தந்தை பெரியார்
இந்தக் கண்ணனூரிலுள்ள பழைமையானதும், மிக்கப் பொது ஜன சேவை செய்து வருவதுமான உங்களுடைய செவ்வாய் தரும சமாஜத்தின் தலைமை வகிக்கும் பெருமையை எனக்குக் கொடுத்ததற்காக முதலில் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சமாஜத்தின் மூலமாக நீங்கள் செய்திருக்கும் பொது நல சேவைக்கு உங்களை மிகவும் பாராட்டுவதோடு, இங்குள்ள பொது ஜனங்களையும் இன்னும் அதிகமாக ஒத்துழைத்து உங்களுக்கு வேண்டிய சகாயம் செய்து, இச்சமாஜத்தால் மக்களுக்கு இன்னும் அதிகமான நன்மை ஏற்படும்படியாய்ச் செய்ய வேண்டுமாகக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாண்டு விழாவுக்கு நான் தலைமை வகித்ததன் மூலம் எனது சொந்த அபிப்பிராயமாக நான் ஏதாவது சொல்ல வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்ப்பதோடு, நானும் சொல்ல வேண்டியதும் என் கடமையாக இருக்கிறது. உங்களுடைய சமாஜத்தின் பெயராகிய தர்மம் என்பது பற்றியும், இரண்டு பெரியோர்கள் உபந்யாசம் செய்த விஷயங்களாகிய பெண்கள் சுதந்திரம், தர்மம், கடவுள் என்பது பற்றியும், முறையே பேசுவது பொருத்தமானதென்று கருதுகிறேன். ஆகையால், அவற்றைப் பற்றியே சில வார்த்தைகள் சொல்கிறேன். முதலாவதாக தர்மம் என்பது பற்றிச் சொல்கிறேன்.
சகோதரர்களே! தர்மம் என்றால் என்ன? மனித வாழ்க்கையில் தர்மம் என்கின்ற வார்த்தை பெரிதும் உபயோகப் படுத்தப்படுகிறது. அதைப் பற்றி பலர் பலவிதமாகச் சொல்லவும், எழுதவும் படுகிறது. ஆனால், சாதாரணமாக தர்மம் என்பதற்குப் பொருள் கூறும் போது, தர்மம் என்பது ஒரு மனிதனின் கடமைக்கும், மனிதனின் இயற்கைத் தன்மைக்கும், ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் செய்ய வேண்டிய உதவிக்கும், மற்றும் ஒரு மனிதன் ஆத்மார்த்த சாதனம் என்னும் நலமடைவதற்குச் செய்ய வேண்டிய கடமை என்பதற்கும், பொதுவாக இயற்கை யென்பதற்கும், உபயோகப்பட்டு வருவதோடு, பெரும்பாலும் பிச்சைக்காரர்களும், சோம்பேறிகளும், ஏமாற்றுக்காரர்களும் பிழைப்பதற்கும் ஒரு சாதனமாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. எது எப்படியிருந்த போதிலும், நான் அதை நீங்கள் எந்த வழியில் உபயோகப்படுத்துகிறீர்கள் என்று கருதுகிறேனோ அதைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லுகிறேன்.
அதாவது ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்குச் செய்கிற உதவியை தர்மம் என்று கருதி, அதையே உங்கள் கடமையாகவும் கொண்டு நடந்து வருகிறீர்கள் என்பதாகவே நினைத்து அதைப் பற்றியே சில வார்த்தைகள் சொல்லுகிறேன். ஒரு மனிதன், மற்றொரு மனிதனுக்குச் செய்யும் உபகாரம், கடமை என்பவை, காலதேச வர்த்தமானத்துக்கேற்றது போலும், அவ்வப்போது மாறுதலடையக் கூடிய ஒரு தன்மையுடையதேயல்லாமல் மற்றபடி தர்மம் என்பது ஏதோ ஒரு காலத்தில் யாராலோ, யாருக்கோ குறிப்பிடப்பட்டு அதேபடிக்கு நடந்து கொண்டிருக்க வேண்டியது அல்லவென்பதை உணர்ந்து கொண்டால் தான், நாம் உண்மையான தர்மம் செய்தவர்கள் ஆவோம் என்பதோடு, நம் தர்மமும், மக்களுக்கும், நாட்டிற்கும் பயன்படக் கூடியதாகும். அப்படிக்கில்லாமல் நம் பெரியோர்கள் செய்து வந்தார்கள், முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள், அவதாரங்களும், ஆச்சாரிகளும் எழுதி வைத்தார்கள், வெகு காலமாக நடந்து வருகிறது, அநேகம் பேர்களும் செய்து வருகிறார்கள் என்கின்றதான காரணங்களை வைத்துக் கொண்டு கண்மூடித்தனமாக அதன் பலாபலன்களைக் கவனியாமல் செய்து கொண்டிருப்பது வீண் வேலையாகும்.
ஏனெனில், ஒரு காலத்தில் தர்மம் என்று சொல்லப்படுவது மற்றொரு காலத்தில் முட்டாள்தனமாகத் தோன்றப்படுவதை நேரில் பார்க்கிறோம். உதாரணமாக மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்து பணம் சேகரித்து, அவற்றைப் பார்ப்பனர்களுக்கு அள்ளிக் கொடுத்து ஆசிர்வாதம் பெறுவது மனிதனுடைய கடமையான தர்மம் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால், அவை இன்றைய தினம் சுத்த மூடத்தனம் என்றும், ஏமாந்ததனம் என்றும் தோன்றி விட்டது. அதுபோலவே ஏழைகளை ஏமாற்றிக் கொடுமைப் படுத்திச் சம்பாதித்த பணத்தைக் கொண்டு கோயில் கட்டுவது, மோட்சத்தில் இடம் சம்பாதித்துக் கொள்வதற்காகச் செய்யப்படும் தர்மம் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால், இப்போது அதை முட்டாள் தனமென்றும், தேசத்திற்குக் கெடுதியை விளைவிக்கத்தக்கதான துரோக மென்றும் தோன்றி அநேகர்களுக்குப் பள்ளிக்கூடம், தொழிற்சாலை, வைத்தியசாலை முதலியவற்றிற்கு உபயோகப்படுத்த வேண்டியது முக்கியமான தர்மம் என்று தோன்றி விட்டது. ஒரு காலத்தில் மூன்று வேளை குளித்து, நான்கு வேளை சாப்பிட்டு விட்டு சாம்பலையும், மண்ணையும் பூசிக் கொண்டு உத்திராட்சத்தையும், துளசி மணியையும் உருட்டுவது தர்மமென்று நினைக்கப்பட்டது. ஆனால், இப்போது அது திருடர்களுடையவும், சோம்பேறிகளுடையவும் வேலையென்று நினைத்து அப்படிப்பட்ட மனிதர்களிடம் வெறுப்பு ஏற்பட்டு இரண்டு வேளையும் உடலை வருத்திக் கஷ்டப்பட்டு சாப்பிடு கிறவர்களிடம் இரக்கமும், அன்பும், நம்பிக்கையும் ஏற்பட்டு விட்டது. ஒரு காலத்தில் கள்ளையும், சாராயத்தையும் குடிக்கக் கூடியதாகவும், ஆட்டையும், எருமையையும் பலியாக சாப்பிடக் கூடியதாகவும் உள்ள குணங்கள் கற்பிக்கப்பட்ட சாமி என்பதைக் கும்பிட்டுக் கொண்டு அவற்றை, அதற்கு வைத்துப் படைத்துக் கொண்டு, தாங்களும் சாப்பிடுவது கடவுள் வணக்கத் தருமமென்று கருதப்பட்டு வந்தது. இப்பொழுது அவை காட்டுமிராண்டித்தனமென்று உணர்ந்து மக்களுக்கு உணர்த்தப்பட்டு வருகிறது. மற்றும் ஒரு கூட்டத்தாருக்கு ஆடும் பன்றியும் தின்பது தருமமாகயிருக்கிறது. மாடு தின்பது அதர்மமாயிருக்கிறது. இன்னொரு கூட்டத்தாருக்கு மாடு தின்பது தர்மமாக இருக்கிறது. பன்றி தின்பது அதர்மமாக யிருக்கின்றது. வேறொரு கூட்டத்தாருக்கு எந்த ஜந்துவையும் சாப்பிடுவது தர்மமாக இருக்கிறது. பிறிதொரு கூட்டத்தாருக்கு எந்த ஜந்துவையானாலும் சாப்பிடுவது அதர்மமாயிருக்கிறது. ஒரு மதக்காரருக்கே மதக் கொள்கைப் படி கள்ளு, சாராயம் குடிப்பது தர்மமாக இருக்கிறது. வேறொரு மதக்காரருக்கு அவற்றைத் தொடுவது அதர்மமாக இருக்கிறது. ஒரு கூட்டத்தாருக்கு மனிதனை மனிதன் தொடுவது தீட்டாகக் கருதப்படுகிறது. இன்னொரு கூட்டத்தாருக்கு யாரைத் தொட்டாலும் தீட்டில்லை என்று சொல்லப்படுகிறது. அதுபோலவே விவாக சம்பந்த முறையிலும் ஒரு கூட்டத்தார் அத்தை பெண்ணை மணக்கிறார்கள். மற்றொரு கூட்டத்தார் சித்தப்பன், பெரியப்பன் பெண்ணை மணக்கிறார்கள். இனியொரு கூட்டத்தார் மாமன் பெண்ணை மணக் கிறார்கள். ஒரு வகுப்பார் தங்கையை மணக்கிறார்கள். வேறொரு கூட்டத்தார் யாரையும் மணந்து கொள் கிறார்கள். மற்றொரு கூட்டத்தார் விபசாரத்தனத்தைத் தங்கள் குலதர்மமாகக் கொள்ளுகிறார்கள். வேறொரு கூட்டத்தார் பார்ப்பனர்களை யோக்யமற்றவர்களென்று வெறுக்கிறார்கள். மற்றொரு கூட்டத்தார் பார்ப்பனர்களைப் புணருவது மோட்ச சாதனம் என்று கருதுகிறார்கள். இப்படி எத்தனையோ விதமாக ஒன்றுக்கொன்று விபரீதமான முறைகள் தர்மமாகக் காணப்படுகிறது. மேலும், இதுபோலவே சாஸ்திர விசயங்களிலும் ஒரு காலத்தில் மனித சமூகத்திற்குக் கடவுளால் அளிக்கப்பட்ட தர்மமென்று சொல்கிற மனுதர்ம சாஸ்திரம், வெகு பக்தி சிரத்தையோடு பின்பற்றப்பட்டு வந்தது. இப்போது அவை சுயநலக்காரர்களின், சூழ்ச்சிக்காரர்களின் அயோக்யத்தனமான செய்கையென்று நெருப்பு வைத்துக் கொளுத்தப்படுகிறது. இதுபோலவே காலத்திற்கும், தேசத்திற்கும், அறிவிற்கும் தகுந்தபடி தர்மங்கள் மாறுவது சகஜமாயிருக்கிறது. உதாரணமாக, உங்கள் சமாஜத்திலேயே ஒரு அதிசயமான மாறுதலைப் பார்க்கிறேன். அதாவது மக்கள் இறந்து போய் விட்டால் அவர்களை வைத்து சுடுகாட்டுக்கு எடுத்துக் கொண்டு போவதற்கு அழகான ஒரு பெட்டி செய்து வைத்திருக் கிறீர்கள். இந்தப் பெட்டியை அநேகருக்கு உதவி அநேக பிணங்களை அதில் வைத்து வண்டியில் கொண்டு போனதாக உங்கள் ரிப்போர்ட்டில் வாசித்திருக்கிறீர்கள். இதை இந்துக்கள் என்பவர்கள் சற்று கேவலமாகக் கருதுவதுண்டு. எனக்கு அய்ந்தாறு வருடமாக இம்மாதிரி செய்ய வேண்டுமென்கிற ஆசையிருந்து வருகிறது. ஆனால், நீங்கள் செய்திருப்பது பலருக்குப் புதிதாகவும், அதர்மமாகவும் தோன்றினாலும் சீக்கிரத்தில் இந்தப் பழக்கம் எங்கும் தர்மமாகி விடுமென்று கருதுகிறேன்.
ஆகையினால் தர்மமென்கிற விசயத்தில் மிக அறிவைச் செலுத்தி உலகத்தையெல்லாம் நன்றாய் ஆராய்ந்தறிந்து, மிக்க அவசியமென்றும், பயன்படத் தக்கது எதுவென்றும் தெரிந்து செய்வது தான் உண்மையான தர்மமாகும். ஆகவே, இதுவரையில் நீங்கள் செய்து வந்திருக்கும் தர்மங்களைப் பாராட்டுவதோடு இனியும் கால, தேச, வர்த்தமானத்திற்குத் தகுந்தபடி எல்லா மக்களுக்கும் பயன் தரத்தக்க தர்மமாகவே செய்து வருவீர்களென்று கருதுகிறேன்.
31.3.1930 அன்று கண்ணனூரில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு (குடிஅரசு 8.6.1930).