு நம்மை விழிப்படையச் செய்துள்ளார். திருவள்ளுவர் தொடங்கி காகபுசுண்டர் வரை உள்ள சித்தர்களின் நூல் குறிப்போடு ஜாதி, தீட்டு, உருவ வழிபாடு, பரத்தமை, சாத்திரம் போன்றவற்றை எதிர்த்து குரல் கொடுத்தவர்களே நமது சித்தர்கள் என்பதனை நூலினை வாசிக்கையில் வாசகர்கள் முழுமையாக அறிந்து கொள்ளலாம். உள்ளடக்கத்தில் கொடுக்கப்பட்ட தலைப்புகளின் வழியே நூலினைப் பற்றிய தெளிவான கட்டமைப்பையும் நூல் ஆசிரியர் தெளிவுறக் காட்டி வருகிறார். மனிதர்களின் உடல், மனம் சார்ந்த நோயிலிருந்து விடுதலை பெறக் கூறும் கட்டுரை முக்கியமான கருதுகோளில் எழுதப்பட்டுள்ளது. பார்ப்பனர்களின் தந்திரங்களிலிருந்து விடுதலை பெற உதவும் கோயில் கலாச்சாரம் மற்றும் சடங்குகளைத் தோலுரித்து மக்களுக்கு விழிப்புணர்வை எடுத்துரைக்கும் சிறந்த நூல் இது.

யுவான் சுவாங்

நாடெங்கும் சமணப் பள்ளிகளும் பவுத்த விகாரைகளும் அமைக்கப்பட்டு வந்தன. மக்களுக்குள் ஒழுக்கத்தையும், அமைதியையும் பிற உயிர்கள் மாட்டு அன்பையும் வளர்ப்பதில் சமண பவுத்தத் துறவிகள் முனைந்து வந்தனர். பாண்டிநாட்டில் சமண நிர்க்கி கரந்தர்கள் எண்ணற்றவர்கள் வாழ்ந்து வந்தனர் என யுவான் சுவாங் என்னும் சீனப்பயணி எழுதுகின்றார். களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பவுத்தரும், சமணரும் வைதிகச் சடங்குகளையும், வேள்விகளையும் ஆரிய சமயத் தத்துவங்களையும் மறுத்தவர்கள். கொல்லாமை, புலால் உண்ணாமை, பொய்யாமை, பிறப்பினால் உயர்வு தாழ்வு காணாமை என்னும் உயர்ந்த அறங்களை ஓம்பி வளர்த்தனர்.

பர்டெயின் ஸ்டெயின்

“அரசு ஆதிக்கங்கள் விளிம்பு நிலை இனக்குழுச் சமூகங்களை தமது விவசாய விரிவாக்கத்திற்குள் கொண்டு வந்து அவர்களது நில உடைமைகளையும், உழைப்பையும் வன்முறையாகப் பற்றிக் கொள்வது நடைமுறையாக இருந்தது. பழந்தமிழ்ச் சமூகத்தின் நிலங்கள் பிராமணர்களுக்குத் தானமாகத் தாரை வார்க்கப்பட்டது. அவர்களது விளைபொருள் மன்னனுக்கு வரியாகப் பற்றப்பட்டது. இதற்கு விளிம்புநிலை அடித்தட்டு மக்களிடமிருந்து எதிர்ப்பு எழுந்து கொண்டே இருந்தது. அரச மய்யங்களின் விவசாயமாக்கலுக்கு எதிரான இனக்குழு மக்களின் இந்த எதிர்ப்பின் உச்சகட்டமே களப்பிரர் காலம் என்ற காலகட்டம்.’’

களப்பிரர் ஆட்சி அழித்தொழிக்கப் பட்டமைக்கான காரணங்களாக அறிஞர் பர்டெயின் ஸ்டெயின் கூறுவது:

1. பார்ப்பன நிறுவனங்களுக்கும் இந்துத் தத்துவத்திற்கும் (சைவத்திற்கு) மதிப்பளிக்காமை.

2. பார்ப்பன, வேளாள நாட்டுத் தலைமைகளான உள்ளூர் தலைமைகளை அங்கீகரிக்காமை / ஏற்காமை.

களப்பிரரை அழித்தொழித்த பாண்டிய மன்னர்களைப் புகழ்ந்துரைக்கும் வேள்விக்குடிச் செப்பேடு முன்னிறுத்தும் காரணங்கள்.

1. பிறவரைப் (பிறவம்சத்தினரை) பாழ்படுத்தி (அழித்தொழித்து) குறுநாட்டவர் குலங்கெடுத்து செந்நிலங்களைச் செருவென்றது (களப்பிரரை போர்க்களத்தில் போரிட்டு வென்றது)

2. இரணிய கர்ப்பம், துலாபாரம் முதலியன தரணிமிசை பல செய்து அந்தணர்க்கு ஈன்றளித்தது (இரணிய கர்ப்பம் ஒருவித யாகம், அதில் பிராமணர்க்கு தாராளமாக பொன் வழங்கப்பட்டது. துலாபாரம் _- மன்னன் ஒரு தட்டிலும் பொன் மற்றொரு தட்டிலும் வைத்து எடை நிறுத்து மன்னன் எடைக்கு நிகரான பொன்னை யாகப் புரோகிதரான பிராமணனுக்கு வழங்கப்படும் தானமாகும்)

3. மகீதலம் பொது நீக்கி தானமளித்து அரசாண்டது (மகீதலம் _- பூமி) (மலைசார்ந்த மற்றும் பாசன வசதியற்ற நிலங்களில் வசித்த மக்கள் தொகுதியினர் மத்தியில் புழக்கத்தில் இருக்கிற சாகுபடி முறையே ‘பொது’ என அழைக்கப்படுகிறது. பழந்தமிழர் நில உரிமையைப் பறித்து பிராமணருக்குத் தானமளித்து அரசாண்ட பாண்டிய மன்னன்)

காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டிருந்த ‘களப்பிரர் அரசு சின்னமாக யானையைப் பெற்றிருந்தனர். களப்பிரர் பிராமணர்களின் நால்வருண முறையை எதிர்த்த முதல் தமிழ் அரசர்களாகின்றனர். களப்பிரர் என்போர் தமிழர்கள் _- இம்மண்ணின் மைந்தர்கள். களப்பிரர் ஆட்சிக்காலத்தில் அவர்களின் சாதனைகளை மதிப்பீடு செய்து அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும்.

1. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் மட்டும்தான் சாமான்ய மக்களுக்கு அரசு சார்பில் கல்வி வழங்கப்பட்டது.

2. ஜாதி, மத, இனபேதமின்றி சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் உயர்கல்வி வரை பயிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

3. பள்ளிகளில் தமிழ்மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டது என்றும், அவ்வையார் சரசுவதி பள்ளிகளில் பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கல்வி அளிக்கப்பட்டது என்றும் தமிழறிஞர் அயோத்திதாசர் பண்டிதர் கூறுகிறார்.

4. வட இந்தியாவில் இயங்கிய நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு இணையாக காஞ்சிபுரத்தில் பவுத்த கல்விக்கழகம் சிறந்து விளங்கியது.

5. நாடெங்கும் சமண, பவுத்த விகாரங்களில் துறவிகள் தங்கியிருந்து மக்களுக்கு அறநெறிகளைப் பரப்பி வந்தனர்.

6. பவுத்த அறிஞர்கள் சங்கமித்திரர், புத்ததத்தர், ஜோதிபாலர், சுமதி, சாக்கிய நாயனார் போன்றோர் தமிழ் இலக்கியத்தை வளர்த்தனர்.

7. களப்பிரர் கால சமண, பவுத்தத் துறவிகளின் இடைவிடாத பரப்புரையால் மக்களிடையே அமைதியும் ஒழுக்கமும் பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டும் பண்பும் வளர்ந்தன.

8. வேள்விகளையும், குலவேறுபாடுகளையும் படிகளாகக் கொண்டு உயர்ந்து வந்த வைதிக சமயம் (ஆரிய பிராமண சமயம்) தன் செல்வாக்கை இழந்து விட்டது.

9. தமிழகத்தில் களப்பிரர் ஆட்சியில் வைதிகம், சைவம், பிரமவாதம், ஆசீவகம், நிகண்டம், சாங்கியம், வைசேடிகம், பவுதீகம் ஆகிய பிரிவுகள் இருந்தன. இருப்பினும் சமயப் பூசல்கள் இல்லை. சமயப் பொறை நிலைத்து நின்றது.

10. காஞ்சி கல்விக் கூடத்தின் மாணவரான போதிதர்மர் என்னும் புகழ் பெற்ற தத்துவஞானி ஜப்பானில் “சென் _- புத்த சமயம்’’ தோன்றக் காரணமாக இருந்தார்.

11. களப்பிரர் ஆட்சி கால அறிஞர்களான புத்த கோசர், போதி தர்மர், திக்நாகர், தர்மபாலர் போன்ற புகழ் பெற்ற அறிஞர்கள் காஞ்சி கல்விக் கூடத்திலிருந்து தோன்றினர்.

12. வட இந்தியாவில் பிறந்த புத்த கோசர் என்னும் சிறந்த பாலிமொழி அறிஞர் மயிலாடு துறையிலிருந்த புத்த விகாரையில் தங்கி “பஞ்ச சூடாமணி’’ என்னும் நூலை இயற்றினார். அவரே காஞ்சியில் வந்து தங்கி “சாரந்த மகாசினி, மனோரத பூரணி’’ ஆகிய நூல்களை இயற்றினார்.

13. களப்பிரர் ஆட்சி நிருவாகத்தில் பாலிமொழியும், தமிழ் மொழியும் பயன்படுத்தப்பட்டன.

14. யாகப் புரோகிதர்களான ஆரியப் பிராமணர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியங்கள் (பிரமதேயம், தேவதேயம்) அனைத்தும் களப்பிரர் ஆட்சியில் ரத்து செய்யப்பட்டன. பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி பட்டத்தைப் பெற்ற பாண்டிய மன்னன் யாகம் நடத்திய பிரமாணனுக்கு தமிழர்க்குரிய பாகனூர் கோட்டம் வேள்விக்குடிக் கிராமத்தை தானமாக வழங்கினான். அக்கிராமத்தை மீட்டெடுத்து மீண்டும் அக்கிராமத்துக்குரிய தமிழ்ப் பழங்குடிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

15. யாகப் புரோகிதரிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் அந்நிலங்களுக்கு உரிமை பெற்ற தமிழ்ப் பழங்குடி மக்களுக்கு ஒப்படைக்கப்பட்டதால் அம்மக்கள் நில உடைமையாளர்கள் ஆனார்கள்.

16. புத்த, சமண நெறிகளின் வளர்ச்சியால் இந்து மதமான பிராமண மதம் அழிவின் எல்லைக்கே சென்று விட்டது.

17. கோவில்களில் மதச் சடங்குகள், பூசை புனஸ்காரங்கள் நடைபெறாமல கேட்பாரற்றுக் கிடந்தன. கோவில்களில் உள்ள தூண், கதவு போன்றவற்றையெல்லாம் பொது மக்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று விட்டனர். உழைக்கும் மக்களின் வருமானம் சடங்குகளுக்காகச் செலவழிக்கப்பட்டு வீணடிக்கப்படவில்லை.

18. பிராமணர்கள் தங்கள் பிழைப்புக்காக நடத்தும் முதன்மைத் தொழிலான யாகங்களை இழந்து விட்டனர். எனவே யாகங்கள் நடத்திப் பொருளீட்டி சொகுசான வாழ்க்கையைக் கொண்டிருந்த பிராமணர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாயினர்.

19. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட தமிழ் இலக்கியங்களைப் போன்று வேறெந்த ஆட்சியிலும் தமிழ் இலக்கியங்கள் தோன்றவில்லை. களப்பிரர் ஆட்சிக்காலத்தில் புதுவகையான பாக்களும், புது வகையான இலக்கியங்களும் உண்டாக்கப் பட்டன. களப்பிரர் காலத்துக்கு முன்பு கடைச்சங்க காலத்தின் இறுதி வரையில் தமிழில் நான்கு வகைப் பாக்களே இருந்தன. அவை வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பன. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பிராகிருத மொழிகளான பாலி, சூரசேனி ஆகியவற்றின் தொடர்பு காரணமாகத் தமிழ்ச் செய்யுள் வகையில் புதிய பாவினங்களை உண்டாக்கினார்கள். புதியனவாகத் தோன்றிய பாவினங்கள் தாழிசை, துறை, விருத்தம் எனப் பெயர் பெற்றன.

பழமையான நான்குவகைப் பாக்களோடு புதுவகையான பாவினங்களை அமைத்துப் பன்னிருவகையான செய்யுட்களை உண்டாக்கினார்கள். பழைய ஆசிரியப் பாவோடு, ஆசிரியத் தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம் என்றும், வெண்பாவோடு வெண்டாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம் என்றும் கலிப்பாவோடு கலித்தாழிசை, கலித்துறை, கலிவிருத்தம் என்றும் வஞ்சிப்பாவோடு வஞ்சித் தாழிசை, வஞ்சித்துறை, வஞ்சி விருத்தம் என்றும், பாவகைகளை வளர்த்தார்கள்.

20. களபகுலத்தைச் சார்ந்த அச்சுத விக்ராந்தன் என்றொரு மன்னன் சோழநாட்டைக் கைப்பற்றி ஆண்டு வந்தான் என அறிகின்றோம். இவன் காலத்தில் புத்ததத்தர் என்ற பவுத்த அறிஞர் விநயவிநிச்சயம் என்னும் நூலை தாம் எழுதியதாகக் கூறுகின்றார்.

21. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் ஆக்கத்துறைகள் பலவற்றில் வளர்ச்சி காணப்பட்டது. பவுத்த சமண ஒழுக்க நெறிகளுக்கு செல்வாக்கு உயர்ந்தது. பூச்சியபாதர் என்பவரின் மாணவரான வச்சிரநந்தி என்பார் மதுரையில் திராவிடச் சங்கம் என்னும் அமைப்பை (கி.பி.470) நிறுவினார். சமண அறத்தைப் பரப்புவதும் சமணக் கொள்கைகளை விளக்கக்கூடிய நூல்களைத் தோற்றுவிப்பதும் இச்சங்கத்தின் நோக்கமாகும். பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் முழுக்க தனிமனித ஒழுக்கத்தையும் சமூக சமத்துவத்தையும் வலியுறுத்தி நின்றன. அவ்வையின் ஆத்திசூடி, உலகநீதி, மூதுரை, கொன்றைவேந்தன் போன்ற நூல்கள் மக்களிடையே ஆரிய பிராமணியக் கருத்துகளுக்கு எதிராக ஒற்றுமையையும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தின.

22. நீலகேசி காட்டும் இளம்பெண் சமணத்துறவியின் முன் தத்துவ அறிவியலில் சிறந்த பல சமயச் சான்றோர் ஓரவையில் அமர்ந்து தத்தம் சமயக் கருத்துகளை எடுத்து வைத்து வாதிட்டார்கள் என்கிற செய்தி களப்பிரர் காலத்துச் சமூகப் பெண்களின் அறிவின் உயர்ச்சியையும் பண்பாட்டின் மேம்பாட்டையும் காட்டுகிறது. மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இக்காலத்தில் எழுந்தனவெனத் தோன்றுகின்றன. நீலகேசி, குண்டலகேசி, யசோதர காவியம், சீவகசிந்தாமணி ஆகிய காவியங்கள் தமிழில் தோன்றுவதற்கு மதுரை திராவிட சங்கத்தின் தொண்டே காரணமாகும்.

களப்பிரர் ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட தமிழ் நூல்களைப் பற்றிய விரிவான பட்டியலைத் தருகிறார். அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் (களப்பிரர் காலம் நூல்).

இலக்கண நூல்கள் (யாப்பிலக்கணம்) _- அவிநயம், காக்கை பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல் காப்பிய புறனடை, பல்காயம் போன்றவை.

சமணர் இயற்றிய இலக்கிய நூல்கள் _- நரிவிருத்தம், எலிவிருத்தம், கிளிவிருத்தம், பெருங்கதை, சீவகசிந்தமணி போன்றவை.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *