2020ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில் நான்கு பெண்கள் வெவ்வேறு பிரிவுகளில் நோபலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இருவரும் அறிவியல் பிரிவில் நோபல் பரிசைப் பெறும் முதல் பெண்கள் குழு என்கிற பெருமையைப் பெற்றிருக்கின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் க்ளக், இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார்.
ஆண்ட்ரியா கெஸ்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1965இல் பிறந்த ஆண்ட்ரியா கெஸ், வானியற்பியலாளர், வானியல் – இயற்பியல் பேராசிரியர். பால்வீதியின் நடுவில் நாற்பது லட்சம் சூரியன்களின் எடைகொண்ட கருந்துளை இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்ததற்காக இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயற்பியலில் நோபல் பரிசு பெறும் நான்காம் பெண் இவர்.
நட்சத்திரங்கள் அதாவது விண்மீன்கள் உருவாகும் பகுதியை அதிநவீனத் தொழில் நுட்பத்தின் உதவியுடன் கண்டறிந்ததற்காக இவர் போற்றப்பட்டார். பேரண்டத்தின் மய்யப்பகுதியின் பண்புகளைக் கண்டறியும் நோக்குடன் விண்மீன்களுக்கு இடையிலான செயல்பாட்டைக் கண்டறிந்ததில், இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.
“பேரண்டத்தின் மீது எனக்குக் கட்டுக் கடங்காத பேராவல் இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் நான் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள். ஒவ்வொரு முறையும் தொலைநோக்கியால் பார்க்கும்போது நான் ஆச்சரியமடைவேன். நம்மால் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை இருக்கும்வரை நிச்சயம் அதற்கான வாய்ப்புகளும் இருக்கவே செய்யும்’’ என்கிறார் ஆன்ட்ரியா கெஸ்.
ஜெனிஃபர் டவுட்னா, இமானுயேல் ஷார்பென்டியே முதல் பெண்கள் அணி
மரபணுவில் மாற்றம் செய்யத்தக்க வகையிலான கிரிஸ்பர் (CRISPER-Cas9) தொழில்நுட்பத்தைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் மரபணுவை வெட்டும் கத்தரிக்கோல் போன்றது இது. இதைப் பயன்படுத்தி டி.என்.ஏ.வின் குறிப்பிட்ட பகுதியை வெட்டிவிட்டு மரபணுவில் மாற்றம் செய்ய முடியும். இந்தத் தொழில் நுட்பத்தை மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள், நுண்ணுயிரிகள் என அனைத்திலும் செயல்படுத்த முடியும் என்பதால், பெரும்பாலான ஆட்கொல்லி நோய்களுக்குத் தீர்வு காண முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மஸ்குலர் டிஸ்ராபி எனப்படும் தசைச்சிதைவு நோய், புற்றுநோய், மரபணுவில் ஏற்படும் சடுதிமாற்றம் போன்றவற்றை அணுகுவதில் இவர்களது கண்டுபிடிப்பு புதிய மைல்கல்லைத் தொட்டிருக்கிறது.
நம்பிக்கை தரும் விருது
பிரான்சில் 1968இல் பிறந்த இமானுயேல் ஷார்பென்டியே தற்போது பெர்லினில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றிவருகிறார். நுண்ணுயிரியல், மரபியல், உயிர்வேதியியல் ஆகிய துறைகளில் இவர் ஆய்வு மேற்கொண்டுவருகிறார். “எங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த விருது, அறிவியல் துறையில் சாதிக்க நினைக்கும் இளம் பெண்களுக்கு நம்பிக்கைதரும் செய்தியாக இருக்கும். அறிவியல் ஆய்வுகளில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதற்கு இது சான்று’’ எனக் கூறியிருக்கிறார்.
வாஷிங்டனில் 1964இல் பிறந்த ஜெனிஃபர் டவுட்னா, கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் வேதியியல், மூலக்கூறு – செல் உயிரியல் துறை பேராசிரியர். மரபணுவை வெட்டும் ‘கிரிஸ்பர்’ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதில் பரவலாக்கம் செய்து இந்தத் தொழில்நுட்பத்தைக் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம்’’ என்று ஜெனிஃபர் டவுட்னா தெரிவித்திருக்கிறார்.
லூயிஸ் க்ளக் (இலக்கியம்)
1943இல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்த லூயிஸ் க்ளக், இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இரண்டாம் பெண் கவிஞர். தனி மனித இருப்பை உணர்த்தும் தன்னிகரகற்ற கவிதை வரிகளுக்காக இவர் இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். யேல் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றும் இவர், பதின்ம வயதிலேயே எழுதத் தொடங்கியவர். 25 வயதில் இவரது முதல் கவிதைத் தொகுப்பான ‘ஃபர்ஸ்ட் பார்ன்’ (1968) வெளியானது.
(தகவல் : சந்தோஷ்)