நம்மில் பெரும்பாலோருக்கு மிகவும் சாதாரணமாக ஏற்படும் நோய் ‘குடல்வால் அழற்சி’ (Appendicitis). நன்றாக இயங்கிக் கொண்டிருப்பவருக்கும், சோம்பலான வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், முதியவர்களுக்கும், இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும், ஆண்களுக்கும், பெண்களுக்குமென எந்த வேறுபாடும் இன்றி வருகின்ற நோய் இது. சிலருக்கு திடீரென்றும், சிலருக்கு நாள்பட்ட (chronic) நோயாகவும் இது வரலாம். தகுந்த நேரத்தில் கண்டறிந்து மருத்துவம் செய்யாவிட்டால் சில நேரங்களில் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படக் கூடும். ஆனால், ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய மருத்துவம் செய்து கொண்டால் எந்த ஆபத்தும் விளையாது. அறுவை மருத்துவம் மூலமே சரியாக்கப்படும் நோய் இந்நோய். இன்றைய நவீன மருத்துவத்தில் எளிதில் இந்நோயை குணமாக்கலாம். இந்நோயைப் பற்றியும், விளைவுகளையும், மருத்துவத்தையும் காண்போம்.
அமைப்பு: குடல்வால் 3 செ.மீ. நீளம் உடைய ஓர் உறுப்பு அடிவயிற்றின் வலதுபுறத்தில் அமைந்துள்ள உறுப்பு. சிறுகுடலும் பெருங்குடலும் சந்திக்குமிடத்தில் இது அமைந்துள்ளது. வால்போல் இது உள்ளதால் “குடல்வால்’’ என அழைக்கப்படுகிறது. ஆரம்ப காலங்களில் பெரிதாக இந்த உறுப்பு இருந்தது. தாவரங்களில் உள்ள ‘செல்லுலோஸ்’ என்னும் பொருளை செரிக்கக்கூடிய நொதியங்களை (Enzymes) சுரக்கும் ஒரு முக்கிய உறுப்பாக இது இருந்தது. நாளடைவில் உணவுப் பழக்க மாறுபாடுகளால் இந்த நொதியத்தின் தேவை குறைந்துவிட்டது. அதனால் இந்த உறுப்பு சுருங்கி சிறியதாகிவிட்டது. பெருங்குடலின் கீழ் ஒரு வால்போன்ற அமைப்பாக மாறிவிட்ட இந்த குடல்வால் எந்தப் பணியும் இப்பொழுது செய்யாத ஒரு தேவையற்ற உறுப்பாக மாறிவிட்டது.
குடல்வால் அழற்சி:
பயனற்ற குடல்வால் பல நேரங்களில் தொல்லை தரும் ஒரு உறுப்பாக பல நேரங்களில் மாறிவிடுகிறது. குடல்வால் அழற்சி என குறிப்பிடப்படும் (Appendicitis) இந்நோய் பல நேரங்களில் திடீரெனத் தோன்றும் (Acute). சில நேரங்களில் மருந்துகளால் குணமாகியது போன்ற தோற்றம் கொடுத்தாலும், மீண்டும் வரும் வாய்ப்பே அதிகம். நாள்பட்ட (Chronic) அழற்சி, திடீரென ஆபத்தாகவும் மாறக்கூடும். குடல்வாலில் ஏற்படும் வீக்கமே “குடல்வால் அழற்சி’’ எனக் கூறப்படுகிறது.
நோய்க் காரணிகள்:
இந்நோய் பொதுவாக 5 முதல் 25 வயது வரை உள்ளவர்களை அதிகம் பாதிக்கிறது. வருடம் 2,50,000 பேர் பாதிக்கப்படுகின்றனர்.
¨ குடல்வால் அடைப்பே, குடல்வாலில் வீக்கம் ஏற்படும்.
¨ அடைப்பு திடீரென்று எப்படி ஏற்படுகிறது என்பது ஒரு புதிர்தான்.
¨ செரிமான மண்டலத்தில் (Digestive System) ஏற்படும் நோய் தொற்று ஒரு முக்கிய காரணியாகக் கருதப்படுகிறது.
¨ ஒட்டுண்ணி தொற்றும் ஒரு காரணம் (Fungal Infection)
¨ குடல் சுவர்களில் படிந்துள்ள நன்மை செய்யும் நுண்கிருமிகளில் ஏற்படும சமச் சீரின்மை இந்நோயை உண்டாக்கும். (Imbalance in the intestinal flora)
¨ செரிமானப் பாதையில் உள்ள காயங்கள் (Ch. Ulcers)
நோய் கூற்றியல்:
மேற்கண்ட ஏதேனும் ஒரு காரணத்தாலோ அல்லது பல காரணங்களாலோ ஏற்படும் நோய்த் தொற்று குடல்வாலில் பரவி, அழற்சியை ஏற்படுத்தும்.
இதன் அழற்சி, குடல்வாலை வீங்கச் செய்யும். அதனால் நோயின் அறிகுறிகள் வெளியே தெரியும். உடனடியாக அதற்கான மருத்துவம் செய்ய வேண்டும். மருத்துவம் செய்யாவிட்டால், வீங்கியுள்ள குடல்வால் திடீரென வெடித்துவிடும் (Rupture). அதிலிருந்து வெளியேறும் நோய்க் கிருமிகள் வயிற்று உறை (Peritonium) முழுதும் பரவிவிடும். அதனால் வயிற்று உறை அழற்சி (Peritonitis) ஏற்படும். அது வெளியிடும் நோய்க் கிருமிகள் இரத்தத்தில் கலந்து, “இரத்த நச்சூட்டம்’’ (Septicemia) ஏற்பட்டுவிடும். இது “இரத்த நச்சூட்ட அதிர்வை’’ (Septic Shock) உடலில் ஏற்படுத்தி விடும்.
இதன்மூலம் “நீர்மச் சமச்சீரின்மை’’ (Fluid imbalance) ஏற்படும் நிலை ஏற்படும். இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். இந்நிலையில் மருத்துவம் செய்வதும் கடினமான காரியமாகிவிடும். இந்நிலைப்பாட்டில் நோயைக் குணமாக்க முடியாமல் மரணம் ஏற்படும் பேராபத்து ஏற்பட்டுவிடும்.
(தொடரும்)