மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் திராவிடர் கழக பிரச்சாரகர்கள்

நவம்பர் 16-30, 2020

கே.ஆர்.குமார்

பக்தியின் பேரால் சாமியார்கள் நடத்தும் மாய மந்திர செய்கைகளை, மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் விதமாக பல்வேறு மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளை திராவிடர் கழகத் தோழர்கள் செய்து காட்டி வருகிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர் சுயமரியாதைச் சுடரொளி  புரபசர் கே.ஆர்.குமார் ஆவார். நீலகிரி மாவட்டம் குன்னூரை பூர்வீகமாக கொண்ட இவர். அங்குள்ள சாமியார் செய்யும் மோசடியாக மந்திரம் என்ற பெயரால் செய்யும் தந்திரங்களைக் கற்று அவர்களுக்குப் பெரும் சவாலாக விளங்கியவர்.  தந்தை பெரியாரிடம் அத்தகைய தந்திர செயல்பாடுகளைச் செய்துக் காட்டிப் பாராட்டப்பட்டவர்.

தொடர்ந்து, கழக நிகழ்ச்சிகளிலும் மாநாடுகளிலும் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளைச் செய்து காட்டி மேஜிக் புரபசர் என்று பாராட்டப் பெற்றவர்.  கழகம் நடத்தும் மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணிகளில் கண்களைக் கட்டிக்கொண்டு பைக் ஓட்டுதல், பெட்டியில் வைத்து ஒருவரை மறைத்து இன்னொருவரை வரச்செய்தல், ஒருதூணில் ஒருவரின்  கைகளைக் கட்டி வைத்து பின்னர் அந்தத் தூணிலிருந்து வேறு ஒரு தூணுக்கு இடமாறச் செய்தல், கொதிக்கும் எண்ணெய்யில் அப்பளம் பொரித்து கையால் எடுத்து உண்ணுதல், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளைச் செய்து காட்டி மூடநம்பிக்கைகளின் முதுகெலும்பை உடைத்தவர். இவரது வாழ்விணையர் ஜெயமணி குமார்  தொடர்ந்து மந்திரமா – தந்திரமா? நிகழ்ச்சியைச் செய்து வருகிறார்.

மேலும் ஈரோடு தியாகு, இனமான நடிகர் எம். ஏ.கிரிதரன்ஆகியோர் தொடர்ந்து செய்து வந்தனர். தற்பொழுது ஈட்டி கணேசன் பட்டுக்கோட்டை எஸ்.வி. செல்வம்,  ஊற்றங்கரை  பழ.வெங்கடாசலம், தஞ்சை சுடர் வேந்தன், சில்லத்தூர் சிற்றரசு, காஞ்சி கதிரவன், புதுவை குமார், திருத்துறைப்பூண்டி பி.குணசேகரன், சோம.நீலகண்டன், வல்லவாடி இரணியன், அஜ்மல் கான், மதுரை வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமான மந்திரமா? தந்திரமா? பிரச்சாரக் கலைஞர்களை உருவாக்கி அனைத்து பிரச்சாரக் கூட்டங்களிலும் செய்து பகுத்தறிவு அறிவியல் பூர்வமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது திராவிடர் கழகம்.

ஈட்டி கணேசன்

மேலும் தமிழ்நாட்டு வழிபாட்டு முறைகளில் பிரபலமாக இருக்கும் அலகு குத்தி காவடி எடுத்தல், தீச்சட்டி தூக்குதல், பறவைக் காவடி,  செடல் காவடி, தீ மிதித்தல், நாக்கில் சூடம் ஏற்றுதல்,  அரிவாள் மீது ஏறி  நிற்றல், தலையில் தேங்காய் உடைத்தல் போன்ற கடவுள் சக்தியால் மட்டுமே செய்ய முடியும் என்று நம்பப்பட்ட அனைத்தையும், “கடவுள் சக்தி அல்ல; மனித சக்தி தான்” என்ற முழக்கத்தோடு செய்து காட்டி, தமிழ்நாடெங்கும் பேரணிகளிலும்  செய்து காட்டுவதுடன், கிராமப்புற பிரச்சாரங்களில் ஈடுபட்டு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைச் செய்து வருகிறது திராவிடர் கழகம். இந்த நிகழ்ச்சிகளில் கரம்பக்குடி முத்து, அத்திவெட்டி பெ.வீரைய்யன், ஜெயங்கொண்டம் கே.பி. கலியமூர்த்தி, உடுக்கடி அட்ட லிங்கம்  உள்ளிட்ட தோழர்களும் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர். சென்னிமலையில் கடவுள் சக்தியால் தான் மாட்டு வண்டி தானே செல்கிறது என்னும் மோசடிப் பிரச்சாரத்தை முறியடித்து இல்லை என்பதை நிரூபிக்க அதே போல் மாட்டுவண்டியை படிக்கட்டுகளில் ஏற்றிக்காட்டியது திராவிடர் கழகம்.

1994 இல் பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று பரப்பப்பட்ட மோசடியை முறியடிக்கும் விதமாக சென்னை அண்ணாசாலையில் தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்தார் பொதுச் செயலாளராக இருந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள்.

கிராமப்புறங்களில் கிளப்பப்படும்போது பேய் புரளிகள், ஆவி மோசடிகள், திடீர் சாமியார்கள், கொள்ளிவாய் பிசாசுகள் உள்ளிட்ட அனைத்து வகை மூடநம்பிக்கைகளையும் கிளம்பும் போது அவற்றை முறியடிக்க தனி பிரச்சாரப் படை அமைத்து அறிவியல் பூர்வமாகப் பிரச்சாரம் செய்வதுடன், உளவியல் நிபுணர்களின் கருத்துகளையும் விளக்கங்களையும் பெற்று பிரச்சாரம் செய்து வருவது ,இந்தியாவிலேயே திராவிடர் கழகம் மட்டும்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *