(Heart Lung Machine)
“எக்மோ’’ கருவியைப் பற்றி இப்பொழுது அடிக்கடி படிக்கின்றோம். முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களுக்கு எக்மோ ((ECMO- Extra Corporal Membrane Oxygenation) மருத்துவம் செய்ததாக பரபரப்பான செய்தியை நாமறிவோம். சமீபத்தில்கூட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இம்மருத்துவம் செய்யப்பட்டதாக நாம் படித்திருக்கிறோம். நுரையீரல் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, முழுதும் செயலிழந்துவிட்டால் “காற்று மாற்றம்’’ செய்ய இயலாத நிலை ஏற்படும். அவ்வேளைகளில் நுரையீரல் செய்யும் வேலையை, வெளியில் உள்ள ஒரு பொறி செய்யும். எப்படி இதய அறுவை மருத்துவத்தில், இதய, நுரையீரல் பொறி (Heart Lung Machine) வேலை செய்கிறதோ, அதே போல் எக்மோ கருவி, நுரையீரலுக்குப் பதில் வேலை செய்யும். அதன் மூலம் உடலுக்குத் தேவையான உயிர்மூச்சுக் காற்று உடலுக்குள், இரத்தக் குழாய்கள் மூலம் செலுத்தப்பட்டு, இரத்தத்தில் உள்ள கரியமில காற்று உறிஞ்சி வெளியேற்றப்படும். இதன் மூலம் மருத்துவர்களுக்கு நோயை குணப்படுத்துவதற்கான நேரம் கிடைக்கும். எக்மோ கருவி நுரையீரல் வேலையை இடைவிடாமல் செய்வதால் நுரையீரலுக்கு ஓய்வு கிடைக்கும். மருத்துவர்களுக்கும் அதை சீராக்கும் வாய்ப்பும், நேரமும் கிடைக்கும். இன்று எக்மோ கருவி பயன்பாட்டால் எத்தனையோ பேர் உயிர் பிழைக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. மனித உடலின் உறுப்புகளின் செயல்பாட்டை, வெளியிலிருந்தவாறே பொறிகளின் உதவியோடு செயல்படுத்தி, அவ்வேளையில் பாதிப்படைந்த உறுப்புகளைச் சீர் செய்யும் மருத்துவத்தின் சாதனையை எண்ணி வியக்காமல் இருக்க முடியுமா?
பின்குறிப்பு: இதய, நுரையீரல் பொறியை (Heart Lung Machine) கண்டுபிடித்து, இதய அறுவை மருத்துவத்திற்கு அதைப் பயன்படுத்தி, கோடிக்கணக்கானவர்களை வாழ வைத்த மருத்துவ மாமேதைகள் இருவர்.
அவர்கள் இருவரும் கணவன், மனைவி. மருத்துவர் ஜான் ஹேசம் கிப்பன், அமெரிக்காவின், பிலடெல்பியா மாநிலத்தைச் சேர்ந்த அறுவை மருத்துவ நிபுணர். அவரின் இணையர் திருமதி மேரி ஜீன்னே (MarieÿJeanne), மருத்துவர் கிப்பன் ஆய்வுகளுக்கு பேருதவி புரிந்தவர். இவர்களின் முயற்சியால் 1935இல் முதல் இதய _ நுரையீரல் பொறி பயன்பாட்டிற்கு வந்தது. எண்ணற்ற மக்களுக்கு இதய அறுவை மருத்துவம் மூலம் வாழ்வும் நீண்டது.
அதேபோல் மருத்துவர் ராபர்ட் பார்ட்லெட் (Dr. Robert Bartlett) கண்டுபிடித்ததுதான் “எக்மோ’’ (ECMO- Extra Corporal Membrane Oxygenation) கருவி. 1970இல் இக்கருவி “லோவா பல்கலைக்கழக மருத்துவமனையில் (University of Lova Hospital) வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் பிறந்த இவரின் கண்டுபிடிப்பான “எக்மோ’’ கருவி இன்ற பலருக்கு மறுவாழ்வு கொடுக்கிறது. மனித குலத்திற்கு இம்மருத்துவ அறிஞர்களின் கண்டுபிடிப்புகள “விதி’’ முடிந்தவர்களையும் வாழவைக்கும் “விநோதம்’’தான் என்னே!
“கடவுளை மற! மனிதனை நினை!!’’