முகப்புக் கட்டுரை: புரட்டுகளை முறியடிக்கும் போராளிகள்!

நவம்பர் 16-30, 2020

சமா.இளவரசன்

பகுத்தறிவைப் பரப்பும் பணி அத்தனை எளிமையானதன்று. எதையொன்றையும் கேள்வி கேள்! ஆராய்ந்துபார்! சிந்தித்துப் பார்! என்று அறிஞர்கள், பகுத்தறிவாளர்கள் சொல்வது கேட்போருக்கு எளிதாகத் தோன்றலாம். ஆனால், அதன்படி மக்களைச் சிந்திக்கச் செய்வது கடினமானது. அப்படிச் சொன்னவர்களெல்லாம் மக்களிடமிருந்தும், ஆளும் கூட்டத்திடமிருந்தும் கடும் எதிர்ப்பையே பரிசாகப் பெற்றிருக்கிறார்கள்.

வெகு மக்கள், எளிதில் ஏற்றுக் கொள்கிற அல்லது ஏற்றுப் பழகியிருக்கிற ஒன்றை எதிர்த்துக் கேள்வி கேட்டால், அது தங்களையே எதிர்த்துக் கேட்கப்பட்டதாய்த் தோன்றுமளவுக்கு மக்களை மயக்கி வைத்திருப்பவைதான் அவர்தம் நம்பிக்கைகள். ஏனெனில், அந்த நம்பிக்கைகளை நோக்கி எழுப்பப்படும் கேள்விகள், அதை நம்புவோரின் அறிவுத்திறனையும் கேள்விக்குள்ளாக்குகின்றன. இது அவர்களின் ‘ஈகோ’வைக் கொஞ்சம் சுரண்டிப் பார்க்கிறது.

தவிரவும், எதுவொன்றையும் கேள்வி கேட்காமல் ஏற்பதிலும், அதன் சுவைகளில் மயங்கும் பெருங்கூட்டத்திலொரு துளியாய்க் கரைவதிலும், வெகுமக்கள் நம்பும் ஒன்றுடன், அப்பெருங்கூட்டத்தின் பெரும் பலத்தைத் தாம் பெறும் உணர்வோடு மந்தை மனநிலையில் அதில் இணைவதிலும், தமக்குக் கிட்டாத ஒரு பலம் அதன் மூலம் கிடைப்பதாக ஒரு போதை உண்டாகிறது. அதுவே மீண்டும் மீண்டும் மூட நம்பிக்கைகளின்பாலும், போதைகளின்பாலும் மக்களை இட்டுச் செல்கிறது; தக்க வைக்கிறது. (இத்தகைய பலத்தைக் காட்டித் தான்,  -யை உருவாக்கி மத, ஜாதி, இனவாத அமைப்புகள் மேலும் ஆட்களைத் தங்கள் பக்கம் இணைக்கிறார்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதை இங்கு விவரிக்கத் தேவையில்லை.)

சிறு வயதிலிருந்து கேட்டுப் பழகிய அதிசயக் கதைகளும், மதங்களின் பரப்புரையும் நம் காலத்திலும் ஏதேனும் அதிசயம் நிகழும் என்னும் ஆழ்மன ஆர்வத்தை வளர்த்துவருகின்றன. நடக்கவே முடியாது என்று நமக்கு நன்கு தெரிந்த ஒன்றே, நிகழ்ந்துவிட்டதாக யாரேனும் சொன்னால், அது அந்த ஆழ்மன ஆர்வத்துக்குத் தீனியாக அமைந்துவிடுகிறது; அதை நம்புவதற்கு ஒரு துணை கிடைத்தால்போதும் என்கிற அளவில் நம்பச் சொல்கிறது. (ஏதேனும் ஒரு பத்திரிகையோ, ஊடகமோ, தெரிந்தவர்களோ அதை உண்மை என்பது போல் சொன்னால் கூடப் போதும் – உறுதியாகக் கூட சொல்ல வேண்டியதில்லை. அதே நேரம் படித்தவர்கள் என்றால், ஒரு டாக்டரோ, சயண்டிஸ்ட் (விஞ்ஞானி) என்று போர்டு போட்டுக் கொண்டவரோ அதை ஏற்றுக் கொண்டால் அல்லது நாசாவே வியந்தது என்று ஒரு பேச்சுக்கு யாராவது சொன்னால் கூட போதுமானது.)

இதனைப் பயன்படுத்திக் கொண்டுதான் அறிவியல் வளர்ந்துவிட்ட 20, 21 என்னும் இந்த இரு நூற்றாண்டுகளிலும் கூட புதிது புதிதாக அற்புதங்களும், அதிசயங்களும் மத, மொழி, நாடு பேதங்களின்றி எங்கும் அரங்கேற்றப்படுகின்றன. புதிய புதிய சாமியார்கள், கார்ப்பரேட் குருமார்கள் எல்லாம் புறப்படுகிறார்கள். மக்கள் திரளைத் திரட்டுகிறார்கள்; மடையர்களாக்குகிறார்கள். இருந்தாலும் அயராமல் பகுத்தறிவாளர்கள், உண்மையை நாடுவோர் போராடிக் கொண்டேயிருக்கிறார்கள். காலம் முழுக்க நடைபெறும் இப்போராட்டத்தில் எண்ணற்றோர் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார்கள்.

பகுத்தறிவுப் பிரச்சார வடிவங்களில் எழுத்து, பேச்சு, விவாதம், கலைவடிவங்கள் என்று பல வகைகளுண்டு. மூடநம்பிக்கைகளைத் தோலுரிப்பதில் இவற்றின் பங்கு மிக முக்கியமானது. ஆனாலும், சொல்லுவிங்க… செய்ய முடியுமா?, இல்லைன்னு நிரூபிக்க முடியுமா? என்பது மிக எளிமையாக எழும் கேள்வி. அதற்கான பெரும் விடை தான் செயல்விளக்கம்! இயற்கையை மிஞ்சிய ஏதோ ஒன்று நடப்பதாகச் (Paranormal) சொல்லப்பட்டாலும், அதிசயம், அற்புதம், மந்திரசக்தி, மாயாஜாலம், யோகசக்தி என்று எத்தனை பெயரிட்டு அழைக்கப்பட்டாலும், அதன் பின்னே ஒளிந்திருப்பது தந்திரம் தான் என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து நிறுத்துவதால் செயல்விளக்கத்திற்கு எப்போதும் தனிச் சிறப்பும் ஈர்ப்பும் உண்டு.

அக்னிச் சட்டி எடுக்க முடியுமா? ஆத்தாவை வேண்டாமல், விரதம் இருக்காமல் அக்னிக் குண்டம் இறங்க முடியுமா? என்பதில் தொடங்கி, யோக வலிமை இல்லாவிட்டால் அந்தரத்தில் பறக்க முடியுமா? என்று கேட்பதுவரை, மக்களை ஏமாற்றும் அனைத்துப் புரட்டுகளையும் இத்தகைய செயல்விளக்கங்களால் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார்கள் பகுத்தறிவாளர்கள். தமிழ்நாட்டில் நடைபெற்ற பகுத்தறிவுப் பிரச்சாரங்களில் திராவிடர் கழகம் தொடர்ந்து நடத்திவரும் மந்திரமா? தந்திரமா?, மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணிகள் பெரும்பங்காற்றியிருக்கின்றன.

அறிவியல் விளக்கங்களுடன் கூடிய இத்தகைய செயல்விளக்கங்கள் உலகெங்கும் நிகழ்த்திக் காட்டப்படுகின்றன. பேய், பிசாசு, அதீதசக்தி, அமானுஷ்யம் ஆகிய பெயரில் பலரால் நம்பப்பட்டவைகளையும், தாங்களே அதீத சக்தி கொண்டோர் என்று நம்பிய பலரையும் உண்மை அறிவியல் விளக்கங்களால் அம்பலப்படுத்தியவர் சீரிய பகுத்தறிவாளரான டாக்டர் ஆபிரகாம் தாமஸ் கோவூர் (10, ஏப்ரல், 1898 – 18 செப்டம்பர் 1978). கேரளாவில் பிறந்து, இந்தியாவிலும், பெரும்பாலும் இலங்கையிலும் வசித்தவரான கோவூர், ஓர் உளவியல் நிபுணர். அவருடைய அனுபவங்கள் ஒவ்வொன்றும் இன்றும் நாம் சந்திக்கும் பல வகை அமானுஷ்யங்களின் புதிர்களை விடுவிக்கக் கூடியவை. அவை தமிழிலும் திராவிடர் கழகத்தால் பல வெளியீடுகளாக வெளியிடப்பட்டுள்ளன. ‘உண்மை’ இதழில் முன்பு தொடராகவும் வெளிவந்துள்ளன.

ஆவி பிடித்ததாகவும், ஏவல் வேலையென்றும், மாந்திரிகம், சாமியார்கள் என்று மூடத்தனத்தில் வீழ்ந்த பல குடும்பங்களின் பிரச்சினைகளை, உரிய முறைகளில் ஆய்வுக்குட்படுத்தி, அவர்களின் உளவியல் பிரச்சினைகளை ‘ஹிப்னாடிச’ முறையில் சீர்செய்தவர். இந்தியாவிலும், இலங்கையிலும் பல மனிதக் கடவுள்களின் குட்டுகளை உடைத்தவர். அதனால் வந்த எதிர்ப்புகளையும் எதிர்கொண்டவர்.

பல ஆண்டுகாலம் இந்தியாவின் பல மாநிலங்களிலும் பகுத்தறிவுப் பிரச்சாரம் மேற்கொண்டவர். பலமுறை அவர் திராவிடர் கழக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றதுண்டு. 1975-ஆம் ஆண்டு உதகமண்டலத்தில் கடும் எதிர்ப்புகளுக்கிடையில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் பங்கேற்று மிகச் சிறந்த உரையாற்றினார். அவரது நூற்றாண்டுவிழாவையும் திராவிடர் கழகம் தஞ்சையில் நடத்தியது. இலங்கை பகுத்தறிவாளர் அமைப்பை நிறுவியவர் இவரே! கேரளாவில் ஆண்டுதோறும் இவர் பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்றன. தனது மறைவுக்குப் பிறகு தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கும், கண்களைப் பார்வையற்றோருக்கும் கொடையாகக் கொடுத்துச் சென்றார் கோவூர்.

கோவூரின் பகுத்தறிவுப் பிரச்சாரமும், அதில் அவர் கையாண்ட முறையும் மேலும் பலரை அவரைப் போல செயல்படவைத்தன. அப்படி அவரால் ஈர்க்கப்பட்டு, அவருடைய பணியையும், பாணியையும் தொடர்ந்தவர்களில் முக்கியமானவர் பசவ பிரேமானந்த் (17 பிப்ரவரி 1930 — 4 அக்டோபர் 2009).

கேரளாவில் பிறந்தவரான இவர் 1969-இல் ஆபிரகாம் கோவூரைக் காணும்வரை தியோசாபிகல் சொசைட்டியைப் பின்பற்றுபவராகத் திகழ்ந்தார் தமது பெற்றோரைப் போல. தியோசாபியை போதித்த ஹெலெனா ப்ளவாட்ஸ்கி என்ற ரஷ்ய அம்மையாரைத் தீவிரமாகப் பின்பற்றினார் பிரேமானந்த். கோவூரின் சந்திப்புக்குப் பின், தியோசாபியை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களில் முக்கியமானவரானார்.

1940களில் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் பங்கேற்பதற்காகத் தனது பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டு, பின்னர் குருகுலக் கல்வி மூலம் சில காலம் பயின்ற பிரேமானந்த், தனது வாழ்வினை புரட்டர்களுக்கெதிரான போராட்டக் களமாகவே மாற்றிக் கொண்டார். புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவைத் தோலுரித்து, போராட்டங்களும், வழக்குகளும் நடத்தினார். 500 பேருடன் புட்டபர்த்தி நோக்கி நடைபயணம் மேற்கொண்டு கைது செய்யப்பட்டார். மக்களை ஏமாற்றிய அவரது தந்திர விளையாட்டுகளுக்கு உரிய செயல்விளக்கங்களுடன் பதிலடி கொடுத்தார். அலகு குத்துதல், மந்திரித்தல், உயிருடன் புதைத்தல், மாந்திரிகம் செய்தல் போன்றவற்றின் புரட்டுகளை அம்பலப்படுத்தி, அவற்றைத் தானும் நிகழ்த்திக் காட்டி பிரச்சாரம் செய்தார். ‘சாய்பாபாவின் படுக்கையறையில் கொலைகள்’ என்னும் நூலை எழுதி வெளியிட்டதோடு, சாய்பாபாவின் பாலியல் அத்துமீறல்களையும் வெளிப்படுத்தினார். இதற்காக இவர் மீது நான்கு முறை கொலைமுயற்சிகள் நடைபெற்றன. சில முறை தாக்குதலால் காயம்பட்டுமிருக்கிறார். வெறுங்கையில் விபூதி வரவழைத்தல், நகை வரவழைத்தல், வாயிலிருந்து லிங்கம் கக்குதல் போன்ற சாய்பாபாவின் வித்தைகளைத் தானும் செய்துகாட்டி அவை வெறும் தந்திரங்களே என்று விளக்கினார்.

அந்தரத்தில் மிதப்பதாகவும், அமர்வதாகவும் வித்தை காட்டும் ஏமாற்றுப் பேர்வழிகளின் மோசடி வித்தைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். அதற்காக ‘இந்தியன் ஸ்கெப்டிக்‘ என்னும் ஆங்கில இதழைத் தொடங்கியதோடு, இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பையும் (FIRA) உருவாக்கினார். இவரைப் பற்றி பன்னாட்டு ஊடகங்கள் ஆவணப்படங்களை உருவாக்கியுள்ளன. இயற்கையை மீறிய சக்திகளையோ, அற்புத சக்திகளையோ சரியான விதிமுறைகளுக்குட்பட்டு நிரூபிப்பவர்களுக்கு இந்திய பண மதிப்பில் ஒரு லட்சம் ரூபாயைப் பரிசாக 1963-இல் அறிவித்தார் ஆபிரகாம் கோவூர். அவரது மறைவுக்குப் பிறகு அதே ஒரு லட்ச ரூபாய் சவாலைத் தொடர்ந்தார் பிரேமானந்த். இறுதிவரை இந்தச் சவாலை எவரும் எதிர்கொள்ளவுமில்லை; வெல்லவுமில்லை. கோவை மாவட்டம் போத்தனூரில் தனது இறுதிக் காலத்தைச் செலவிட்டு, அங்கேயே 2009-ஆம் ஆண்டு மறைந்த பிரேமானந்த், தனது உடலை மருத்துவக் கல்லூரிக்குக் கொடையளித்ததோடு, தனது சொத்துகளை இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்புக்கே உரித்தாக்கிச் சென்றார். அவருடைய பணியை இன்றும் அவ்வமைப்பின் தலைவராகத் திகழும் நரேந்திர நாயக் முன்னெடுத்து வருகிறார்.

பசவ பிரேமானந்த்தும், நரேந்திர நாயக்கும் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக மாநாடுகளிலும், கூட்டங்களிலும் பல முறை பங்கேற்றுள்ளதோடு,   மந்திரமா? தந்திரமா? பயிற்சிப் பட்டறைகளையும் நடத்திப் பலரையும் உருவாக்கியுள்ளனர்.

இத்தகைய பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியில் உலக அளவில் ஈடுபட்டுப் புகழ்பெற்றவர் அண்மையில் மறைந்த ஜேம்ஸ் அமேசிங் ராண்டி (7 ஆகஸ்ட், 1928 — 20 அக்டோபர், 2020). கனடாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவரான ராண்டியின் வாழ்க்கையும் அனைத்து பகுத்தறிவாளர்களின் வாழ்க்கையைப் போல சுவையானது. ஹாரி ப்ளாக்ஸ்டோன் என்ற புகழ்பெற்ற தந்திரக் (மேஜிக்) கலைஞரால் இளம்வயதில் ஈர்க்கப்பட்ட ராண்டி, சைக்கிள் விபத்து ஒன்றினால், 13 மாதங்கள் நடமாட முடியாமல் இருந்தபோது ஏராளமான மேஜிக் புத்தகங்கள் படிப்பதில் செலவிட்டார். 17 வயதில் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, விழாக்காலங்களில் சாலையில் நிகழ்ச்சி நடத்தும் (Carnival Show) மேஜிக் கலைஞராகச் சிலகாலம் இருந்தார். கனடா நாட்டின் டொரண்டோ நகர இரவு விடுதிகளில் ஹிப்னாடிஸம், டெலிபதி போன்றவற்றைச் செய்துகாட்டும் உளவியல் மேடைக் கலைஞராகவும் (Mentalist) இருந்ததுண்டு. மக்களின் மனதைப் படிப்பதாக ஏமாற்றிக் கொண்டிருந்த பாதிரியார் ஒருவரின் புரட்டை அவரது சர்ச்சிலேயே சென்று வெளிப்படுத்தி, அதனால் சில மணி நேரம் சிறையிலும் இருந்திருக்கிறார் இளம் ராண்டி.

ஜேம்ஸ் ராண்டி

தனது 20 வயதுகளில் கனடாவின் ‘மிட்நைட்’ பத்திரிகையில் ராசிபலன் எழுதியிருக்கிறார் ராண்டி. ஆம்… மிக எளிமையாக! பிற பத்திரிகைகளில் வரும் ராசி பலன் பகுதிகளில் இருந்து, அங்கொன்றும் இங்கொன்றுமாக பலன்களை மாற்றிப் போட்டு ஸோரான் என்னும் பெயரில் அவர் எழுதிய ராசிபலன்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பிறகு மேஜிக் கலைஞராக உலகம் முழுவதும் பயணம் செய்து பணியாற்றி, அமெரிக்காவில் வந்து குடியேறினார்.

தொலைக்காட்சிகள் பிரபலமாகத் தொடங்கிய பிறகு, ஏராளமான நிகழ்ச்சிகளை அதன் வாயிலாக நிகழ்த்திக் காட்டினார். தப்பித்தல் கலையில் தேர்ந்தவரான ராண்டி, கால்களோடு கைகளைச் சேர்த்துச் சங்கிலியால் பிணைத்து, தலைகீழாக நயாகரா அருவியின் மேல் தொங்கி, அதிலிருந்து குறிப்பிட்ட நேரத்துக்குள் மீளும் சாகசத்தை நிகழ்த்திக் காட்டினார். பன்னாட்டளவில் முக்கியமான மேஜிக் கலைஞராக மாறினாலும், அவரது ஈடுபாடு, தந்திரக் கலைகளை மந்திரம் என்றோ, இயற்கையை மீறிய சக்தி என்றோ, மனோசக்தி என்றோ கதையளந்து மூடநம்பிக்கையைப் பரப்புவோரை அம்பலப்படுத்துவதிலேயே தன்னுடைய திறமையைப் பயன்படுத்தினார்.

பார்வையாலேயே வசியம் (Psychic Powers) செய்து கரண்டிகளை வளைக்கவும், உலோகப் பொருள்களைத் தன் பால் ஈர்க்கவும் முடியும் என்று உலகம் முழுவதையும் ஏமாற்றி வந்த யூரி கெல்லர் என்பவரின் புரட்டை உடைத்து, அது வெறும் ஏமாற்றுத் தந்திரமே என்று வெளிப்படுத்தினார். யூரி கெல்லரைப் போலவே கரண்டியை வளைத்தும், பொருள்களைத் தன்பால் ஈர்த்தும் நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினார். நான் பயன்படுத்துவது தந்திரமே என்று ஜேம்ஸ் ராண்டி சொன்னாலும், இல்லை நீங்கள் மனோவசியக் கலையைப் பயன்படுத்துகிறீர்கள்… அதைத் தந்திரம் என்று பொய் சொல்கிறீர்கள் என்று தலைகீழாக வாதிட்ட மூடர்களும் உண்டு.

16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாஸ்ட்ரடாமஸ் என்பவரின் சில கணிப்புகள் இப்போதும் நடப்பதாக உலக அளவில் வியந்து பேசப்படுவதுண்டு. அவற்றையும், தன் கேள்விகளாலும், ஆதாரங்களாலும் உடைத்து நொறுக்கினார் ஜேம்ஸ் ராண்டி.        The Magic World of the Amazing Randi (1989), Flim-Flam! (1982), The Faith Healers (1987), James Randi, Psychic Investigator (1991), Conjuring (1992), Test Your ESP Potential (1982) and An Encyclopaedia of Claims, Frauds, and Hoaxes of the Occult and Supernatural (1995) போன்ற அவரது நூல்கள் முக்கியமானவை.

கத்தி இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து நோய்களைக் குணப்படுத்துவதாக ஏமாற்றுவோரின் தந்திரங்களை வெளிப்படுத்தி, மேடையிலேயே அத்தகைய நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டினார். அமெரிக்காவில் பால் கர்ட்ஸ் போன்ற பகுத்தறிவாளர்களுடன் இணைந்து,  Peranormal என்றழைக்கப்படும் இயல்புக்கு மிஞ்சிய செய்கைகள் என்று சொல்லப்படுபவற்றைக் கண்டறிய ‘இயல்பு மீறிய செயல்கள் பற்றிய அறிவியல் பூர்வ விசாரணை குழு (Committee for the Scientific Investigation of Claims of the Paranormal – CSICOP)  என்னும் தனி அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டார். தன்னை  (புரட்டு உடைப்பாளர்) என்று சொல்வதைவிட  (ஆய்வாளர்) என்று சொல்வதே சரி என்பாராம் ராண்டி.

இயல்புக்கு மிஞ்சிய செய்கைகளை இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளும் நிபந்தனைகளின் அடிப்படையில் நிரூபித்துக் காட்டினால் ஒரு மில்லியன் டாலர் பரிசு (இன்றைய இந்திய மதிப்பில் 7 கோடி ரூபாய்க்கும் மேல்) என்ற சவாலை கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை தனது அறக்கட்டளை (The James Randi Educational Foundation (JREF)) மூலம் அறிவித்திருந்தார். 2015-ஆம் ஆண்டுவரை யாராலும் வெல்லப்படாத அந்தத் தொகையை மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் பணிகளுக்கு நன்கொடையாக வழங்குவதற்குத் தன் அறக்கட்டளை மூலம் ஏற்பாடு செய்திருக்கிறார் ராண்டி. இந்தியாவுக்கு வந்திருக்கிறார் ஜேம்ஸ் ராண்டி. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அவரைச் சந்தித்த பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் தமிழ்நாட்டில் பெரியாரின் அமைப்பு செய்துவரும் பணிகளை எடுத்துச் சொன்னபோது, பெரியாரைப் பற்றியும், அவரது அமைப்பு பற்றியும் தனக்குத் தெரியும் என்றும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். கடந்த அக்டோபர் 20 அன்று மறைவுற்ற ஜேம்ஸ் ராண்டிக்கு காணொலி வாயிலாக படத் திறப்பு நிகழ்ச்சியினை நவம்பர் 1ஆம் நாள், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  அவர்கள் தலைமையில் நடத்தி அவரது பணிகளை நினைவு கூர்ந்தது பகுத்தறிவாளர் கழகம்.

மேஜிக் கலையை, தந்திரக் கலைதான் என்று ஒப்புக் கொண்டு அதை பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக நடத்துவதை எப்போதும் பகுத்தறிவாளர்கள் பொருட்படுத்துவதில்லை. அது கலைகளில் ஒன்று என்கிற அளவில் அவர்களும் கூட அவற்றை ரசிப்பார்கள்; நிகழ்த்தியும் காட்டுவார்கள். ஆனால், அதற்கொரு மந்திர, வசிய சக்தி முலாம் பூசி ஏமாற்ற நினைத்தால் ஒரு போதும் அவற்றை விட்டுவைக்க மாட்டார்கள். புரட்டுகளைத் தோலுரித்து, புரட்டர்களை அம்பலப்படுத்தி மக்களை விழிப்படையச் செய்ய தங்கள் சொத்து, படிப்பு, வாழ்க்கை, உயிர் என அனைத்தையும் முன்வைத்து களத்தில் நிற்கிறார்கள். இதனால் தாங்கள் சந்திக்கும் சவால்கள், அச்சுறுத்தல்கள், தாக்குதல்களையெல்லாம் எதிர்கொண்டு மனித சமூகம் ஏமாற்றுப் பேர்வழிகளிடமிருந்து மீண்டு, பகுத்தறிவும் அறிவியல் மனப்பான்மையும் கொண்ட சமூகமாக மாற வேண்டும் என்கிற மானுடப் பற்றுதான் பகுத்தறிவாளர்களை இயக்குகிறது. அந்தப் பணியில் உலகம் முழுக்க இருக்கும் பகுத்தறிவாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். புரட்டுகள் இருக்கும் வரை அதை முறியடிக்கும் போராளிகள் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *