சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

அக்டோபர் 16 - 31,2020

நூல்: ஆதி இந்தியர்கள்

ஆசிரியர்:டோனி ஜோசப்

(தமிழில் : PSV.குமாரசாமி)

முகவரி: 7/32, Ansari Road, Daryaganj, New Delhi – 110 002

Website: www.manjulindia.com

டோனி ஜோசப் அவர்களின் ‘ஆதி இந்தியர்கள்’ புத்தகம் சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு மிக முக்கிய காரணம் மரபியல் துறையில் ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்புகளும் வளர்ச்சியும். மனிதனுடைய 23 ஜோடி குரோமோசோம்கள் அக்கு வேறு ஆணிவேறாகப் பிரித்து அதனை வரிசைப்படுத்தி அதன் டிஎன்ஏ.க்களை ஆழ்ந்து படிக்க முடிந்தது.

இந்தப் புதிய கண்டுபிடிப்புகளால் மக்கள் தொகை மரபியல் என்கிற பிரிவு வெகுவாக வளர்ந்தது.

இதன் மூலமாக இப்போது உள்ள மனிதர் ஒருவருடைய டிஎன்ஏவை எடுத்து பகுத்தாய்ந்து இவர் எந்த வம்சாவளி அல்லது இனக்குழுவைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட முடியும்.

இரண்டாவதாக, ஒரு மக்கள் குழுவினரின் ஒட்டுமொத்த மரபணு தொகுதியையும் வரிசைப்படுத்துதல். அதன் மூலம் அவர்கள் எந்த இனக் குழுவைச் சார்ந்தவர்கள் என்று கூற முடியும்.

மூன்றாவதாக பண்டைய மனிதர்களின் புதை படிமங்களின் டிஎன்ஏ.களை அலசி ஆராய்தல் மூலம். அவை எந்த இனக் குழுவைச் சார்ந்தவை என்பதைக் கண்டறிய முடியும்.

அந்த வகையில் பார்க்கின்றபோது இன்றைக்கு உலகில் இருக்கின்ற எல்லா மனிதர்களும் ஆப்பிரிக்க நாட்டிலிருந்து சுமார் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வெளியேறிய சிறிய குழுவைச் சார்ந்தவர்கள் என்பதை அறிய முடிகிறது. ஏற்கெனவே இதைக் குறித்துப் பல ஆய்வுகள் முன்னமே குறிப்பிட்டிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கியவர்களையும், இப் புதிய கண்டுபிடிப்பான மரபியல் மக்கள் தொகை டிஎன்ஏ ஆராய்ச்சிகள் ஏற்றுக்கொள்ள வைத்தன. 

டோனி ஜோசப் ‘ஆதிகால இந்தியர்கள்’ என்கிற இந்தப் புத்தகத்தில் இந்தியர்கள் யார், எங்கிருந்து வந்தவர்கள், அரப்பாவில் (சிந்து சமவெளி நாகரிகம் ) வாழ்ந்தவர்கள் யார், ஆரியர்கள் எப்போது வந்தார்கள், ஜாதி அமைப்புகள் எப்படித் தோன்றின என்ற பல கேள்விகளுக்கு  விடை தேட முயல்கிறா;¢ வெற்றியும் பெற்றுள்ளார்.

இந்தியாவைப் பொருத்தவரை வரலாற்றில் நான்கு முறை வெளியிலிருந்து இடப்பெயர்ச்சி ஏற்பட்டுள்ளது.

சுமார் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து வந்த குழுவினர். அதில் ஒரு பகுதியினர் மேற்கு நோக்கி அய்ரோப்பாவுக்கு சென்றனர். இன்னொரு பகுதி கிழக்கு நோக்கிப் பயணம் செய்து கால்நடையாக தெற்காசியா வந்து சேர்ந்தனர். இந்தியாவில் வந்து குடியமர்ந்தனர். அவர்கள் முதல் இந்தியர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு முன் இந்தியாவில் மனித இனம் இல்லையா என்றால், இருந்தது என்பது உண்மை. ஆனால், அவர்கள் நம்முடைய சேப்பியன்ஸ் பிரிவைச் சார்ந்தவர்களாக இல்லை. மற்ற பிரிவுகளைச் சார்ந்தவர்களாக என்பதற்கும் நம்மிடம் ஆதாரங்கள் இல்லை. அதற்கான உயிர் படிமங்கள் (ஃபாசில்ஸ்) இதுவரை கண்டறியப்படவில்லை.

அடுத்து இடப்பெயர்ச்சி, சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு ஆசியப் பகுதியிலிருந்து வந்தவர்கள். இவர்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அரப்பா நாகரிகத்தை நிறுவியவர்கள்.

மூன்றாவதாக சுமார் கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்பு வடமேற்குப் பகுதியிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள். இவர்கள் ஆரியர்கள் எனப்படுகின்றனர்.

நான்காவதாக, சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், வெள்ளைக்காரர்கள் என பல்வேறு மக்கள் இந்தியா மீது படையெடுத்து இந்தியாவிற்கு வந்தவர்கள்.

இந்த நான்கு இடப்பெயர்ச்சிகளில் மூன்றாவது இடப்பெயர்ச்சியைத் தவிர மற்றவற்றை வெறும் வரலாறு சம்பந்தமான தகவல்களாக மட்டும் பார்க்கப்படுகிறது.

காரணம், மூன்றாவதாக இடப்பெயர்ச்சி செய்தவர்கள் ஆரியர்கள். இவர்கள் யுரேசியாவின் ஸ்டெப்பி புல்வெளியிலிருந்து வந்தவர்கள் என்பதை அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அவர்கள் இந்த மண்ணிலேயே தோன்றியவர்கள். இந்நாட்டிற்குக் கலாச்சாரம் பண்பாட்டை அளித்தவர்கள் என்கிற கோட்பாடு சுக்குநூறாக  உடைக்கப்பட்டுள்ளது.

இதுவரை வரலாறு தொல்லியல், மொழியியல் இவை வாயிலாக ஆரியர்கள் வந்தேறிகள் என்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும் இறுதியாக மரபியலின் வாயிலாக, தாங்கள் இம்மண்ணைச் சார்ந்தவர்கள் என்கிற அவர்களின் கோட்பாட்டின் சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடிக்கப்பட்டுள்ளது.

அதுபோலவே அரப்பா நாகரிகம் என்பது திராவிட நாகரிகம் என்பதற்கான பல்வேறு சான்றுகள் இப்புத்தகத்தின் வாயிலாகக் கூறப்பட்டுள்ளது.

இப்புத்தகத்தைப் படிப்பதன் மூலமாக நாம் நம்முடைய தொன்மையான வரலாறுகளை அறிந்து கொள்ள முடியும்.. வரலாற்றைத் தெரிந்து கொள்வதன் மூலமாக நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை அறியமுடிகிறது. எங்கிருந்து வந்தோம் என்பதை அறிந்தால்தான் இப்போது நாம் எங்கு இருக்கிறோம் என்பதை உணர முடியும். இப்பொழுது எங்கு இருக்கிறோம் என்பதை உணர்ந்தால்தான் நாம் எங்குச் செல்லப் போகிறோம் என்பது புலப்படும். அது புலப்படுகின்ற தருணத்தில் நாம் சரியான இலக்கை நோக்கி நகர முடியும்.

ஆதலால் அனைவரும் இந்த புத்தகத்தை வாங்கிப் படித்துப் பயன்பெறாம்.

-_ கோ. ஒளிவண்ணன்

ஜாதி அமைப்புமுறை தோன்றியபோது அது ஏன் தோன்றியது என்பதை ஆரிய வர்த்தத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நிலவிய பாரம்பரியங்களில் இருந்த ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டு விளக்க முடியும். ஆரியர்கள் இடம் பெயர்ந்து இந்தியாவுக்குள் வந்தபோது இங்கிருந்த மக்கள் மீது அவர்கள் ஜாதி அமைப்பு முறையைத் திணித்தனர் என்கிற கோட்பாடு தவறு என்று மரபியல் ஆய்வு நிருபித்துள்ளது. 2013இல் வெளியான அந்த ஆய்வின் தலைப்பு “Genetic Evidence for Recent Population Mixture in India” என்பதாகும். அந்த ஆய்வறிக்கையை டேவிட் ரைக், குமாரசாமி தங்கராஜ், லால்ஜி சிங், பிரியா மூர்ஜானி ஆகியோர் இன்னும் சிலரோடு சேர்ந்து எழுதியிருந்தனர்.

இந்தியத் துணைக் கண்டத்திலிருந்த எழுபத்துமூன்று மக்கள் குழுக்களின் மரபணுத் தொகுதித் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் மலைக்க வைப்பவையாக இருந்தன. கி.மு.2200க்கும் கி.பி.100க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்திய மக்கள் குழுக்களுக்கு இடையே ஏகப்பட்ட இனக் கலப்புகள் ஏறபட்டதால் இந்தியர்கள் அனைவரிடமும் வெவ்வேறு விகிதங்களில் முதல் இந்தியர்கள், ஹரப்பர்கள் மற்றும் ஸ்டெப்பிப் பகுதி மக்களின் பரம்பரை கலந்துவிட்டது. “சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மக்களமைப்பில் ஒரு பெரும் மாறுதல் ஏற்பட்டது. பெருமளவுக்கு இனக்கலப்பு நிகழ்ந்த ஓர் இடமாக இருந்த அது, அகமணமுறையின் காரணமாக, அதாவது, ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு உள்ளேயே திருமணம் செய்து கொள்ளும் முறையின் காரணமாக, ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடைய குழுக்களுக்கு இடையேகூடத் திருமணம் நிகழ்வது அரிதாகிப் போன ஓர் இடமாக மாறியிருந்தது.’’

ஹரப்பா நாகரிகம் வீழ்ச்சியடையத் தொடங்கியவுடன், மக்கள் பெரும் எண்ணிக்கையில கிழக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் இடம் பெயர்ந்தனர் என்பதையும், பின்னர் தாங்கள் குடிபெயர்ந்த இடங்களில் அவர்கள் இனக்கலப்பில் ஈடுபட்டனர் என்பதையும் நாம் முன்பே பார்த்தோம். அந்த இனக்கலப்பு ஆழமாக இருந்தது என்று இந்த அறிக்கை கூறுகிறது: “கடந்த சில ஆயிரம் ஆண்டுகளில், கிட்டத்தட்ட அனைத்து இந்தியக் குழுக்களும் தீவிர இனக்கலப்பில் ஈடுபட்டிருந்தன. மிகவும் ஒதுங்கி இருந்ததாகக் கருதப்பட்டு வந்த பில், சமர், கள்ளர் போன்ற பழங்குடி இனங்களும் அவற்றில் அடங்கும்.’’

ஆனால், இதில் வியப்புக்குரிய விஷயம் என்ன தெரியுமா? இவை அனைத்தும் கி.பி.100ஆம் ஆண்டையொட்டி முடிவுக்கு வந்துவிட்டன. நீண்டகாலமாகத் தனித்தனியாக இருந்து வருகின்ற இரண்டு இனக்குழுக்கள், திடீரென்று ஒரு நாள், “பொறுத்தது போதும், பொங்கி எழுவோம், இனி ஒன்றாய்க் கூடிக் களிப்போம்.’’ என்று முடிவெடுப்பதை நம்மால் சுலபமாகக் கற்பனை செய்ய முடியும். ஆனால், நூற்றாண்டு காலமாகக் கொஞ்சிக் குலாவி வந்த இரண்டு இனக் குழுக்கள், திடீரென்று ஒருநாள், “இனி நமக்குள் திருமண உறவுகள் ஒருபோதும் கிடையாது’’ என்று முடிவெடுப்பதைச் சீரணித்துக் கொள்வது கடினம். ஆனால், துல்லியமாக இதுதான் நிகழ்ந்தது என்று மரபியல் கூறுகிறது. கி.பி.100ஆம் ஆண்டையொட்டி, திடீரென்று ஒரு சித்தாந்தம் அதிகார பீடத்தில் ஏறி அமர்ந்து, சமுதாயத்திற்குப் புதிய சமூகக் கட்டுப்பாடுகளை விதித்து, அவர்கள் மீது ஒரு புதிய வாழ்க்கை முறையைத் திணித்திருந்தது போலத் தோன்றுகிறது. இதற்கு முன்போ அல்லது பின்போ முயற்சி செய்யப்பட்டிருக்காத, பிரம்மாண்டமான அளவில் நிகழ்த்தப்பட்ட சமூக மாற்ற முயற்சி அது. மரபியல் சான்றுகளை வைத்துப் பார்க்கும்போது அது பெருமளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்றே கூறவேண்டும்.

சமூகக் குழுக்களுக்கிடையே இதுவரை நிகழ்ந்து வந்த பரஸ்பர இனக்கலப்புக்கு இடையே எழுப்பப்பட்ட பெரும் மதிற்சுவரை, ஜாதி அமைப்பு முறையின் தொடக்கத்தோடு முடிச்சுப் போடுகிறது இந்த ஆய்வு. “பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகிய நான்கு வருணாசிரமப் பிரிவு குறித்து ரிக் வேதத்தில் இடம் பெற்றிருக்கும் பகுதி, பின்னர் இயற்றப்பட்டதாக இருக்க வேண்டும். சமூகரீதியாக அல்லது தொழில்ரீதியாக வரையறுக்கப்பட்ட பாத்திரங்களை வகிக்கின்ற, அகமண முறையைப் பின்பற்றுகின்ற ஜாதிக் குழுக்கள் பற்றி ரிக் வேதத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. ரிக் வேதம் இயற்றப்பட்டுப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால் எழுதப்பட்டவற்றில்தான் இது குறிப்பிடப்படுகிறது.’’

கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்த மவுரியப் பேரரசின் வீழ்ச்சிக்கும் இந்தச் சித்தாந்த மாற்றத்திற்கும ஏதாவது தொடர்பு இருக்குமா? மவுரியர்கள் தோற்கடிக்கப்பட்டது இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து புத்த மதம் மறைந்து போனதற்கும் ஜைன மதம் தேய்வுற்றதற்கும் காரணமாக இருந்திருக்குமா? இறுக்கமான சமூக அடுக்கதிகார அமைப்பு முறையைத் தூக்கிப் பிடித்த, சமூகத்தின் வகுப்புகளுக்கிடையே இனக்கலப்பு நடைபெறுவதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த ஆரிய வர்த்தத்தின் வைதிகப் பாரம்பரியங்கள், தங்களுக்குச் சவாலாக விளங்கிய, சடங்குகளை எதிர்த்த, முற்போக்கான, கட்டுப்பாடுகளற்ற மகத நாட்டுச் சித்தாந்தங்களைத் தோற்கடித்திருக்குமா?

கி.மு.நான்காம் நூற்றாண்டுக்கும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மவுரியப் பேரரசு படுவேகமாக விரிவாகிக் கொண்டிருந்தபோது அது ஆரிய வர்த்தத்தையும் விட்டு வைக்கவில்லை. அது சடங்குகளைத் தூக்கிப்பிடிதத பிராமணியம், பிராமணர்களின் மேலாதிக்கம், ஆட்சியாளர்களோடு அவர்கள் கொண்டிருந்த நெருக்கமான உறவு ஆகியவற்றை அச்சுறுத்தியதால், ஆரியவர்த்தம் அதற்குப் பதிலடி கொடுத்ததா? அதன் விளைவாக அவர்கள் காலப்போக்கில், வெகுகாலமாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்த ‘இனத் தூய்மை’ எனும் கருத்தாக்கத்தையும் தீவிரமாகக் கடைபிடித்து வந்து அகமண முறையையும், இந்திய_அய்ரோப்பிய மொழிகளைப் பேசிய, தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக் கொண்ட, ஆனால் பிராமணச் சித்தாந்தங்களின் மீது நம்பிக்கை இல்லாதிருந்த, கிழக்கிந்தியாவில் வசித்து வந்த குழுக்கள் உட்பட அனைத்துச் சமுதாயக் குழுக்கள் மீதும் திணிப்பதில் வெற்றி கண்டுவிட்டனரா? புரோன்க்ஹார்ஸ்ட் தன் நூலில் இக்கேள்விகள் குறித்து விவாதிக்கிறார்.

இந்த விவாதம் ஒரு சில விஷயங்களைத் தெளிவாக்குகிறது. இந்திய ஜாதி அமைப்புமுறையை ஆரியர்கள் வருகையோடு தொடர்புபடுத்த முடியாது. ஆரியர்கள் இந்தியத் துணைக் கண்டத்திற்குள் நுழைந்து இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்துத்தான், இந்தியச் சமுதாயத்தின் கால்களில் அந்தக் கொடூரமான தளை பூட்டப்பட்டது. அது தலைகாட்டத் தொடங்கிய புதிதில், இந்தியச் சமுதாயத்தில் ஏற்கெனவே இனக்கலப்பு ஏற்பட்டுவிட்டிருந்தது. இந்தியாவிலுள்ள மற்ற ஜாதிகளிலிருந்து சூத்திரர்கள் மரபியல்ரீதியாக எந்த விதத்திலும் வேறுபட்டவர்கள் அல்லர் என்று அம்பேத்கர் கூறியது முழுக்க முழுக்க சரிதான். ஆனால் அவரும் மற்றவர்களைப் போலவே, பழங்குடியினர் மற்ற அனைவரிடமிருந்தும் முற்றிலும் வேறுபட்டவர்கள் என்று நம்பினார். இது சரியல்ல என்பதை இப்போது நாம் அறிவோம். ஏனெனில், ஜாதி அடுக்கதிகார அமைப்பு முறையில் அவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் சரி, அவர்களுடைய மரபணுதான் இந்தியர்கள் எல்லோரிடத்திலும் ஊடுருவியிருக்கிறது. வெளியிலிருந்து இந்தியாவை நோக்கி நடைபெற்ற ஆரிய இடப்பெயர்ச்சியை ஒட்டுமொத்தமாக அம்பேத்கர் ஒதுக்கித் தள்ளியதும் தவறுதான். ஆனால், அதற்காக அவரைக் குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில், இன்று நம் கைகளில் இருக்கின்ற மரபணுத் தொகுதி குறித்த தரவுகள் அப்போது அவரிடம் இருக்கவில்லை.

மகத நாட்டில் அல்லது கிழக்கிந்தியாவில் ஏற்பட்ட கலாச்சார மலர்ச்சி, மவுரியப் பேரரசு உருவாவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டது. நகர்மயமாக்கம், புதிய மதங்கள் மற்றும் நம்பிக்கைகளின் உதயம், செல்வப் பெருக்கு, வணிகச் சமூகத்தின் ஆதிக்கம் போன்றவை அதன் வெளிப்பாடுகளே. அது ஏற்கெனவே தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொண்டிருந்தது. அதன் சித்தாந்தங்கள் இந்தியத் துணைக் கண்டத்திற்குள்ளாக மட்டுமல்லாமல், அதற்கு வெளியேயும் சிறகு விரிக்கத் தொடங்கியிருந்தன. அதற்குப் பிறகுதான் ஜாதி அமைப்புமுறை உருவாக்கப்பட்டது. அதற்குப் பல தலைமுறைகளும் பல நூற்றாண்டுகளும் ஆகியிருக்கலாம். அதைத் தொடர்ந்து நாட்டின் பார்வை உள்முகமாகத் திரும்பத் தொடங்கியது.

சாதனை மற்றும் சாகசங்களின் காலம்

கி.மு.ஆறாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டம் இந்திய வரலாற்றின் படைப்பாற்றல் மிக்க காலகட்டமாகும். அப்போதுதான் உபநிஷத்துகள் இயற்றப்பட்டன; அவற்றின் முன்னோக்கும் தத்துவமும் உலகெங்குமுள்ள இலட்சக்கணக்கானோருக்கு உத்வேகமளித்தன. இந்தியத் துணைக்கண்டத்தின் சிந்தனைப் போக்கில் பெரும் ஆதிக்கம் செலுத்தின. உலகிலேயே முதன்முதலாக மதப் பரப்பாளர்கள் மூலம் மதத்தைப் பரப்பிய புத்த மதமும், ஜைன மதமும் அப்போதுதான் தோன்றின; அம்மதங்கள் அவற்றை நிறுவியவர்களின் போதனைகளை மட்டுமல்லாது, புதிய மொழியியல் கருத்தாக்கங்களையும் இலக்கிய வடிவங்களையும் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று சேர்த்தன; புத்த மதம் அவற்றை உலகெங்கும் கொண்டு சென்று சேர்த்தது; இந்தியக் கலாச்சாரக் கருத்தாக்கங்களின் வழியாகக் கிழக்காசியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்தது; சீனாவை மயக்கியது; இப்படி புத்த மதத்தைப் பற்றி இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். புத்த மதம் தன் வெளிநாட்டு சாகசச் சிறகுகளைப் பெரும்பாலும் கிழக்கிந்தியா மற்றும் தென்னிந்தியாவில இருந்துதான் விரிக்கத் தொடங்கியது. ஏனெனில், அந்த இடங்களில்தான் ஆரியவர்த்தத்தின் புறமணத் தடை மற்றும் கடற்பயணத் தடை அமலில் இல்லாமல் இருந்திருக்கும்.

இந்தியத் துணைக் கண்டத்தில் இந்த வலுவான கலாச்சார நீரோட்டம் பல நூற்றாண்டுகள் நீடித்தது. அதற்குப் பிறகு ஒரு புதிய அடுக்கதிகாரச் சமூகக் கட்டமைப்பும் புதிய வாழ்க்கைமுறையும் பரவலாக நடைமுறைக்கு வந்தன. அதனால், குழுக்களுக்கு இடையே முன்பு சகஜமாக நடைபெற்று வந்த இனக்கலப்பு, திடீரென்று சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்படத்தகாத ஒன்றாக ஆனது. The Language of the Gods in the World of Men என்ற தன்னுடைய அற்புதமான நூலில் ஷெல்டன் போலக் இவற்றைக் குறிப்பிடுகிறார். சமஸ்கிருதம் மேட்டுக்குடியினரின் புதிய மொழியாக அவதாரம் எடுத்தது; அறிவுஜீவித்தனமான விவாதங்கள் சமஸ்கிருதத்தில் நடைபெறத் தொடங்கின; பண்டைய காலத்தில் மற்ற எல்லா மொழிகளையும்விட அதிக ஆதிக்கம் செலுத்திய மொழியாக அது உருவெடுத்தது; அதற்கு லத்தீன் மொழி மட்டுமே விதிவிலக்காக இருந்திருக்கலாம்; ஆனால், லத்தீன் மொழி இராணுவப் படையெடுப்பின் மூலம் பரவியது; சமஸ்கிருதமோ வற்புறுத்தல் அல்லது இணங்க வைத்தல் மூலமாகப் பரவியது. இந்தியத் துணைக்கண்டத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் இருந்த அரசர்களும் அரசர்களாக ஆக ஆசைப்பட்டவர்களும் சமஸ்கிருதம் அளித்த அந்தஸ்தையும் சவுகரியத்தையும் விரும்பினர். அதோடு, அது பரிந்துரைத்த எல்லா இடங்களிலும் இருந்த மேட்டுக்குடியினரால் வாரி அணைத்து கொள்ளப்பட்டச் சமுதாய அடுக்கதிகார அமைப்பு முறையும் மன்னராட்சி முறையும் அவர்களை வெகுவாகக் கவர்ந்தன. சமுதாயத்தில் பெரும் தாக்கம் விளைவிக்கும் ஆற்றல் கொண்ட எண்ணற்ற இலக்கியங்கள் படைக்கப்பட்டன. மாபெரும் காவியப் படைப்புகளான இராமாயணமும் மகாபாரதமும் அவற்றில் அடங்கும். அதிகாரம் மற்றும் சமூக உறவுகள் குறித்த புதிய கொள்கைகளை முழங்கிய இவை, உத்வேகமூட்டும் திறனையும் வசீகரத்தையும் தம்மிடம் கொண்டிருந்தன. இதனால் பயனடைந்தவர்களும் சரி, இதனால் பாதிப்படைந்தவர்களும் சரி, இதனை ஒரே மாதிரி ஏற்றுக்கொண்டதுதான் இதிலுள்ள நகைமுரண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *