வரலாற்றுச் சுவடு: சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்!

நவம்பர் 16-30, 2020

நினைவு நாள் : 27.11.2008

விசுவநாத்பிரதாப்சிங் (வி.பி. சிங்) வெறும் 11 மாதகாலமே பிரதமராக இருந்தவர். ஆனாலும், உண்மையான

ஜனநாயகவாதியாக ஆட்சிப் பொறுப்பை நடத்திக் காட்டிய மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர்.

அவர் ஒரு சூத்திரத்தை, ஆட்சியின் இலக்கணத்தை உருவாக்கிக் கொடுத்தார். 80 சதவிகித மக்களை ஜாதியின் பெயரால்,  சமூகத்தின் மய்ய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி வைத்திருப்பதைவிட மிகப்பெரிய திறமைக்கு எதிரான ஒரு செயல் இருக்க முடியுமா?  என்ற வினாவை எழுப்பிய பெருமகன் அவர்.

இடஒதுக்கீடு வேலை வாய்ப்பல்ல; அதிகாரப்பங்கீடு என்றஉரிமைக் குரலை முழக்கிய கொள்கையாளர்.

பிரதமர் பதவிதான் தனக்கு முக்கியம் என்று அந்தச் சமூகநீதி சரித்திரம் நினைத்திருந்தால்,  பா.ஜ.க.வுடன் சமரசமாகப் போயிருக்கலாம். மண்டல்குழுப் பரிந்துரையின் பக்கம் தலை வைத்துப் படுக்காமலும் இருந்திருக்கலாம். அதற்கு

முன் பத்தாண்டு கால ஆட்சியாளர்கள் அப்படித் தானே நடந்து கொண்டார்கள்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்த ஒரே காரணத்தால்,

பாரதியஜனதா தன் ஆதரவை விலக்கி தன் முகவரியைக் காட்டிக் கொண்டது. திராவிட இயக்கப் பாரம்பரியம் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் அ.தி.மு.க.  உள்பட பா.ஜ.க., காங்கிரசோடு சேர்ந்து கொண்டு வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தது.  (விதிவிலக்கு – காங்கிரஸ் கூட்டணியில் இருந்த ஏ.கே.அப்துல் சமது என்னும் பெருமகனார்)

அப்போது கூட அந்த உத்தரப்பிரதேச சிங்கம் எப்படி கர்ச்சித்தது தெரியுமா?  சமூகநீதிக்காக நூறு பிரதமர் நாற்காலிகளை இழக்கத் தயார்! என்று சங்கநாதம் செய்தாரே, அவர் அல்லவோ மனிதகுல மாமனிதர்!

மும்பையில் வன் முறையைக் கண்டித்து ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல், உண்ணாவிரதம் இருந்தார். இரு சிறுநீரகங்களையும் இழந்த நிலையில், அவருக்காக சிறுநீரகங்களைத் தானமாகக் கொடுக்க திராவிடர் கழக இளைஞரணித் தோழர்கள் நீண்ட வரிசையில் நின்றனரே!

திராவிடர் கழகத் தோழர்களிடத்திலும், தலைவரிடத்திலும் அவர் வைத்திருந்த அன்புக்கு ஈடுஇணை எதுவும் கிடையாது. “வீரமணியைப் பார்க்கும் பொழுதெல்லாம் சமூகநீதி உணர்வைப் பெறுகிறேன்”  என்று நெகிழ்ச்சி ததும்பக் கூறிய அந்தச் சொற்களை இன்று நினைத்தாலும் நம் கண்களில் நீர் கசிகிறது.

ஈழத்திலே – ராஜீவ் அனுப்பிய இந்திய ராணுவம்,  பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்ததைக் கண்டு ராஜீவ்காந்தி பூரித்து மகிழ்ந்தார். அந்த ராணுவத்தை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அழைத்த பெருமை,  அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங்குக்குத்தான் உண்டு. விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக நீங்கள் கருதவில்லையா என்று செய்தியாளர்கள் கேட்ட போது, “எந்த ஓர் இயக்கத்துக்கும் முத்திரை குத்தக் கூடிய ரப்பர் ஸ்டாம்ப் எனது சட்டைப் பையில் இல்லை” என்று பதிலடிதந்தார்.

வி.பி. சிங் மறைவைக் கூட இருட்டடித்தன உயர்ஜாதி ஊடகங்கள்!  அந்த அளவுக்கு அவர் சமூக நீதியாளர் என்பது தான் அதன் ஆழமான பொருளாகும்.

வி.பி. சிங் ஏற்றி வைத்த சமூகநீதிக் கொடியை இறக்கிட எந்தக் கொம்பனாலும் முடியாது. முடியவே முடியாது!

வாழ்க வி.பி.சிங்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *