நூல்: ‘இந்துவாக நான் இருக்க முடியாது’
– ஆர்எஸ்எஸ்-ஸில் ஒரு தலித்தின் கதை
ஆசிரியர்: பன்வர் மெக்வன்ஷி
தமிழில்: செ.நடேசன்
முகவரி: எதிர் வெளியீடு,
96, நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி – 642 002
தொலைபேசி: 04259 226012, 99425 11302
விலை: ரூ.299/-
உணவைப் பொட்டலம் கட்டும் நண்பர்
அயோத்தி செல்லும் வழியில் இறந்தவர்கள் மற்றும் பில்வாராவில் இறந்த இருவர் ஆகியோர் தியாகிகள் என்று பிரகடனப்படுத்தப்பட்டார்கள். அவர்களது அஸ்தியைக் கொண்ட கலசங்கள் கிராமம் விட்டு கிராமமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அந்த அஸ்திக் கலச ஊர்வலத்தில் சாதுக்களும் துறவிகளும், சங் மற்றும் வி.ஹெச்.பி. செயல்பாட்டாளர்களும் அலுவலகப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டார்கள். அந்த அஸ்திக் கலச யாத்திரை சிர்தியாஸையும்கூட இரவு 9 மணியளவில் அடைந்தது. நாங்கள் அதை உரிய மரியாதையுடன் வரவேற்றோம்.
அன்று நடைபெற்ற கூட்டத்தில், ‘எல்லா இந்துக்களும் சகோதரர்கள்’ என்ற கோஷங்கள்! இந்து சமுதாயத்தில், சமமற்றவர்கள் மீது கொடூரத் தாக்கதல்கள், மற்றும் ஊழல்கள்! அந்தக் கூட்டம் இந்துக்கள் ஒன்று பட்டவர்களாக, அமைப்பாக திரட்டப் பட்டவர்களாக, இந்துக்களில் ஒதுக்கப்பட்டப் பிரிவினரை அரவணைத்துக் கொள்பவர்களாக இருக்க வேண்டும் என்ற அறிவுரைகளோடு நிறைவு பெற்றது. எங்களது தலித் பகுதியில் சங் அமைப்பின் முதலாவது வெற்றிகரமான கூட்டம் இதுதான்.
இது முடிந்த பிறகு, எங்கள் வீட்டில் ஒவ்வொருவரும் உணவு உண்ண நான் ஏற்பாடுகளைச் செய்திருந்தேன். ஒவ்வொருவருக்கும் நாங்கள் பூரி மற்றும் கிழங்கு தயாரித்திருந்தோம்.
நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களை உணவுக்காக வீட்டுக்கு வருமாறு நான் அழைத்த அந்தத் தருணத்தில் அங்கே திடீரென ஒரு தயக்கம் தென்பட்டது. சேவா பாரதியின் மாவட்ட செயல் தலைவரும், சங் அமைப்பின் மாவட்டப் பொறுப்பாளருமானவர் என்னை ஒரு பக்கமாக அழைத்துச் சென்றார். அவர் பெயர் நந்த்லால் காஸ்ட், 50 வயதுடைய ஒரு பணியா. சங் அமைப்பில் இருபது ஆண்டுகள் அலுவலகப் பொறுப்பாளராக இருந்தவர். ஒரு சங்கி பள்ளியையும் நடத்திவருபவர். எனது தோளில் உள்ளன்புடன் அவரது கையைப் போட்டவர், அந்த நாளின் நிகழ்ச்சிகளை நான் ஒருங்கமைத்தது பற்றி பாராட்டுகளைப் பொழிந்தார். அது சிறிது நேரம் நடந்தது. படிப்படியாக சங் அமைப்புக்கும் தேசத்துக்குமான எனது வேலைகளுக்காக பெரிய அளவில் பாராட்டுகளைப் பதிவு செய்வதிலிருந்து மாற்றி, இறுதியில் தணிந்த குரலில் அவர் கூறினார், “நண்பரே, நமது சமுதாயத்திலுள்ள சமத்துவமின்மை பற்றி முன்னுணர்வுடன் அறிந்து வைத்திருக்கிறீர்கள். சங் அமைப்பின் எல்லா முயற்சிகளுக்குப் பிறகும், இந்து சமுதாயம் ஒன்றாக ஆகவில்லை. எவ்வளவுக்கெவ்வளவும் நம்மைப் பொருத்தவரை, எந்த நாளிலும் உங்களுடன் ஒன்றாக அமர்வோம், ஒரே தட்டில் உணவு உண்போம். ஆனால், இன்று சாதுக்களும், துறவிகளும் மற்றவர்களும்கூட இங்கே இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்காமல் தாழ்ந்த ஜாதி வீட்டிலிருந்து உணவு கொடுப்பது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிடும். அவர்கள் மிகவும் கோபம் கொள்வார்கள். அவர்கள் விலகிச் சென்று விடுவார்கள்.’’
அவரது வார்த்தைகள் என்னைக் கல்லாக மாற்றின. நீங்கள் என்னை வெட்டினால், நான் இரத்தம் சிந்த மாட்டேன். எனது மனம் சிந்தனைப் புயலால் அமிலச் செறிவு கொண்டதாக ஆனது. எனது நாவிலிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை. அவர் என்ன சொல்கிறார் என்பதை ஒருமுறை புரிந்து கொண்டதும் அவர் மேலும் மேலும் கூறிக்கொண்டே இருந்ததை என்னால் கவனிக்க முடியவில்லை. ஆனால், அவர் கடைசியாகக் கூறிய ஒரு விஷயத்தை இன்று, இந்த நாளில் நினைத்துப் பார்க்கிறேன். “நீங்கள் ஏன் உணவைப் பொட்டலமாக்கி காரில் வைக்கக் கூடாது? நாங்கள் அடுத்த கிராமத்தில் அவர்கள் அனைவருக்கும் உணவிடுவோம்.’’
உண்மையில் அவரது வார்த்தைகளின் பொருள் தெள்ளத்தெளிவாக இருந்தது. அந்த உணவு ஒரு தலித் சுயம்சேவக் வீட்டிலிருந்து வந்தது என்பதை இரகசியமாக வைத்து, ஒவ்வொருவருக்கும் உணவை அமைதியாக உண்ணக் கொடுப்பது.
எனது சொந்த வீட்டில் நான் தோற்கடிக்கப்பட்டதாக உணர்ந்தேன். ஆனால், யாரால் என்பது எனக்குத் தெரியவில்லை. எனது தந்தை வென்றுள்ளார். ஆனால் இந்த அடியைக் கொடுத்தது சங். எனது தந்தைக்கு என்ன பதில் சொல்வேன். அவர், ‘ஏன் அவர்கள் நமது வீட்டில் சாப்பிடவில்லை?’ என்று கேட்டார். இன்னும்கூட எனது மனதைக் கடினமாக்கிக் கொண்டு, உணவை பொட்டலமாக்குவதைச் செய்தேன். எனது குடும்பம் ஏன் என்று கேட்டபோது, “அவர்கள் ஏற்கெனவே பகவன்பூரா கிராமத்தில் அடுத்த நிகழ்ச்சிக்கு காலதாமதமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்; எனவே, அவர்கள் அங்கே சாப்பிடுவார்கள்.’’
அவர்களை எனக்குப் பின்னாலிருந்து வெளியேற்றுவதை செய்து முடித்தேன். ஆனால், எனது மகிழ்ச்சி பறந்துபோய் விட்டது. தாழ்ந்த ஜாதியினராக இருப்பதின் பொருள் என்ன என்பதை நான் முழுமையாக உணர்ந்து கொண்டேன். மீண்டும் மீண்டும் என்னை அந்த சிந்தனை தொந்தரவு செய்தது. இது எப்படி நடக்க முடியும்? சங் அமைப்பால் இதை எனக்கு எப்படிச் செய்ய முடிந்தது? அவர்கள் தீண்டாமமையை நம்பவில்லை, அவர்கள் ஜாதிப் பாகுபாட்டை நம்பவில்லை. அவர்கள் எல்லா இந்துக்களும் ஒன்று என்பதை நம்புகிறார்கள். அவர்கள் ஒன்றுபட்ட இந்து சமுதாயம் என்று பேசுகிறார்கள். பின் ஏன் இந்த வகையான பாசாங்கு; போலி நடிப்பு?
நான் நினைத்துப் பார்த்தேன். இங்கே நான் ஒரு கட்டுப்பாடுமிக்க சுயம்சேவக். ஒரு உணர்வுப்பூர்வமான சுயம்சேவக், ஒரு மாவட்ட அலுவலக தலைவர். இது எனக்கு நடக்கும் என்றால், இன்னும் என்ன வகையான, சகித்துக் கொள்ள முடியாத நடத்தைக் கோலத்தை எஞ்சியுள்ள எனது சமுதாயம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது? அந்த நாளில் எனது வாழ்க்கையில் முதல்முறையாக எனது இந்து அடையாளத்திலிருந்து நான் விலகி நின்றேன். இந்த உலகத்தை தாழ்ந்த ஜாதியிலிருந்து வந்த ஒரு நபராக பார்க்கத் துவங்கினேன். தொந்தரவு தரும் எனது சிந்தனைகள் இரவெல்லாம் என்னை விழித்திருக்கச் செய்தன. அந்த இரவை முடிவில்லாததாக உணர்ந்தேன். நான் உறுதியாக அறிந்திருந்த ஒரு சிறிய ஒன்று, ‘காலைச் சூரியன் இன்னும் தெளிவான நாளில் மேலே எழும்.’
அடுத்த நாள் கடவுள் அருள் வெளிப்பாட்டு நாள் போல இருந்தது. கத்திகளைப் போன்ற இரவு, கண்கள் கூசும் ஒளி முகத்தோடு சூரியன் தோன்றியபோது, வெறுமனே கடந்து சென்றது போல இருந்தது. அஸ்தி கலச யாத்திரையோடு சென்ற எனது பிராமண நண்பர் புருஷோத்தம் ஷ்ட்ரோட்ரியா சிர்தியாஸ்க்கு திரும்பினார். அவரை எனக்கு அம்பேத்கர் விடுதி நாள்களிலிருந்து தெரியும். கவிதைகளில் உள்ள ஆர்வத்தால் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். நாங்கள் ஆஸாத் நகர் ஷாகாவுக்கு ஒன்றாகச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். நாங்கள் ஒவ்வொன்றையும் பகிர்ந்து கொண்டோம். எங்கள் நட்பு ஆழமானது.
காலையில் அவர் திரும்பி வந்தபோது, அவர் கைப்பிடி வைத்த ஒரு பாத்திரத்தைச் சுமந்து வந்தார். அதில்தான் பூரிக்கிழங்கு அனுப்பப்பட்டிருந்தது. அவர் சொன்ன கதை ஏற்றுக்கொள்ளவோ, நம்பவோ முடியாததாக இருந்தது. அது எனது மண்டையோட்டில் சுத்தியல் கொண்டு அடிப்பதுபோல இருந்தது. நான் அனுப்பிய உணவு பகவன்பூராவுக்கு சற்று முன்னால் சாலையில் வீசப்பட்டது என்றும், இரவு உணவு மிகவும் பின்னிரவில் ராம்ஸ்வரூப் என்ற பிராமணரின் வீட்டிலிருந்து தரப்பட்டது என்றும் புருஷோத்தம் கூறினார். இதை என்னிடம் சொல்லக்கூடாது என்று புருஷோத்தமிடம் கூறப்பட்டது. ஆனால், அவர் பொய்யை அவருடன் கொண்டுவர விரும்பவில்லை. ‘நீ கொடுத்த உணவு சாப்பிடப்படவில்லை; அது வெளியே வீசப்பட்டது’ என்றார் அவர். அதை உடனே என்னால் நம்பமுடியவில்லை. நான் அவரிடம் கூறினேன், “நீங்கள் விளையாட்டுக்குக் கூறுகிறீர்கள். சங் அமைப்பில் உள்ள நமது மக்கள் மிகவும் ஜாதி வெறியர்களாகவும், கொடூரமானவர்களாகவும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை’’. அவர் கூறினார், “நீ என்னை நம்பவில்லை என்றால், நீயே வந்து உன் சொந்தக் கண்களால் பார். அதில் கொஞ்சம் விழுந்துகிடக்கும்’’. பகவன்பூராவை நோக்கி நடை துவங்கியது, போர் இனிமேல் அறிவிக்கப்பட உள்ளது.
எங்கும், எவரும் கவனிக்கத் தயாரில்லை
நான் மாலையில் பிராமண கிராமமான சரேரியை சீறிப் பொங்கும் சினத்துடன் அடைந்தேன். யாத்திரையில் பங்கேற்றவர்களின் அவமானம் நிறைந்த நடத்தைகளைப் பற்றிய ஒரு விளக்கத்தை நான் கோரினேன். ஆனால், அவர்கள் உணவை வெளியே தூக்கியெறிந்ததை திட்டவட்டமாக மறுத்தார்கள். நான் அவர்களிடம் இந்தத் தகவலை நேரடியாக புருஷோத்தம்ஜியிடமிருந்து பெற்றதாகக் கூறியபோது அவர்கள் தொனியை மாற்றிக் கொண்டு, “ஓ! ஆம். பகவன்புரா நோக்கி மிக வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒரு வளைவில் திரும்பியபோது, உணவுப் பொட்டலங்கள் அவற்றைப் பிடித்துக் கொண்டிருந்தவர்களின் கைகளிலிருந்து வெளியே பறந்து விட்டன.’’ அவர்களது வார்த்தைகளுக்கும் அவர்களது பார்வைகளுக்குமிடையே உண்மை எனக்குத் தெளிவாகியது. இருந்திருந்தும் எவ்வளவு எளிதாக இந்த மிகவும் மதிக்கப்படும் பாய்சாஹேப்கள் பொய் கூறுகிறார்கள் என்று நான் சிந்தித்தேன். அவர்கள் தங்கள் பற்களின் வழியாக பொய் பேசுகிறார்கள் என நான் ஏற்றுக் கொண்டேன். யாராவது ஒருவரின் கைகளிலிருந்து உணவு பறந்திருக்குமானால், அது சாலையின் நடுவில் விழுந்திருக்கும்; அது எப்படி சாலையின் ஓரத்தை அடைந்தது? மேலும், இரண்டாவதாக, பூரிகள் சேற்றில் விழுந்திருக்கக் கூடும். ஆனால், குறைந்தபட்சமாக, கைப்பிடி கொண்ட பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த பூரிக்கிழங்கு பத்திரமாக இருந்திருக்குமே. எந்த வகையிலும், அந்தப் பாத்திரம்கூட விழுந்திருக்குமானால், அது சிராய்ப்புகளுக்கு உள்ளாகி வளைந்திருக்கும். அது நடக்கவில்லை.
அங்கே எந்த சந்தேகமும் இல்லை. ஒரு தலித் சுயம்சேவக் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை அவர்கள் வேண்டுமென்றே வெளியே வீசியிருக்கிறார்கள். ஆனால், அதை எதிர் கொண்டபோது, அவர்களது தவறை ஒப்புக் கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் வினோதமான மற்றும் நம்பமுடியாத விளக்கங்களுடன் வருகிறார்கள். அவர்களது பொய்களும், அவர்களுடைய பொய்களை உண்மையைப்போல முன்வைத்த முயற்சிகளும் எனது இதயத்தை முறித்தன. நான் மிகவும் ஆழத்துக்கு தாழ்த்தப்பட்டதையும் அவமானப்படுத்தப் பட்டதையும் உணர்ந்தேன். எனது வீட்டிலிருந்து வந்த உணவை சங் நிராகரித்தது மட்டுமல்ல, அவர்கள் என்னை மேலே கொண்டுவந்து வெகுதூரத்தில் வீசியெறிந்ததைப் போல இருந்தது. நான் அவர்களிடமிருந்து முற்றிலும் தொலைவில் இருப்பதாக உணர்ந்தேன். அவர்கள் பொய்யர்கள்; கபட வேடதாரிகள்.
எவ்வாறு நான் எனது வலிமை முழுவதையும் அதன் இலக்குகளை நிறைவேற்றுவதை நோக்கிச் செலுத்தினேன்? எவ்வாறு நான் ஸ்ரீராமனுக்கு ஒரு தியாகியாக வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தேன்? என சங் அமைப்பில் எனது பல ஆண்டுகளின் வேலைகள் ஒரு திரைப்படம்போல என்முன் ஓடியது. நான் அயோத்தியை அடைந்ததும், சரயூ நதியின்மேல் அமைந்துள்ள பாலத்தின் மேலே காவலர்களின் குண்டுகளால் இறந்திருப்பேனானால், இந்த மனிதர்கள் உயிரற்ற எனது பிணத்தைத் தொட்டாவது பார்த்திருப்பார்களா? அது எனது வீட்டுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்குமா? அல்லது விருப்பமில்லாத தேவையற்ற உணவைப்போல எனது பிணம் சரயூவில் வீசியெறியப் பட்டிருக்குமா? எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்: இந்த இந்து ராஷ்ட்ராவுக் காகத்தான் நான் கடுமையாக வேலை செய்தேனா? கொல்லவும், கொல்லப்படவும் தயாராக இருந்தேனா? இங்கே எனக்கு எந்த ஓர் இடமும் இல்லை. நான் யாராக இருக்கிறேன்? எனது சொந்த அடையாளம்தான் என்ன? எல்லாவற்றுக்கும் பிறகு நான் என்னவாக இருக்கின்றேன்? ராமனின் ஒரு பக்தன், ஒரு இந்து கரசேவகன் அல்லது ஒரு சூத்திரன், ஒரு தீண்டத்தகாதவன், மிகவும் தூய்மையற்ற ஒருவன். அதனால் எனது வீட்டிலிருந்து வந்த உணவு இந்து ராஷ்ட்ராவின் இந்தக் கொடி தாங்கிகளால் தொடப்பட மாட்டாது! எனது அடையாளம்தான் என்னவாக இருந்தது?
பின்னர் நான் உணர்ந்துகொண்டேன்: இந்து ஜாதி அமைப்பில் நான் சூத்திரர்களைவிட கீழானவன். நான் ஒரு தீண்டத்தகாதவன். நான்கு வர்ணங்களில் ஒன்றில் உள்ளவன் அல்ல. ஆனால், ஜாதி நீக்கம் செய்யப்பட்ட இழிசனன். அய்ந்தாவது ஜாதியான அவர்ணன். நான் ஒரு சுயம்சேவக்காக நன்றாக இருக்கலாம்; ஆனால், அந்த வழியெங்கும் நான் ஓர் இந்து அல்ல! நான் ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை? கட்டாயம் இதனால்தான். நான் ஏன் விஸ்டாரக் வரை மட்டும் உயர அனுமதிக்கப்பட்டேன்? பிரச்சாரக்காக வருவதிலிருந்து நான் ஏன் தன்னம்பிக்கை இழக்க வைக்கப்பட்டேன்? எனக்கு நானே கூறினேன், “போதும். இப்போது என்னை நானே அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. எனக்கு நேர்ந்த இந்த விஷயங்களுக்கான காரணங்கள் பற்றி நான் தேட வேண்டியுள்ளது. அவற்றின் வேர்களைக் களைய வேண்டியுள்ளது.’’
இந்தப் பாகுபாட்டுக்கும், அநீதிக்கும் எதிரான எனது கொள்கைப் பூர்வமான ஆட்சேபணைகளை சங் தலைமையகமான நாக்பூர்வரை வழியெங்கும் கொண்டுசெல்ல நான் முடிவு செய்துவிட்டேன். அஸ்தி கலச யாத்திரையில் பல்வேறு நிலைகளில் இருந்த பிரச்சாரக்குகள் முதல் செல்வாக்கு மிக்க மக்கள் எவ்வளவு பேரிடம் பேச முடியுமோ அவ்வளவு பேரிடமும் நான் பேசினேன். எனது வலிகளைப் பகிர்ந்துகொள்ள அங்கு யாருமே இல்லை. நான் அணுகாத எந்த நிலையும் இல்லை. கேட்பதற்குக்கூட எந்த இடத்திலும், எவரும் இல்லை என்பதை நான் பார்த்தபோது, நான் எனது அழுகையை உதவிக்காக சர்சங்சாலக், பாலாசாஹேப் தேவ்ரஸ் வரை கொண்டு சென்றேன். உள்ளூர் தலைவர்கள் நான் ஓர் இந்துவாக இருப்பதையும், மேலும் ஒரு நாள் கூட சங் அமைப்புடன் எனது வேலைகளைக் கொண்டு செல்வதையும் விரும்பவில்லை என்ற முழுக் கதையையும் அவருக்கு நான் எழுதினேன்; அவரிடம் கூறினேன்.
ஆனால், நான் யார்? எந்த முக்கியத்துவமும் இல்லாத அற்பமான ஒருவன். அதிகாரத்தின் தாழ்வாரங்களில் கேட்கப்பட வேண்டுமா? எவரிடமிருந்தும் எந்த மறுமொழியும் இல்லை. உண்மையில் இது ஆச்சரியப்படக்கூடிய ஒன்று அல்ல. நான் பேசிய ஒவ்வொரு நபரும் எனது புகார்களை ஒரு சிறிய விஷயம் என்று தள்ளுபடி செய்தார்கள். ஆனால், நடந்தது என்னவென்றால், ‘இந்த எதிர்மறை எல்லாவற்றையும் விட்டுவிடு; உடன்பாடான வேலைகளை தொடர்ந்து செய்’ என அறிவுரை தரப்பட்டது எனக்குத்தான். ஆனால், இது ஒரு சிறிய விஷயம் என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்போது அல்ல; இன்று மட்டும் அல்ல; தீண்டாமையும், ஜாதியப் பாகுபாடும் எவர் ஒருவர் வாழ்விலும் சிறிய விஷயம் அல்ல. யாராவது ஒருவரை பிறப்பால் தீண்டத்தகாதவர் என்று அறிவிப்பதும், அதன் பிறகு அவர்களது விருந்தோம்பலை ஏற்க மறுப்பதும் _ இது வேண்டுமானால் இந்து ராஷ்ட்ராவின் கட்டட சிற்பிகளுக்கு சிறிய விஷயமாக இருக்கலாம். என் வாழ்வில் இது மிகவும் பெரியது.
எனது வாழ்வை முடித்துக்கொள்ளும் சிந்தனை
நான் சர்சங் சாலக்குக்கு எழுதிய கடிதத்துக்கு எந்தப் பதிலையும் பெறவில்லை. எனது கேள்வி கேட்டலை நான் மேலே தொடர்ந்தேன். ஒவ்வொரு நிலையிலும் விவாதிப்பதை நான் மேலே தொடர்ந்தேன். ஆனால், ஒவ்வொரு நிலையிலும் அங்கே ஒரு வினோதமான மவுனம் நிலவியது. ஒவ்வொரு இடத்திலும் நான் ஏமாற்றங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஓர் ஒற்றை நபர்கூட இந்த நிகழ்ச்சியின் தீவிரத் தன்மையைப் பார்க்க விரும்பவில்லை. அவர்களுக்கு இது மிகச் சிறிதான நிகழ்வாகத் தோன்றியது. எல்லாவற்றுக்கும் பிறகு இந்த விஷயங்கள் நமது சமுதாயத்தில் நடக்கின்றன. பெரிய பங்கு என்ன? அதைப்பற்றி நான் ஏன் மிகவும் அதிகமாக வேலை செய்கிறேன்? இதற்கிடையே, நான் முழுமையான வலிகளை அனுபவித்தவாறே போய்க் கொண்டிருந்தேன். அது போன்றவைகளை முன்பு ஒருபோதும் அனுபவித்ததில்லை. என்ன செய்ய வேண்டும் என்பதில் நான் முற்றிலும் குழப்பமடைந்தேன். சிந்திக்க முடியவில்லை. செயல்பட முடியவில்லை. நம்பிக்கை இழந்து மூழ்கிக் கொண்டிருந்தேன். என்னைத் தின்றுகொண்டிருந்த மரண வலிக்கு எவரும் ஆலோசனை தரவில்லை.
இந்த உலகம் எதையும் கவனிக்காமல் அதன் வழியில் சென்ற கொண்டிருக்கிறது. நான் ஏன் தொடர்ந்து வாழ வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பித்தேன். அதை பல வழிகளில் நிறைவேற்றிக் கொள்ள முடியும். நானாகவே தூக்கில் தொங்குவது, கிணற்றில் குதிப்பது, விஷத்தை எடுத்துக்கொள்வது என என்னை நானே எப்போதைக்கும் விடுவித்துக்கொள்ள முடியும். நான் ஒரு முடிவுக்கு வந்தேன். விஷம்தான் மிக நல்லவழி. வீட்டில் அங்கே எலி விஷம் இருந்தது.
ஒரு நாள் இரவில் என்னுடைய உணவோடு விஷத்தையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டேன். படுக்கைக்கு, எனது வாழ்வில் இன்னொரு காலை இனி இல்லை என்று நினைத்துக்கொண்டே சென்றேன். நான் விரைவில் தூங்கிவிட்டதாக நினைத்தேன். ஆனால், அரைவிழிப்புடன் கூடிய தூக்கம். நான் உயிருடன் இருந்தேன். ஆனால், இறந்துகொண்டும் இருந்தேன். என் வயிற்றில் சக்திமிக்க ஒரு வலியின் அலை எழுந்தது. ஓய்மை உணர்வு எனக்குள் மேலோங்கியிருந்தது. வலி தாங்க முடியாததாக இருந்தது. வாந்தி எடுக்க நான் வெளிப்புறமாக ஓடினேன். நான் வலிய வாந்தி எடுத்தபோது எனது ஈரல் வாய்க்குள் வந்தது போலிருந்தது. எனது குடல் வெளியே வந்து விழுந்தது. எனது தலை சுற்றியது. எனது மனதின் விழிப்புநிலை மங்கத் துவங்கியது.