கே: வேளாண் உற்பத்திச் செலவைப் போல் இரு மடங்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்படும் என்று கடந்த ஆண்டு வாக்குறுதி அளித்தவர்கள் அதை நிறைவேற்றாத நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் அதே வாக்குறுதியைக் கூறியுள்ளது சரியா? தங்கள் கருத்து என்ன?
– ஆ.சே.அந்தோனிராஜ், தென்காசி
ப: பல பட்ஜெட் உரைகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு மடங்காக உயர்த்துவோம் என்பது ஒரு தொடர் அறிவிப்பாக மட்டுமே உள்ளது! செயலாக மலர்ந்தபாடில்லை. இருந்திருந்தால் விவசாயிகள் இப்படி பனி, மழை பருவ காலத்திலும் வெயில் தகிக்கும் நிலையிலும் ஓர் அறப்போரை தலைநகரில் நடத்துவார்களா? எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவது.
கே: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாகச் சீர்குலைந்து போய் உள்ள நிலையில், அமைச்சர்கள் மட்டும் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது எனக் கூறுவது ஏற்புடையதா?
– மாரிசெல்வம், ஈரோடு
ப: அமைச்சர்கள் அப்படித்தானே சொல்வார்கள். இல்லையென்றால், அமைச்சராக நீடிக்க முடியுமா? சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளைகள் என்பதுபோல என்னமோ நடக்குது! பொறுத்திருப்போம், மேலும் 4 மாதங்களுக்கு!
கே: அ.தி.மு.க.வை பி.ஜே.பி. அபகரிக்க எடுத்த சூழ்ச்சி முயற்சியை நான்கு ஆண்டுகளுக்கு முன் தாங்கள் முறியடித்தீர்கள்; அந்த நன்றி உணர்வோடு பி.ஜே.பி. எதிர்ப்பு நிலையை சசிகலா இப்போது தொடருவாரா?
– பாலாஜி, ஆவடி
ப: கொள்கைபூர்வ நிலை வேறு; தங்களைக் காப்பாற்றிக் கொள்ள எடுக்கும் நிலை வேறு _ எப்படி போன்றவரும் எதிர்பார்த்ததுதானே! பா.ஜ.க.வே உண்மையான கொள்கை எதிரி; ஆனால், அரசியல்வாதிகள் தி.மு.க.வை எதிரி என்று சொல்வதே _ எதிரி சாக தாங்கள், விஷம் குடிக்கும் வேடிக்கைதான்!
கே: அரசியல் சட்ட பாதுகாப்பு பெற்ற 69 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்குத் தொடுப்பதை நீதிமன்றங்கள் ஏற்பது சரியா?
– மணிகண்டன், புதுவை
ப: நல்ல கேள்வி. உச்சநீதிமன்றத்தில் இதுபற்றிய வியாக்யானம் சட்ட வரலாற்றில் விசித்திரமானது. அதனால், 9ஆவது அட்டவணையில் இருப்பதைப் புறந்தள்ளுவது அரசியல் சட்டத்திற்கு உகந்தது அல்ல!
கே: அயல்நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி இந்தியா கண்டனம் தெரிவிக்கும்போது, விவசாயிகள் போராட்டம் பற்றி அயல்நாட்டினர் கண்டனம் தெரிவித்தால், அதை பா.ஜ.க. அரசு கண்டிப்பது நியாயமா?
– பெரியதம்பி, தாம்பரம்
ப: அயல்நாடா? _ சொந்த நாடா? என்பது அரசியலைப் பொறுத்து இருக்கலாம்! மனித உரிமை _ வாழ்வாதாரம். இதைப் பொறுத்து மனித உரிமைக்கே உலகம் முன்னுரிமை கொடுக்கும். அய்.நா.மனித உரிமை சாசனம் கூறுவதென்ன?
கே: ஏழு பேர் விடுதலையில் ஒரு வாரத்தில் ஆளுநர் முடிவு எடுப்பார் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறிய பின்னரும் ஆளுநரின் செய்கை ஏற்புடையதா?
– அறிவுச்செல்வன், தஞ்சை
ப: அரசியல் சட்ட விரோதம் _ அதற்குத் தலையாட்டும் மாநில அரசு. எல்லாம் இரட்டை வேடம்; இரட்டை நிலை அம்பலப்பட்டுப்போகும். மக்களை ஏமாற்ற முடியாது.
கே: 7.5% மருத்துவ இடஒதுக்கீடு ஆளுநர் ஒப்புதல் பெற்று சட்டமான பின், அதை எதிர்த்து வழக்குத் தொடுப்பது சட்டத்திற்கு உட்பட்டதா?
– கவுதமன், மணலி
ப: சட்டத்தை எதிர்த்து வழக்குப் போடலாம். அது நியாயமானது அல்ல; சட்டபூர்வ உரிமை என்ற சட்டத்தையே எதிர்த்து வழக்காடிய ஒரு வழக்கு உண்டே! அதனால்தான் இந்த விசித்திரங்கள்!
கே: மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா வி.கனேதிவாலா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு சாதகமாக சர்ச்சைக்குரிய தீர்ப்பளித்தது, தவறான முன்னுதாரணமாக ஆகாதா? இதுபற்றி தங்கள் கருத்து?
– மகிழ், சைதை
ப: அந்த நீதிபதியை நிரந்தரமாக்கும் பரிந்துரையை உச்சநீதிமன்றம் திரும்பப் பெற்றது சரியான ‘தண்டனை’ _ அவருக்கு! ஒரு பெண் நீதிபதியா இப்படி தீர்ப்பளிப்பது? மகா வெட்கக் கேடு!
கே: மனுதர்மத்தைத் தடை செய்தால் திருக்குறளையும் தடை செய்ய வேண்டும் என்று வன்மம் காட்டும் தினமணிக்கு சி.பா.ஆதித்தனார் விருது அறிவிக்கப்பட்டுள்ளதே?
– திராவிட விஷ்ணு, வீராக்கன்
ப: அ.தி.மு.க. அரசு என்றால் எப்படி நடக்கும் அரசு என்பதைப் புரிந்துகொள்ள இது ஒரு நல்ல சான்றிதழ் ஆகும்! மக்களிடையே பிரச்சாரம் பலமாகச் செய்ய வேண்டும்!