கவிதை: நமக்கு வேண்டாம்!

நவம்பர் 16-30, 2020

நலக்கல்வி புதுக்கல்வி நாட்டு மக்கள்

                நன்மைக்கே உருவான கல்வி என்றே

குலக்கல்வி தனைமீண்டும் கொண்டு வந்தே

                குரைக்கிறது குள்ளநரிக் கூட்டம்! மக்கள்

பலருக்கும் கேடுதரும் அழிவைச் சேர்க்கும்

                பயன்நல்கா சமற்கிருதம் இந்தி மூலம்

சிலருக்கு மூன்றுவிழுக் காட்டி னர்க்கே

                சிறப்பனைத்தும் சேர்த்திடவே துடிக்கின் றார்கள்!

புதியகல்விக் கொள்கையினால் தமிழ் நாட்டுக்குப்

                புல்லளவும் பயன்விளையப் போவ தில்லை!

ஒதியமரம் உத்திரத்துக் காகா! எந்த

                ஒப்பனையும் சிறுபொழுதில் கலைந்து போகும்!

மதியிழந்து மாண்பிழந்து மக்கள் வாழ்வில்

                மண்ணள்ளிப் போடுவதில் மகிழும் பொல்லார்

சதிவலையால் இந்நாட்டின் இறையாண் மைக்கும்

                சமன்மைக்கும் உரிமைக்கும் வேட்டு வைத்தார்!

கல்வியிலே வளர்ந்துள்ள தமிழ கத்தைக்

                கடைகோடி தனில்வீழ்த்தக் காவி வண்ணப்

புல்லர்கள் பூணூலார் சூழ்ச்சி நோக்கில்

                பொய்மூட்டை அவிழ்க்கின்றார்; மொழிகள் மூன்றால்

பொல்லாங்கு சேர்ப்பதற்குப் புரட்டால் ஏய்த்துப்

                புதியவழி கிடைக்குமெனப் புலம்பு கின்றார்;

கொல்கின்ற நஞ்சினையே அமிழ்தம் என்போர்

                கொண்டாடி மகிழ்கின்றார், நம்ப வேண்டா!

பெண்ணினத்தை முன்னேற்றும் வழிகள் காணோம்

                பெருகிவரும் இளைஞர்தம் வேலை வாய்ப்பை

முன்னெடுக்கும் ஒருவழியும் இதிலே இல்லை;

                மூடநெறி வேதநெறி முழக்கம் செய்யும்

பின்னடைவால் பிறமொழிகள் பேசு வோரைப்

                பெருங்குழியில் தள்ளிவிட வழிகள் காட்டும்!

உண்மையினில் இரண்டுமொழிக் கல்வி போதும்

                உதவாமும் மொழிக்கல்வி நமக்கு வேண்டாம்!

– பேராசிரியர் முனைவர்

கடவூர் மணிமாறன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *