நேயன்
சுசீந்திரம் ஆலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் பிரவேச உரிமையை நிலைநாட்ட தீண்டாதாரும் அவர்களிடம் அனுதாபம் உடையவர்களும் ஆரம்பம் செய்திருக்கும் சமதர்மப் போர் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. தினந்தோறும் மாலை 4:00 மணிக்கு ஆலயத்துக்குச் செல்லும் சந்நிதித் தெருவில் 4 தொண்டர்கள் சத்தியாக்கிரகம் செய்கிறார்கள். இதுவரை தலைவர் ராமன் பிள்ளை உள்பட 21 பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். அவர்களில் 4 பேருக்கு திருவிதாங்கூர் பீனல்கோடு 90ஆவது செக்ஷன்படி 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட மறுத்ததினால் 6 மாதம் வெறுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது என ‘திராவிடன்’ -19.5.1930 செய்தி வெளியிட்டது.
ஆடி அமாவாசையன்று சுமார் 100 நாடார்களும், ஹரிஜனங்களும் கிழக்குக் கோபுரத்தின் வழியாக ராமேஸ்வரம் கோயிலுக்குள் நுழைய எத்தனித்ததாகவும் சனாதனிகளும் சேர்வைக்காரர்களும் தடுத்துவிட்டதாகவும், பகல் பூஜைகள் வழக்கத்துக்கு முன்னதாகவே நடத்தப்பட்டு, கோயில் கதவுகள் பூட்டப்பட்டு விட்டனவாம். ஆக, தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவுப் போராட்டம் என்பது தொடர்ந்து நடைபெற்று வருவதை நாம் மேற்கண்ட நிகழ்வுகள் மூலம் அறிவதோடு, அந்தப் போராட்டங்கள் பெரிதும் தமிழகத்தைப் பொறுத்தவரை பெரியார் தொண்டர்களாலேதான் நடத்தப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது.
பெரிய கோயில்களில் தாழ்த்தப்பட்டோர் செல்ல தற்போது தடையில்லை என்றாலும், கிராமப்புறக் கோயில்களில் தாழ்த்தப் பட்டோருக்கான தடையும், அதை யொட்டிய தாக்குதல்களும் நடைபெறுகின்றன என்பது கசப்பான உண்மை என ‘விடுதலை’ 16.8.1939 நாளிதழில் செய்தி வெளியிட்டது.
ஸ்ரீ மீனாக்ஷி கோவில் ஆலயப் பிரவேசம்:
கோயில்களில் பூஜைசெய்யும் பட்டர்கள் நிலை ஒரே நிலையில் இல்லாது அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு கட்சியார் அதிகாரிகள் உத்தரவுப்படி தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயப் பிரவேசத்தை ஒப்புக்கொள்ளலாம் என்றும், மற்றொரு கட்சியார், எவர் எவ்விதம் உத்தரவிடினும் தாங்கள், தீண்டாதார் ஆலயப் பிரவேசத்தை ஆதரிப்பதில்லை என்றும், ஒருகால் பெருந்திரளாக மக்கள் ஆலயத்தினுள் புகுந்துவிட்டால் ஸ்வாமி இருக்கும் மூலஸ்தானத்தைப் பூட்டிக்கொண்டு வெளியில் வந்துவிடுவதென்றும் தீர்மானம் கொண்டிருப்பதாய்த் தெரிகிறது.
கோயிலுக்குச் சென்ற மூவரை கோயில் சிப்பந்திகள் யார், எந்த ஊர் என்று கேட்டதாகவும் அதற்கு அவர்கள் நீ யார் என்று கேட்டுவிட்டு ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது என ‘திராவிடன்’ (26.9.1932 பக்கம் – 11) நாளிதழில் செய்தி வெளியிட்டது.
‘தினத்தந்தி’ நாளிதழ் மதுரை வைத்தியநாத அய்யரைப் பற்றிய கட்டுரையொன்றை 8.7.2014 அன்று வெளியிட்டிருந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களையும் நாடார்களையும் அழைத்துக் கொண்டு 75 ஆண்டுகளுக்கு முன் 8.7.1939லேயே முதன்முறையாக ஆலயப் பிரவேசம் செய்தவர் வைத்தியநாத அய்யர் என்று அக்கட்டுரை அவருக்குப் புகழாரம் சூட்டுகிறது.
சென்னைச் சட்டமன்றத்தில் 01.11.1932இல் டாக்டர் சுப்பராயன் அவர்கள் கோவில் நுழைவு மசோதாவைக் கொண்டு வந்தார். அந்த மசோதாவை ஆதரிக்க வேண்டியது நீதிக் கட்சியினரின் கடமை என்று மசோதா வருவதற்கு முன்பே பெரியார் 30.10.1932 ‘குடிஅரசில்’ தலையங்கம் எழுதினார். இவ்வளவு நீண்ட நெடிய வரலாறுகள் இருக்கும்பொழுது 1939ஆம் ஆண்டு செய்த செயலா முதன்மையானது?
வைத்தியநாத அய்யரின் யோக்கியதை!
யார் இந்த வைத்தியநாத அய்யர்? இவருடைய நோக்கம் என்ன? எந்தச் சூழ்நிலையில் இவர் கோயில் நுழைவுக் கிளர்ச்சி செய்கிறார்? எந்த வகையில் அந்தக் கோயில் நுழைவு நடைபெறுகிறது? அதற்கு முன்னும் பின்னும் அவருடைய செயல்பாடுகள் என்ன? என்பதை அறிந்து கொண்டால் பார்ப்பனர்களால் தாங்கிப் பிடிக்கப்படும் வைத்தியநாத அய்யரின் முகமூடி கிழிந்து விடும்.
“நாடார்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு கோயில் நுழையும் உரிமை அளிக்க வேண்டும் என்றும், அதற்கு விரோதமான சாத்திரங்களையும் _ பழைய ஆசார வழக்கங்களையும் மாற்ற வேண்டும்’’ என்று தந்தை பெரியாரால் 1922ஆம் ஆண்டு திருப்பூரில் நடந்த காங்கிரசு மாநாட்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மாநாட்டில் மேற்கண்ட தீர்மானத்தைக் கொண்டுவர விடாமல் பல பார்ப்பனர்கள் தகராறு செய்தனர். அதையும் சமாளித்து திரு.வி.க. முன்மொழிய, தந்தை பெரியார் வழிமொழிந்தார். அந்தத் தீர்மானத்தை ஆட்சேபித்து சத்தியமூர்த்தி அய்யர், மதுரை வைத்தியநாத அய்யர், கும்பகோணம் பந்தலு அய்யர் ஆகியோர் கூச்சல் போட்டு, குழப்பம் விளைவித்து, பெரும் கலகத்தையே உருவாக்கி அத்தீர்மானத்தை ஓட்டுக்கு விடாமல், அத்தீர்மானத்தின் சாரமான கோயில் நுழைவு உரிமையின் உயிர்நாடியை அழித்து விட்டனர். 1922ஆம் ஆண்டு கோயில் நுழைவு உரிமைக்கு எதிராகக் கூப்பாடு போட்ட மதுரை வைத்தியாத அய்யர்தான் கோயில் நுழைவுப் போராட்டத்தின் முன்னோடி என்று தேசியத் திலகங்கள் எல்லாம் எழுதியும் பேசியும் வருகின்றனர்.
வைத்தியநாத அய்யரின் வருணாசிரம வெறியை வரலாறு பறைசாற்றுவதை மறைத்துவிட்டு, மனுதருமவாதிகள் அவரை ‘அரிசனத் தந்தை’ என்ற அடைமொழியோடு பொய் வரலாற்றைப் புனைந்து எழுதுகிறார்கள்.
1922ஆம் ஆண்டு கோயில் நுழைவு உரிமைக்கு எதிராக இருந்த மதுரை வைத்தியநாத அய்யர் 1939ஆம் ஆண்டு மதுரை கோயிலில் நுழையும் போராட்டத்தை நடத்தக் காரணம் என்ன? அன்று இருந்த அரசியல் சூழ்நிலை என்ன? அவரை அந்தப் போராட்டம் நடத்தத் தூண்டிய காரணி எது?
17 ஆண்டுகளில் வைத்தியநாத அய்யரின் மனநிலை மாற்றம் அடைந்து தீண்டாமைக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து புரட்சி செய்து விட்டாரா? அதன் பின்னர் தீண்டாமைக் கொடுமையை அழிப்பதையே தன் வாழ்நாளில் முக்கியப் பணியாகச் செய்தாரா? இல்லை. இல்லவே இல்லை. தீண்டாமையை ஒழித்து, ஏற்றத்தாழ்வை அழித்து எல்லோருக்கும் எல்லா உரிமையும் கிடைத்திட அவர் கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தவில்லை.
தீண்டாமைக்கு எதிராக அவர் போர் தொடுத்தார் என்பது உண்மையானால், தீண்டாமைக்குக் காரணமான ஜாதியையும், ஜாதியை உருவாக்கிய இந்து மதத்தையும் சேர்த்து அல்லவா எதிர்த்திருக்க வேண்டும்? அப்படி அவர் ஜாதியையும், இந்து மதத்தையும் எதிர்த்து இயக்கம் எதுவும் நடத்தவில்லை. நடத்தியதாக, அவர் புகழ்பாடும் கட்டுரையாளர்கள் யாரும் கூறவில்லை. ஆக, வைத்தியநாத அய்யர் மதுரையில் கோயில் நுழைவுப் போராட்டம் நடத்த அவருக்குத் தூண்டுகோலாக இருந்தது தீண்டாமைக் கொடுமை அல்ல என்பது உறுதியாகிறது.
வரலாற்றுப் பக்கங்களில்…
அப்படியானால், அவருடைய போராட்டம் நடக்கக் காரணமாக இருந்தது எது? எந்த இலாபத்தை எதிர்பார்த்து அவர் இந்தப் போராட்டத்தை நடத்தினார்? என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். இதுபற்றிய மேலும் விவரத்தை வரலாற்று ஆய்வாளர்களின் மேற்கோள்களுடன் அறிந்து கொண்டால் வைத்தியநாத அய்யரின் பித்தலாட்டத்தனமான அரிசன சேவையைப் புரிந்து கொள்ளலாம்.
(தொடரும்…..)