மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (18) நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease)

நவம்பர் 16-30, 2020

மரு.இரா.கவுதமன்

நுரையீரலில் ஏற்படும் நாள்பட்ட நோய்களால், நுரையீரலில் உள்ள திசுக்கள் சேதமடையும். அதனால் நுரையீரல் முழு அளவு காற்று மாற்றம் செய்ய இயலாத நிலை ஏற்படும். இதையே “நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்’’ (Chronic Obstructive Pulmonary Disease) என்கிறோம்.

ஒரு முறை இந்நோய் வந்து, நுரையீரல் திசுக்கள் அழிந்துவிட்டால், அத்திசுக்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பாது. மருந்துகளால் நோயின் அறிகுறிகளை மட்டுமே குறைக்க முடியுமே ஒழிய, நோயை முழுமையாகக் குணமாக்க முடியாது. சில நோயாளிகள் இந்நோயோடு, பல ஆண்டுகள் வாழ்கிறார்கள். சிலரோ வாழ்நாள் முழுதும் இந்நோயோடு, போராடிய வண்ணம் உயிர் இருக்கும் வரையில் வாழ்ந்தும் வருகிறார்கள். இன்றைய நிலையில் ஏறத்தாழ 1 கோடிப் பேர் இந்தியாவில் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சரியான மருத்துவத்தின் மூலம் இந்நோயின் அறிகுறிகளைக் குறைத்து, ஓரளவு தொல்லைகளோடு வாழ முடியும்.

நோய் காரணிகள்:

நாள்பட்ட எல்லா வகை நுரையீரல் நோய்களும், நுரையீரல் அடைப்பு நோயில் வந்து நிற்கும். “மூச்சுக் குழல் அழற்சி’’, “நுரையீரலில் நீர் கோப்பு’’ (Pulmonary Oedema),  “இடைத் திசுக்களில் காற்று பரவும் நோய்’’ (Emphysema) போன்ற நோய்களால், நுரையீரல் அடைப்பு நோய் ஏற்படும்.

நாள்பட்ட மூச்சுக்குழல் அழற்சி: (Chronic Bronchitis)

புகைப் பிடித்தல், ஒவ்வாமையை உண்டாக்கும் பொருள்கள், தூசு, காற்று மாசு, மூச்சுக் குழல் நோய்த் தொற்று போன்றவை மூச்சுக்குழல் அழற்சியை உண்டாக்கும். மூச்சுக்குழல் வீங்கி, இயல்பான நிலையில் உள்ள திறப்பு, சுருங்கிவிடும். அதனால் காற்று அதன் வழியே நுரையீரலை அடைவதில் குறைபாடு ஏற்படும். இது குறுகிய, அதிவேகமான மூச்சு விடும் சூழலை உண்டாக்கும்.

நுரையீரல் நீர்கோப்பு:

சிறுநீரகக் கோளாறு, இதயக் கோளாறு போன்ற நோய்கள் தீவிரமடைவதால், அதன் பின் விளைவாக நுரையீரலில் நீர் கோத்துக் கொள்ளும். அதனால் நுரையீரல் செயல்பாடு பாதிப்படையும். இதன் காரணமாக மூச்சுத் திணறல், மூச்சிரைப்பு போன்றவை உண்டாகும்.

ஒவ்வாமை (Allergy),

தூசு, காற்று மாசு, வேதியியல் காற்று (Chemical Feemes) போன்றவையும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பை ஏற்படுத்தும். ஒவ்வாமை உண்டாக்கும் மகரந்தத் துகள்கள், நறுமணப் பொருள்கள் நீண்ட நாள்கள் மூச்சுக் காற்றின் மூலம், மூச்சுக் குழல் வழியே செல்லும்பொழுது, அதன் விளைவாக “மூச்சுக் குழல் இறுக்கம்’’ (Bronchospasam) ஏற்பட்டு, மூச்சு விடுவதில் தொல்லை ஏற்படும்.

டெல்லி போன்ற காற்று மாசு அதிகம் பாதிப்புள்ள நகரங்களிலேயே தொடர்ந்து தங்கி, வாழ வேண்டியவர்களுக்கு, நாளடைவில் இந்நோய் வர வாய்ப்பு ஏற்படும். சிலர் நீண்ட காலம் வேதியியல் தொழிற்சாலைகளில் (Chemical Factories) பணியாற்றும் சூழ்நிலை ஏற்படும். அதேபோல் சிலர் சிமெண்ட் தொழிற்சாலைகளிலும், சிமெண்ட் – அட்டை (Cement & Asbestose) தொழிற்சாலைகளிலும் பணியாற்றுவர். அவர்களுக்கு சிமெண்ட் துகள்கள், நுரையீரலில் ஒட்டிக்கொண்டு, அதன் செயல்பாட்டை குறைக்கும். வண்ணக் கலவை தொழிலாளர்களுக்கும் (Painters) நுரையீரல் பாதிப்பு ஏற்படும்.

நுரையீரல் இடைத்திசுக் காற்று பரவல் (Emphysema):

இது ஒரு நீண்டகால நுரையீரலில் வளர்ச்சியடைந்த நோய். இந்த நிலையில் நுரையீரல் திசுக்கள் அழிக்கப்பட்டிருக்கும். நுரையீரலில் உள்ள மெல்லிய காற்றறைகள் (alveolus) இந்நோயால் சிதைவடைவதால், காற்றறைகளில் உள்ள காற்று, காற்றறைகளின் இடைத்திசுக்களுக்குள் பரவும்.

இதனால் இயல்பாக காற்றறைகளில் ஏற்படும், காற்றுப் பரிமாற்றம் (Gaseous exchange) நிகழும். நுரையீரலுக்கு வரும் காற்று காற்றறைகளை விட்டு வெளியேறி, அதற்கு இடைப்பட்ட திசுக்களில் தேங்கும். இதனால் நுரையீரலின் சுருங்கி (காற்று வெளியேறும்பொழுது), விரியும் (காற்று உள்ளிழுக்கும்போது) தன்மை பாதிக்கப்படும். இதன் விளைவாக மார்பில் இறுக்கம், மூச்சுத் திணறல், மூச்சிரைப்பு, மூச்சடைப்பு போன்றவை ஏற்பட்டு, நுரையீரல் செயல்பாடு முடங்கி விடும் நிலை ஏற்படும்.

நோய் கூற்றியியல்:

நுரையீரல் நோய்கள் நீண்ட நாள்கள் இருக்கும்பொழுது, நுரையீரல் அடைப்பு நோயாக மாறும். முற்றிய, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயுள்ளவர்களின் நுரையீரல் செயல்பாடு பாதிப்பினால், மூச்சுக் காற்று (ஆக்சிஜன்) இரத்தத்தில் கலப்பது குறைந்து, கரியமில வாயு (கார்பன்_டை_ஆக்ஸைடு)  நுரையீரல் மூலம் வெளியேற முடியாமல், இரத்தத்தில் தேங்கும். சில காலம் கழித்து, திசுக்களுக்கு உயிர் மூச்சுக் காற்று (ஆக்சிஜன்) குறைந்து, திசுக்கள் சோர்வடையும்.

மூளை உறுப்புகளும் முழுமையாகக் களைப்படையும். இதன் விளைவாக, இரத்தத்தில் ஏற்படும் காற்று சமமின்மையால் ‘உணர்விழப்பு’, ‘ஆழ்மயக்கம்’ (Coma) போன்ற நிலைகளுக்கு நோயாளி சென்றுவிடுவார். ‘மூளைச்சாவு’ (Brain Death) அடைந்துவிட்டால், நோயாளி மரணமடைந்து விடுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *