முகப்புக் கட்டுரை: மனுதர்மத்தை ஒழிக்கவேண்டியது மனித நேயர்களின் கடமை

நவம்பர் 16-30, 2020

மஞ்சை வசந்தன்

 

ஆரியப் பார்ப்பன அகராதியில் எல்லாமே தலைகீழ்தான். மண்ணின் மக்களை அடிமைகள் என்பர். வந்தேறிகளான தங்களைத் தலைமகன்கள் என்று கூறி ஆதிக்கம் செலுத்துவர். பிச்சை எடுத்துப் பிழைத்த தங்களை உயர்வர்ணம் என்பர்; உழைத்து வாழ்வதோடு, பார்ப்பனர்களுக்கே பிச்சையிடும் மக்களை இழிவர்ணம் என்பர்.

உலகில் ஒப்பில்லா உயர் நூலாம் திருக்குறளை இழித்துப் பேசி, ஒன்றுக்கும் உதவாத வேதங்களை கடவுளுக்கும் மேலானது என்பர்.

உலகின் மொழிகளுக்கெல்லாம் முதல் மொழியான தமிழை இலக்கண இலக்கிய வளமுடைய தொன்மொழித் தமிழை நீசபாஷை என்பர்; தமிழிடம் பிச்சை பெற்று உருவாக்கப்பட்ட சமஸ்கிருதத்தை தேவபாஷை என்பர்.

அப்படித்தான் மனித குலத்திற்கே எதிரான கருத்துகளைக் கூறும் அதர்ம நூலை மனுதர்மம் என்று கூறி வருகின்றனர்.

மனுதர்மம் என்கிற பெயரே பொய்யனுக்கு. அரிச்சந்திரன் என்று பெயர் வைத்தது போலத்தான்.

ஆரியப் பார்ப்பனர்கள் மேன்மைக்கும் பிழைப்புக்கும் பெருமைக்கும் மற்றவர்கள் இழிவிற்கும் தாழ்விற்கும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது மனுதர்மம்.

மனுநூல் உண்ணும் உணவு, உடுத்தும் உடை, வாழும் இடம் வாழும் முறை எல்லாவற்றிலும் ஆரியப் பார்ப்பனர்களுக்கு உயர் தகுதியும் மேன்மை நிலையும் முழு உரிமையும் அளித்து, மற்றவர்களை அவர்களின் அடிமையாக, இழிமக்களாக, தீண்டாதவர்களாக, உரிமையற்றவர்களாகக் கருதி நீதி முறைகளை வகுத்துள்ளது.

குறிப்பாக பெண்களை மிகக் கேவலமாக, இழிவாக, விலங்கினும் கீழாய்க் கருதி அவர்களுக்கான நீதிகளை வகுத்துள்ளது.

இதைத்தான் தொல்.திருமாவளவன் அவர்கள் எடுத்துக்கூறி பெண்களுக்கு ஆதரவாக, அவர்களின் இழிவைப் போக்குவதற்கு முன்னெடுப்பாகச் செயல்பட்டார்.

வழக்கம் போல் பித்தலாட்ட அணுகுமுறை உடைய ஆரியப் பார்ப்பனர்கள் திருமா கூறியதைத் திரித்து, அவர் பெண்களுக்கு எதிராகப் பேசிவிட்டதாகப் பிரச்சாரமும் போராட்டமும் செய்து வருகின்றனர். இது உலகமகா மோசடிச் செயலாகும்.

மனுநீதி ஒருகுலத்துக் கொருநீதி என்பதை தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் நீண்ட நெடுங்காலமாக தொடர்ந்து பிரச்சாரம் செய்துவரும் நிலையில் திருமாவளவன் புதிதாக இப்போது பேசிவிட்டதாக ஆர்ப்பரிப்பது அரசியல் ஆதாயம் கருதியேயாகும்.  செய்து வருகிறது.

கழகத்தின் மனுதர்ம எதிர்ப்பு, எரிப்பு வரலாறு

ஏன், பல முறை நமது இயக்கத்தின் சார்பில் மனுதர்மம் எரிக்கவும் பட்டுள்ளது. 17.10.1927 அன்று காட்பாடியில் நடைபெற்ற ஆதி திராவிடர் மாநாட்டில் எம்.சி. ராஜா எரித்தார். 4.12.1927 அன்று குடியாத்தத்தில் நடைபெற்ற வடஆர்க்காடு மாவட்ட சுயமரியாதை மாநாட்டிலும் எரிக்கப்பட்டது.

17.5.1981 அன்று தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகத்தால் மகளிர் அணியினர் தலைமையில் மனுதர்ம எரிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. மீண்டும் 7.2.2019 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் மனுஸ்மிருதி எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

1927 டிசம்பர் 25இல் மகாராட்டிர மாநிலம் மகத் நகரில் அண்ணல் அம்பேத்கர் தலைமையில் மனுதர்ம சாஸ்திரம் எரியூட்டப்பட்டது.

இன்னும் சொல்லப் போனால் 1922ஆம் ஆண்டில் திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மனுதர்மத்தையும்,  இராமாயணத்தையும் எரிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் முழங்கினார்.

எனவே, மனுதர்ம எதிர்ப்பு, எரிப்பு என்பது – திராவிடர் கழகத்தின் தொடர் நடவடிக்கையாகவே இருந்து வந்திருக்கிறது.

மனுதர்ம எதிர்ப்பு, எரிப்பு இரண்டும் செய்வது புதிதல்ல. திராவிடர் கழகத்தால் சற்று ஏறக்குறைய 100 ஆண்டு காலமாகவே இவை செய்யப்பட்டு வருகின்றன.

அய்ரோப்பிய பெரியார்  – அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் நடைபெற்ற இணைய கருத்தரங்கில் (26, 27.9.2020) பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். அக்கருத் தரங்கில் நான் உள்பட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவனும் பங்குகொண்டு பேசினோம்.

அக்கருத்தரங்கில் தோழர் திருமாவளவன் மனுதர்மம் குறித்துப் பேசிய பேச்சின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.

வழக்குத் தொடுக்கப்பட்ட பிரிவு

பெரியார் யூடியூப் சேனலில் நாடாளுமன்ற உறுப்பி னரான, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  பேசியதாக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இதில், திருமாவளவன் மனுதர்மத் தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி கருத்துகளைப் பதிவிட்டு இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வின் வழக்குரைஞரணி செயலாளர் அஸ்வத்தாமன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவுக்கு ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் மனுதர்மத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகப் பொய்யான தகவல்களை கூறி, மத உணர்வுகளைப்  புண்படுத்தும் வகையிலும், கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேசியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளில் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக 295-ஏ: வேண்டுமென்றே மத உணர்வு களுக்குத் தீங்கிழைக்கும் வகையில் மதங்கள், மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துதல்.

298: வார்த்தைகளால் மத உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையில் பேசுதல்.

505 -1: குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக அச்சத்தை ஏற்படுத்தி, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில், வதந்தி அல்லது அறிக்கை வெளியிடுதல்.

505 – 2: அறிக்கை வெளியிட்டு இரு பிரிவினருக்கு இடையே மோதல், வெறுப்பை ஏற்படுத்துதல்.

153: விருப்பமில்லாமல் ஆத்திரமூட்டி, கலவரத்தை ஏற்படுத்துதல்.

153 ஏ: இரு பிரிவினருக்கிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிடுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருமாவளவன் மீதும், வீடியோவை வெளியிட்ட பெரியார் யூடியூப் சேனல் மீதும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த (24.10.2020) நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தோழர் திருமாவளவன் அவர்கள் தனது சொந்தக் கருத்தாக எதையும் சொல்லவில்லை. மனுதர்மத்தில் பெண்கள் எப்படி எல்லாம் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதை ஆதாரப்பூர்வமாகத்தான் பேசி இருக்கிறார்.

உண்மை இவ்வாறு இருக்க, தோழர் திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தினார் என்று திரிப்பது மோசடியல்லவா!

மனுதர்மத்தை டாக்டர் அம்பேத்கர் எரித்தாரே!

இதே காரணங்களுக்காக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மனுதர்மத்தைத் தம் தோழர்களுடன் மகாராட்டிர மாநிலம் மகத் நகரில் எரித்துள்ளார் (25.12.1927).

தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதை இயக் கமும், அதே 1927 ஆம் ஆண்டில் குடியாத்தத்தில் நடைபெற்ற வட ஆர்க்காடு மாவட்ட சுயமரியாதை மாநாட் டிலும் மனுதர்மம் எரியூட்டப்பட்டது (4.12.1927).

1922 ஆம் ஆண்டிலேயே திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலேயே மனுதர்மத்தையும், இராமாய ணத்தையும் எரிக்கவேண்டும் என்று தந்தை பெரியார் முழங்கியதுண்டு.

திராவிடர் கழகத்தின் சார்பில் 17.5.1981 அன்றும், 7.2.2019 அன்றும் மனுதர்மம் தமிழ்நாடெங்கும் எரிக்கப்பட்டதே!

வரலாறு தெரியாத அ.தி.மு.க. அரசு

இந்த வரலாறு எல்லாம் அண்ணா பெயரில் – கட்சியை வைத்திருக்கும் – ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் அண்ணா தி.மு.க.வை வழிநடத்தும் தலைவர்களுக்குத் தெரிந்திருந்தால், இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

கருத்துரிமையின் கழுத்தை நெரிப்பதா?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப் பட்டுள்ள கருத்துரிமை, பேச்சுரிமையின் கழுத்து அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் நெரிக்கப்படுகிறதா?

இந்த வரலாற்றின் தொடர்ச்சியாகவே திருமாவளவன் அவர்கள் மனுதர்மத்திற்கு எதிரான போரைத் தொடங்கியுள்ளார்.

பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மம் பெண்கள் பாவ யோனியில் பிறந்தவர்களா?

பெண்களைப்பற்றி மனுதர்மத்தில் கூறப்பட்டு இருப்பது என்ன? (3 ஆம் பக்கம் காண்க) மனு தர்மத்தில் மட்டுமல்ல இந்து புராணங்களிலும், இதிகாசங்களிலும் பெண்கள் மிகவும் கேவலமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கீதையில், ‘‘பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்’’ (Born out of Womb of Sin) (கீதை அத்தியாயம் 18; சுலோகம் 44) என்று கூறப்பட்டுள்ளதே – இவற்றை எல்லாம் ஏற்கப் போகிறார்களா?

சுலோகம் 14:  மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக வேண்டி அவர்களைப் புணருகிறார்கள்.

17) படுக்கை, ஆசன அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.

மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷ முள்ளவர்களென்று அநேக சுருதிகளிலுஞ் சாஸ்திரங் களிலுஞ் சொல்லப்பட்டிருக்கின்றன.

அதற்கு திருஷ் டாந்திரமாக அந்த விபசாரத்துக்கு சுருதியில் சொல்லிய பிரயாச்சித்தத்தைத் கேளுங்கள்.

30) கணவன் சொற்படி நடவாதவள் உலகத்தாரால் நிந்திக்கப்பட்டு நரியாய்ப் பிறந்து பாவப் பிணியால் வருந்துவாள்.

59) பிள்ளையில்லாமல் அந்தக்குலம் நசிக்கிறதாக விருந்தால் அப்போதந்த ஸ்திரி தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழுதலை முறைக்குட்பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல்லுகிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ளலாம்.

60) விதவையிடத்தில் பெரியோர்களின் அனுமதிப் பெற்றுக் கொண்டு புணரப்போகிறவன் தன் தேகமெங்கும் நெய்யைப் பூசிக்கொண்டு இரவில் இருட்டான இடத்தில் அவளைப் புணர்ந்து ஒரே பிள்ளையை உண்டுபண்ண வேண்டியது. இரண்டாம் பிள்ளையை ஒரு போதும் உண்டு பண்ணக் கூடாது.

69)   ஒரு பெண்ணை ஒருவனுக்குக் கொடுக்கிறதா உண்மையாக வாக்குத்தானம் செய்த பின் அந்தவன் இறந்துபோனால் அவன் தம்பி அல்லது அண்ணன் விவாகம் செய்து மேற்சொல்லும் விதிப்படி இருக்க வேண்டியது.

70) அவனந்தப் பெண்ணை விதிப்படி விவாகஞ் செய்து வெள்ளை வஸ்திரமுடையவளாயும், திரிகரண சுத்தியுடையவளாயு மிருக்கச் செய்து, ருதுஸ்நான மானவுடன் ஒரு நாள் புணர்ந்து மறுபடி ருது காலம் வரையிற் பார்த்து கருப்பமுண்டாகாவிடில் கருப்பமுண் டாகிறவரையில் அந்தந்த ருதுஸ்நானமானவுடன் ஒவ்வோர் நாள் புணர வேண்டியது.

78) கணவன் சூதாடுகிறவனாயிருந்தாலும், குடிய னாகவிருந்தாலும், நோயாளியாக இருந்தாலும், அவனுக்கு மனைவி கர்வத்தால் பணிவிடை செய்யா விட்டால் அவளுக்கு அலங்காரம் வஸ்த்திரம் படுக்கை இவைகளைக் கொடாமல் மூன்று மாதம் நீக்கி வைக்க வேண்டியது.

கடவுள் பெயரால் இப்படி கூறப்படும் இழிவுகளை எடுத்துக் கூறக் கூடாதா?

மனுதர்மம் நடைமுறையில் இல்லையா?

கேள்வி: பெண்கள் உடன்கட்டை ஏறுவது போன்ற மூடப் பழக்கங்களை மதங்கள் ஆதரிக்கின்றதே?

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி: வரதட்சணைக் கொலை என்று நிறைய பேர் இறந்து போறாங்க. அதை எல்லாம் விட்டு விட்டு, ஏன் உடன்கட்டை ஏறுவதை மட்டும் கேட்கிறீங்க? இந்தக் கால கட்டத்தில் யாரோ ஒரு தலைவனுக்காக கட்சித் தொண்டர்கள் தீக்குளிக்கிறார்கள். அந்தக் காலத்தில் கணவனைத் தெய்வமாக மதித்து வாழும் பெண்மணி அதைச் செய்தது ஆச்சரிய மில்லையே! உடன்கட்டை ஏறச் சொல்லி எந்த சாஸ்திரத்திலேயும் இல்லை. பெண்களின் உணர்வைக் காட்டும் வழி அது.  (‘ஆனந்த விகடன்’ 1.3.1998).

“ஆஞ்சநேயரின் வாலில் வைத்த நெருப்பு ஸீதையின் ‘பதி வரத்யத்தால் (கற்புச் சக்தியால்) அவரைப் பாதிக்காமலேயே இருந்தது. குமரில பட்டர் உமிக் காந்தல் அக்னியில் கருகியபோது எதிரே நின்ற (சங்கர) ஆசார்யாரின் ஸாந்தியத்தால் அவருக்கு உஷ்ணமே தெரியாமல் ஜில்லென்று இருந்தது. அநேக பதிவிரதைகளுக்கு அவர்களுடைய பதி பக்தியினாலேயே சிதாக்னி சந்தனமாக இருந்திருக்கிறது. அவர்கள் கட்டியிருந்த புடவை அத்தனை அக்னியிலும் எரியாமலே இருக்குமாம். அதை எடுத்துப் பூஜை பண்ணுவதுண்டு” – மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி (தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி – பக்கம் 967, 968).

பெண்கள் வேதம் ஓத உரிமை கிடையாது என்று கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒரு பெண்ணை வேதத்தைக் கூற விடாமல் மேடையிலிருந்து கீழே இறங்கச் செய்தார் பூரி சங்கராச்சாரியார்.

(இதனைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழக மகளிரணியினர் தமிழ்நாடு எங்கும் பூரி சங்கராச்சாரியாரின் கொடும்பாவியை எரித்தனர் – (17.2.1994).

“பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடாது!”

– ஜெயேந்திர சரஸ்வதி

Sankaracharya against quota for women politics. virtually rejected for the demand for seperate reservation for women.

(‘The Pioneer’ 17.3.1997)

“விதவைப் பெண்கள் தரிசு நிலம்!”

விதவைப் பெண்கள் தரிசு நிலத்திற்குச் சமமானவர்கள்.

 –  (‘தினமணி’ தீபாவளி மலர்).

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி “தினமணி” தீபாவளி மலரில் கூறிய கருத்தினைக் கண்டித்த காஞ்சிமடம் முன் திராவிடர் கழக மகளிரணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். (9.3.1998).

வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கக் குறைவானவர்கள் என்று சொன்னவரும் இதே சாட்சாத் ஜெயேந்திர சரஸ்வதிதான்.

“ஆணின் தேவையை நிறைவேற்றாத மனைவியை விரட்டிவிட வேண்டும்“

– மோகன் பகவத்

பெண் கல்வியையும், பெண்ணின் சுதந்திரத்தையும் மறைமுகமாக தாக்கிப் பேசிய மோகன் பகவத் மேலும் ஒரு சர்ச்சைக்குரிய உரை கூறினார். அதாவது மனைவி, கணவனுக்கு சேவகம் செய்வதே கடமையாகக் கொள்ள வேண்டும்.

பெண்கள் இந்தக் கடமையிலிருந்து விலகிவிட்டால் அந்த பெண்ணை விலக்கி விடுவது நல்லது. திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம் (சோசியல் காண்ட்ராக்ட்) மாத்திரமே என்று தன்னுடைய பேச்சில் கூறினார். மனைவி என்பவள் கணவனின் தேவைகளை நிறைவேற்றுவதை மட்டுமே தலையாய கடமையாகக் கொள்ள வேண்டும். வீட்டைக் கவனிக்க வேண்டும். கணவனின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். கணவனுக்கு இன்பம் தர வேண்டும். இது பெண்ணின் கடமை; இந்தக் கடமையிலிருந்து ஒரு பெண் விலகிவிட்டால் அவள் தேவையில்லை. அவர்களுக்கான ஒப்பந்தம் முடிந்து விட்டது. விலக்கிவிட வேண்டும். கணவனின் தேவைகளை நிறைவேற்றாத மனைவியை உடன் வைத்திருப்பதால் கணவனுக்கு என்ன பலன்? ஆகையால் திருமணம் என்னும் ஒப்பந்தத்தை முடித்து விடவேண்டும் என்று கூறினார்.

 மோகன் பகவத் 8.11.2014 அன்று அசாமில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது “கற்பழிப்புகள் இந்தியாவில் தான் நடக்கும்; பாரதத்தில் கற்பழிப்புகளே நடப்பதில்லை” என்று சொல்லியிருக்கிறார். மேலும், இந்தியாவின் கிராமப்புறங்களிலோ காடுகளிலோ இது போன்ற கற்பழிப்புச் சம்பவங்கள் நடப்பதே இல்லை என்றும், நகரங்களில் மட்டுமே நடப்பதாகவும் பழங்கால பாரதக் கலாச்சாரத்தை மீண்டும் கொண்டு வர வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

இப்படிப் பெண்களை இழிவுபடுத்தியவர்கள் குற்றவாளிகள் இல்லையாம்! இழிவுபடுத்தியதை எடுத்துச் சொன்ன திருமாவளவன்தான் குற்றவாளியாம்! இதிலும்கூட வருணப் பார்வைதானா? மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதிதானே!

தமிழர் தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

காலம் காலமாகப் பெண்களை இழிவு செய்யும் மனுதர்மம் என்னும் சனாதன நூலைத் தடை செய்ய வேண்டும்.

பாரதிய ஜனதா என்பது மனுதர்மத்தைத் தூக்கிப் பிடிப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. தி.மு.க. தலைமையில் உள்ள வலுவான கூட்டணியில் கலகம் விளைவிக்க இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவதூறு பரப்பும் பா.ஜ.க திட்டத்தின் மீது முகத்தில் அறைந்தாற் போலக் கூறி, மக்கள் அந்த வாதத்தை புஸ்வாணமாக்கிவுள்ளனர். நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறி, புராண, இதிகாசங்களைத் தோலுரிக்கும் வாய்ப்புக் கிட்டுமா என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு எனக் கூறி ஆசிரியர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்

திருமாவளவன் பேசியதைத் திரித்து, பரப்பி, வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது, எடப்பாடி அ.தி.மு.க அரசின் சைபர்கிரைம் போலீசார், ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்திருப்பது முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் பாரபட்சமான – வன்மம் நிறைந்த அணுகுமுறையையே காட்டுகிறது என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

இரா. முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பெண்களை அடிமைப்படுத்தும் ஏராளமான கருத்துகளை முன்வைத்து, மனுதர்மத்தை எழுதியவர்களும், அதனை ஆதரிப்போரும்தான் சட்ட – ஒழுங்கு சீர்குலைத்து, சமூக அமைதியைக் கெடுத்துவரும் குற்றவாளிகள் என்பதை காவல்துறை உணரவேண்டும். இதற்கு நேர்மாறாக இந்துத்துவக் கருத்தியலின் கயமைத்தனத்தை விளக்கிக் கூறிய தொல். திருமாவளவன் மீது வழக்குப் போட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

வைகோ

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ,” மனுநீதி நூல்களில் உள்ள, தவறான கருத்துகளைத்தான் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். அதை வேறு விதமாகத் திரித்து, அவர்மீது, சங்பரிவார் அமைப்புகளின் ஆதரவாளர்கள், குற்றச்சாட்டு கொடுத்து உள்ளனர். உண்மையில், புகார் கொடுத்தவர்கள்தான் குற்றவாளிகள். ஆனால், தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற எடப்பாடி ஆட்சி, இந்துத்துவ சக்திகளைத் திருப்தி செய்யவும், அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றவுமே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றம் கண்டனம்

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளன் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்படி, மக்களவை செயலாளருக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் காசி ராமலிங்கம் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா அமர்வு நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றாதீர்கள் எனக் கூறி, மனுதாரர் தரப்பில் கோரப்பட்ட அவகாசமும் ஏற்க மறுத்தனர். வழக்கை வாபஸ் பெற்று விரிவான மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தினர். இதனையடுத்து மனுஸ்மிருதி பற்றி அவதூறாகப் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இவ்வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *