அய்யாவின் அடிச்சுவட்டில் ….: இயக்க வரலாறான தன் வரலாறு (256) எழுத்தாளர் பிரபஞ்சனின் புகழாரம்!

நவம்பர் 16-30, 2020

அமெரிக்க பயணத்தை முடித்து சென்னை திரும்பிய ஆசிரியரை வரவேற்கும் கழகத் தோழர்களிடையே மகிழ்ச்சியாக உரையாற்றும் ஆசிரியர்

4.1.1995 அன்று அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினேன். கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் உணர்ச்சிபூர்வ வரவேற்பை அளித்தனர். தோழர்களின் வரவேற்பு உள்ளத்தை நெகிழ வைப்பதாக இருந்தது. விமான நிலையத்தில் இருந்து பார்வையாளர் பகுதிக்கு வருகையில் தோழர்கள் விமான நிலையமே அதிரும் வண்ணம் வாழ்த்து ஒலி முழக்கங்களை எழுப்பி வரவேற்றனர். பார்வையாளர் பகுதியில் வரிசையாக நின்றிருந்த கழகத் தோழர்களை ஒவ்வொருவராக விசாரித்தவாறே விமான நிலைய  வெளிப்பகுதிக்கு வந்தேன். கூடியிருந்த ஏராளமான தோழர்கள் அறிவு ஆசான் தந்தை பெரியார் வாழ்க! தமிழர் தலைவர் வீரமணி வாழ்க! என உணர்ச்சிப் பொங்க முழக்கமிட்டனர்.

கழகத் தோழர்கள் வளையம்போல கைகளைப் பிணைத்துக் கொண்டுதான் என்னை வெளியே அழைத்து வர முடிந்தது. அங்கு கூடியிருந்த கழகத் தோழர்களின் எழுச்சிமிக்க வரவேற்பை ஏற்றுக்கொண்டு அவர்கள் மத்தியில் பேசினேன். “உங்களை மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான தோழர்கள் வந்திருக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் வருவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. நீங்கள் காட்டுகிற அன்புக்கு நான் என்றென்றைக்கும் தகுதி உள்ளவனாக நடந்து கொள்வேன். நான் உடல்நலம் நல்ல முறையில் தேறி இங்கே வந்திருக்கிறேன். முன்னைவிட இன்னும் அதிகமாகப் பணி செய்வேன். நான் இல்லாதபோது இந்த இயக்கத்தை நன்றாக, மிகச் சிறப்பாக வழி நடத்தினீர்களே, அதற்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நம்முடைய இயக்கத்தை எந்தச் சக்தியாலும் அசைக்க முடியாது. எந்தச் சவாலையும் சந்திக்கும், சமாளிக்கும் என்பதை நான் இல்லாத வேளையில் எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். இளைஞர்கள்தான் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை’’ என உணர்ச்சி மேலிடப் பேசினேன்.

6.1.1995 அன்று ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியேந்திரன் அவர்கள் மகனும் _ பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ச.இராசசேகரன் அவர்களின் தம்பியும் _ கழகத் தோழருமான வழக்கறிஞர் சுந்தரம் மரணம் அடைந்தார் என்கிற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன். சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவராகப் பணியாற்றியவர். ‘மிசாவின் கீழ் கைது செய்யப்பட்டு எங்களுடன் ஓராண்டு சிறையில் இருந்தவர். மிகவும் இளம் வயதில் (43) அவருடைய மறைவு  கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என இரங்கல் செய்தி வெளியிட்டோம்.

வழக்கறிஞர் சுந்தரம்

7.1.1995 அன்று ஈழத் தமிழர் பிரச்சினையில் இலங்கை அதிபர் திருமதி சந்திரிகா குமாரதுங்கே அவர்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றினை கொழும்பில் அறிவித்தார். இதனை வரவேற்று மத்திய _ மாநில அரசுகளின் அணுகுமுறையும் மாறவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டேன். அதில் “தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் ஓய்வுக்குப் பிறகு அதிகாரப் பகிர்வு குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று இலங்கை அதிபர் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஒரு திருப்பம் _ ஒரு புதிய உதயம் _ இரு தரப்பினருக்கும் என்பதை உலகம் உணருகிறது. தமிழினத்தைப் படுகொலையிலிருந்து நிரந்தரமாக மீட்க வேண்டும். இலங்கை அதிபரின் இந்த முயற்சியை தமிழ்நாட்டு இன உணர்வாளர்களான தமிழர்கள் சார்பில் வரவேற்கிறோம். உலகம் முழுவதிலும் உள்ள உண்மைத் தமிழர்களும் வரவேற்பார்கள் என்பது திண்ணம். இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கேவும், விடுதலைப் புலி இயக்கத்தின் நிறுவனர் தம்பி. பிரபாகரனும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளனர் என்பதை இந்திய (மத்திய) அரசும், மாநில அரசும் வெறும் செய்தியாக மட்டும் பார்க்கக் கூடாது. ஈழத் தமிழர்களின் ஒரே பிரதிநிதியாக விடுதலைப் புலிகள் அமைப்பைத்தான் இலங்கை அரசு அங்கீகரிக்கிறது; ஒப்புக் கொள்கிறது என்பதை பாறையின் மீது செதுக்கப்பட்ட எழுத்தினைப் படிப்பதைப் போல படித்து, பாடம் பெற்று, பழைய வெறுப்பிலிருந்து விடுதலை பெற வேண்டும். வறட்டுக் கவுரவம் பார்க்காது, பழைய போக்கை மாற்றிக்கொண்டு புதிய சிந்தனை -_ செயல்முறை பற்றியும் யோசிக்க வேண்டும். புதிய வெளிச்சம் தெரிகிறது; பழைய இருள் விலகுகிறது; நிரந்தரமான ஓர் தீர்வு அமையும் என்று நம்புவோமாக! 95ஆம் ஆண்டு ஒரு நல்ல திருப்பத்தைத் தரட்டும்’’ என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.

பிரபஞ்சன்

8.1.1995 அன்று தமிழக மூதறிஞர் குழுத் தலைவர் நீதியரசர் பெ.வேணுகோபால் – விஜயலட்சுமி தம்பதியினரின் திருமணப் பொன் விழா, புரசைவாக்கம் தர்ம பிரகாசு திருமண மண்டபத்தில் சிறப்பாக நடந்தது. அதில் கலந்துகொண்டு அவருக்கும், அவரின் துணைவியாருக்கும் வாழ்த்துத் தெரிவித்து, சால்வை அணிவித்து மரியாதை செய்தேன். என்னுடன் துணைவியார் மோகனா அம்மையாரும் கலந்து கொண்டு திருமதி விஜயலட்சுமி அம்மையாருக்கு சால்வை அணிவித்தார். “நமது குடும்பத் தலைவர் நீதியரசர் வேணுகோபால் _ விஜயலட்சுமி இணையர் நூற்றாண்டு கண்டு நலமுடன் வாழ வாழ்த்துகிறோம்’’ என வாழ்த்துரையில் கூறினேன்.

8.1.1995 அன்று கடலூர் டவுன் ஹாலில் கழகத்தினரால் நடத்தப்பட்ட எனது பிறந்த நாள் விழாவில், நண்பர் பிரபஞ்சன் கலந்துகொண்டு திராவிடர் கழகத்தின் பணியினையும், எழுத்தாளராய் எனது எழுத்துப் பங்களிப்பையும் பாராட்டிப் பேசினார். அதில் சில பகுதிகள் இவை:

“தமிழுக்கும், தமிழின் மேன்மைக்குமாக கடந்த 52 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்த ஒரு தலைவருக்கு நன்றி தெரிவிப்பு விழாவை நடத்துகிறோம். நண்பர்களே! கருத்துக்குக் கருத்து பதில் கூறுகின்ற இயக்கம் திராவிடர் கழகம். இந்த இயக்கத்தின் நோக்கமே 1920ஆம் ஆண்டிலிருந்து இதுதான். பார்ப்பன _ வர்ணாசிரம தர்மங்களுக்கு எதிரான பலத்த தாக்குதல்களைத் தொடுக்கின்ற ஒரே சிறுத்தையின் கூடாரம் இந்தக் கழகம். தலைவர் வீரமணி அவர்களை எத்தனை பேர் சிறந்த எழுத்தாளராகப் பார்க்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் இன்று சமூகவியலின் தலைசிறந்த ஆராய்ச்சியாளர் தலைவர் வீரமணி அவர்கள். அவர் எழுதியுள்ள நூல்களில், “கோயில்கள் தோன்றியது ஏன்?’’ “காங்கிரஸ் ஏன் தோன்றியது?’’, “சங்கராச்சாரி _யார்?’’ ஆகிய மூன்று புத்தகங்கள் போதும். வீரமணிக்கு ஒன்று இரண்டல்ல 300 டாக்டரேட் பட்டங்கள் கொடுக்கப்பட வேண்டும். 1982ஆம் ஆண்டு சிதம்பரத்தில், தலைவர் வீரமணி அவர்கள் ஆற்றிய உரை, ‘சிதம்பர ரகசியம்’ என்று அது புத்தகமாக வெளிவந்திருக்கிறது. வீரமணி ஆற்றிய ஆயிரம் சிறந்த உரைகளில் _ ஆயிரத்தில் ஒன்றாக நிற்கத்தக்க உரை அந்த உரை. சிங்கத்தின் குகைக்குள்ளே சென்று, அதன் பிடரியைப் பிடித்து ஆட்டுவது என்று சொல்லுவார்களே _ அது இப்பொழுது பொருந்தாது. ஓநாய்களின் கூடாரத்திற்கு _ சிதம்பரமாகிய அந்த இடத்திற்கு இந்தச் சிங்கம் சென்று, அந்த ஓநாய்களை கிழித்துப் போட்ட கதை அந்தக் கதை. ‘சிதம்பர ரகசியம்’ என்னும் அந்த நூலைப் படித்துப் பாருங்கள். நீங்களே உணர்வீர்கள்!

இன்றும் கூட தத்துவார்த்த புத்தகங்களை வெளியிடுகின்ற கட்சி திராவிடர் கழகம் ஒன்றுதான். அந்தப் புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். “கோயில் தோன்றியது ஏன்?’’ என்னும் புத்தகத்தை வீரமணி எழுதியிருக்கிறார். அருமையான புத்தகம். தத்துவார்த்தமாக நீங்கள் படிக்காத வரைக்கும் நீங்கள் திராவிடர் கழகத்தில் பரிபூரணமாக உறுப்பினராகும் தகுதியை இழக்கிறீர்கள். ‘டாகுமென்டேசன்’ என்றால், எதையும் பதிவு செய்து வைத்தல். வீரமணி அவர்கள் அளவுக்கு படித்த இன்னொரு அரசியல் தலைவர் இந்த நாட்டிலே கிடையாது. வீரமணி அவர்கள் அளவுக்கு ஆராய்ச்சி செய்து ஆராய்ச்சிப் புத்தகம் எழுதியவரும் கிடையாது – அண்ணாவுக்குப் பிறகு, அண்ணாவின் ஆரிய மாயைக்குப் பிறகு! இது உண்மை. தந்தை பெரியார் கருத்தில் எள்ளளவும் பிறழாதவர், தமிழர் மேம்பாட்டுக்கு உழைப்போரெல்லாம் இவரின் நண்பர்களாக இருப்பார்கள். மிகவும் ஆராய்ச்சிப்பூர்வமான எழுத்தாளர் இவர். இவரின் வாழ்க்கை நெறிப்படி நாமும் வாழ்வோம்! என்ற உறுதிமொழியை நாம் ஏற்று அதன்படி நடப்போம். இந்த வாய்ப்பை எனக்குத் தந்தமைக்காக துரை.சந்திரசேகரன் அவர்களுக்குக் கடமைப்பட்டவனாகியுள்ளேன்’’ என பல்வேறு கருத்துகளை பொதுக்கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

10.1.1995 அன்று பெரம்பூர் _ செம்பியத்தைச் சேர்ந்தவரும் கழகத் தலைமைக் கழகத்தில் பணிபுரிந்தவருமான கி.ராமலிங்கம் அவர்களின் தந்தையார்

இரா.கிருட்டினன் மரணம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து, அவருடைய இல்லத்திற்கு கழக முன்னணியினருடன் சென்று அவருடைய உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி, கி.ராமலிங்கத்திற்கு ஆறுதல் கூறினோம்.

உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்ற பன்னாட்டு தமிழறிஞர்களை பாராட்டி சிறப்பு செய்யும் ஆசிரியர்.

14.1.1995 அன்று தஞ்சையில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்ற  பன்னாட்டுத் தமிழறிஞர்களுக்கு கழகத்தின் சார்பில் பெரியார் திடலில் பாராட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் தலைமை ஏற்று, தமிழறிஞர்கள் கே.ஏ.முகமது கமாலுதீன் _ஆங்காங்க், கவிஞர் மு.க.மா.முத்தமிழ்ச்செல்வன் மற்றும் இ.மகேஸ்வரன் _ மலேசியா, வி.குமாரசாமி _ பிரான்ஸ், மூர்த்தி _ சிங்கப்பூர் மற்றும் சிலர் கலந்து கொண்டனர். அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, கழக வெளியீடுகளை அன்பளிப்பாகக் கொடுத்து சிறப்புச் செய்தோம். நிகழ்வில் கழகப் பொறுப்பாளர்கள், தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர்.

அந்தப் பாராட்டு விழாவில் பேசுகையில், “உலகின் பல பகுதிகளிலிருந்து தமிழ்த் தூதர்களாக இங்கு வருகை தந்திருக்கிறீர்கள். பெரியார் திடலில் உள்ள நாங்கள் உலகத் தமிழ்த் தூதர்களை மறவாதவர்கள். தமிழ்த் தூதர்களாகிய நீங்கள் எங்களிடமிருந்து எந்த வகையான உதவிகளையும் எப்போதும் எதிர்பார்க்கலாம். எங்களால் இயன்றதையெல்லாம் நாங்கள் செய்யக் காத்திருக்கிறோம்.’’ என பல கருத்துகளை எடுத்துரைத்தேன்.

19.1.1995 அன்று தந்தை பெரியார் கொள்கை வழி பிறழாமல் கடைசி வரை வாழ்ந்த பொன்மலை தென்பகுதி ரயில்வேமென் யூனியன் முக்கிய தோழராய் இருந்தவருமான என்.கோவிந்தராசு மறைந்தார் எனும் செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தன்னிடமிருந்த நூற்றுக்கணக்கான இயக்க நூல்களை கழகத்திற்கு அன்பளிப்பாக அளித்தவர். திராவிடர் கழக கொள்கைப் பிரச்சாரத்தை _ தான் சந்திக்கும் மக்கள் யாவரிடமும் இடைவிடாமல் அவர் செய்து வந்தார். அது கழகத்திற்கு பயனும் தந்தது. அவருடைய மறைவால் திராவிடர் கழகம் சிறந்த பிரச்சாரம் செய்து வந்த பெரியார் தொண்டரை இழந்துள்ளது என இரங்கல் தெரிவித்தோம்.

கீழவாளாடி முதல் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றும் ஆசிரியர் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள்

23.1.1995 அன்று சென்னை அண்ணா நகர் சோபா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற பெரியார் பெருந்தொண்டர் செ.குப்புசாமி இல்ல மணவிழாவில் கலந்துகொண்டு, தலைமை ஏற்று நடத்தி வைத்தேன். செ.குப்புசாமி _ துளசியம்மாளின் மகன் கவுதமனுக்கும், பி.கே.பலராமன் _ ரேணுகா ஆகியோரின் மகள் கவியரசிக்கும் சுயமரியாதைத் திருமண முறைப்படி வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழியை கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்தேன். மணமக்களுக்கு வாழ்த்து கூறுகையில், “சுயமரியாதைத் திருமணம் என்பது வாழ்வியல் திருமணம்; மனிதநேயத் திருமணம். பெரியார் பெருந்தொண்டர் செ.குப்புசாமி அவர்கள் சிறந்த கொள்கை வீரர். எந்த நிலையிலும் தந்தை பெரியாரின் கொள்கையை வழிகாட்டியாகக் கொண்டு லட்சிய உணர்வுடன் வாழ்ந்து வருபவர் என்று கூறி, அவருடைய அய்ம்பதாவது திருமண நாளையொட்டி, அவரையும் அவருடைய இணையரையும் மாலை மாற்றிக்கொள்ளச் செய்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தேன்.

25.1.1995 அன்று திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் லால்குடி அடுத்த கீழவாளாடியில் தலைமைக் கழக ஆணைக்கேற்ப முதல் ஜாதி ஒழிப்பு மாநாடு மிகச் சிறப்பாக கழகப் பொறுப்பாளர்களால் நடத்தப்பட்டது. மாவட்டச் செயலாளர் ‘உண்மை’ கிருட்டினன் வரவேற்புரை ஆற்றினார். அங்கு மாவட்டம் முழுவதுமிருந்து வந்திருந்த ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்ற பெரியார் பெருந்தொண்டர்களை கழகத்தின் சார்பில் பாராட்டி சால்வை அணிவித்து, பாராட்டுப் பத்திரங்களையும் வழங்கினோம்.

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்ற 95 வயதைக் கடந்த லால்குடி வட்டம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மணக்கால் ரத்தினம் அவர்கள் நடந்து வர முடியாத நிலையில், அவர் இருக்கும் இடத்திற்குச் சென்று சால்வை அணிவித்து, விருது வழங்கி, பாராட்டிதழையும் வழங்கினோம். முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சங்கப் பிள்ளை அவர்களுக்கும் சிறப்புச் செய்யப்பட்டது. மாநாட்டினை ஒட்டி இளைஞரணியின் சார்பில் வீதி நாடகமும், கழகப் பாடல்கள் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. மாநாட்டினை முன்னிட்டு நகரமே ஒளிரும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளி வெள்ளத்தில் இருந்தது. மாநாட்டில் எனது உரையை பொதுமக்களும், கழகப் பொறுப்பாளர்களும் இறுதிவரை கேட்டு மகிழ்ந்தனர்.

25.1.1995 அன்று திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த சிறுதையூர் பேருந்து நிலையம் எதிரில் மாநில திராவிடர் விவசாய அணி செயலாளர் இ.ச.தேவசகாயம் அவர்களால் கட்டப்பட்ட ‘பெரியார் திருமண மாளிகை’ பெயர்ப் பலகையை பலத்த கைத்தட்டலுக்கிடையே மகிழ்ச்சியோடு திறந்து வைத்தேன். இ.ச.தேவசகாயத்தின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு கழகத்தின் சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தேன்.

பெரியார் திருமண மாளிகையின் திறப்பு விழா அன்றே கீழவாளாடி திராவிடர் கழக விவசாய தொழிலாளரணியின் தலைவர் வை.முத்து _ பழனியம்மாள் ஆகியோரின் மகன் ஜெயராஜுக்கும், கடுக்காத்துறை ரா.பெரியசாமி _ கனகம்மாள் ஆகியோரின் மகள் கலைச்செல்விக்கும் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியைக் கூறச்செய்து வாழ்க்கை ஒப்பந்த விழாவை நடத்தி வைத்தேன்.

சிதம்பரம் ஜெயராமன்

28.1.1995 அன்று ‘இசைச்சித்தர்’ என்று நம் எல்லோராலும் மிகுந்த பாசத்தோடும், மரியாதையோடும் அழைக்கப்படும் திருவாளர் சிதம்பரம் ஜெயராமன் அவர்கள் மறைவுற்றார் என்கிற செய்தி கேட்டு மிகுந்த வேதனையும் துயரத்தையும் அடைந்தேன். “இசை உலகில் அவரது சாதனை ஒப்பற்ற ஒன்றாகும். தமிழிசை வளர்த்த ஞானசூரியனாகத் திகழ்ந்த மாமேதை அவர். தமிழின உணர்வும், மொழி உணர்வும், தத்துவ ஞானமும் _ அவரது இயல்பும் ஆற்றலும் தனிச் சிறப்பானவை. எவராலும் நிரப்பப்பட முடியாத ஓர் இடம் அவரது இடம். அவரது பெருமை என்பது தமிழினத்தின் பெருமையாகும். தமிழ், ஆங்கில ஏடுகள் பலவற்றில் அவரது மறைவு குறித்து அவருக்குத் தரவேண்டிய அளவுக்கு மரியாதை தரவில்லை என்பது கண்டனத்திற்குரிய ஒன்று.

தமிழ்நாடு அரசும், அதன் இயல் இசை நாடக மன்றமும் அவருக்குரிய சிறப்பினைச் செய்ய முன்வருவது அவசியம், அவசரம். அவரது நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு தமிழிசைக் கல்லூரிக்கு அவரது பெயரைச் சூட்ட முதல்வருக்கு இதனை வேண்டுகோளாக வைக்க விரும்புகின்றோம். அவரது இழப்பினால் வாடி வருந்தும், அவரது பிள்ளைகள், குடும்பத்தினர் அனைவருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என இரங்கல் செய்தியை வெளியிட்டோம்.

சிவகங்கை சண்முகநாதன்

30.1.1995 அன்று சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவரும் _ சுயமரியாதை வீரரும் _ முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான வழக்கறிஞர் சிவகங்கை சண்முகநாதன் அவர்கள் முடிவெய்தினார் என்பதை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தோம். “தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்னும் அறக்கட்டளையின் தலைவராக 17 ஆண்டுகளாக சிறப்பாகத் தொண்டாற்றியவர். நமது நிரந்தர மரியாதைக்குரிய ‘வக்கீல் அய்யா’ என்று அன்பொழுக அனைவராலும் அழைக்கப்படும் மானமிகு சிவகங்கை திரு.இரா.சண்முகநாதன் அவர்களின் மறைவு கழகத்திற்குப் பேரிழப்பாகும்.

‘ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர்’ என்ற வரிகளுக்கு அப்பட்டமான எடுத்துக்காட்டு அவர். நம் அறிவு ஆசான் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். இயக்கத்தில் தன்னை கட்டுப்பாட்டின் உருவமாக நினைத்து செயல்பட்ட ஓர் இராணுவ வீரனைப் போல் கடைசி மூச்சடங்கும் வரை ஒரே இயக்கம், ஒரே தலைமை, ஒரே கொடி, ஒரே கொள்கை என்பதைத் தவிர, வேறு எந்த சபலங்களையும் அறியாதவர். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் காலத்திற்குப் பிறகும் இயக்கம் இன்று புத்தொளி பெற்று, புகழ்க் கோபுரத்தில் நின்று ஒளியூட்டுகிறது என்றால் அவரைப் போன்றவர்களது சந்தேகமற்ற வழிகாட்டுதலும், பேராதரவுமே காரணமாகும். அவரது இழப்பு சுயமரியாதைக் கொள்கைக் குடும்பத்திற்கே பேரிழப்பு! அவரது இழப்பால் நேரிடையாக பாதிப்புக்கு ஆளாகியுள்ள அவரது துணைவியார் அம்மா இராமலக்குமி அம்மையாருக்கும் குடும்பத்தினர்களுக்கும், சகோதர, சகோதரிகளுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டோம்.

சிவகங்கை சண்முகநாதன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி, குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லும் ஆசிரியர்

3.2.1995 அன்று கோபிச்செட்டிபாளையம் அருகில் உள்ள சத்தியமங்கலத்தில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டேன். ஜாதி ஒழிப்பு மாநாட்டின் முதல் நிகழ்வாக கழக இளைஞரணியினரின் வீதி நாடகமும், மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் தேனி பரமராஜ் _ தங்கம்மாள் ஆகியோரின் மகன் கிருட்டினசாமிக்கும், மேட்டூர் கந்தசாமி _ கலையரசி ஆகியோரின் மகள் புனிதாவுக்கும், குருவை வெள்ளையன் _ ராசம்மாள் ஆகியோரின் மகன் சரவணன், சேலம் சுந்தரமூர்த்தி _ ஜாய் மனோகரி ஆகியோரின் மகள் சுதா ஆகியோருக்கும் மேடையிலேயே ஜாதி மறுப்பு மண விழாவை உறுதிமொழி கூறச் செய்து நடத்தி வைத்தேன். 80 வயது முதிர்ந்த பெரியார் பெருந்தொண்டர்களும் பாராட்டப்பட்டனர்.

சத்தியமங்கலம் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் சிறப்புரையாற்றும் ஆசிரியர் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள்

மணமக்களை வாழ்த்தி உரையாற்றுகையில், “இந்த ஆண்டு முழுவதும் ஜாதி ஒழிப்பு மாநாடுகளை தமிழ்நாடு முழுவதும் நடத்துகிறோம். இங்கே ஜாதி ஒழிப்பு மாநாட்டில் 2 ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெற்றன. இங்கே அமர்ந்திருக்கிற மணமக்களைப் பாராட்டுகிறேன். இதுதான் தந்தை பெரியார் தொண்டர்களின் இலக்கணம். அதற்கு அடையாளமாகத்தான் இந்த இளைஞர்கள் ஜாதி மறுப்புத் திருமணத்தை இங்கே நடத்திக் காட்டியிருக்கிறார்கள். ஜாதி ஒழிப்பு மாநாட்டில் எங்கள் செலவிலேயே உங்களுக்கு மாலை வாங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறோம்’’ என ஜாதி மறுப்புத் திருமணங்களின் அவசியத்தை எடுத்துக் கூறினேன்.

கல்லாவி ஜாதி ஒழிப்பு மாநாட்டில் மணமக்கள் அண்ணா.சரவணன் – இந்திராகாந்தி வாழ்க்கை ஒப்பந்த விழாவில் உறுதி மொழி கூறி நடத்தி வைக்கும் ஆசிரியர்

5.2.1995 அன்று தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கல்லாவியில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாடும், தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டு மேடையில் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்ட தந்தை பெரியாரின் முழு உருவச் சிலையை பலத்த வாழ்த்து முழக்கங்களுக்கு இடையே திறந்து வைத்தேன். அதனை ஒட்டிய மாநாட்டு மேடையிலேயே அண்ணா.சரவணன் – இந்திராகாந்தி மற்றும் குமார் _ கலையரசிக்கும் ஜாதி ஒழிப்பு திருமணங்கள் நடைபெற்றது. அவர்களை வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்தேன். அதனைத் தொடர்ந்து சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்ற எஸ்.கே.சின்னப்பன், க.இரணியன், ஆ.ராம்தாசு, ராசேந்திரன் ஆகியோருக்கு சால்வை போர்த்தி சான்றிதழ் வழங்கிப் பாராட்டினேன். மாநாட்டில் கலந்துகொண்ட முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தேன். தந்தை பெரியார் சிலை திறப்பு நிகழ்ச்சியையொட்டி கல்லாவி நகரமே கழகக் கொடி, தோரணங்களாலும், மின் விளக்குகளாலும்,  அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த பொதுமக்கள் இறுதிவரை இருந்து உரையைச் செவிமெடுத்தனர்.

(நினைவுகள் நீளும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *