சிறுகதை : ஈரோட்டுப் பாதை!

நவம்பர் 16-30, 2020

துறையூர் க.முருகேசன்

 

டேய் குபேரா! குபேரா!

வேலைக்காரனைக் கூப்பிடும் தோரணையா இது? – பிச்சைக்காரனுக்கு!

விஜயா கோபக்காரி! அவள் முன்தானா அப்படிக் கூப்பிட வேண்டும்? சிவனாருக்குப் போல் நெற்றிக்கண் இருந்தால் எரித்திடுவாளே!

பிச்சைக்காரன் அவர் பெயர் _ பெரிய கோடீஸ்வரர். குபேரன் அவன் பெயர் _ பிச்சைக்காரனின் பண்ணை வேலை ஆள்!

என்ன கொடுமை! நீங்கள் அவனை குபேரா! குபேரா! என்று கூப்பிடுறீங்க, உங்கள் நண்பர்கள், சொந்தக்காரரெல்லாம் உங்களை பிச்சைக்காரா பிச்சைக்காரா என்கிறார்கள்? தூக்கில் அல்லவா தொங்க வேண்டும் போல் இருக்கிறது என் உணர்வு.

என்ன செய்யலாம் மகளே, காரணத்தோடுதான் பெயர் வைத்திருக்கிறார்கள். எங்கம்மாவுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்து இறந்து விட்டனவாம். நான்காவதாக நான் பிறந்தேனாம். அந்தக்கால அய்திகப்படி என்னை  தாய்மாமன் கையில் கொடுத்து, பிச்சையாக என் அப்பன் கையில் போடுவது போல் போடச் சொல்லி, அதற்கு ஈடாக குருணி தவிட்டை என் மாமன் கையில் கொடுத்து இருக்கிறார். என் பாட்டி பிச்சைக்காரன் என பெயர் வச்சுட்டாள்! அவன் அப்பன் குபேர பூஜை செய்ததால் அவன் பிறந்தானாம். குபேரன் என்று அவனுக்குப் பேர் வைச்சுட்டாங்க. இதை எத்தனையோ முறை சொல்லிட்டேன், உன் சினம் சிவனுக்கு மாதிரி வருது, எங்கு திரிபுரத்த எரித்திடப் போறியோ! போம்மா பள்ளிக்கூடம், என்று விஜயாவை அதட்டினார்.

விஜயா பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி. குபேரனின் மகன் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன். இருவரும் ஒரே வகுப்பு.

அரையாண்டின் மதிப்பெண் சான்றிதழைக் கொடுத்துக் கொண்டிருந்தார் ஆசிரியர் கந்தசாமி. விஜயா வெளி வாயிற்படியில் நின்றுகொண்டு அய்யா அய்யா என்றாள், உள்ளே வர. எல்லாருடைய மதிப்பெண் சான்றிதழ்களையும் கொடுத்துவிட்டு கபிலன், கபிலன் என்று குரல் கொடுக்கவும், நைந்த கால்சட்டை, கறைபடிந்த மேல் சட்டையோடு, ஆசிரியர் முன் நின்றான் கபிலன். கபிலனிடம் மதிப்பெண் சான்றிதழைக் கொடுத்த ஆசிரியர், “அரையாண்டில் மட்டுமல்ல, இவன் பள்ளியில் சேர்ந்த நாளில் இருந்து இதுவரை மதிப்பெண் பட்டியலில் இவன்தான் முதல் ‘ரேங்க்’.

நாளை மாவட்ட அளவிலோ, மாநில அளவிலோ முதல் மாணவனாக வந்து நமது பள்ளிக்குப் பெருமை சேர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை’ என்றார். எல்லா மாணவர்களும் சிரித்துக் கொண்டு, “அவன் பேர் கபிலன் இல்லை; தபால் பெட்டி என்றார்கள். விஜயா அதை ஆமோதிப்பதுபோல் கைதட்டிச் சிரித்தாள்.

மாணவர்கள் சிரிப்பு எகத்தாளமில்லை. மாணவர்களிடையே எல்லாருக்கும் பட்டப்பெயர் இருக்கும், அவன் கால்சட்டையின் பின்புறம் ஒட்டுத்துணி போட்டுத் தைத்து அது கொஞ்சம் கிழிந்து ஓட்டையாக இருந்ததால் தபால் பெட்டி என்கிற பட்டப் பெயர் அவனுக்கு.

விஜயாவின் சிரிப்பு அப்படியா! எகத்தாளம்! ஏளனம்! அவள் வீட்டு வேலைக்காரன் குபேரனின் மகன்தானே கபிலன். பட்டுப் பாவாடையுடன் பள்ளி வருபவளுக்கு, ஒட்டுத் துணியோடு உருப்படியற்ற சட்டையில் இருப்பவனைக் கண்டால் ஏளனம் வராதா? குபேரனுக்குச் சாப்பாடு கொண்டு வரும்பொழுதெல்லாம், உருட்டி மிரட்டி வேலை வாங்கி இருக்கிறாள். அப்பன் பெயர் குபேரன்; அவன் மகன் பிச்சைக்காரனினும் கேவலம். நாம அப்பன் பெயர்தான் பிச்சைக்காரன். நாம எப்படி பட்டாடையில் ஜொலிக்கிறோம்! அவனுக்கு ஆசிரியரின் பாராட்டு மழையா? கூடாது கூடவே கூடாது! ஆளைப்பாரு, செம்பட்டை முடி _ செம்மண் உடம்பு _ அழுக்குத் துணி. நாம் நாயை சந்தன சோப்பில் குளிப்பாட்டுகிறோம். அவன் துணி சோப்பு போட்டுக் குளிக்கிறானோ… குழை மண் குட்டையில் புரண்டு வாரானோ! இவன்தான் வரும் தேர்வில் பள்ளிக்குப் பெருமை சேர்க்கப் போறானாம்! இது ஆசிரியரின் புரட்டுப் பேச்சு என்ற ஏளனம்தான் அவளுக்கு.

இறுதிப் பரிட்சையில் மாவட்டத்தில் முதன்மை! மாநிலத்தில் மூன்றாவது மாணவன் கபிலன். விஜயா பள்ளி இறுதியாண்டுத் தேர்வில் தேர்ச்சி.

பத்திரிகையில் அவன் புகைப்படத்தோடு பாராட்டுச் செய்தியில் அவன் வாழ்க்கைச் சுவட்டைப் படித்தவர்கள் வாழ்த்து மழை பொழிந்தார்கள். இளகிய, இரக்கம் கொண்டு ஒருவர் அவன் படிப்புச் செலவு என்னுடையது என்றார். அழகிய சீருடைகளைக் கொண்டு வந்து கொடுத்தோர், வெளியில் போட்டுக் கொள்ள புதிய ஆடைகளை அளித்தவர்கள், அவனை விடுதியில் சேர்க்கத் துணை புரிந்தோர் என ஒரு பட்டியலே நீண்டது. பல பள்ளிகள் போட்டி போட்டு அழைத்தாலும் தரமுள்ள பள்ளியில் சேர்ந்தான்.

பிச்சைக்காரன் விஜயாவைப் பார்த்து, “பார்டர் மார்க்கில் பாஸ் நீ! நம்ம வீட்டு வேலைக்காரனின் மகன் பத்திரிகையில் அவன் படம் வெளிவரும் அளவிற்கு மார்க்கு வாங்கி பாஸ் ஆகி இருக்கிறான். உன் வீட்டு வேலைக்காரன் மகன்தாண்டா மாநிலத்தில் மூன்றாவது ‘ரேங்க்’ என வாழ்த்து சொல்கிறவன், உன் மகள் மார்க் என்ன என்று கேட்கும்பொழுதுதான் வெட்கமாக இருக்கிறது. சரி, சரி, பதினாறு வயசு; இன்னும் இரண்டு வருடம் பள்ளிக்கூடம் போ! உன் மாமன் மகன் மதியழகனுக்கே உன்னைக் கட்டி வைத்துடுறேன்’’ என்றார் சிரித்துக் கொண்டே…

நம்ம மகன் மாநிலத்தில் மூன்றாவது, மாவட்டத்தில் முதல் ஆள்! நம்ம முதலாளியின் மகள் ஒப்புக்கு பாஸ்! இதை அவரால் ஜீரணிக்க முடியாது, தக்க சமயம் வரும்பொழுதெல்லாம், நக்கலும் நையாண்டித்தனமாக நம்மளைக் கேலி பேசுவார்! வேலையை மாற்றிக் கொள்ள வேண்டியதுதான் என்ற கூலி வேலைக்குப் போனான், குபேரன்.

இன்று கபிலன் கல்லூரிப் படிப்பை முடித்து, அரசு தேர்வாணையப் பரிட்சையில் தேர்ச்சி பெற்று, அரசின் உச்ச அலுவலகத்தில் உயர்பதவி! கபிலன் ஊருக்கு வருவான், வீட்டில் சில மணி நேரங்களே இருந்தாலும், வேண்டியவர்களைப் பார்க்காமல் செல்ல மாட்டான். தன்னால் முடிந்த உதவிகளை தன்னைப் போல ஏழ்மையில் வாடும் குழந்தைகளின் கல்விச் செலவுக்குத் தேவை அறிந்து கொடுப்பான். பொது சேவை, பொதுமக்கள் குறைபாடுகளைப் போக்க தக்க ஆலோசனைகளும் வழங்குவான். அவன் அதிகாரத்திற்கு உட்பட்ட உதவிகளைச் செய்து கொடுப்பான்.

தீர்க்க முடியாத பிரச்சனை _ அந்த ஊரில் பொதுவரத்து வாய்க்காலை ஆக்கிரமித்து சிலர் மாடி வீடும், மச்சு வீடும் கட்டி இருப்பது! அவர்கள் எல்லாம் அரசியல் செல்வாக்கில் அசகாயசூரர்களாக விளங்குபவர்கள், எதிர்த்துக் கேட்க ஊர்க்காரர்கள் திராணியற்றவர்கள் அல்ல என்றாலும், எதிர்த்தால் எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரி என தன் செல்வாக்கால், எதிர்ப்பவர்களை காவல்துறை மூலம் கசக்கிப் பிழிந்திடுவார்கள் என்பதால் எவரும் எதிர்க்கவில்லை. என்றாலும், எல்லோரையும்விட பாதிப்பு பிச்சைக்காரனுக்குத்தான்.

அவர் நிலத்துக்குப் பக்கத்தில் உள்ள குட்டையில்தான் அந்த நீர் சங்கமமாகி ஊற்று நீராக அவர் கிணற்றை வற்றாத சமுத்திரம் போல் வைத்திருக்கிறது. நாளை அது வறண்டு பாலையாகி விடுமோ என்கிற அச்சத்தில் இருந்தவருக்கு கபிலனின் ஞாபகம் வந்தது.

கபிலனைக் கூப்பிட்டால் வீட்டுக்கு வருவான் _ நம்ம வீட்டில் வேலைக்காரனாக இருந்தவனின் மகன். அன்று நாம கொடுத்த காசுலதானே அவன் அப்பன் உப்பு, மிளகாய், புளி, அரிசி என வாங்கிப் போட்டிருப்பான் ?

அந்த நன்றி அவனிடம் இருக்கும். இல்லை என்றால், ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை!’ என்று சொல்லி இருப்பார்களா? ஆனால் அவன் வந்தால், நம்ம அளவுக்கு சேர் போட்டுத்தானே உட்கார வைக்க வேண்டும். நாயைக் குளிப்பாட்டி நடு மனையில் வைத்த கதையாகி விடுமே! அவனோ அரசாங்க பெரிய அதிகாரி! நிற்க வைத்துப் பேச முடியாது. அரசாங்க கோழி முட்டை அம்மியை உடைக்கும் என்பார்கள். அவனை நிற்க வைத்துப் பேசினால் வரத்து வாய்க்காலையே மாட மாளிகை ஆக்கிடுவான். அவனிடம் பேசாவிட்டால், அரசியல் கட்சிக்காரன் நம்ம நிலத்துக்குப் பக்கத்துக் குட்டையையே ‘பிளாட்’ போட்டு வித்துடுவான் என்று எண்ணியவாறே குறுக்கும் நெடுக்குமாக நடந்தார்.

ஃபில்டர் காபியின் நறுமணம் நாசியை நெருடவும், நாற்காலியில் அமர்ந்தார். வேலைக்காரி வேலம்மாள்தான் குலுங்கிச் சிணுங்கித் தன் பொற்கரங்களால் காப்பி கொண்டு வந்து கொடுப்பாள் என்று நினைத்தார்.

வெள்ளைச் சேலையோடு விஜயா வந்தாள், காப்பி டம்ளரை கையில் ஏந்தி! அதைப் பார்த்தவுடன் கண்ணீரோடு மவுனமானார்.

“கபிலனும், விஜயாவும் பிச்சைக்காரனின் இதயத்தின் இரு பக்கமும் அமர்ந்து கொண்டு கேள்விக் கணைகளால் துளைப்பதுபோல் அவருக்கு ஒரு பிரமை!

கபிலன் கேட்கிறான்…… “ஏங்கையா, உங்க மனசுல என்னைப்பற்றி எப்படியெல்லாம் நினைக்குறீங்கன்னு உங்க முகமே சொல்லுது, நம்ம பண்ணையில வேலை செய்தவன் மகன் படிப்பிலே எல்லோரையும் முந்தி பட்டதாரியாக அரசாங்கப் பணியில் பெரிய பதவியில் அமர்ந்து இருக்கிறான் என்பதற்காக அவனை அழைத்து நடு மனையில் நாற்காலி போட்டு உட்கார வைத்து சரிசமமாக உட்கார்ந்து பேசுவதா, என்பதுதானே உங்கள் நினைப்பு?

அது உங்க தவறல்ல; உங்கள் முன்னோர்களின்  வழிவந்த வர்ணாசிரம மரபணுக் கோளாறு! அதை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நான் கட்டாயப்படுத்த முடியாது! எங்களுடைய வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் வாழ்நாளை அர்ப்பணித்த அய்யா பெரியார், அண்ணல் அம்பேத்கர், கர்மவீரர் காமராசர் இவர்களுடைய வழியிலே போய்க் கொண்டிருப்போம்! ஆனால், எங்களுடைய முன்னேற்றத்திற்கு எது தடைக்கற்களாக இருக்கிறதோ! அதை எங்கள் ஈரோட்டுப் பாதையிலே தகர்த்துக் கொண்டே செல்வோம்.’’

விஜயா பேசுவதாகத் தோன்றுகையில்….. “நீங்கள் பேசாதீர்கள்! நான் பேசுகிறேன் என்றாள் விஜயா. அப்பா, டிகிரி காப்பியின் மனம் நாசியில் ஏறும்போது வேலைக்காரியின் ஞாபகம்தானே வந்து இருக்கும்? அவள் _ எவள் பெற்ற பிள்ளையோ _ எப்படி இருந்தாலும் அவள் மேல் ஒரு ஈர்ப்பு சக்தி உங்களுக்கு! அதை எப்படி விவரித்துச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை! நீங்கள் அப்பாவாக இருப்பதால் அந்த அசிங்கமான வார்த்தைகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாது. அவளைவிட இளம்பெண் நான். ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன உணர்வு இருக்கிறதோ அதுதானே எனக்கும் இருக்கும? ஆண்மையின் தூண்டுதலால் வேலைக்காரியின் வரவை இந்த வயதிலும் எதிர் நோக்குகிறீர்கள். இருபத்தைந்து வயது குமரி நான்! இல்லற சுகத்தில் ஈடுபடாமல் இருந்தவள் என்றால் காமசுகம் என்னவென்று தெரியாமல் இருந்து இருக்கலாம்.

இன்று எல்லாத் துறைகளிலும் ஆண்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பெண்கள் முன்னேறும் காலத்தில், உங்கள் வர்ணாசிரம மரபு பெண்களுக்குக் கல்வி எதற்கு என்று பதினெட்டு வயதிலேயே மணம் முடித்து வைத்தீர்கள் _ உறவு அற்றுப்போகக் கூடாது என்பதற்காக என் மாமன் மகன் மதியழகனுக்கு.

எப்படி? ஆச்சார முறைப்படி, இரண்டு பேரின் ஜாதகமும் அப்பழுக்கற்று பூரண சுகத்தில் இருக்குது, ஆயுள் தொண்ணூற்றுக்கு மேல் என்று ஒரு ஜோதிடனல்ல, பத்துப் பேர் சொல்லியதால்! பாவம், மாங்கல்யம் என் கழுத்தில் ஏறிய மூன்றாம் வருடமே மாரடைப்பால் இறந்து விட்டார். போனவர் சும்மா போகவில்லை. ஒரு பெண் குழந்தையை வாரிசாகக் கொடுத்துவிட்டுப் போனார். அவளும் பிஞ்சிலேயே உதிர்ந்து விட்டாள் உங்கள் குலமரபுப்படி வெள்ளைச் சேலையை அவிழ்த்தெறியவும் முடியாது; அடுத்தவனுக்கு என்னைக் கட்டிக் கொடுக்கவும் முடியாது.

கபிலன் சொன்னாரே, அந்த ஈரோட்டுப் பெரியார், அவர் படிக்காத புராணம் இல்லை, அறியாத சடங்கு சம்பிரதாயமில்லை, ஒரு ஆன்மிகக்காரனைவிட அந்தப் பகுத்தறியும் பெரியார்தான் அத்தனை கசுமாலங்களையும் படித்து, எப்படி மனித இனத்துக்குள்ளேயே ஜாதிகள் பிரித்து, தீண்டத்தகாதவனாக ஒரு பிரிவினனை ஆக்கி, இவன் வசதி வாய்ப்பிற்காக அவனை அடிமைத்தொழில் செய்ய வைத்துக் கொண்டானோ அதைப் போலத்தான் பெண்களையும் _  அவள் தாய், தாரம், பிள்ளை என்பதெல்லாம் கிடையாது, அவளும் சூத்திரச்சி! ஆண்களுக்கு அடிமை, போகப் பொருள் என எழுதி வைத்திருக்கிறான். ஆண்கள் செத்தால் அதோடு அவன் மனைவியும் அவன் சிதையிலே விழுந்து சாக வேண்டும். அவனுக்கு முன்பே அவன் மனைவி செத்தால் அவன் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். பிரிட்டிஷார் காலத்திலேயே இந்தக் கொடுமையைத் தடை செய்து விட்டார்கள். இல்லை என்றால் எத்தனையோ பெண்களைச் சிதையிலே தள்ளிக் கொன்று இருப்பார்கள். இது ஆரிய சூழ்ச்சி, ஆரிய மாயை! நம்மவன் அந்த ஆரிய சூழ்ச்சியை ஏற்றுக்கொண்டு ஜாதி பார்க்குறான், தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறான், இன்னமும் பெண்களை முன்னேற விடாமல் போகப் பொருள் ஆக்குகிறான் என்றால் என்னப்பா! சொல்கிறீர்? நான் மதியழகனின் போகப் பொருள்! அவன் கரங்கள் பட்ட உடலில் வேறு கரங்கள் படக்கூடாது என்பதற்காக இந்த வெள்ளைச் சேலை வேலி! ஆனால், நீங்கள் இந்த வயதிலும் வேலைக்காரி மேல் மோகம் கொள்ளலாம். என்னப்பா நீதி?’’

பிச்சைக்காரன் திடுக்கிட்டு நிமிர்ந்தார். “என்னங்கப்பா ஆழ்ந்த யோசனை’’ என்றாள் விஜயா. “ஒன்றுமில்லை, நேற்று கடை வீதியில் ஈரோட்டுப் பெரியார் கட்சிக் கூட்டம் நடந்தது. நான் கொஞ்ச நேரம் நின்று கேட்டேன். ஒவ்வொருத்தரும் பேசிய பேச்சு என் நெஞ்சைச் சுட்டுவிட்டது. அந்தப் பேச்சை உள்வாங்கிப் பார்த்தேன், அவ்வளவுதான்! கொண்டாம்மா காப்பியை! அப்புறமா குபேரனிடம் சொல்லி கபிலனை வீட்டுக்குக் கூட்டி வாரேன். அவனால்தான் அந்த வரத்து வாய்க்கால் பிரச்சினை தீரும்’’ என்றார்.

“அப்பா, இதுவரை அந்தத் தெருப்பக்கம் காலடி எடுத்து வைக்கலயே!’’ என்றாள் விஜயா. “தெருவாவது மண்ணாங்கட்டியாவது, மனுசன்னா எல்லாம் ஒன்னுதான்! இதுல உயர்ந்தவன் என்ன, தாழ்ந்தவன் என்ன? அதெல்லாம் எவனோ எழுதிய கட்டுக்கதை என்றார்.

விஜயா காப்பியைக் கொடுத்துவிட்டு கட்டிலில் சாய்ந்தாள்! கடந்த கால வாழ்க்கை கண் முன் நிழலாடியது. கபிலனை உருட்டி மிரட்டி வேலை வாங்கியது, கேலி பேசியது, நம்ம பண்ணை அடிமையின் மகன்தானே என்று எகத்தாளாக நினைத்தது, இன்று நாம் நினைத்ததற்கு நேர்மாறாக அவன் தகுதியும் திறமையும் கூடி, அவனைக் காண்பவர்கள் எல்லாம் கைகட்டி மரியாதை செய்வதை நினைத்து, அவனைக் கண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதிலேயே அவள் மனம் ஓடியது. மதியழகனிடம் வாழ்ந்தது மூன்று வருட வாழ்க்கை! காமசுகத்தோடு கொஞ்ச காலம் ஓடினாலும், அவனால் சுமந்து, வளர்த்த கருவும்  என் வாழ்க்கைக்குத் துணையில்லாமல் போய்விட்டது. ஒரு சில நேரங்களில் அதை கனவாக நினைத்து மறந்து விடுகிறேன். ஆனால், அவன் சாவிற்குப் பிறகு ஏற்பட்ட வெள்ளைச் சேலை வேலிதானே பெண்மையையே கேலிக் கூத்தாக்குகிறது! என்று நினைத்துக் கண்ணீர் விட்டாள்.

கபிலனும், பிச்சைக்காரனும் நேருக்கு நேர் நாற்காலியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்! கடந்த காலம் முதல் நடக்கும் காலம் வரை நிகழ்வுகள் அசை போட்டது. அதே வெள்ளைச் சேலையில் காப்பி டம்ளரோடு விஜயா நின்றாள்! இது என்ன கோலம் என்பதுபோல் விஜயாவையும் பிச்சைக்காரனையும் மாறி மாறிப் பார்த்தான் கபிலன்.

விஜயா கபிலனுக்கு காப்பி கொடுக்கும்பொழுது, அவள் கண்ணீர்த் துளிகள் காப்பியோடு கலந்தது.

“நான் ஊர் பஞ்சாயத்துத் தலைவன், அதனால்தான் எங்கள் குலமரபு மாறாமல் விஜயாவை வளர்த்து திருமணம் செய்து கொடுத்தேன். அவள் தலையெழுத்து இப்படி ஆகிவிட்டது. பல வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்கும் நிலை என்னுடையது. ஊரே ஒரு பாதையில் செல்லும்பொழுது நான் அந்தப் பாதையை மாற்றினால்… உன் வீட்டிற்கு ஒரு நியாயம்; ஊருக்கு ஒரு நியாயமா? என எதிர்த்துக் கேள்வி கேட்பான்! அதனால்தான் வெள்ளைச் சேலை! எங்கள் குலவழக்கப்படி தாலி அறுத்தவளுக்கு மறு திருமணம் செய்யக் கூடாது’’ என்றார்.

“கபிலனும் விஜயாவும் எங்கே, எப்படி சந்திச்சுப் பேசினார்கள் என்பதெல்லாம் பரம ரகசியம்’’

விஜயா இனி பிச்சைக்காரனின் மகளுமில்லை; மதியழகனின் முன்னாள் மனைவியுமில்லை. கபிலனின் சட்டபூர்வமான துணை. ஜாதி, மதம், வர்ணம், வன்கொடுமை என எதுவும் அவளை நெருங்கவும் முடியாது. நெருங்கினாலும் சட்டத்தின் வல்லமையால் தவிடு பொடியாகிவிடும்.

ஊர் கூடியது. பஞ்சாயத்தில் இப்படித்தான் பிச்சைக்காரன் பேசினார். “அவள் ஓடுகாலி ஆன பிறகு என் மகள் என்பதை மறந்துவிட்டேன்! இனி என் உயிர் போனாலும் என் பிணத்தின் பக்கம் அவளை விடாதீர்கள்! என் ஒன்றுவிட்ட பங்காளி முறை அண்ணன் மகன்கள் கொள்ளி போட்டுவிட்டு சொத்து சுகத்தை அனுபவித்துக் கொள்ளட்டும்! இப்படி என் வாயிலிருந்து வரும்… அதை வைத்து அவளை ஓரங்கட்டி என் சொத்து சுகத்தைப் பிடுங்கலாம் என்றால் அது முடியாது. அவள் என் கூட இருந்து இருந்தால், நீங்கள் நினைப்பதுபோல் நடந்து இருக்கும். காரணம், அவளுக்குப் பிறகு வாரிசு இல்லை _ அவள் ஒரு நடைபிணம் என்பதால். ஆனால், அவள் தன் வாழ்க்கைக்கு உயிர் ஊட்டி வசந்தத்தைத் தேடிக் கொண்டாள். “நீங்கள் என்னை ஒதுக்குவதற்குள், நானே ஒதுங்கிப் போகிறேன் _ உங்கள் ஜாதிக் கட்டில் இருந்து’’ என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார்.

வரத்துவாரியின் ஆக்கிரமிப்பை அகற்ற அரசாங்கம் உத்தரவு கொடுத்த பிறகு, எதிர் மனுதாரர்கள் நீதிமன்றத்தில் தடையாணை வாங்கி பத்து வருடமாக நடந்த வழக்கில் திடீரென்ற உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்தது. ஆக்கிரமிப்பை அகற்ற எந்தத் தடையும் இல்லை, உடனடியாக அகற்றணும் _ அதுவும் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் என்று.

ஊர் கூடியது. கோட்டாட்சியர், வட்டாட்சியர், வருவாய் அதிகாரி, கிராம நிருவாக அதிகாரிகள் என ஒரு பட்டாளமும், ஊர் மக்களும் சேர்ந்து நின்றார்கள் _ கனரக வாகனத்துடன்! காவல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் வருகையை எதிர்பார்த்தது, அந்தக் கூட்டம்.

ஆட்சித்தலைவரின் வாகனம் திடீரென்று அங்கு வந்து நின்றது. புதியதாகப் பொறுப்பேற்ற பின் ஆட்சித் தலைவருக்கு இதுதான் முதல் உத்தரவு.

மாவட்ட ஆட்சித் தலைவர் அம்மா காரைவிட்டு இறங்குகிறார். கோட்டாட்சியர் முதல் கிராம நிருவாக அதிகாரி வரை மரியாதை செய்த பிறகு கிராம மக்களின் சார்பாக பிச்சைக்காரன் சால்வையை அம்மாவிடம் கொடுக்கிறார். அம்மா ஏறெடுத்துப் பிச்சைக்காரனைப் பார்க்கிறார்… மாவட்ட ஆட்சித்தலைவர் _ பிச்சைக்காரனின் மகள் விஜயா!

கூலிக்காரன் மகன் பெரிய அரசு அதிகாரி, அவன் எஜமானின் மகள் மாவட்ட ஆட்சித் தலைவர்! விஜயா சிரித்துக்கொண்டே சொன்னார், “அப்பா, வெள்ளைச் சேலையில் இருந்த இந்த விஜயா மாவட்ட ஆட்சித்தலைவர்; கூலிக்காரனின் மகன் பெரிய அரசு அதிகாரி! இது ஈரோட்டுப் பாதையால் வந்த உயர்வு’’ என்று.

பிச்சைக்காரன் மவுனப் புன்னகையில், “இதில் என் பங்களிப்பு எப்பொழுது ஜாதியைத் தாண்டி வெளிவருகிறதோ, அப்பொழுதுதான் சமூக மாற்றம் உண்டாகும்’’ என நினைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *